Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 16, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 16

( நான் எழுதிய இச்சிறுகதை 14 .06 .2003 தினமணி - சிறுவர்மணியில் படக்கதையாக வெளியாகியுள்ளது )
   
சரியான பாதை; சுகமான பயணம் !

பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததுமே கையிலிருந்த புத்தகப் பையை வேகமாக மூலையில் விட்டெறிந்தான் கதிர். அவனது முகம் கோபத்தினால் சிவந்திருந்தது.
"என்ன கண்ணு? என்ன நடந்தது?" என்று கேட்டார் முருகேசன்.
"அப்பா, இனிமே நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன். எனக்குப் போகப் பிடிக்கலே" என்றான் கதிர்.
"என்ன கண்ணு, இப்படிச்சொல்றே? நீயாவது நல்லாப் படிச்சு நல்ல நிலைக்கு வருவேன்னு நினைச்சுதானே, என் தகுதிக்கும் மீறி செலவு செய்து பெரிய ஸ்கூலில் உன்னை சேர்த்து விட்டுருக்கிறேன். இப்ப போக மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் கதிரு ..?" என்றார் முருகேசன்.
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஸ்கூலுக்கு போகணும்னு யாராச்சும் கட்டாயப் படுத்தினா, அப்புறம் நான் வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன்" என்றான் கதிர் உறுதியான குரலில்.
"வேண்டாம் கண்ணு. அப்படியெல்லாம் சொல்லாதே. உன் தலை எழுத்துப்படியே நடக்கட்டும். வீட்டை விட்டுப் போறேன்னு மட்டும் சொல்லிடாதே ராசா. உன்னை விட்டா எனக்கு வேறே யாரிருக்கா?" என்றார் முருகேசன் தழுதழுத்த குரலில்.
"அப்பாடா" என்று நிம்மதியாகப் படுத்துத் தூங்கினான் கதிர்.
வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு வானத்தையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார் முருகேசன்.       " கடவுளே, எங்க அப்பா என்னை நாலு எழுத்துப் படிக்க வைக்காததால்தானே இப்படி தெருத் தெருவாக வண்டியை தள்ளிட்டுப் போய் காய்கறி வியாபாரம் செய்றேன். என் பொழைப்பு நாய்ப் பொழைப்பா போன மாதிரி என் புள்ளைக்கும் ஆயிடக்கூடாதுன்னு தானே வாயைக் கட்டி வயித்தை கட்டி அவனைப் படிக்க வைக்கிறேன். இன்னிக்கு இந்த புள்ளை இப்படி திடுதிப்புன்னு ஸ்கூல் போக மாட்டேன்னு சொல்லுதே. ஆண்டவனே, அவனை நீதான் புத்தி சொல்லி திருத்தணும். ஊரிலுள்ள எல்லாப் புள்ளைக மாதிரி என் புள்ளையும் படிச்சு நல்ல நிலைமைக்கு வரணும் " என்று வேண்டிக்கொண்டார்.  இதே கவலையில் உறங்கிப் போனார்.
மறுநாள் காலையில் காய்கறி வியாபாரத்துக்காக வண்டியுடன் கிளம்பிக் கொண்டிருந்தார் முருகேசன். 
அங்கே வந்த கதிர், " அப்பா, வியாபாரத்துக்கு தானே போறீங்க? நானும் உங்களோட வர்றேன். கூட்டிட்டுப் போறீங்களா?"" என்றான்.
"வேண்டாம்னு சொன்னா கேட்கவா போறே? வெயிலில் அலையணுமே கண்ணு.  சரி ஆசையாக் கேட்கிறே. வா. வந்து பாரு " என்றார்.
கதிர் அனைத்துக் கைகளையும் உற்சாகமாக வண்டியில் ஏற்றினான். அழகாக அடுக்கி வைத்தான். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். 
சிறிது தூரம் நடந்ததுமே "இப்பவே கால் வலிக்குதே. இன்னும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் கதிர்.
ஒரு இடத்தில் போக்குவரத்து நெரிசலால் பாதை அடைபட்டுக் கிடந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர்,                " யப்பா, காய்கறி வண்டி ! நேற்று அடிச்ச காத்திலே ஒரு மரம் சாய்ஞ்சு ரோட்டுக்கு குறுக்காலே கிடக்குது. அந்த மரத்தை எடுத்தாதான் உன் வண்டி அந்தப்பக்கம் போக முடியும். உன் வண்டியை ஓரங்கட்டு" என்றார்.
கொஞ்ச நேரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வந்து மரத்தை அப்புறப் படுத்தும் வேலையில் இறங்கினார்கள்.
