நல்லதொரு பாடமே !
"டேய் சிவா, வாடா, மைதானத்தில் போய் விளையாடலாம். தெருவில் வேண்டாம்டா" என்றார்கள் பரந்தாமனும் கோபாலும்.
"மைதானமாடா அது? ஒரே குண்டுங் குழியும்! அங்கே வரமுடியாதுடா. நேத்து வரை இங்கேதானேடா விளையாடினோம். இன்றைக்கு ஏன்டா இடத்தை மாற்றணும்?" என்று கேட்டான் சிவா வெகு அலட்சியமாக !
'நேற்று வரை நாம பண்ணினது தப்புன்னு நமக்கு தெரியாதுடா. இன்னிக்கு நம்ம ஸ்கூலில் மாணவர் மன்ற விழாவில் தலைமை தங்கி பேசின போக்குவரத்து காவல் துறை அதிகாரி, "சாலை விதிகளை மதிச்சு நடக்க கத்துக்கணும். ரோட்டை கிராஸ் பண்ணும்போது ரெண்டு பக்கமும் பார்த்துட்டு, எந்த வாகனமும் வரவில்லை என்பது உறுதியாக தெரிந்த பின் தான் ரோட்டைக் கடக்கணும். எதிர்பாராத நேரத்திலே ரோட்டின் குறுக்கே வருகிறவர்களை தவிர்ப்பதற்காக வாகன ஓட்டிகள் தங்கள் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்போதுதான், அல்லது திசை திருப்பும்போதுதான், நினைத்துக்கூட பார்க்காத வகையில் விபத்துக்கள் ஏற்படுகின்றது. சாலையில் நின்று கோலி ஆடறது, காத்தாடி விடறதெல்லாம் கூடாது. ரோட்டில் கிரிகெட் ஆடறதெல்லாம் தப்பு. சாலையை நாம எப்பவும் நாம போக்கு வரத்துக்கு மட்டும்தான் பயன்படுத்தணும். சாலையை நம்ம வீடா நினைச்சு விளையாடக் கூடாதுன்னு சொன்னார்தானே?" என்றான் கோபால்.
"சரிதான் போடா. அவர் வாங்குகிற சம்பளத்துக்கு அப்படிதான் ஏதாவது சின்சியரா பேசுவார். அதை எல்லாம் நாம கேட்டு நடக்கணும்ன்னு எந்த கட்டாயமும் கிடையாது." என்றான் சிவா அலட்சியமாக.
" கோபால், இன்னொரு விஷயம் கவனிச்சியா? நாம ஸ்கூலுக்கு சைக்கிளில் போறப்போ நமக்கு பின்னாடி வர்ற கார், பஸ் ஹார்ன் குடுத்தா " இவன் என்னவோ எக்ஸ்ட்ராவா ரெண்டு வீலை மாட்டிட்டு வந்துட்டு, ஹார்ன் குடுத்தா, நாம உடனே நாம ஒதுங்கி வழி விடணுமா என்ன"ன்னு கேட்டுட்டு, ஹார்ன் சத்தம் காதில் விழாதமாதிரி சிவா, வேண்டுமென்றே நடு ரோட்டில் மற்ற வண்டிகளுக்கு வழி விடாமே போவானே, அந்த மாதிரி ஆட்களைக் குறிப்பிட்டும் அந்த அதிகாரி பேசினார்தானேடா? வாகன ஓட்டிகள் ஹார்ன் குடுப்பது முன்னாடி போயிட்டு இருக்கிற வண்டிகளுக்கான எச்சரிக்கை ஒலி. "நான் பின்னாடி வந்து கொண்டிருக்கிறேன். நீ குறுக்காக போயிடாதேன்னு சொல்றதாகவும் எடுத்துக்கலாம். நீ கொஞ்சம் வழி விட்டா நான் கொஞ்சம் வேகமா போயிடுவேன், வழி விடுன்னு கேட்கிற மொழியாகவும் எடுத்துக்கலாம். அதை புரிந்துகொண்டு சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல நடந்துக்கணும்னு சொன்னாரே!" என்றான் பரந்தாமன்.
"ஒரு டிரைவரின் கையில்தான், பல நூறு உயிர்களை பத்திரமாக கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பு இருக்கிறது. அதை புரிந்துகொண்டு வாகன ஓட்டிகளும் வண்டியை ஓட்டணும். பொதுமக்களும் உதவி செய்யணும்னு சொன்னார். இன்று பள்ளிக்கூட சிறுவர்களாக இருக்கிற உங்களது கையில் தான் நாளைய இந்தியாவின் முன்னேற்றமே இருக்கிறது. நாளை நீங்கள் பெரியவர்களாகும்போது நாட்டுக்கு சேவை செய்ய எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும். ஆனால் இந்த வயதில் சாலை விதிகளை மதித்து நீங்கள் நடப்பதுதான் நாட்டுக்கு செய்யும் மகத்தான சேவைன்னும் சொன்னார். இப்ப அதுக்கு என்னங்கிறே?" என்று கேட்டான் சிவா.
"கடைசியா கேட்கிறோம். நீ மைதானத்துக்கு வர்றியா, இல்லே நாங்க மட்டும் போகட்டுமா?" என்று கேட்டார்கள் இருவரும்.
"நான் இங்கிருந்து வருவதாக இல்லை. நீங்க எங்கே போனாலும் அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை" என்றான் சிவா.
