Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 09, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 15



                                              மாப்பிள்ளை பிச்சை  எடுக்கிறார்!

வீடே அதிரும்படி அப்புவைத் துரத்திக் கொண்டு மாடிப்படிகளில் ஓடிவந்த ராதாவை எரித்துவிடுவது போல் பார்த்தாள் சாவித்திரி.
" அப்பா, பாருங்கப்பா, குளிக்க ஷாம்பூ வாங்கிட்டு வரச்சொன்னா, 'சம்திங்' குடுப்பியானு கேட்கிறான்ப்பா. வீட்டிலே எந்த வேலையும் செய்றது கிடையாது. என்ன வேலை சொன்னாலும் உடனே சம்திங் கேட்க வேண்டியது. வேளா வேளைக்கு சாப்பாடு, விதம் விதமா துணிமணி, கேட்கிறப்ப எல்லாம் பாக்கெட் மணி . இவ்வளவு வசதியையும் வீட்டில் அனுபவிச்சுக்கிட்டு, ஒரு வேலையை செய்ய உடனே சம்திங் கேட்க வேண்டியது.  இவனுக்கு செலவு செய்ற பணத்துக்கெல்லாம்  பில் போட்டு  இவன்கிட்டே நீங்க வேலை வாங்கணும். இந்த ராஸ்கல் என்னடான்னா எடுத்ததுக்கெல்லாம் சம்திங் கேட்கிறான். வீட்டு வேலையை செய்ய வேண்டியது இவன் டியூட்டிதானே. எதுக்கெடுத்தாலும் சம்திங் கேட்கிற இவனை எல்லாம் நிற்க வச்சு சுடணும்" என்று பொரிந்து தள்ளினாள் ராதா
" சரி விடும்மா, சின்ன பையன்தானே" என்று சமரசம் செய்ய முன் வந்தார்  முருகன்.
"சின்னப் பையனா இருக்கிறப்பவே "குடு,குடு"ன்னு இப்படி பிச்சை எடுக்கிறானே, இவன் பெரியவன் ஆனதும் எது எதுக்கெல்லாம் பிச்சை கேட்பானோ தெரியலை " என்று இரைந்தாள் ராதா.
"அவனோட சண்டை போடறதே இவளுக்கு வேலையாப் போச்சு. முதலில் இவளை ஒழிச்சு தலை முழுகினாதான் எனக்கு நிம்மதி. தரகர் சொன்ன வரனை பார்த்திட்டு நல்லா விசாரிச்சிட்டு வாங்களேன். அரசாங்க உத்தியோகம்னு தரகர் சொல்றார். இருந்தாலும், அந்த வரன் வேலை பார்க்கிற ஆபீசுக்கே போய் 'என்ன, ஏது'ன்னு விசாரிச்சு தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே. காலம் கலி காலம். மெக்கானிக் வேலை பார்க்கிறவன் கூட தன்னை மெக்கானிகல் இஞ்சினியர்னு சொல்லிக்கிறான்," என்றாள் சாவித்திரி.
தரகர் சொன்ன அலுவலக விலாசத்தை விசாரித்து முருகன் சென்றபோது, சிவகுமார் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். பேசி முடியட்டும் என்று பொறுமையாக நின்று கொண்டிருந்தார் முருகன்.
பக்கத்தில் முன்பின் தெரியாத மூன்றாவது நபர் இருப்பதைக்கூட கவனியாமல், ஆபீஸ் சம்பந்தப்பட்ட வேலைக்காக போனில் பேரம் பேசிக்கொண்டிருந்தான் சிவகுமார்.
வந்த சுவடு தெரியாமல் வெளியேறினார் முருகன்.
வீட்டுக்குள் முருகன் நுழைந்ததுமே, "என்னங்க, பையனைப் பத்தி விசாரிசிங்களா? மாப்பிள்ளை என்ன பண்றார்?" என்று கேட்டாள் சாவித்திரி ஆவலாக.
உள் ரூமின் கதவருகில் ராதா நிற்பது தெரிந்தது,
அப்பா என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்கும் ஆவல் அவளுக்கும் இருந்தது.
" என்னங்க, மாப்பிள்ளை என்ன பண்றார்?" என்று சாவித்திரி கேட்க, "மாப்பிள்ளை பிச்சை எடுக்கிறார்!" என்று பதில் சொன்னார், முருகன், கதவோரம் நிற்கும் மகளை ஓரக் கண்ணால் பார்த்தபடி. 



                                 

No comments:

Post a Comment