Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, March 16, 2012

Stories told by Grand - Ma ( Story Number 11 )

                         
விசுவாசம் !
 மனிதன் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் " என்று பாடிக்கொண்டே ஷுக்கு பாலிஸ் போட்டுக் கொண்டிருந்தான் பிரபு.
"பாட்டி, அண்ணா பாடறானே, மனிதன் பாதி மிருகம் பாதின்னு, இந்த ரெண்டு பேர்லே யார் நல்லவங்க பாட்டி?" என்று கேட்டாள் மனோ.
"மனிதனாகட்டும், மிருகமாகட்டும். அவங்கவங்கஎல்லையிலே,சுதந்திரத்திலே மத்தவங்க தலையிடாதவரை நல்லவங்களாத்தான் இருப்பாங்க" என்றாள் பாட்டி.
 " இது அதுன்னு மழுப்பற வேலையெல்லாம் வேண்டாம். இது இல்லாட்டா அதுன்னு குறிப்பா ஏதாவது ஒரு பதிலை மட்டும் சொல்லு " என்றாள் மனோ.
" சரி நான் ஒரு கதை சொல்றேன். அதை வச்சு யார் நல்லவங்கனு நீயே முடிவு பண்ணிக்கோ" என்று பாட்டி சொன்னதுமே " அண்ணா, பாட்டி கதை சொல்லப் போறா" என்று மனோ குரல் கொடுக்க, கையிலிருந்த ஷூவை வீசி எறிந்துவிட்டு ஓடி வந்து பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு " சொல்லு, என் தங்க பாட்டி"  என்றான் பிரபு .
"ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் தினமும் காட்டுக்கு போய் விறகு வெட்டிட்டு வந்து அக்கம் பக்கத்து ஊர்களிலும் சந்தையிலும் விற்று காசாக்கி அந்த பணத்திற்கு வீட்டுக்கு வேண்டிய பொருளை வாங்கிட்டு வருவான். ஒருநாள் அவன் விறகு வெட்டிட்டு இருக்கும்போது "ஓ"ன்னு ஒரு இனம் புரியாத சத்தத்தை கேட்டான். அந்த சத்தம் எங்கிருந்து வருதுன்னு தெரிஞ்சுக்க சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த சத்தம் ஒரு குழிக்குள்ளிருந்து வருவது தெரிஞ்சு குழிக்குள் எட்டிப்பார்த்தான். அந்த குழிக்குள் ஒரு மனிதன் இருந்தான். ஒரு சிங்கம், ஒரு நாகம், ஒரு நாயும் இருந்ததை கண்டான். தனக்கு உதவி செய்ய சொல்லி அந்த மனித அழ, மற்ற மிருகங்களும் தங்களை வெளியில் எடுத்து விடும்படி அவனிடம் கெஞ்சின. விறகுவெட்டி யோசித்தான். 
அதை கண்ட மிருகங்கள், "எங்களுக்கு உதவி செய். நாங்கள் உனக்கு ஒரு கெடுதலும் செய்ய மாட்டோம்.  எங்களால் முடிந்த உதவியை உனக்கு செய்வோம்" என்றன. 
இந்த விலங்குகள் அப்படி என்ன பெரிய உதவியை தனக்கு செய்துவிடப்போகின்றன என்று விறகுவெட்டி கேலியாக நினைத்தாலும், இந்த குழிக்குள் விலங்குகள் மட்டுமல்லாமல் ஒரு மனிதனும் இருக்கிறான். மனிதனுக்கு மனிதன் உதவா விட்டால் வேறு யார் உதவுவார்கள் என்று நினைத்துக்கொண்டு, அந்த மனிதனும், மிருகங்களும் வெளியில் வருவதற்கு உதவி செய்தான்.
 "நீ செய்த உதவியை மறக்க மாட்டோம். உனக்கு கண்டிப்பா  எங்களால் முடிந்த உதவி செய்வோம்'னு சொல்லிட்டு மிருகங்கள் போயிட்டுது. 
"எனக்கு போக இடமும் இல்லே. எனக்கு உறவென்று யாரும் இல்லே. இந்த கவலையில்தான் கால் போன போக்கில் நடந்து வந்து இந்த குழிக்குள் நான் மாட்டிகிட்டேன். இப்போ நான் எங்கே போவேன்"னு சொல்லி அந்த மனுஷன் அழுதான். 
