எல்லோரும் எப்படி இருக்கீங்க?
அநேக நாட்களுக்குப் பின் இன்று கடைத்தெருவுக்குப் போனேன். ஒரு கடையில், ஒரு நபர் செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.
"எது எதுக்கோ சாலை மறியல் பண்றேதானே? நம்ம ஆளுங்களைக் கூட்டிக்கிட்டு வா. போராடுவோம். இவனுக ஊசி போட வந்தானுக.. நாம மாட்டோம்னு சொன்னோம். அப்படித்தானே? ஊசி போடாட்டா உள்ளே விடமாட்டானுகளாமா? பேசுறானுக பேச்சு. வடிகட்டின முட்டாளுங்க.. இவனுகளை பொறுப்பிலே உட்கார வச்சா இப்படித்தான் பேசுவானுக" - இது அவரின் கோபமான பேச்சு.
ஏற்கனவே ஊசி சமாச்சாரம், ஊசிப்போன சமாச்சாரமாக சின்னத்திரை களில் சிரிப்பாய் சிரிப்பதால், அவர் பேச்சின் சாராம்சத்தை நான் உடனே புரிந்து கொண்டேன்.
ஒரு பொருள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வழி செய்திருக்க வேண்டும். அதை நிராகரித்து அவர்கள் அடாவடியாக நடந்து கொண்டால் சட்டம் போட்டு அவர்களை அடக்கலாம்.. திருத்தலாம்.
ஊசிக்காக மணிக்கணக்கில் வெயிலில் காத்துக்கிடந்து, அவர்கள் "நாளைக்கு வா.. அடுத்த வாரம் வா.." என்று சொல்லும்போதெல்லாம் பொறுமை காத்து ஜனங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கிறார்கள்.
எங்கள் வீட்டு ஏமாளி ஒன்று, இரண்டாவது டோஸ் ஊசி போட (அதுவும் பணம் கொடுத்து) தினமும் நடையாய் நடக்கிறது. வேலை முடிந்த பாடில்லை. எனது மிக நெருங்கிய நட்பு வட்டம் ஒன்று, தடுப்பூசி அறிமுகம் ஆன உடனேயே ஊசி போட்டுக் கொண்டும் தற்போது அவருக்கு கொரோனா என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது.
இது குறித்து வேறொரு நட்பிடம் பேசியபோது, "அதுக்கெல்லாம் மெடிக்கல் டிபார்ட்மெண்டில் கைவசம் ஒரு ரெடிமேட் பதில் வச்சிருப்பாங்க. கேள்வி கேட்டவனை பைத்தியக்காரனாக்கிடுவாங்க. இன்னொரு பைத்தியக்காரத்தனம் கவனிச்சீங்களா அருணா.. இ - பாஸ் இருந்தால்தான் எங்கேயும் போக முடியும். இ-பாஸ் வாங்க ஊசி போட்ட அடையாளத்தை காட்ட சொல்றாங்க. ஏய்த்துப் பிழைப்பதற்கென்றே நாட்டில் ஒரு கும்பல் இருக்கிறது. எத்தனை போலி டாக்டர்ஸ் இருக்கிறாங்க.. சும்மா வெறும் தண்ணீரைக்கூட சிரிஞ்ச் மூலம் ஏத்திட்டு, கொரானா ஊசி போட்டாச்சு என்று சொன்னாலும் கூட ஆச்சரியப்பட எதுவுமே இல்லை. நாடு முழுக்க ஊசி வேணும்னு மோடியை குறை சொல்லிக்கிட்டு, அது போடாட்டா யாரும் வெளியே வரக்கூடாதுன்னு சொல்றது மகா காமெடி. வீட்டில் முடங்கிக் கிடக்கிற நமக்கும், நம்மை மறந்து சிரிக்க ஒரு சான்ஸை அரசாங்கம் தந்துகிட்டேதான் இருக்கிறது. இப்போ இப்படி அடிச்சுக்கிறாங்க.. இந்த கொரோனா பிப்ரவரி, மார்ச் மாதத்தில் லட்சக்கணக்காக கூட்டம் ஊர்வலம் போனபோது எங்கே போய் ஒளிந்திருந்தது. எலெக்சன் முடிஞ்சதும் கொரானா அது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டதா? " என்றாள்.
முதலில் பேசிய நபர் சொன்னது போல, அத்தனை பேரும் எங்களுக்கு ஊசி போட்டால்தான் ஆச்சு. அதுவரை எந்த இயக்கமும் இருக்காது என்று மறியலில் இறங்கிவிட்டால், முக்கிய பொறுப்பில் இருப்பவர்களின் நிலைமை என்னாகும்? அவர்களை நம்பி இருக்கும் லட்சக்கணக்கானோர் நிலைமை என்னாகும்?
வசதி படைத்தவர்களுக்கு, அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு அனைத்தும் வீடு தேடி வந்து வாசலில் காத்துக்கிடக்கிறது.
சாதாரண பொது ஜனம் என்ன பண்ணுவான் என்கிற சிந்தனை இல்லாமல் சட்டம் மேல் சட்டமாக அடுக்கி என்ன லாபம்? ஐ மீன்.. பொதுமக்களுக்கு என்ன லாபம்.
சிந்தித்துப் பார்ப்போம்.. செயல் படுவோம்..

No comments:
Post a Comment