இன்றைக்கும் இரவு வரும் !
வாயைத் திறந்து ஏதாவது சொல்றாளான்னு பாரு. அழுத்தக்காரி. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தானே எங்களுக்குப் புரியும். ரூமை விட்டு வெளியே வந்ததும் எங்களைப் பார்த்ததுமே அழ ஆரம்பிசியே, ஏன் ? உன்னைப் பிடிக்கலேன்னு சொன்னானா? சீர்வரிசை போறாதுன்னு சொன்னானா? வேறே எவளையாவது மனசிலே நினைச்சிகிட்டு உன்னை வேண்டாங்கிறானா? அவன் என்னதான் சொன்னான். சொல்லித் தொலையேன்டி. என்ன கேட்டாலும் 'ஒன்னும் நடக்கலே, ஒண்ணுமே நடக்கலேன்னு அழுதா அதுக்கு என்னடி அர்த்தம்?" என்று கேட்டு வீட்டிலுள்ள பெரிசுகளெல்லாம் நிவேதிதாவைக் குடைவதை தற்செயலாக அங்கு வந்த சங்கர், ஓரக் கண்ணால் வேடிக்கை பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான்.
நேற்றுக் காலையிலிருந்தே வாசு கண்ணில் தட்டுப் படவே இல்லை. நண்பர்களை பல முறை கேட்டுப் பார்த்தும், யாரும் சரியான, திருப்தி தரக் கூடிய பதிலை சொல்லவே இல்லை. கல்யாணக் களோபரம் எல்லாம் முடிந்து மண்டபத்தில் எல்லாரும் களைப்பில் கண்ணயர்ந்திருந்த நேரத்தில் மொபைலில் குமாரைத் தொடர்பு கொண்டு வாசு பற்றி விசாரித்தபோது
" சாரிடா சங்கர்,மேரேஜ் அன்னிக்கே உன் சந்தோசத்தைக் கெடுக்க வேண்டாம்னுதான் வாசு பத்தி நாங்க எதுவுமே சொல்லலே. உன்னோட மேரேஜ் அட்டென்ட் பண்ணத்தான் காலையிலேயே வண்டியில் கிளம்பி வந்திருக்கிறான். வருகிற வழியில் ஒரு ஆக்சிடென்ட். அடி கொஞ்சம் அதிகம்தான். ஆனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாங்க இந்நேரம் வரை ஆஸ்பத்திரியில் இருந்துவிட்டு இப்பத்தான் கிளம்பி வந்தோம்" என்ற பதில் கிடைத்தது. உடனே கிளம்பி சென்று உயிர் நண்பனைப் பார்க்க மனம் பரபரத்தது. ஆனால் கல்யாண சடங்கு சம்பிரதாயமென்று வீட்டிலுள்ள பெரியவர்கள் தடை போடுவார்கள் என்பது நன்றாகவே தெரியும். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், பால் செம்புடன், அலங்கார தேவதையாக நிவேதிதா அறைக்குள் நுழைந்தாள்.
முதல் சந்திப்பில் வேதனையான விசயத்தை மனைவியிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்த சங்கர், எந்தவொரு உணர்ச்சியுமில்லாமல் அவளைப் பார்த்தான். அவள் நீட்டிய பால் செம்பை வாங்கி கீழே வைத்துவிட்டு " நீ படுத்து தூங்கு. எனக்கு தூக்கம் வரலே. நான் அப்புறம் வந்து படுக்கிறேன்" என்று சொல்லி அவளைத் தவிர்த்தான். சற்று நேரத்தில் எழுந்த அவளுடைய விசும்பலையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இரவுப் பொழுதானது, இவருடைய நிம்மதியையும் வெவ்வேறு காரணத்தால் சீரழித்து சென்றது.
நேற்றைய நிகழ்வுதான் நிவேதிதாவின் அழுகைக்கு காரணம் என்பது சங்கருக்கு நன்றாக தெரியும். பெரிசுகள் நடுவில் மாட்டிக்கொண்டு நிவேதிதா படும் அவஸ்தை புரிந்தது.
"ஒன்னும் நடக்கலேன்னு அவ சரியாகத்தான் சொல்றா. பெரிசுகளுக்கு தான் எதுவும் புரியலே" என்று நினைத்து மனதுக்குள் சிரித்துக்கொண்ட சங்கர்" சரி, இன்றைக்கும் இரவு வரும். எல்லாவற்றையும் சரி செய்து விடலாமென்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

No comments:
Post a Comment