Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 13, 2012

Scanning of Inner - Heart ( மனதின் மறு பக்கம் ) Scan Report No.20)

                   
                                   எதுவும் புதிதில்லை !

" உன் உத்தம புத்திரன் வீடு திரும்பியாச்சா, இன்னும் இல்லையா?" என்று வீட்டுக்குள் நுழையும்போதே இரைந்தார் ராமகிருஷ்ணன்.
"வந்ததும் வராததுமா அவனைப் பத்தி விசாரிக்கிறேளே, என்ன விஷயம்? " என்று கேட்டபடியே, அவரது கையிலிருந்த ப்ரீப்கேஸை வாங்கினாள் வாசுகி.
"நானும் ரொம்ப நாளா வாட்ச் பண்றேண்டீ , எங்கெல்லாம் ரோட் இருக்கோ அங்கெல்லாம் உன் பிள்ளையாண்டான் நிற்கிறாண்டி. கார்த்தாலே நான் பஸ் ஸ்டாப்பில் நின்னுண்டுருக்கேன். நான் நிற்கிறதைக் கூட கவனிக்காமே  ஏதோ ஒரு பிகரைப் பத்தி இவனும் இவனோட சேர்ந்த கழிசடைகளும் சேர்ந்து விலாவாரியா டிஸ்கஸ் பண்ணிண்டு நிற்கிறதுகள். இதெல்லாம் உருப்படும்கிறே?" என்று மனைவியை நோக்கி கேள்விக் கணையை வீசினார். 
" எனக்குத் தெரியாதுன்னா !" என்றாள் வாசுகி கடுப்பான குரலில்.
மருமகளின் கடுப்பைப் புரிந்து கொண்ட அலமேலு, " ஏண்டா அம்பி வந்ததும் வராததுமா அவளை வம்புக்கு இழுக்கிறே? போ. போய் கை கால் அலம்பிண்டு வா. சூடா ஒரு வாய் காப்பி சாப்பிடு. " என்றாள். 
"பின்னே என்னம்மா, ஒவ்வொரு ஆத்துலே குழந்தைங்க அவா வேலையையும் கவனிச்சுண்டு ஆத்து வேலையையும் கவனிச்சுண்டு என்ன ஒரு பொறுப்பா நடந்துக்கிறா. நம்மாத்து தறுதலைக்கு சொன்னாலும் புரியலே, சுயமாவும் தெரியலே. வெறும் B Com  டிகிரி மட்டும் உனக்கு வேலை வாங்கித் தந்துடாது. கம்ப்யூட்டர் கத்துக்கோ. அதிலே ஏகப்பட்ட கோர்ஸ் இருக்கு. ஒவ்வொண்ணா படி, முடின்னா , அதுக்கெல்லாம் டைம் இல்லேங்கிறான். பஸ் ஸ்டாப்பில் நின்னுண்டு, வேலைக்கு  போற  வர்ற பொண்களைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிண்டு ருக்கிறான்." என்று தனது தாயிடம், தனது மகனைப் பற்றி குற்றப் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருக்கும்போதே வீட்டுக்குள் நுழைந்தான் ஸ்ரீராம்.
"வாங்கோ சார், நகர்வலம் முடிஞ்சுதா, இல்லேன்னா இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா ?. கார்த்தாலே கிளம்பி காலேஜ் போன பொண்ணுங்க ஆத்துக்கு திரும்பி வர்றதைப் பார்க்காமலே ஆத்துக்கு திரும்பி வந்துட்டேளே ?" என்று கிண்டலான குரலில் கேட்டார் ராமகிருஷ்ணன்.
பதில் ஏதுவும் சொல்லாமல், வாசற்படியில் நின்று கொண்டே T V ப்ரோக்ராமை கவனித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
"மனுசனாப் பொறந்தா சூடு சுரணை எல்லாம்  பேருக்காவது கொஞ்சமாவது இருக்கணும். ஏண்டா, திட்டறேனே, உனக்கு ரோசமே வராதா?  என்ன மனுஷ ஜென்மமடா நீ? கொஞ்சம் கூட முகம் சுருங்காமே சிரிச்சுண்டே நிற்கிறே. என் கண் முன்னாலே நிற்காமே எங்காவது போய்த் தொலையேன்?" என்று ராமகிருஷ்ணன் இரைய,
