Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, December 17, 2018

DEAR VIEWERS,


                        ’முதுமை போற்றுதும்!’
கடந்த சில நாட்களில் வலை தளங்களிலும் தொலைக்காட்சியிலும் அடிக்கடி கண்ணில் பட்ட காட்சி வயது முதிர்ந்த பெண்ணின் பாரசூட் பயணந்தான்.
எதைப்பார்த்தாலும் அதை நம் வீட்டோடு கம்பேர் பண்ணிப் பார்ப்பது நம்ம பிறவிக் குணமாச்சே. 
திருமணமாகி குழந்தை பிறந்து, அந்த குழந்தை பள்ளி செல்ல ஆரம்பித்ததுமே பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கடந்து விட்ட உணர்வுக்கு வந்து விடுகிறார்கள். (இப்போதெல்லாம் குழந்தைகள் மூன்று வயதுக்கு முன்பாகவே பள்ளி செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அதை மிகச் சரியாக சொல்வதென்றால் மூன்று வயதுக்கு முன்பாகவே அவர்களை பள்ளியில் கொண்டுபோய் ’தள்ளி’ விடுகிறோம்.) 
வீடு, அலுவலகம் தவிர மற்றவற்றில் கவனம் செலுத்த முடிவதில்லை. வேலை, விரக்தி என்கிற ரீதியில்தான் நாட்கள் தள்ளப்படுகின்றன. உணவு உடை என்று எதிலுமே ஒரு அலட்சிய மனோ பாவம் வந்து விடுகிறது.
இளம்பெண்களின் நிலையே இப்படியென்றால் பணி ஓய்வு, பெற்ற பிள்ளை களாலேயே விரட்டி அடிப்பு போன்ற நிலையில் இருப்பவர்கள், தங்களுக்கு வயதாகிவிட்டது...’இன்னும் அழைப்பு வராததுதான்  பாக்கி’ என்ற மாதிரியான மனோபாவத்தில்தான் தங்கள் நாட்களை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதையே கொஞ்சம் மாத்தி யோசிப்போமே; வயது என்பது வருடங்களின் எண்ணிக்கை தானே தவிர, எந்த ஒரு முயற்சிக்கும், சந்தோஷத்திற்கும் வயது ஒரு தடையே அல்ல. 
’சாந்தி நிலையம்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள்: 
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்கும் இடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது
போய்வரும் தூரமும் புதுப்புது உயரமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய்வரலாம்;
உலகம் போகின்ற வேகம் உருவமும் இனிமேல் மாறும்
நடக்கும் கதைகளைப் பார்த்தால் நமக்கே சிறகுகள் முளைக்கும்
- இவை வெறும் பாடல் வரிகள் மட்டும் அல்ல. எத்தனையோ பெண்கள் வயதான காலத்திலும் சாதனை புரிந்து இந்த பாடல் வரிகள் உண்மை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எதற்கும் வயது ஒரு தடையல்ல. நெஞ்சினில் துணிவும் முயற்சியும் இருந்தால் வானில் பறந்து பாராசூட்டில் டைவ் அடிக்கலாம் என்பதை செயலில் காட்டி இருக்கிறார் ரஷ்யாவைச் சேர்ந்த 93 வயதான மரியா கோல்டாகோவா. 1945ல் ஜப்பான் & ரஷ்யா இடையே நடந்த யுத்தத்தில் மாண்டு போன தனது சகோதரனின் நினைவாக இதனை செய்ததாக குறிப்பிடுகிறார்.
வானில் பறப்பது சுதந்திர உணர்வு; வானில் நான் நடனம் ஆடினேன். மேகக்கூட்டங்களை அருகில் பார்த்தேன். அதன் மேல் ஓடினேன். எனது 94வது பிறந்தநாளிலும் இதேபோல் செய்வேன் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
கோவையைச் சேர்ந்த 98 வயதான நானம்மாள், யோகாசனப் பயிற்சியைக் கற்றுக் கொடுக்கிறார். குடியரசுத் தலைவரிடமிருந்து ஸ்திரீ சக்தி புரஸ்கார் (பெண் சக்தி விருது) பெற்றுள்ள இவர், மிக வயதான யோகாசன ஆசிரியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
92 வயதைக் கடந்துவிட்ட ஹேரியட் தாம்ப்ஸன் சன்டியோகோவில் நடைபெற்ற மாரத்தானில் 26.2 மைல் தூரத்தை 7:24:36 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். 90க்கு வயதுக்கு மேலும் நடிப்பு, ஆடல், பாடல் என்று அசத்திக் கொண்டிருக்கும் அழகான பாட்டிகள் உலகம் முழுதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்த மூன்று பேருமே வயதான நிலையிலும், உடல் வலிமையில் மற்றவர்களுக்கு எப்படியொரு இன்ஸ்பிரே ஷனாக இருக்கிறார்கள்.
பணம், அதிர்ஷ்டம், முயற்சி போன்றவை இருந்தால் ஆசைப்பட்ட படிப்பு, வேலை எதையும் அடையலாம். முதுமை என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றல்ல. அது இறைவனின் வரப்பிரசாதம்...ஒரு சிலருக்கு அது சாபமாகவும் மாறி விடுவது வேறு விஷயம்.
என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கையை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொண்டால் எந்த ஒரு செயலுக்கும் வயது ஒரு தடையே அல்ல.
அடுத்த நிமிடம் மரணம் என்று தெரிந்தால்கூட, இருக்கிற இந்த நிமிடத்தில் என்ன செய்யலாம் என்று நினைக்கும் பக்குவ நிலைக்கு வந்து விட்டால், முதுமையோ மரணமோ நம்மை பயமுறுத்துவது இல்லை.
இதில் இரண்டு வழிகள்:
முன்னேற வேண்டும் என்ற ஆசை வரும்போது, நம்மை விட மேலான நிலையில் இருப்பவர்களைப் பார்த்து, அவர்களை ஒரு ரோல் மாடலாக நினைத்துக் கொண்டு நாமும் அந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நினைப்பை விதைத்துக் கொள்வோம்.
ஏதோ ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது, நம்மைவிட பாதிப்பில் இருப்பவர் களைப் பார்த்து ’நல்லவேளை... நமக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை’ என்று நினைத்துக் கொள்வோம். அந்த நினைப்பே ஒரு உற்சாக டானிக்.  மனதில் உற்சாகம் இருந்தால் கவலையாவது.. வருத்தமாவது. 
ஜாலியா முதுமையை அனுபவித்துக் கொண்டிருங்களேன்...
(முதுமையை என்ஜாய் பண்றதாக நினைத்துக்கொண்டு, 80 வயதைத் தாண்டி விட்ட காலத்தில் கூட ரொம்பவும் எனெர்ஜிடிக் ஆக நினைத்துக் கொண்டு பெண்கள் பின்னால் அலைந்து "வாங்கிக் கட்டிக் கொள்ளும்" சாக்கடைகளை நாம் இந்த லிஸ்ட்டில் சேர்க்க வேண்டாம். இதை ஏன் இங்கு பதிவு செய்கிறேனென்றால் பாசிட்டிவ் இருக்கிற இதே மண்ணில்தான் நெகட்டிவ் ஆன விஷயங்களும் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளத்தான்.)

No comments:

Post a Comment