Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, February 01, 2012

Stories told by Grand - Ma ( Story Number - 8 )

                  சிபாரிசு !

"  பிரபு மணியக்காரர் வீட்டில் போய்  அவர்  இருக்கிறாரானு பார்த்து விட்டு வா" என்று பாட்டி சொன்னதுமே, கிளம்பி சென்றான் பிரபு. .
சிறிது நேரத்தில் திரும்பி வந்த பிரபு "அவங்க வீட்டு வாசலில் அவரோட செருப்பு கிடக்குது. அப்படின்னா அவர் வீட்டில்தான் இருக்கணும்"என்றான்.
"என்னடா இது? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான்கிற மாதிரி சொல்றே?  ராணி சிபாரிசு பண்ணின ஆள் வேலை பார்த்த மாதிரி பார்த்துட்டு வந்திருக்கிறே. " என்று பாட்டி சொல்லவுமே, இடைமறித்த மனோ "அது எந்த  ராணி பாட்டி? அவங்க யாருக்கு  சிபாரிசு பண்ணினாங்க ? நீ அதுக்கும் ஒரு கதை வச்சிருப்பியே " என்று மனோ கேட்கவும் "அதெல்லாம் கண்டிப்பா இருக்கும். என்ன கதை பாட்டி.அதை அவுத்து விடறதுதானே" என்றான் பிரபு ஆவலாக.
"ஒரு ராஜா. அரச சபையில் ஒரு பொறுப்பான பதவிக்கு ஒரு ஆளை போட நினைச்சார்
 இது தெரிந்ததும் மந்திரி அவருக்கு தெரிஞ்ச ஒரு ஆளை சிபாரிசு பண்ணினார். இது தெரிந்த ராணியோ என்னுடைய உறவுக்கார பையன் ஒருத்தன் இருக்கிறான். அவனைத்தான் அந்த பதவிக்கு போடணும்னு சொன்னாங்க.  ராஜா சொன்னார். " நாளைக்கு சபைக்கு அவனை வர சொல்லு. ஒரு பரிட்சை வச்சுப்  பார்ப்போம். யாருக்கு தகுதி இருக்கோ அவரை அந்த பதவிக்கு நியமிக்கலாம்" என்று சொல்லவும் ராணியும் 'சரி'னு சம்மதிசாங்க. 
மறுநாள் சபை தொடங்கியதுமே ராணி சிபாரிசு செய்த ஆள் வந்து விட்டான். அந்த நேரம் அரண்மனைக்கு வெளியில் மேளம், வானவேடிக்கை சத்தம் கேட்டது.
புதிதாக வந்த நபரை அழைத்த ராஜா 'வெளியில் என்ன சத்தம்னு பார்த்துட்டு வா" என்றார். 
வெளியில் போய் திரும்பி வந்த அவன் 'அது ஒரு கல்யாண ஊர்வலம்" என்றான்,
"யாருக்கு?" என்று ராஜா கேட்க விரைந்து சென்ற அவன், சிறிது நேரத்தில் திரும்பி வந்து "பக்கத்து ஊர் தலையாரி  மகனுக்கு" என்றான்.
"கல்யாணம் முடிந்து ஊர் திரும்புகிறார்களா அல்லது கல்யாணம் இனிமேல்தானா ?" என்று ராஜா கேட்க வெளியில் சென்ற அவன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து "கல்யாணம் நாளைக்குதான். இன்று மாப்பிள்ளை அழைப்பாம்" என்றான்.
இந்த சமயத்தில் மந்திரி சிபாரிசு செய்த ஆள் அங்கு வந்து சேர்ந்தான். "மன்னிக்க வேண்டும் அரசே. நீங்கள் சபையில் ஏதாவது முக்கியமான ஆலோசனையில் இருப்பீர்கள். நீங்கள் அழைத்தபின்பு  உள்ளே வரலாம் என்று வெளியில் நின்றிருந்தேன். இப்போதுதான் சேவகன் வந்து தாமதிக்காமல் உள்ளே செல்லலாம்'னு சொன்னார்  என்று விளக்கம் குடுத்தான். 