வேறு வழியின்றி கதிரும்முருகேசனும் சாலையில் நின்று கொண்டிருந்தார்கள். கவலையுடன் நின்று கொண்டிருந்த அப்பாவை பார்க்கவே பாவமாக இருந்தது கதிருக்கு. மீண்டும் போக்கு வரத்து சீர்பட ஒரு மணி நேரம் ஆனது.  சாலை சரியானதும் அவசரம் அவசரமாக வண்டியைத் தள்ளியபடி நடந்தார் முருகேசன். கூடவே ஓட்டமும் நடையுமாக அவரைப் பின் தொடர்ந்தான் கதிர்.
"கடவுளே, காலையிலேயே போயிருந்தா இந்நேரம் எல்லாக் காயும் விற்றுப் போயிருக்கும். இனிமே வியாபாரம் மந்தமாத்தான் இருக்கும்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் முருகேசன்.
ஒரு வீட்டின் முன் வண்டியை நிறுத்தி விட்டு, "அம்மா, காய், ..காய் ." என்று குரல் கொடுத்தார் முருகேசன்.  "ஏம்ப்பா, காய் கொண்டு வர்ற நேரமா இது? மத்தியான வேளை ஆகப் போகுது. இப்ப காய் கொண்டு வர்றே. குழந்தைங்க எல்லாம் இருக்கிறதை சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்கு கிளம்பிப் போய்ட்டாங்க. உன் காயும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். நாளைக்காவது சீக்கிரம் வா. ஏதாவது வாங்கலாம்" என்றாள் அந்த வீட்டுப் பெண் வெகு அலட்சியமாக.
அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்தது முருகேசனின் வண்டி. அந்த வீட்டுப் பெண்மணி வெளியே வந்து  காய்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, "காயெல்லாம் காய்ஞ்சு கிடக்கே?" என்றாள்.
"வர்ற வழியிலே ஒரு மணி நேரம் நிற்கும்படி ஆயிட்டுது. வெயிலில் காய் வாடிப் போச்சு. அவ்வளவுதான். கீரை இளசா நல்லதா இருக்கும்மா. ரெண்டு கட்டு கீரை வாங்கி கடைங்கம்மா. கீரை சூப்பர் டேஸ்டா இருக்கும். எடுங்கம்மா" என்றார் முருகேசன்.
"கீரை கட்டு என்ன விலை?"
"கட்டு என்ன விலை?"
"அஞ்சு  ரூபாம்மா?"
"அடேயப்பா ! அஞ்சு ரூபாயா? மூணு ரூபாய்க்கு தருவியா?"
"நானே கட்டு ஆறு  ரூபானுதான் வாங்கிறேன்ம்மா. நேரம் ஆயிட்டதாலே  அடிமாட்டு விலைக்கு தர்றேன்"
"கீரைக்கு அஞ்சு ரூபாய் அதிகமப்பா"
" கீரைக்கு அஞ்சு ரூபா கேட்கலேம்மா. தோட்டத்திலே விதை தூவி, தண்ணீர் பாய்ச்சி விளைஞ்சதும் கட்டு கட்டா கட்டி வெளியூரிலிருந்து வண்டியிலே போட்டு நமக்கு அனுப்புறாங்க. அதை நான் தெருத் தெருவா தூக்கிட்டு வந்து கொடுக்கிறேன் பாருங்க, அந்த உழைப்புக்குதாங்க பணம் கேட்கிறோம். பணத்தைப் பார்க்காமே கீரையைப் பாருங்கம்மா," என்று சொன்னார் முருகேசன்.
"நல்லா பேசறே. இப்போ கீரை வாங்கி, அதை எப்போ சுத்தம் பண்ணி எப்போ சமைக்கிறது? காலையிலே வந்திருந்தாலும் குழந்தைகளுக்காகவாவது வாங்கி இருக்கலாம். இப்போ வேண்டாம் போ" என்று சொல்லி விட்டு நகர்ந்தாள் அந்தப் பெண்.
அடுத்த தெருவுக்கு நகர்ந்தது காய்கறி வண்டி.
அங்குள்ள வீட்டு முன் நின்று " அம்மா காய்ம்மா" என்று முருகேசன் குரல் கொடுத்ததும், வேகமாக வாசலுக்கு வந்த அந்த வீட்டுப் பெண், " ஓஹோ, துரைக்கு இப்பதான் பொழுது விடிஞ்சுதாக்கும். டாண்ணு ஏழு மணிக்கெல்லாம் வந்தாகணும். இந்த மாதிரி நினைச்ச நேரத்துக்கு வந்தா நான் காய்கறிக்கு வேறே ஆளைப் பார்த்துக்குவேன். காயும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம் போ" என்று இரைந்துவிட்டு போனாள் அவள்.
இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கதிர், " என்ன கண்றாவி இது? இந்த அப்பா யார் எது சொன்னாலும் வாயை மூடிக் கொண்டிருக்கிறாரே. மரம் ரோட்டின் குறுக்கே விழுந்து ட்ராபிக் ஜாம் ஆனதுக்கு அப்பாவா பொறுப்பு?" என்று தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.
