Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, April 18, 2012

Stories told by Grand -Ma ( Story number - 13 )

   
        நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு !
 " பாட்டி எனக்கு ஏதாவது வேலை கொடேன் " என்றான் பிரபு. 
அவனை ஆச்சரியமாக பார்த்த பாட்டி, " உனக்கு என்ன வேலை தெரியும்? இப்போ எதுக்காக வேலை வேணும்ன்னு கேட்கிறே ?" என்று கேட்டாள்.
"நான் எக்சாமில் நல்ல மார்க்ஸ் வாங்கினா என்னோட காசில் தேங்காய் வாங்கி  பிள்ளையாருக்கு உடைக்கிறதா வேண்டிகிட்டேன். ஊரிலிருந்தால் அப்பா பாக்கெட் மணி தருவார். இப்போ என்கிட்டே காசு இல்லையே. அதுமட்டுமில்லாமே உழைச்ச காசில்தான் தேங்காய் வாங்கணும்னு இப்போ நினைக்கிறேன். அதான் பாட்டி. உனக்கு கடையில் போய் சாமான் வாங்கிட்டு வரணுமா ? இல்லாட்டா மெஷினில் மாவு அரைச்சிட்டு வரணுமா ? இல்லாட்டா மணியகாரர் இருக்கிறாரான்னு பார்த்துட்டு வரணுமா ? என்ன செய்யணும் ? சொல்லு பாட்டி ? " என்று பிரபு கேட்பதை மனோ வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றாள்.
"நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம். நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. மனோ நீயும் வாடி. ரெண்டு பேருமா சேர்ந்து சொல்லுங்க " என்று பாட்டி சொல்ல இரண்டு பேரும் ஓடி வந்து பாட்டியின் அருகில் உட்கார்ந்து கொண்டார்கள்.
"இப்போ நாம ஒரு வீட்டில் குடியிருந்தால் என்ன கொடுக்க வேண்டும் ?"
"வாடகை கொடுக்கணும் "
"நம்ம வீட்டில் உபயோகிக்கிற எலெக்ட்ரிக் சம்பந்தப்பட்ட ....." என்று பாட்டி சொல்லும் போதே "எலெக்ட்ரிக் பில் கட்டணும்" என்றாள் மனோ.
"நாம வாங்குகிற தண்ணீருக்கு ?"
"காசு கொடுக்கணும் "
"ஏதாவது எக்சிபிசன், சினிமா, இல்லாட்டா வேறு ஏதாவது டூர் ஸ்பாட்டுக்கு போனா ?"
"காசு கொடுக்காட்டா எல்லா இடத்திலுமே 'நோ என்ட்ரி' தான். இப்போ எதுக்கு இதையெல்லாம் கேட்கிறே ?" என்றான் பிரபு எரிச்சலுடன்.
"விஷயம் இருக்கு அதனாலேதான்.  ஆக மொத்தத்தில் இந்த உலகத்தில் காசு இல்லாட்டா காற்றுகூட கிடைக்காது. சரிதானா ?" 
"சரிதான்."
"இவ்வளவு பெரிய உலகத்தை படைத்து, பகலில் வெளிச்சம் தர பிரகாசமான விளக்கையும், இரவில் வெளிச்சம் தர சந்திரன் என்ற பெரிய விளக்கையும் , நட்சத்திரம் என்ற கணக்கு வழக்கு இல்லாத சிறிய விளக்குகளையும், நம்மோட தாகத்தை தீர்க்க ஆறு, ஏரி, அருவின்னு எண்ணற்ற நீர் நிலைகளையும், நாம் கண்டு ரசிக்க எத்தனையோ இயற்கை காட்சிகளையும் எண்ணற்ற அற்புதங்களையும்  செய்து எல்லாவற்றையும் நாம் அனுபவிக்க கொடுத்த இறைவன் மனிதனிடமிருந்து விலையாக எதையுமே கேட்கலையே. அப்படியிருக்க நீ படிச்சு பரிக்சை எழுதி நல்ல மார்க் வாங்கினா அதுக்காக உங்கிட்டேயிருந்து தேங்காயை எதிர்பார்ப்பாரா அந்த கடவுள் ?" என்று கேட்டாள் பாட்டி.
"ஒருத்தர் நமக்கு உதவி செஞ்சா நாம பதிலுக்கு ஏதாது செய்யனும்தானே ? கடவுள் எனக்கு உதவி செய்யும் போது, அவருக்கு நான் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா ?" என்று கேட்டாள் மனோ.
"கண்டிப்பா செய்யணும் " என்றாள் பாட்டி
"என்ன பாட்டி நீ குழப்பறே? கடவுள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்னு சொல்றே.  அவர் செய்ற உதவிக்கு பதில் உதவி செய்யனும்னு சொல்றே ?" என்றான் பிரபு கடுப்புடன்.
"பதில் உதவின்னா ....  அவர் மனசு சந்தோஷபடற மாதிரி ஏதாவது செய்வதுதான். "
"என்ன செஞ்சா அவர் சந்தோஷ படுவார் ?"
"அப்படி கேளு. நீங்க எல்லாரும் நல்ல பிள்ளைகளா, அன்பான, மற்றவர்களுக்கு  தொந்தரவு கொடுக்காத, வீட்டிலும் வெளியிலும் நல்ல பேர் எடுக்கிற குழந்தைகளா நடந்து கொண்டாலே போதும். அதை விட பெரிய நன்றி வேறு எதுவும் இருக்க முடியாது. உங்க மனசு சந்தோஷ படுற ஒவ்வொரு நல்ல விஷயம் நடக்கும்போதும் உன்கிட்டே இருக்கிற ஒவ்வொரு கெட்ட குணத்தையும் விட்டு விட்டாலே போதும்.  கடவுள் ரொம்ப சந்தோஷ படுவார். அவரோட எதிர்பார்ப்பு  எல்லாமே நாம நல்லவங்களா அமைதியான வாழ்வு  வாழனும்கிறதுதானே. வெளியில் நீங்க நல்ல பேர் வாங்கினால் அது  வீட்டில் இருக்கிறவங்களுக்கும் சந்தோசம்தானே. இப்போ சொல்லு, நீ நல்ல மார்க் வாங்கினா உன்கிட்டே இருக்கிற எந்த கெட்ட பழக்கத்தை விடுவே ?" என்று பாட்டி கேட்க, "கோப படாமே இருக்க பழக்கிகுவேன்" என்று பிரபு சொல்ல, "கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு!" என்று சொல்லி பிரபுவின் கன்னத்தில் முத்தமிட்டாள் பாட்டி

No comments:

Post a Comment