 " போதும் நிறுத்துங்கோ, தினமும் சுப்ரபாதம் சொல்றாப்பலே, அவனை கரிச்சு கொட்டறதே வேலையாப் போச்சு உங்களுக்கு" என்றபடி அவர் முன்னே காபி டபராவை நீட்டினாள் வாசுகி.
"பிள்ளைங்க கெட்டு குட்டிச்சுவரா போறதே உன்னை மாதிரி அம்மாவாலேதானே? நமக்கு கல்யாணம் ஆனா புதிசிலே நீ அனுமார் கோயிலை சுற்றி சுற்றி வரும்போதே, நமக்குப் பொறக்கப் போறது அனுமாராத்தான் இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்."
" அதுக்கு இப்போ என்ன பண்ணனும்கிறேள்"
" இவனுக்காக ஆயிரக்கணக்கிலே பணத்தை கொட்டி அழுதிருக்கிறேன். வேலை வெட்டிக்கு போகாமே தறுதலையா பஸ் ஸ்டாபிலும், கோயில் குளக் கரையிலும் வெட்டியா பொழுதைப் போக்கிண்டு இருக்கிறானேங்கிற வயித்தெரிச்சலில் பேசிண்டு இருக்கிறேன். எனக்கு அப்புறம் இவன் இந்த குடும்பத்தை தூக்கி நிறுத்துவான், தம்பி தங்கைகளைப் பார்த்துக்குவான்கிற நம்பிக்கையில் இருக்கிறேனே.  என்னைப்போல பைத்தியக்காரன் இருக்க முடியுமாங்கிற வெறுப்பில் பேசறேன் "
"டேய் அம்பி, நாடார் கடையில் போய் நல்ல துளிர் வெற்றிலையா பார்த்து வாங்கிண்டு வாடா " என்று அலமேலு சொல்ல, அடுத்த கணமே, வில்லிலிருந்து கிளம்பிய அம்பு போல வெளியில் விரைந்தான் ஸ்ரீராம்.
"ஒஹோ, வசையிலிருந்து பேரனைக் காப்பாத்தறதா நினைப்போ?" என்றார் ராமகிருஷ்ணன்.
" போதும் நிறுத்துடா. ஒரேயடியா குழந்தையை கரிச்சு கொட்டறே?  இப்போ நீ சொன்னியே, இதிலே எதுவும் புதிசில்லே. அத்தனை வார்த்தையும் உன்னோட அப்பா உனக்கு ஒரு காலத்தில் சொன்னது. அதை நீ இப்போ உன் பிள்ளையாண்டான் கிட்டே சொல்லிண்டு இருக்கிறே.  இதே புலம்பலை நாளைக்கு ஸ்ரீராம் அவன் குழந்தைங்க கிட்டே சொல்லிண்டு இருப்பான். உலகத்திலே ஒரு சில விஷயங்கள் காலம் காலமா தொடர்ந்துண்டுதான் இருக்கு. உங்க அப்பா உன்னை திட்டாத திட்டா? நீ என்ன உருப்படாமலா போயிட்டே. ஒவ்வொரு வயசுக்கும் ஒவ்வொரு குணம், பழக்க வழக்கம் இருக்கும். அதை நாம பாலிசாத்தான் கண்டிக்கனும். உன்னோட இளவயசிலே நீயும் உன் பிள்ளை மாதிரிதான் இருந்தேன்னு, நான் சொல்றது உன் பிள்ளைக்கு தெரிய வேண்டாம்னுதான் அவனை வெளியே அனுப்பினேன். சில விசயங்களை விட்டுதான் பிடிக்கணும். நீ வேலை வாங்கிக் கொடுத்து, அதை பார்க்க மாட்டேன்னு அவன் சொல்லிட்டானா, என்ன? இல்லையே. வேலை பார்க்காமே வெட்டியா உட்கார்ந்திருக்கிறோமே என்கிற நினைப்பு ஒவ்வொரு குழந்தைங்க மனசிலும் இருக்கத்தான் செய்யும். அதை மறக்க, மறைக்க, அததுங்க வெளியிலே சுத்திட்டு வருதுங்க. நாளைக்கே ஒரு வேலை கிடைச்சு, போக ஆரம்பிச்சிட்டா, பஸ் ஸ்டாப் பக்கத்திலே போய் நில்லுன்னு நீ சொன்னா கூட நிற்க மாட்டான். தேவை இல்லாமே உன்னை நீயே புண் படுத்திண்டு அவன் மனசையும் புண் படுத்தாதே. " என்று அலமேலு சொல்ல அமைதியானார் ராமகிருஷ்ணன்.

No comments:

Post a Comment