"வா கதிர். வண்டியை ஒரு ஓரமா நிறுத்திட்டு, மூட்டைகட்டிடலாம். இருக்கிற எல்லாத்தையும் சந்தைக்கு எடுத்திட்டு போய் கூரு கட்டி விற்கலாம். கேட்ட விலைக்கு கொடுத்துட்டு வீடு போய்ச்சேரலாம்" என்றார் முருகேசன்.
"என்னப்பா நீங்க இவ்வளவு மக்கா இருக்கீங்க. நாம என்ன வேணும்னா லேட்டா வந்தோம்? ஒரு அம்மா காய் நல்லா இல்லேங்கிறாங்க. அதை நாமளா பயிராக்கி எடுத்திட்டு வந்தோம்? வீட்டு வாசலில் கொண்டு போய் கொடுத்தா இப்படிதான் பேசுவாங்க. இதே காயை சந்தைக்குப் போய் வாயை மூடிகிட்டு வாங்கிட்டு வருவாங்க. நீங்க ஏன் யார் எது சொன்னாலும் வாயை மூடிட்டு நிற்கணும். பதிலுக்கு நாலு குடுக்க வேண்டாமா?" என்று கேட்டான் கதிர் கோபமாக.
"பதில் சொல்லலாம் கதிரு, அதுக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஆனா வாக்கு வாதம் பண்ணினா, நீயும் வேண்டாம், உன் காயும் வேண்டாம்னு சொல்லிட்டு வேறே ஆளைப் பார்த்திடுவாங்க.  வாடிக்கைக்காரங்க நம்மளை விட்டுப் போனா நமக்குதான் நஷ்டம்."
"அவங்க என்ன சும்மாவா காசு தர்றாங்க? நாம வெயிலிலேயும் மழையிலேயும் கஷ்டப்பட்டு அலைஞ்சு காயை இவங்க வீட்டு வாசலில் கொண்டு போய் சேர்க்கிறோம். அதுக்கு காசு தர்றாங்க. என்னவோ உங்களையே விலைக்கு வாங்கிட்ட மாதிரி ஒவ்வொருத்தரும் பேசறாங்க. நீங்க எல்லாத்துக்கும் பேசாமே நிக்கிறீங்க."
"நீ சின்னப் பையன்டா தம்பி. உனக்கு இதெல்லாம் புரியாது. வாக்கு வாதம் பண்ணினா நஷ்டப்படப் போறது நாமதான் கண்ணு. யார் எது சொன்னாலும் நாம கேட்டுதான் ஆகணும். இந்த மாதிரி தலை எழுத்து உனக்கு வேண்டாம்னுதான் உன்னை படிக்க அனுப்பினேன்" என்று நொந்த குரலில் பேசினார் முருகேசன்.
அப்பா இவ்வளவு கஷ்டப்பட்டா என்னைப் படிக்க வைக்கிறார்? அதைப் புரிஞ்சிக்காமே இருந்திட்டோமே என்று நினைத்த கதிர், "அப்பா, நாளையிலிருந்து நான் ஸ்கூலுக்குப் போயிடுவேன்ப்பா. உங்களுக்கு சந்தோசம்தானே?" என்றான்.
"என்னடா இது? போ மாட்டேன்னு சொல்றே? திடீருன்னு போறேன்னு சொல்றே?"
"எங்க கிளாஸ் டீச்சர் எப்போ பார்த்தாலும், 'உன் ஹான்ட் ரைட்டிங் நல்லா இல்லே. அழகா நிறுத்தி எழுதணும். உச்சரிப்பு சரியா இல்லே.ஹோம் ஒர்க் ஒழுங்கா எழுதறது இல்லேன்னு குறை சொல்லி கிட்டே இருப்பாங்க. அதுக்கு கோவிச்சுகிட்டுதான் நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொன்னேன். என்னோட நல்லதுக்குதான் அவங்க சொல்றாங்க என்பது இப்போ புரியுது.  எந்த தப்புமே செய்யாத நீங்க, வியாபாரத்துக்காக யார் என்ன சொன்னாலும் பொறுமையா இருக்கும்போது, தப்பு செய்கிற என்னை மற்றவர்கள் கண்டிக்கும்போது நான் ஏன் அவங்க மேலே கோபப் படணும்? நாளைக்கு என்ன, இப்பவே நான் யுனிபார்ம் போட்டுட்டு ஸ்கூலுக்கு போறேன். லேட்டா வந்ததுக்கு டீச்சர் கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் போயிட்டு வர்றேன்ப்பா" என்று சொல்லிவிட்டு கதிர் வீட்டை நோக்கி வேகமாக நடக்க, வியாபாரம் சரியாக நடக்காத கவலையையும் மறந்து மகிழ்ந்து போன முருகேசன்,  பெரிய கவலை தீர்ந்த நிம்மதியுடன், வியாபாரம் நடத்த வேறு இடத்தை தேடி நடக்க ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment