" இதோ பாரு, நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ அதெல்லாம் எனக்கு தெரியாது.. என் பையன் வெளிநாட்டுக்கு போறதில் எங்க வீட்டில் யாருக்கும் துளிக்கூட இஷ்டம் கிடையாது. போய்த்தான் ஆகணும்னு எந்த கட்டாயமும் கிடையாது. ஜஸ்ட் ஆப்சனல்தான். உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லே, ஏன் சொல்றேன்னா உன் பையனும் இவனும் ஒரே இடத்தில்தானே வேலை பார்க்கிறாங்க. நீ சொன்னதைக்கேட்டு உன் பையன் வெளிநாடு போற நினைப்பை மூட்டை கட்டி வச்சிட்டான். அந்த முடிவுக்கு இவனையும் கொண்டு வந்திட்டா போதும். நாளைக்குதான் கடைசி நாளாம், வில்லிங்க்னேஸ் லெட்டர் எழுதிக்கொடுக்க. அவனை உன் வீட்டுக்கு, நீ வர சொன்னதா சொல்லி அனுப்பறேன். நீ அவன் மனசை மாற்ற முயற்சி பண்ணனும். அவன் போகலைங்கிற நல்ல செய்தியை எங்களுக்கு சொல்லணும். உன்னைத்தான் மலை போல நம்பி இருக்கிறேன். நாளைக்குதான் கடைசி நாள் . இத விட்டா அடுத்த சந்தர்ப்பம் எப்போ வருமோ தெரியாது. ஆனால் இந்த தடவை அவனை போக விடாமே பண்ணினா போதும் இதை நல்லபடியா செஞ்சு முடிச்சுட்டேன்னா உனக்கு கோயிலே கட்டி கும்பிடுவேன்" என்று பால்ய சிநேகிதன் கோபாலன் சொன்னபோது அதை மறுத்து பேச ரங்கநாதனால் முடியவில்லை. கோபாலனின் மகன் கணேஷின் வருகைக்காக காத்திருந்தார் ரங்கநாதன், அவனிடம் என்னென்ன பேச வேண்டும் என்பதை மனதுக்குள் ஒத்திகை பார்த்தபடியே.
" அங்கிள் " என்ற குரல் கேட்டதுமே, "உள்ளே வாப்பா கணேஷ் " என்றார்.
"ஏதோ பேசணும்னு சொல்லியிருந்தீங்களாம். அப்பா சொன்னார். அதான் வந்தேன் " என்றான் கணேஷ்.
"நீயும் என் பிள்ளை மாதிரிதான்ப்பா. சுத்தி வளைக்காமே நேரே விசயத்துக்கு வர்றேன். 'ஆபீசில் ஒரு ஆப்பர் குடுத்திருக்காங்க. வெளிநாடு போவேன்னு அடம் பிடிக்கிறே நீ'ன்னு சொல்லி அப்பா ரொம்பவும் வருத்தப்பட்டார்" என்றார் ரங்கநாதன்.
"அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே இதில் விருப்பம் இல்லே அங்கிள். அவங்க வேண்டாம்னுதான் சொல்றாங்க. கேட்டா, உன்னை பிரிஞ்சு எங்களாலே இருக்க முடியாதுன்னு சொல்றாங்க. கால் காசு கூட செலவில்லாமல் கம்பெனி செலவில் வெளிநாடு போயிட்டு வர்ற அதிர்ஷ்டம் எத்தனை பேருக்கு அங்கிள் கிடைக்கும், சொல்லுங்க. அங்கிள். அப்படி ஒரு வாய்ப்புதான் எனக்கு இப்போ கிடைச்சிருக்கு. கொஞ்ச நாள்லே இங்கே திரும்பி வந்திடலாம். ஒருவேளை அங்கே அதிக நாள் தங்கி இருக்கிறாப்லேயும் சூழ்நிலை வரலாம். அப்படி ஒரு யோகம் கிடைச்சா நல்லதுதானே? வெளிநாட்டுலே வேலைன்னா சும்மாவா அங்கிள் ?. எத்தனை பேர் அதுக்காக தவம் கிடக்கிறாங்க."
