ஒண்ணா இருக்க கத்துக்கணும் !( நான் எழுதிய இச்சிறுகதை 23 .10 .2010 தினமணி -சிறுவர் மணியில் வெளியாகியுள்ளது. தற்போது சிறு மாற்றங்களுடன் உங்கள் பார்வைக்கு)காய் வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த பாட்டி, பிரபுவும் மனோவும் தலையணையால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது கண்டு அதிர்ந்து போனாள்.
"உங்களாலே ஒரு அஞ்சு நிமிஷம் சண்டை போடாமல் இருக்க முடியாதா ?" என்று கோபமாக கேட்க "முடியவே முடியாது ! அது எப்படி முடியும்?" என்று ஒரே நேரத்தில் கேட்டனர் இருவரும்.
"உங்களை சொல்லி குற்றமில்லே. காலம் கலி காலம். இனிமே பிறக்க போகிற குழந்தைகள் எல்லாம் கையில் துப்பாகியுடன்தான் பிறப்பார்களோ என்னவோ" என்று சலித்துக்கொண்டாள் பாட்டி.
"டென்ஷன் ஆகாதே பாட்டிம்மா " என்ற பிரபு பாட்டியின் முதுகை மெதுவாக வருடிகொடுக்க " ஏ அண்ணா, பாட்டி அதுக்கு கூட ஒரு கதை வச்சிருப்பா" என்று பிரபுவின் காதோரம் மனோ கிசுகிசுக்க "பாட்டி சண்டை எல்லாம் போடகூடாதுங்கிறதுக்கு ஒரு கதையை எடுத்து விடு " என்றான் பிரபு.
"வாலை சுருட்டிகிட்டு ஒரு ஓரமா உக்காருங்க. நான் சமையலை முடிச்சிட்டு வர்றேன்" என்றாள் பாட்டி.
"ஆமாம் பொல்லாத சமையல். கதையை ஆரம்பி பாட்டி" என்று பிரபு சொல்லிக்கொண்டிருக்க, வாசலுக்கு விரைந்து சென்ற மனோ " ஹே பசங்களா, பாட்டி கதை சொல்லப்போறா " என்று குரல் கொடுக்கவும் ஒரு சிறுவர் பட்டாளமே பாட்டி வீட்டுக்குள் படையெடுத்தது.
பாட்டி கதையை ஆரம்பித்தாள். ஒரு சமயம் எண்கள் அதாவது நம்பர்ஸ் வீட்டிலிருந்து எழுந்த கூச்சலும் சண்டையும் வாசல் வரை கேட்டது, அப்போதுதான் வெளியிலிருந்து திரும்பிய நமது 'பூஜ்யம்' ஒன்றும் புரியாமல் விழித்தது. என்னடா இது, நம்ம பூஜ்யம்னு சொல்றேனேன்னு பார்க்கறீங்களா ? பூஜ்யம் என்ற எண்ணை உலகத்துக்கு அறிமுகம் செய்ததே இந்தியர்களான நாம்தானே! வீட்டிற்குள் வந்த பூஜ்யம் "என்ன இது ! உங்கள் கூச்சல் வெளியில்கூட கேட்கிறதே. உங்களுக்குள் என்ன சண்டை"னு அப்பாவியாக கேட்டது.
"இதோ பார், நீ ஒரு சைபர். உனக்கு எந்த மதிப்பும் கிடையாது என்பது தெரியும்தானே. அப்புறம் ஏன் பெரிய இவனாட்டம் வந்து விளக்கமெல்லாம் கேட்கிறே? எங்களுக்குள் என்ன சண்டைனு சொன்னா அதை உன்னால் தீர்த்து வைக்க முடியுமா? உன் வேலையை பார்த்துக்கொண்டு போ " என்று எரிந்து விழுந்தது ஐந்து.
"அந்த சின்ன பையனை ஏன் திட்டறே?என்ன பிரச்னை என்றுதான் சொல்வோமே", என்ற மூன்று " எங்களுக்குள் யார் பெரியவன் என்பதுதான் இப்போதைய பிரச்சனைக்கு காரணம். அதாவது எங்களில் யாருக்கு மனிதர்களிடம் செல்வாக்கு அதிகம் என்பதை பற்றிதான் இப்போது சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்'னு விளக்கம் சொன்னது.