அவனுக்காக வருத்தப்பட்ட விறகு வெட்டி அவனை தன்னோட வீட்டுக்கு கூட்டி வந்து தன்னோடே வச்சுகிட்டான்.
ஒருநாள் அவனை தேடி வந்த நாகம் அவனுக்கு விலை உயர்ந்த நாக ரத்தினத்தை குடுத்துட்டு போச்சு. அதை நல்ல விலைக்கு விற்று கிடைத்த பணத்தில் ஒரு வியாபாரத்தை ஆரம்பித்தான். அந்த மனுஷனையும் வியாபாரத்தில் சேர்த்துகிட்டான் விறகு வெட்டி. 
தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை அந்த விறகுவெட்டிக்கு கொண்டு வந்து தந்தது சிங்கம்.
 அந்த நாயோ விறகு வெட்டிக்கு காவலா எப்பவும் அவன் கூடவே இருந்தது. ஒரு சமயம், அந்த மனுசனை நம்பி வியாபாரத்தை விட்டுட்டு வெளியூர் சென்றிருந்தான் விறகுவெட்டி. நாயும் அவனுடன் போயிருந்துச்சு. 
சில நாட்கள் கழிச்சு வெளியூரிலிருந்து திரும்பி வந்த விறகு வெட்டி தன்னுடைய  வீட்டிலும் கடையிலும் எந்த ஒரு பொருளும் இல்லாததைக் கண்டு திகைச்சு போனான். அந்த மனுஷனையும் காணலே. தன்னை ஏமாற்றி விட்டு அந்த மனுஷன் ஓடிட்டான்கிதை விறகுவெட்டி புரிஞ்சுகிட்டான். அவனுக்கு ரொம்பவும் வருத்தமாயிருந்தது. கவலையோடு வீட்டில் இருந்தான். அப்போ அவனை பார்க்க நாகமும் சிங்கமும் வந்துச்சு. அவன் கவலையாயிருக்கிறான் என்பதை தெரிஞ்சுகிட்டு, என்ன காரணம்னு ரெண்டும் அவன்கிட்டே கேட்டுச்சு. விறகுவெட்டி உண்மையான காரணத்தை அதுங்க கிட்டே சொல்லாமல், 'ஒண்ணுமில்லேன்'னு சொல்லிட்டான்.
பலமுறை அவை கேட்டும் இவன் நடந்ததை சொல்லலே. நாகமும் சிங்கமும் போயிட்டுது. அது ரெண்டும் போனப்புறம் அந்த நாய் விறகுவெட்டியிடம்," அது ரெண்டும் அவ்வளவு தூரம் கெஞ்சி கேட்டுச்சே . நீ நடந்ததை அதுங்க கிட்டே சொல்லி யிருக்கலாமே'ன்னு.
அதுக்கு அந்த விறகுவெட்டி சொன்னான், " சொல்லி இருக்கலாம்தான். சொன்னா அவை திரும்பவும் எனக்கு உதவி செய்யும். ஆனால் அவைகளுக்கு மனிதர்களிடம் நம்பிக்கையோ விசுவாசமோ ஏற்படாது. அதனால்தான் சொல்லலே"ன்னு" என்று சொல்லி  கதையை முடித்த பாட்டி "இப்போ சொல்லுங்க. யார் நல்லவங்கன்னு, மனிதனா, மிருகமா" என்று கேட்க
"சந்தேகமே இல்லே பாட்டி. மிருகங்கள்தான் நல்லவங்க" என்றான் பிரபு.
"இல்லே பாட்டி. மனிதன்தான் நல்லவன். தான் நஷ்டப்பட்ட பிறகும் கூட,  மிருகங்களிடம் மனிதர்களை பத்தி தாழ்வா சொல்லக்கூடாதுன்னு நினைச்ச மனிதன், அதுதான் அந்த விறகு வெட்டிதான் நல்லவன்'னு மனோ சொன்னாள்
"நான் இதப்பத்தி எதுவுமே சொல்லப்போதில்லே. முடிவை உங்ககிட்டே விட்டுட்டேன். யார் உயர்ந்தவங்கன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க" என்று பாட்டி சொல்ல,
"மனிதன் நிறைய மிருகம் கொஞ்சம் கலந்து செய்த கலவை நான்'னு மனோ பாட,
 "மனிதன் கொஞ்சம் மிருகம்  நிறைய கலந்து செய்த கலவை நான்"னு பிரபு பாட, "ரெண்டுமே நல்லாத்தான் இருக்கு" என்றாள் பாட்டி .

No comments:

Post a Comment