"அட என்னப்பா பெரிய வெளிநாடு. ஏற்கனவே போனவங்கள்லே எத்தனை பேர் சந்தோசமா இருக்கிறாங்க ? வசதி வாய்ப்போட இருப்பாங்க. சந்தோசமாகவா இருக்கிறாங்க ? கண்டிப்பா இருக்காதுப்பா. பிறந்த மண்ணை, பெற்றவங்களை, உறவுகளை பிரிஞ்சு வந்த ஏக்கம் அவங்கவங்க மனசிலே ஊமை வலியாதான் இருந்து கிட்டுதானேயிருக்கும். இல்லேன்னு சொல்ல சொல்லு பார்க்கலாம். அப்படி யாராவது "இல்லே"ன்னு சொன்னா அவங்க மனுஷ வாடை பிடிக்காத, பணத்துக்கு ஆலாய் பறக்கிற ஜென்மமாகத்தான் இருக்க முடியும். சரிப்பா, அதெல்லாத்தையும் விடு. இங்கே சொல்ற மாதிரி உன்னோட சொந்த கருத்தை விருப்பு வெறுப்பை உன்னாலே பகிரங்கமா சொல்ல முடியுமா ? குடிக்கிறது கூழானாலும் சொந்த மண்ணில் ராஜா மாதிரி வாழ்வதை விட்டு விட்டு, பிஸ்கெட்டும் சாக்லேட்டும் சாப்பிட்டுகிட்டு பரதேசத்தில் அடிமை வாழ்வு வாழணுமா? கொஞ்சம் யோசிச்சு பாரு. உன்னோட மூளையை மூலதனமா வச்சு முன்னேறுகிற நாடுகள்ல்லாம், உன்னோட சுயமரியாதை பத்தியோ, உனக்கும் தன்மானம்னு ஒன்னு இருக்குங்கிறத பத்தியோ கவலை படுகிறதா என்ன ? நீ படிச்சவன், நல்லது கெட்டது தெரிஞ்சவன். உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லே. வீட்டிலிருக்கிற பெரியவங்க, பெத்தவங்களோட மனசு நோகுறாப்லே நடந்துக்காதே. உனக்கு இப்போ சொல்றததைதான் என்னோட பையனுக்கும் சொன்னேன். புரிஞ்சுகிட்டு ' போகலேன்னு எழுதிகொடுத்திறேன்ப்பா'ன்னு சொல்லிட்டான் " என்றார் ரங்கநாதன். "அங்கிள், சின்ன வயசிலும் சரி, காலேஜில் படிக்கிறப்பவும் சரி, என்னோட ஏழ்மையை சுட்டிக்காட்டி என்னோட நெருங்கின நண்பர்களே, விளையாட்டாக கிண்டல் அடிக்கும்போது நான் எவ்வளவு நொறுங்கி போயிருக்கிறேன் தெரியுமா? பிச்சை எடுக்கிறவங்களை, திருடுகிறவங்களை பார்த்து, " வேலை செய்து பிழைக்கிறதுதானே"ன்னு அட்வைஸ் பண்ணுகிற இந்த உலகம், வேலை தேடி போகிறவர்களை எந்த அளவுக்கு அவமதித்து கேலி செய்து அனுப்புதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் அங்கிள். வாசலில் நிற்கிற கூர்க்கா கூட, என்னை நாயை விரட்டற மாதிரி விரட்டி இருக்கிறான். சொந்த மண்ணில் எனக்கு கிடைக்காத மரியாதையை நான் ஏன் அந்நிய மண்ணில் எதிர் பார்க்கப் போகிறேன்? எல்லா அவமரியாதையும் பார்த்து முடிச்சிட்டுதான் இப்போ கௌரவமா ஒரு இடத்திலே உட்கார்ந்திருக்கிறேன். இங்கே நான் மாசம் முப்பது நாளும், இருபத்து நாலு மணி நேரமும், ஆயுசு பூரா உழைச்சாகூட ஒரு லட்ச ரூபாயை ஒரே சமயத்தில் கண்ணால் கூட பார்க்க முடியாது. இந்த உழைப்பை நான் ஆறே ஆறு மாசம் அங்கே காட்டினால் போதும். பல லட்சங்களை நான் சம்பாதிக்க முடியும். ஏழ்மையால் தலை குனிஞ்ச அவல நிலை என்னோடு போயிடனும். எனக்கு பிறகு வர போகிற சந்ததியாவது தலை நிமிர்ந்து வாழனும். அதுக்கு பணம் கண்டிப்பா தேவை. எல்லாரும் ஒரே இடத்தில் சேர்ந்திருந்து கஷ்ட ஜீவனம் பண்றதைவிட, யாராவது ஒருத்தர் எங்காவது பிரிஞ்சு போனால் நல்லது நடக்குமென்றால், பிரிந்து போறதில் தப்பில்லையே அங்கிள். கொஞ்ச நாள் கஷ்ட பட்டாலும், பிறகு ஆயுளுக்கும் சுகமா இருக்கலாமே. யாராவது ஒருத்தன் கஷ்டதில்தானே, மற்ற நாலு பேர் சுகப்பட முடியும் அங்கிள் . வெயிலையும், மழையையும், இருட்டையும், ஏன், வெளிச்சத்தையும் சகிச்சுகிட்டு, ஒருத்தன் பஸ் ஓட்டினாதானே, பஸ்சில் பயணம் செய்கிறவங்க ஜாலியா, சீட்டில் சாய்ஞ்சு படுத்துக்கிட்டும், சிரிச்சு பேசிகிட்டும் ட்ராவல் பண்ண முடியும். பெத்தவங்க எல்லாருமே அவங்க பிள்ளைங்க தங்களோடுதான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டா, பார்டருக்கு போய் சேவை செய்றது யார் ? நாட்டை காப்பாத்தறது யார்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க. யாரோ ஒரு சிலரோட தியாகத்தால்தான் பலரோட வாழ்க்கை நிம்மதியா இருக்கு."
