Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 02, 2011

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 1



  ( நான் எழுதிய இச்சிறு கதை தினமணி - சிறுவர் மணி  11.04 .2009 இதழில் பிரசுரமாகியுள்ளது )


                        அப்பா !


 " சத்யா, படிக்காமல் எங்கே கிளம்பிட்டே ? வர வர உன் போக்கே சரியில்லே. அப்பா ஊரில் இல்லேங்கிற தைரியமா ? இந்த தடவை எக்சாமில் மார்க் குறைவாக வாங்கினால்  ப்ராக்ரெஸ் ரிபோர்டில் அப்பா கையெழுத்து போட மாட்டார். அதை நினைவில் வச்சுக்கோ " என்றாள் அம்மா.
"அப்பாவாம், பெரிய அப்பா  " என்று முணுமுணுத்தபடியே ஓடிய சத்யாவை "இந்த பையனுக்கு என்ன ஆச்சு ? அப்பா என்று சொன்னாலே  வாலை  சுருட்டிக்கொண்டு உட்காருவானே " என்றபடி  ஆச்சரியமாக பார்த்தாள் அம்மா.
சத்யாவின் மாற்றத்துக்கு காரணம் இருந்தது. அது என்னவென்றால் பத்து நாட்களுக்கு முன் அவனை அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றார் அப்பா. முதல் தேதி என்பதால் கடையில் கூட்டம் அதிகமிருந்தது. முதலாளி  வெளியில் போயிருந்தார். கடையிலிருந்த ஒரு ஆள்தான் பொருளை எடுத்துக்கொடுப்பதும் காசை வாங்கி கல்லாவில் போடுவதுமாக  இருந்தார்.
"இந்தாப்பா தம்பி. நான் இன்னிக்கு ராத்திரி ஒன்பது மணி பஸ் பிடிச்சு வெளியூர் போகணும். முதலில் ரவையும், ஒரு கிலோ அரிசி மட்டும் கட்டி கொடுத்திடு. மற்றதை உனக்கு நேரம் கிடைக்கும்போது வீட்டில் கொண்டு போய் கொடுத்திடு" என்று அப்பா சொல்ல, அவர் கேட்டதை முதலில் கொடுத்த கடைக்கார பையனிடம்  100 ரூபாய் நோட்டை கொடுத்தார் அப்பா. மீதி சில்லறையை வாங்கி கை பையில் போட்ட அப்பா, அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்ற நினைப்பில் கூட்ட நெரிசலிலிருந்து சத்யாவின் கைகளை பிடித்து அழைத்துக்கொண்டு வெளியேறினார். 
"வா சத்யா, ஹோட்டலில் போய் ஏதாவது டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம் " என்று அழைத்து சென்றார். சாப்பிட்டபின் பணத்தை கொடுப்பதற்காக பையிலிருந்து பணத்தை எடுத்த அப்பா, ஒரு 500 ரூபாய்  20 ரூபாய் நோட்டு இருப்பதைக்கண்டு " அடடா அவசரத்தில் கடைக்காரபையன்  50 ரூபாய்னு நினைச்சு 500 ரூபாயை கொடுத்திட்டான் போலிருக்கு" என்று முணுமுணுத்தார்.
 வீட்டுக்கு வரும் வழியில் மளிக்கை கடையில் அப்பா பணத்தை கொடுப்பார் என்று நினைத்த சத்யா கடையின் முன்பாக நின்றான். ஆனால் கடைப்பையனிடம் "சாமானை அனுப்பிடு" என்று நினைவு படுத்திய அப்பா  அவன் அதிகமாக கொடுத்த 450  ரூபாயை பற்றி எதுவுமே பேசாதது ஆச்சரியமாக இருந்தது.
