Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, January 01, 2012

Stories told by GRAND-MA ( Story number - 6 )

     " அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
        வளம் பல பெற்று நலமுடன் வாழ்க !! "
   
                                                                         == அஞ்சுமி  
   படித்ததில் பிடித்தது !

 "  பாட்டி இன்னிக்கு என்ன கதை?"  என்று கேட்டபடியே    பாட்டியை தேடி சமையலறைக்கு பிரபுவும் மனோவும் வந்தனர்..
"இன்னிக்கு எதுவுமே கிடையாது" என்றாள் பாட்டி
"ஏன்?" என்றனர் இருவரும் பரிதாபமாக.
"தினமும் நான்  சொல்வேன். நீங்க "உம்" கொட்டி கேட்டுகிட்டே இருப்பீங்களா? ஒரு மாறுதலுக்காக இன்னிக்கு நீங்க கதை சொல்றீங்க. நான் கேட்டுகிட்டே இருப்பேன். சரியா?"
"போ பாட்டி. எங்களுக்கு கதை எல்லாம் தெரியாது"
"அப்படின்னா நீங்க படிச்ச  ஜோக்ஸ், துணுக்கு, நீங்க இல்லாட்டா உங்க ப்ரண்ட்ஸ்  செஞ்ச கோமாளித்தனத்தை எல்லாம் சொல்லுங்க"
"அவ்வளவுதானே. இப்போ வெளுத்து கட்டறோம் பாரு " என்ற பிரபு "டீ மனோ நீ போய் சிவா, சத்யா, அப்பு, ராதா, நிவேது, ஜெயந்தி, புவி எல்லாரையும் கூட்டிட்டு வா. எல்லாரும் ஆளுக்கொண்ணா சொல்லி பாட்டியை அசர வச்சிடுவோம்  " என்றதும் வெளியில் ஓடி சென்ற மனோ எல்லோரையும் அழைத்து வந்தாள் .உள்ளே வந்த அனைவரும் பிரபு சொன்னதைக்கேட்டு உற்சாகமாக "ஆஹா வெளுத்து வாங்கிடலாம் " என்றனர்.
"ஒரே ஒரு கண்டிஷன்" என்றாள் பாட்டி
"என்ன ?" என்ற குரல் கோரசாக வந்தது.
"நீங்கள் அனைவரும் நீங்கள் படித்த, கேட்ட, செய்திகளை தூய தமிழில் தான் சொல்ல வேண்டும்" என்றாள் பாட்டி
"பாட்டி பழி வாங்கிறியா?" என்றான் பிரபு
"அப்படி அல்ல. உங்களது தமிழ் புலமையை அறிய யாமும் விரும்புகிறோம்" என்றாள் பாட்டி.
"அப்படியா? எங்களால் முடிஞ்சவரை ட்ரை பண்றோம். இப்போ பாரு பாட்டி எங்க வித்தையை . சரி,  யார் முதலில் ஆரம்பிக்க போறீங்க" என்றான் பிரபு.
"நான்" என்ற சிவா  '' எதையும் பெரிது படுத்தியே   பேசுவது  ஒரு சிலருக்கு பழக்கம்.  ஒருத்தன் சொன்னான், " நான் வந்த பஸ்சில் கூட்டம் அதிகம். உட்கார இடம் கிடைக்கவில்லை. கடைசிவரை நின்று கொண்டேதான் வந்தேன்" என்று. அதைக்கேட்டதும் மற்றவன் , " நான் வந்த பஸ்சிலும் அப்படித்தான். டிரைவர் கூட நின்று கொண்டேதான் பஸ்ஸை   ஓட்டினாரென்றால், எந்த அளவுக்கு கூட்டம் இருந்திருக்குமென்று நீ கற்பனை செய்து பாரென்று !" சொன்னான் என்று சொல்லி முடித்தான்,