"சரிப்பா, இவ்வளவு தூரம் யோசிக்கிற நீ அப்பா அம்மா மனசையும் யோசிச்சு பாரேன்."
" அங்கிள், உலகம் இப்போ நம்ம கைக்குள்ளேதான் இருக்கு. அந்த காலத்தில் தான் வெளியூர் போறதுக்கு கூட ஏகப்பட்ட ஏற்பாடு பண்ணனும். அடுத்த ஊருக்கு தகவல் சொல்ல கூட, ஒரு ஆள்தான் போய் வரணும். இப்போ அப்படி இல்லையே. கையில் செல்போனும், வீட்டில் நெட் கநெக்சனும் இருந்தா போதும். நினைச்ச நேரம் பேசலாம், பார்க்கலாம். இதை அப்பா அம்மா ரெண்டு பேருமே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க"
"அவங்களுக்கு தேவை உன்னோட பணம் இல்லேப்பா. உன்னோட அருகாமை. அதை உன்னை தவிர வேறு யாராலும் தர முடியாது. அந்த ஒன்னை மட்டும் நினைச்சு பார்த்து என்ன பண்ணணுமோ பண்ணு. சரிப்பா உனக்கும் ஆபீசுக்கு நேரமாகுது. என்னோட பேச்சை மதிச்சு இவ்வளவு தூரம் வந்ததுக்கு நன்றி. ஒரு காபி குடிச்சிட்டு கிளம்பேன் " என்றார் ரங்கநாதன்.
"வேண்டாம் அங்கிள். வீட்டில் கிளம்பறப்பதான் குடிச்சேன். வர்றேன் அங்கிள்" என்று சொல்லிவிட்டு கிளம்பினான் கணேஷ்.
ஏதோ ஒரு வீம்புக்கு வாய் வலிக்க பேசிவிட்டு வந்து விட்டாலுங்கூட, நினைவுகள் ரங்கநாதன் சொன்ன விசயங்களை பற்றியே சுழன்று கொண்டிருந்தது..
"பணமா ? பாசமா ?" என்று மனதுக்குள் நடத்திய பட்டி மன்றத்தில் " பாசம் " வெற்றி வாகை சூடியது. ஆபீசுக்கு வந்ததும் முதல் வேலையாக, "வெளிநாடு செல்வதில் விருப்பமில்லை " என்பதை எழுத்து மூலம் தெரிவித்தான். "கணேஷ், கொஞ்சம் யோசிச்சு எழுதிக்கொடுங்க. இதை விட்டா அடுத்த சான்ஸ் எப்போ வரும்னு தெரியாது. வராமலே கூட போகலாம் " என்று உயரதிகாரி சொன்னபோது, "இப்போ மட்டுமில்லே, இனி எப்பவுமே போற எண்ணம் இல்லே " என்றான் உறுதியான குரலில்.
கணேஷ் கிளம்பிப்போன பிறகு, அவன் சொன்ன விசயங்களை எல்லாம் யோசனை பண்ணி பார்த்த ரங்கநாதன், தன்னுடைய மகனுக்கு போன் செய்து "இந்தாப்பா, உன்னோட ஆசைக்கு குறுக்கே நிற்க எனக்கு விருப்பமில்லே. வெளிநாடு போறது பத்தி எழுதி குடுக்க இன்னிக்குதானே கடைசி நாள்னு சொன்னே. உனக்கு சம்மதம்னு எழுதி கொடுத்திடு" என்றார்.
No comments:
Post a Comment