"இதை யாராவது ஒரு மனிதரிடமே கேட்கலாமே"னு பூஜ்யம் சொல்ல "அடடா இது நல்ல யோசனைதான்'னு ஒன்று முதல் ஒன்பது வரையிலான அனைத்து எண்களும் ஒத்துக் கொண்டன.
எல்லா எண்களும் ஒரு மனிதனை தேடி சென்று அவனிடம் "எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்'னு சொல்லுச்சு.
"உங்கள் வழக்கு என்னவென்று தெரிந்தால்தானே நான் நியாயம் சொல்ல முடியும். நீங்கள் ஒவ்வொருவராக வந்து உங்கள் பிரச்னை என்னன்னு சொல்லுங்க'னு அந்த மனிதன் சொன்னான்.
முதலில் எண் 'ஒன்று' முன்னால் வந்து சொல்ல ஆரம்பிச்சுது "எண்கள் வரிசையில் நாந்தான் முதல் ஆளாக நிற்பதிலிருந்தே என் பெருமை என்னன்னு இவர்களுக்கு புரிஞ்சிருக்கனும். இன்னும் என்னைப்பற்றி சொல்ல வேண்டுமா? ஒரே வானம் ஒரே பூமி என்று சொல்கிறார்களே இதுவே என் பெருமைக்கான சான்றுதானே ! இதை மற்ற எண்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே. அறியாமை இவர்களின் கண்ணை மறைக்கிறது'னு சொன்னது.
அடுத்ததாக மெதுவாக எழுந்து நின்றது எண் 'இரண்டு'. அது சொல்லுச்சு "மனுசங்களாகிய நீங்க எல்லாவற்றையுமே இரண்டாகதானே பிரித்து பார்க்கிறீர்கள். ஆண் பெண், வாழ்வு தாழ்வு, இன்பம் துன்பம், இரவு பகல், பிறப்பு இறப்பு என்று எல்லாமே இரண்டு பிரிவுக்குள்தானே அடக்கம். அதனால் எனக்குதான் முக்கியத்துவம் அதிகம்'னு சொல்லுச்சு.
அடுத்ததாக மூன்றாம் எண் முன்னால் வந்து சொல்ல ஆரம்பிச்சுது. 'உலகம் ஒன்று என்று அறிவியல் சொன்னாலும், அன்பு அறிவு ஆற்றல் இல்லாமல் மனிதர்களால் என்ன செய்ய முடியும்? கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலமென்று காலத்தையே மூன்றாகதானே பிரித்திருக்கிறீர்கள், அந்த வகையில் மூன்றாம் எண்ணான எனக்குதான் மதிப்பு அதிகம் என்றது.
எண் ' நான்கு' சொன்னது "வேதங்கள் நான்கு, திசைகள் நான்கு என்பதிலிருந்தே என்னோட பெருமையை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா'னு.
'ஐந்து' சொல்லுச்சு " பஞ்ச பூதங்கள்தானே இந்த அகிலத்தையே ஆட்டி படைக்கின்றன. அந்த வகையில் நான்தான் முக்கியமானவன்'னு.
ஆறாம் எண் சொல்லுச்சு, உலகிலுள்ள அனைவருமே நாக்கிற்கு அடிமைதானே. சுவையை விரும்பாத மனிதன் உண்டா? உணவை 'அறுசுவை'னு சொல்வதை வைத்தே என்னுடைய அருமை உங்களுக்கு தெரியலையான்னு.
எண் 'ஏழு' தன்னோட தரப்பு வாதத்தை எடுத்து வைத்தது. 'இசை கேட்டால் புவி அசைந்தாடுமே. எத்தகைய துன்பத்தையும் இசையானது மறக்க வைத்து விடுமே. அந்த இசை எழுவது 'ஸ ரி க ம ப த நி ஸ' என்ற ஏழு ஸ்வரங்களிலிருந்துதானே. அதனால் எனக்குதான் பெருமை அதிகம். நான்தான் முக்கியமானவன்'னு சொல்லுச்சு.