"அப்படின்னா நாங்க கிளம்பறோம்" என்று சொல்லிவிட்டு மைதானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் கோபாலும், பரந்தாமனும்.
இது நடந்து முடிந்து, பத்து நாட்கள் கழித்து, வகுப்பறையில் ....
"மிஸ், சிவா காலையில் இருந்தே அழுது கொண்டிருக்கிறான். நாங்க கேட்டதுக்கு எந்த பதிலும் சொல்லலை. நீங்க அவன்கிட்டே கேட்டா கண்டிப்பா சொல்லுவான். கேளுங்க மிஸ்" என்றார்கள் கோபாலும் பரந்தாமனும்.
மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட செல்லாமல், பெஞ்சில் முகம் புதைத்து படுத்திருந்த சிவாவின் அருகில் வந்த கிளாஸ் மிஸ், " என்ன சிவா, சாப்பிட போகலையா?" என்றார் கனிவான குரலில்.
உடனே பெருங் குரலில் அழத்தொடங்கிய சிவா, "மிஸ், எங்க அப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க"என்றான்.
சிவாவிடம் மிஸ் பேசுவது தெரிந்து, கோபால், பரந்தாமனுடன், மற்ற சில நண்பர்களும் சிவா அருகில் வந்து நின்று கொண்டார்கள்.
"நேத்து ராத்திரி அப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வண்டியில் வர்றப்போ ஒரு குழந்தை ஓடி வந்து அப்பா வண்டியில் விழுந்து அடி பட்டுட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பிடலில் இருக்குதாம். அப்பா எப்பவுமே ரொம்ப நிதானமாத்தான் வண்டி ஓட்டுவார். அந்த குழந்தை ஓடி வந்து விழுந்ததுக்கு அப்பா எப்படி பொறுப்பாக முடியும் மிஸ்? ஆனா அந்த குழந்தையோட வீட்டிலுள்ளவங்க அப்பாவை அடிச்சிருக்காங்க மிஸ். விஷயம் தெரிந்ததிலிருந்து அம்மா சாப்பிடவே இல்லை அழுதுகிட்டே இருக்காங்க " என்றான் சிவா அழுதபடியே.
"அழாதே சிவா. நடந்தது விபத்துதானே தவிர கொலை இல்லை. உங்க அப்பா மேலே எந்த தப்பும் இல்லேங்கிறது தெரிஞ்சா போலீஸ் அவரை எதுவும் செய்யாது. அந்த குழந்தை நல்லபடியா உயிர் பிழைச்சு வரட்டும்னு நாம எல்லாரும் கடவுள் கிட்டே வேண்டிக்கலாம். எல்லாம் நல்ல படியாகவே நடக்கும். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நான் உன்னை பத்தி ஒரு விஷயம் கேள்விப் பட்டேன். அதனாலே கேட்கிறேன். நீ எப்பவுமே ட்ராபிக், ரோட் ரூல்ஸை மதிச்சு நடக்க மாட்டியாமே ? நிஜமாவா? ஒரு குழந்தையால், அந்த குழந்தையின் பெற்றோரின் கவனக் குறைவால் எத்தனை பேருக்கு எத்தனை விதமான மனக் கஷ்டம் பார்த்தியா? இப்படியொரு கஷ்டம் எந்த சூழ்நிலையிலும் யாருக்கும் வரக்கூடாது. அதற்காக அரசாங்கம் எவ்வளவோ நடவடிக்கை எடுக்கிறது. ரோட்டில் ஒரு கோட்டை போட்டு கோட்டுக்குள் ஓட்டுன்னு சொல்றவங்க, அங்கங்கே அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை செய்கிறவங்க எல்லாரும் பைத்தியகாரங்க, நாமதான் புத்திசாலிங்க என்று மமதையை விட்டுட்டு , சாலை விதிகள் எல்லாவற்றையும் புரிஞ்சு, மதிச்சு நடக்க கத்துக்கோ. கவலைப்படாதே. அப்பாவிற்கு எதுவும் ஆகாது" என்றார் மிஸ்.
"இனிமே நான் ரோடு ரூல்ஸை ரொம்ப கரெக்டா புரிஞ்சு நடந்துக்குவேன். என் கண்ணெதிரில் யாராவது சாலை விதிகளை மீறி ஏதாவது செய்தால், எங்கள் நிலைமையை எடுத்து சொல்லி, அப்படி ஒரு நிலைமை அவங்களுக்கு வர வேண்டாம்னு எடுத்து சொல்வேன்" என்றான் உறுதியான குரலில்.
" குட். எந்த ஒரு கல்வியை கற்றுக் கொள்வதற்கும், அதற்கான விலையை கொடுக்க வேண்டியதிருக்கிறது. நீ ஒரு நல்ல படிப்பினையை கற்றுக் கொள்ள உங்கள் குடும்ப நிம்மதியை விலையாக தர நேர்ந்திருக்கிறது. உனக்கு இப்பவாவது தெளிவு வந்ததே! லேட் இஸ் பெட்டர் தென் நெவெர் ! கவலைப்படாமல் சாப்பிடு " என்று சொல்லி விட்டு மிஸ் சென்றதும், ஒரு புது வேகம், தெளிவு பெற்றவனாக சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான்..
"
No comments:
Post a Comment