அடுத்தது யார் என்று பிரபு கேட்க "நான்" என்ற சத்யா சொல்ல ஆரம்பித்தான். " அது ஒரு சர்வாதிகார நாடு. அங்கு எல்லாப்பொருளுக்குமே தட்டுப்பாடு. காசு கொடுத்து ஒரு பொருளை வாங்கக்கூட மணிக்கணக்கில் கியுவில் நின்றாக வேண்டிய நிலை.  இதனால் ரொம்பவும் வெறுப்படைந்த மக்கள் கொதித்துப்   போயிருந்தனர்.  ஒரு குடும்பஸ்தன், தன் மனைவியிடம், " அந்த துப்பாக்கியை எடு. இன்னிக்கு அந்த சர்வாதிகாரியை சுட்டு தள்ளிவிட்டுத்தான் மறுவேலை " என்று ஆவேசமாக கிளம்பி போனவன், போன வேகத்திலேயே திரும்பிவந்து ஆயாசமாக சோபாவில் சாய்ந்தான். "என்னங்க ஆச்சு? " என்று கேட்டாள் மனைவி ஆவலாக. "அதற்குமே அங்கே ஒரு பெரிய க்யு நிற்கிறது !" என்றான் அந்த அப்பாவி கணவன்"
"அடுத்தது நான்" என்ற பிரபு, "ஒரு நடிகர். அவரது அழகான தலை முடிக்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அவருக்கு வரும் "ரசிகர் கடிதம்" எல்லாமே அவருடைய தலை முடியில் ஒன்று தங்களுக்கு வேண்டும் என்று கேட்டு எழுதப்பட்டதாகவே இருக்கும். நடிகரும், ரசிகர்கள் விருப்பத்திற்கிணங்க அத்தனை பேருக்கும் தலை முடி ஒன்றை அனுப்பிக்கொண்டிருந்தார். இதை கேள்விப்பட்ட அவரது நண்பர், "இப்படி எல்லோருக்கும் தலை முடியை அனுப்பிக்கொண்டிருந்தால் உங்கள் தலை சீக்கிரம் வழுக்கையாகிவிடாதா?" என்று கவலையுடன் கேட்டார். நடிகர் " வழுக்கை விழப்போவது உண்மைதான். ஆனால் எனக்கல்ல. என்னுடைய நாய் குட்டிக்குத்தான்" என்று சிரித்துக் கொண்டே  சொன்னார்" என்று சொல்லிவிட்டு "மனோ இப்போ நீ சொல்லுடி " என்று சொல்ல, மனோ ஆரம்பித்தாள். "நீச்சல் உடையில் வந்த இளம் பெண்ணொருத்தியை தடுத்து நிறுத்திய காவலாளி, "அம்மணி, இங்கு குளிப்பது தடை செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு பலகை இருக்கிறதே. தாங்கள் அதை கவனிக்கவில்லையா? இங்கு குளிக்கக்கூடாது !" என்றான். "அதை நான் நீச்சல் உடை  மாற்றுவதற்கு  முன்னமே சொல்வதற்கென்ன ?" என்று கோபமாக கேட்டாள் அந்த பெண். "அம்மணி, இங்கு உடை மாற்றுவதற்கு எந்த தடையும் கிடையாது" என்று அமைதியாக பதில் சொன்னான் அந்த காவலாளி" என்று
மனோ சொல்லி முடித்ததும், "அடுத்தது யார் ?" என்று சிவா கேட்க, அங்கு அமைதி நிலவியது, "அடுத்தது அப்பு சொல்லணும்" என்றாள் பாட்டி . "ஓகே" என்ற அப்பு, "ஒரு நீதிமன்றத்தில் குற்றவாளி ஒருவனை கொண்டு  வந்து நிறுத்தினர் காவலர்கள். "நீ செய்த குற்றமென்ன ?" என்று  நீதிபதி கேட்க "ஒன்னுமில்லீங்க எஜமான். தெருவில் ஒரு கயிறு கிடந்தது. அதை எடுத்ததற்காக காவலர்கள் என்னை பிடித்து வந்து  விட்டனர்" என்று குற்றவாளி சொல்ல, வியப்படைந்த நீதிபதி "தெருவில் கிடந்த கயிற்றை  எடுப்பது அவ்வளவு பெரிய குற்றமா?" என்று வியந்து போய் கேட்க "அந்தக்கயிறு  ஒரு மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்தது" என்று பதில் சொல்லினர் காவலர்கள். குற்றவாளியின் சாமர்த்தியத்தைக்கண்டு வியந்த நீதிபதி " கயிற்றை கையில் பிடித்த நீ, காவலர்கள் காட்டும் அறைக்குள் கம்பியை பிடித்துக்கொண்டு பத்து நாட்கள் இருந்து விட்டு வா !" என்று தீர்ப்பு கூறினாராம்"என்று சொல்லி முடித்தான்.
"பாட்டி ப்ளீஸ், நீயும் ஒண்ணு சொல்லேன் " என்று குழந்தைகள் கெஞ்ச , பாட்டி சொல்ல  ஆரம்பித்தாள்.
"ஒரு அம்மா அப்பா இரண்டு குழந்தைகள் உள்ள வசதியான குடும்பம். அவர்கள் போதாத நேரம் ?"
"அப்படின்னா என்ன பாட்டி?" என்று மனோ கேட்க, "அவர்கள் கெட்ட நேரம்னு அர்த்தம். ஒரு நண்பருடைய பேச்சை நம்பி தனக்கு கொஞ்சமும் அனுபவமில்லாத ரப்பர் தோட்ட தொழிலில் தங்கள் பணத்தை முதலீடு செய்தார் அப்பா. தொழிலில் ஏகப்பட்ட நஷ்டம்.தலைக்கு மேலே கடன் சுமை. கையிலிருந்த கடைசி பொருளை கூட விற்றாச்சு. கடன் அடைந்தபாடில்லை. கடன் தொல்லையால் ஊரை விட்டு ஓடி தலை மறைவாகிவிட்டார் அப்பா. அம்மா நோயாளியாகிவிட்டாள். அம்மாவும் மகன்களும்   வெளியூருக்கு  ஓடிவந்து விட்டார்கள்.கூலி வேலை செய்து பிழைத்து வந்தனர். அந்த வீட்டு பையன் ஒரு கடையில் வேலையில் சேர்ந்தான். அந்த கடையிலுள்ள பேப்பர், பென்சில், ரப்பர், பேனான்னு ஸ்கூல் படிப்பு சம்பந்தப்பட்ட பொருளை, வீடு வீடாக போய் விற்று வருவதுதான் அவனுடைய வேலை. ஒருநாள் அவன் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது அவனிடமிருந்த பொருளை வாங்கிய ஒருவர் ஒவ்வொரு பொருளையும் நன்கு  பரிசோதித்து வாங்கிக்கொண்டிருந்தார். கடைசியாக  ரப்பரை கையில் எடுத்த அவர் "ஏன்ப்பா, தம்பி,  ரப்பர் நல்லா அழிக்குமா?" என்று கேட்டார்.
பையன் சொன்னான் "என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. ரப்பர் நல்லா அழிக்கும். ரப்பர் ஒரு குடும்பைதையே அழிச்சிருக்கே" என்று சோகமாக !"என்று பாட்டி சொல்லி முடித்தாள்.
"பாவம் பாட்டி அந்த குடும்பம்" என்று அனைவரும் சேர்ந்து சொன்னார்கள்.
இதற்குள் வாசலிலிருந்து " ஏய் சிவா " என்று குரல் கேட்க, "இன்னிக்கு இதோடு முடித்துகொள்வோம். எல்லார் வீட்டிலும் உங்களை காணோமென்று தேட ஆரம்பித்து விடுவார்கள். எல்லாரும் சாப்பிட்டு விட்டு சாயங்காலமா வரலாம்" என்று பாட்டி சொல்ல,
"இத்துடன் சபை கலைகிறது" என்று பிரபு மனோ வழி மொழிய அங்கு ஒரே கூச்சல்  கொண்டாட்டம்தான்.


No comments:

Post a Comment