எண் 'எட்டு' கம்பீரமா எழும்பி நின்னு "அட்ட திக்குகள்'னு எட்டு திசைகளை சொல்கிறார்கள். அது மட்டுமல்ல, யாராக இருந்தாலும் சரி, அவர்களது உடல் உயரம் அவர்களது கையின் எட்டு சாண் அளவுக்குத்தான் இருக்கும் என்பது உண்மைதானே. 'எறும்பும் தன் கையால் எண் சாண்' என்பதை தெரியாமலா சொல்லி இருப்பார்கள்? உலகிலுள்ள ஒவ்வொருவரிடமும் என்னுடைய ஆதிக்கம்தானே அதிகம் இருக்கிறது. அதனால் நாந்தான் பெரியவன்'னு சொன்னது.
மற்ற எண்களை அலட்சியமாக பார்த்த 'ஒன்பது', ' இந்த பிரபஞ்சத்தில் சுழலும் கிரகங்கள் ஒன்பது. அவை இந்த உலகத்தை ஆட்டி படைக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியுமா? அட இவ்வளவு ஏன்? இவ்வளவு நேரம் வாய் கிழிய பேசினார்களே, இந்த எட்டு பேருமே எனக்குள்தான் அடக்கம். நவமணி, நவரசம்னு என்னோட பெருமையை அடுக்கிகிட்டே போகலாம். தன்னடக்கம் தடுக்கிறது. அதனாலே இத்தோடு நிறுத்திக்கிறேன்'னு சொல்லுசுது.
அங்கு சற்று நேரம் அமைதி நிலவியது. "நீ ஏன் பேசாமல் இருக்கிறே? உன்னோட பெருமையை சொல்லு?னு அந்த மனிதன் பூஜ்யத்திடம் சொல்ல
எல்லா எண்களும் சேர்ந்து 'ஹா ஹா' னு வாய்விட்டு பெரிசா சிரிச்சுது.
'அது ஒரு பூஜ்யம். ஜீரோ. அதுக்கு ஏது பெருமை'னு கேலியாக கேட்டுச்சு.
கொஞ்ச நேரம் யோசிச்ச பிறகு அந்த மனுஷன் சொன்னான்,சரி. பூஜ்யத்துகுனு தனியா எந்த மதிப்பும் இல்லே. ஆனால் உங்கள் ஒவ்வொருவருடனும் பூஜ்யம் சேர்ந்து வந்து நிற்கும்போது உங்கள் மதிப்பு பத்து மடங்கு அதிகமாகிறதே. உங்கள் மதிப்பை உயர்த்திக்காட்டுவதே இந்த பூஜ்யம்தானே. அதுமட்டுமில்லே. உங்கள் எல்லாருக்குமே ஒவ்வொரு வகையில் பெருமை இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் நட்பு கொண்டு நிற்கும்போது உங்கள் மதிப்பு அதிகரிக்கிறதே.' ஒன்று' என்ற எண் தனியாக நிற்கும்போது கிடைக்கும் மதிப்பைவிட மற்ற எண்களுடன் சேர்ந்து நிற்கும்போது கிடைக்கும் மதிப்பு அதிகம்தானே. அதை புரிஞ்சுகிட்டு எல்லாரும் ஒத்துமையா வாழணும்னு சொன்னான். அந்த மனுஷன் சொன்ன நியாயத்தை புரிந்துகொண்ட எண்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து, பூஜ்யத்தின் கைகளையும் பிடிச்சுகிட்டு அங்கே இருந்து சந்தோசமா கிளம்பி போச்சுங்க" என்று கதையை முடித்த பாட்டி, "இப்போ சொல்லுங்க ஒத்துமையா இருப்பது எவ்வளவு நல்ல விசயம்னு" கேட்டாள்.
"பாட்டி நாங்க போடுற சண்டை எல்லாமே சும்மா ஒரு ஜாலிக்குதான் பாட்டி"
"சண்டை போடறதில் அப்படி என்னடா ஜாலி இருக்கு !" என்று பாட்டி வியக்க "அதெல்லாம் ஓல்ட் ஆட்களுக்கு புரியாது மை டியர் கோல்ட் ஓல்ட்" என்று ஒரு சேர பிரபுவும் மனோவும் சொல்லி சிரிக்க மற்ற சிறுவர்களும், ஏன் பாட்டியுமே கூட அந்த சிரிப்பில் கலந்து கொண்டாள்..
No comments:
Post a Comment