"சரி வெளியே எதோ சத்தம் கேட்கிறதே. என்னவென்று விசாரித்து விட்டு வா" என்றார்.
வெளியில் சென்று திரும்பிய அவன் "அரசே அது ஒரு கல்யாண ஊர்வலம். பக்கத்து ஊர் தலையாரியின் மகனுக்கு கல்யாணம். இந்த ஊரில் பெண் எடுக்கிறார். இன்று மாப்பிள்ளை அழைப்பு. நாளைக்குதான் கல்யாணம். கல்யாணம் முடிந்த கையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் தலையாரி வீட்டுக்கு கிளம்பி விடுகிறார்கள். கல்யாணத்திற்கு தங்களுக்கும் அழைப்பு இருப்பதால் நாளை நீங்கள் கல்யாணத்திற்கு  வருவீர்கள் என்று எதிர்பார்ப்புடன் பலத்த ஏற்பாடெல்லாம்  செய்யப்பட்டிருப்பதாக ஊர்வலத்தில் செல்கிறவர்கள் பேசிக்கொள்வது  என் காதில் விழுந்தது" என்று விளக்கம் கூறினான்.
ராஜா, ராணியின் முகத்தை பார்க்க ராணி தலை குனிந்து கொண்டாள்" என்று பாட்டி சொல்ல,
"ராணி என்ன தப்பு பண்ணினாங்க தலை குனிய ? " என்று மனோ கேட்டாள். 
"தகுதி இல்லாத ஆளுக்கு சிபாரிசு பண்ணினது ராணியோட தப்புதானே. ஒரு சாதாரண விசயத்தை விசாரிக்கவே சபைக்கும் வாசலுக்கும் பத்து தடவை நடந்தவன் கெட்டிக்காரனா,  இல்லாட்டா போன உடனே ஒரு சம்பவம் பத்தி விசாரிச்சிட்டு வந்து முழு விவரமும் சொன்னவன் கெட்டிக்காரனானு ராஜா பார்வையாலேயே கேட்டதை ராணி புரிஞ்சுகிட்டாங்க. அதான் தலையைக்  குனிஞ்சாங்க." என்று பாட்டி விளக்கம் கொடுத்தாள். 
"ஆக மொத்தத்தில் என்னை தகுதி இல்லாதவன்னு சொல்லிட்டியே பாட்டி" என்று பிரபு புலம்ப
"கோப படாதே குழந்தே. உன்கிட்டே இருக்கிற குறையை சரி பண்ணிக்கணும். நான் உன்கிட்டே மணியக்காரர் இருக்கிறாரா பார்த்துட்டு வான்னு சொன்னா "வாசலில் செருப்பு இருக்குனு' சொல்லிட்டு வர்றே. இப்போ இதே வேலையை சிவாகிட்டே சொல்றேன். என்ன நடக்குன்னு பாரு" என்ற பாட்டி "சிவா' என்று குரல் கொடுத்ததுமே "என்ன பாட்டி" என்று ஓடி வந்தான் சிவா.
"போய் மணியக்காரர் இருக்காங்களான்னு  பார்த்துட்டு வாப்பா " என்று பாட்டி சொன்னதுமே 'சரி' என்று சொல்லி சென்ற சிவா சில நிமிடங்களில் திரும்பி வந்தான். 
"பாட்டி,  ஐயா வீட்டில்தான் இருக்காங்க. ஆனா நீங்க இப்போ அங்கே போகாதீங்க. அவங்க வீட்டில் எதோ விருந்து போலிருக்கு. யாரையோ எதிர்பார்த்திட்டு இருக்கிறாபுல தெரியுது. அந்த அவசரத்தில் இப்போ நாம நிக்கிறதைக்கூட கவனிக்க அவங்க வீட்டு ஆளுங்களாலே முடியாது . நான் சாயந்திரம் அவங்க வீட்டு பக்கம்தானே விளையாட போவேன்.அப்போ அவங்ககிட்டேயே 'பாட்டி உங்களை பார்க்கனும்னு சொன்னாங்க. வர சொல்லவான்னு கேட்டுட்டு வந்து சொல்லுதேன். அதுக்கு பிறகு நீங்க கிளம்பி போங்க " என்று தகவல் சொல்லி விட்டு ஓடினான்.
"இது எப்படி இருக்கு ?" என்று பாட்டி பார்வையாலேயே கேட்க "தூள்தான்" என்று சைகை காட்டினான் பிரபு..

No comments:

Post a Comment