 "ச்சே! அப்பாவா இப்படி ?" என்ற எண்ணம் எழுந்து அவன் போக்கையே இந்த பத்து நாட்களுக்குள் மாற்றிவிட்டது. வெளியூர் வேலை முடிந்து அப்பா வீட்டுக்கு வந்து விட்டார். 
"சத்யா பஸ் பிடிக்கிற அவசரத்தில் உனக்கு எதுவும் வாங்க முடியலே. வா. ஹோட்டலுக்கு அழைச்சிட்டு போறேன். நாம் சாப்பிட்டு விட்டு அம்மாக்கும் எதாவது வாங்கிட்டு வரலாம் " என்று சொல்ல, கொஞ்சமும் விருப்பமில்லாமல் கிளம்பி போனான் சத்யா.
மளிகைக்கடையை நோக்கி நடந்த அப்பா " வா சத்யா, ஒரு தேங்காய் வாங்கிட்டு போயிடலாம் " என்றார்.
"அம்மா வாங்க சொல்லலியே "
"பரவாயில்லே வா "
"ஒரு தேங்காய் கொடுப்பா " என்ற அப்பா யாரும் பார்க்காத நேரத்தில் கையிலிருந்த 500 ரூபாய் நோட்டை கடைக்குள் போட்டு விட்டு, முதலாளியிடம் "சார், அங்கே பாருங்க. 500  ரூபாய் நோட்டு கீழே கிடக்குது" என்றார்.
கடைப்பையன் ஓடி வந்து ரூபாயை எடுத்து முதலாளியிடமும் தேங்காயை அப்பாவிடமும் கொடுத்தான். தேங்காய்கான பணத்தை கொடுத்து விட்டு ஹோட்டலை நோக்கி நடந்தார் அப்பா.
"அப்பா, நீங்கதானே பணத்தை கீழே போட்டிங்க. பிறகு ஏன் ரூபாய் நோட்டு கிடைக்குதுனு பொய் சொன்னீங்க ?" என்று கேட்டான் சத்யா.
"அதுவா, அன்றைக்கு நாம சாமான் வாங்கினப்போ கடைக்கார பையன் 50 ரூபாய்னு நினைச்சு 500 ரூபாயை குடுத்திட்டான். நானும் கவனிக்காமல் வாங்கிட்டு ஹோட்டலில் போய்தான் பார்த்தேன். சரி, வீட்டுக்கு போகும்போது குடுத்திடலாம்னு பார்த்தா, அங்கே கடை முதலாளி உட்கார்ந்திருந்தார்.  அவர்கிட்டே போய் 'உங்க கடைக்கார பையன் 450 ரூபாய் அதிகம் குடுத்திட்டான்"னு நான் சொன்னா, அவர் வேலைக்கார பையனை  நாலு பேர் எதிரில் திட்டுவார். ஒருவேளை அவனை வேலையை விட்டே கூட எடுத்திடுவார். அவசர நேரத்தில் தவறு ஏற்படுவது  சகஜந்தான். சாதாரண விசயந்தான். அதற்கு ஒருத்தன் தண்டனை அடைய நாம் காரணமாக இருக்கலாமா? அதனால்தான் அன்றைக்கு பணத்தை குடுக்கலே. ஏதோ ஒரு வழியிலே அவருக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் சேர்த்திட்டோம்" என்று விளக்கினார் அப்பா.
"நம்ம பணம் 50 ரூபாயை நாம அவரிடமிருந்து வாங்கலயே அப்பா ?"
"போனால் போகுது. அவருடைய 450 ரூபாயை பத்து நாளாக நம்ம கையில் வச்சிருந்தோமே. அதுக்கான வட்டின்னு நினைச்சிக்குவோம் " என்றார் அப்பா சர்வ சாதாரணமாக.  
 "ச்சே! இப்பேர்ப்பட்ட அப்பாவை தப்பா நினைசிட்டோமே" என்று நினைத்து வெட்க பட்ட சத்யா "அப்பா, இனிமே நான் ஒரு நிமிசம்கூட வேஸ்ட்  பண்ணாமல் படிச்சு நீங்க ஆசைபட்ட மாதிரியே நம்பர் ஒன் ஸ்டுடென்ட் ஆக வந்து காட்டுவேன்" என்றான்.
இதை எதற்காக இந்த நேரத்தில் சொல்கிறான்  என்பது புரியாத அப்பா அவனை வியப்பாக பார்த்தார்.

No comments:

Post a Comment