. இதுதான் பாசம் என்பதா ?
" வா ராகவா, செல்வம் சாப்பிடறான். உள்ளே வா. நம்ம வீடுதானே? என்ன கூச்சம்? நீயும் வந்து ஒரு வாய் சூடா சாப்பிடேன்" என்றாள் பார்வதி இதமான குரலில்.
" வேண்டாம்மா. சாப்பாட்டை முடிச்சிட்டுதான் வர்றேன் " என்று ராகவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஷர்ட்டை மாட்டிக் கொண்டே வெளியில் வந்த செல்வம், ' அம்மா, நானும் ராகவ்வும் பிக்சருக்குப் போறோம். நீ கதவை உள்ளே தாள் போட்டுக்கோ. நான் வெளியே பூட்டி சாவியை எடுத்துட்டு போயிடறேன். நீ சாப்பிட்டுட்டு படுத்துக்கோ. எனக்காக நீ தூங்காமே, கண் முழிச்சிட்டுருக்காதே" என்றபடியே வாசல் கதவைப் பூட்டினான் செல்வம்..
இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
" செல்வம், சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. உங்க வீட்டிலே நீயும் அம்மாவும் மட்டுந்தானே? காலையில் ஆபீசுக்குக் கிளம்பற அவசரத்திலே, தட்டில் இருக்கிறது என்ன என்பது கூட தெரியாமல் வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு அரக்கப் பறக்க கிளம்பறோம். மத்தியான சாப்பாட்டை ஆபீசில் பிரண்சோட சேர்ந்து சாப்பிடறோம். ராத்திரி சாப்பாட்டை மட்டுமாவது நீ அம்மாவோடு சேர்ந்து சாப்பிடலாம்தானே? எங்க வீட்டிலே ராத்திரி எவ்வளவு நேரமானாலும் சரி, காலையில் வீட்டை விட்டுக் கிளம்பிப் போன எல்லோரும் வீடு வந்து சேர்ந்த பிறகுதான், ஒண்ணா சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவோம்." என்றான் ராகவன்.
" உங்க வீட்டிலே மெம்பெர்ஸ் நிறைய பேர் இருக்கீங்க. ஏதாவது அதிகமா செஞ்சிருந்தாக் கூட, நீங்க ஆளுக்கு கொஞ்சம் அதிகம் போட்டு செய்து வச்சிருக்கிற சாப்பாட்டை காலி பண்ணிடுவீங்க. எங்க வீட்டில் நாங்க ரெண்டு பேர்தான்ங்கிறதாலே அம்மா எதையும் லிமிட்டாதான் செய்வாங்க. நான் எவ்வளவு சாப்பிட்டாலும் அம்மாவுக்கு திருப்தி இராது. செய்து வச்சிருக்கிற எல்லாத்தையும் என் தட்டிலேயே போட்டுட்டு இருப்பாங்க. தான் எதையும் சாப்பிட மாட்டங்க. நான் முதலில் சாப்பிட்டு விட்டு எழும்பிட்டேன்னா, மீதம் இருக்கிற சாப்பாட்டை வீணாக்க மனசில்லாமே, எல்லாத்தையும் அவங்க போட்டு சாப்பிடுவாங்க. அதனால்தான் நான் முதலில் சாப்பிட உட்கார்ந்து அம்மாவுக்காக சில ஐட்டங்களை மீத்து வச்சிடுவேன் " என்றான் சிரித்துக் கொண்டே.
"சாரிடா செல்வம். ரியலி யூ ஆர் கிரேட். உன்னை தப்பா நினைச்சிட்டேன். பாசத்திலே இப்படி ஒரு வகை இருக்குங்கிறது எனக்கு தெரியாமே போச்சே!" என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் சொன்னான் ராகவன்.
No comments:
Post a Comment