’சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்!’ என்று சிலர் கிண்டலாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.
’ஊழியே பெயரினும் ஒரு சில. விஷயங்கள் மாறவே மாறாது போலிருக்குது’ என்று சிலர் விரக்தியில் சொல்லக் கேட்டிருக்கிறோம். ரெண்டுமே நெஜந்தானுங்க.
நான் உயர்நிலைப்பள்ளிக் கல்வி பயின்று கொண்டிருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று. நாங்கள் குடியிருந்த வீடு காம்பவுண்ட் வீடு.. அப்படின்னா ஒரு வளைவுக்குள் பல குடித்தனக்காரர்கள் இருப்பாங்க. அந்த மாதிரி குடியிருப்பில் பொதுத்திண்ணைனு ஒண்ணு இருக்கும். ஆம்பிளைங்களோ, பொம்பளைங்களோ அங்கே உட்கார்ந்து எதையாவது பேசி பொழுதைக் கழிப்பாங்க. அவங்க பேசறது அக்கம்பக்கத்து வீடுகளுக்கு நல்லாவே கேட்கும். அதைப்பத்தி எல்லாம் பேசறவங கவலையே படமாட்டாங்க.
அங்கு குடியிருந்த மாமன் மச்சானுக்குள் அடிக்கடி நடக்கும் வாக்கு வாதம்; மொத்ததில் அது ஒரு விதண்டா வாதம்.
’மாமோய்; நான் ஒண்ணும் உன்னைப்போல இல்லை. எவனாவது வருவானா; வாங்குவானானு கடையைத் திறந்து வச்சுகிட்டு காத்திருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லே. அரைக்காசு உத்யோகம் ஆனாலும் அரண்மனை உத்யோகம்; கால் காசு சம்பளம்னாலும் கவர்ன்மென்ட் சம்பளம்’
மச்சான் இவ்வளவு பேசும்போது மாமன் சும்மா இருக்கமுடியுமா?
’கைகட்டி சேவகம் பண்றதுக்கே இத்தனை வாய் சளுக்கு; நீயெல்லாம் சொந்தமா தொழிலில் இறங்கிட்டா உன்னை கையில் பிடிக்க முடியாது..நீ பத்து ரூபா வசூல் பண்ணின லட்சணம் எனக்குத் தெரியாதா என்ன?’
இதோடு மச்சான் வாயை மூடிக் கொள்வார். இது அடிக்கடி நடக்கும் சம்பவம்; ஒரே டயலாக்.. சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி பேசும் தொனி வேணும்னா மாறுபடும்.
இவங்க பேசறதைக் கேட்கும் போதெல்லாம், ’ அது என்ன பத்து ரூபா வசூல் ’ என்கிற கேள்வி என்னைக் குடைந்து கொண்டே இருக்கும்.
இதை அவங்ககிட்டேயே கேட்டு விடறது என்ற முடிவுடன் கேட்டும் விட்டேன்.
அவர் சொன்ன விளக்கம்.
’என் மச்சானுக்கு ஆபீசில் கணக்குவழக்கு பார்க்கிற வேலை. ஒருத்தன்கிட்டேயிருந்து என் மச்சான் வசூல் பண்ண வேண்டிய தொகை பத்து ரூபா.. வெறும் பத்து ரூபா.. அதை தரச் சொல்லி அவனுக்கு கொறஞ்சது பத்து லட்டராவது மாசாமாசம் போட்டிருப்பான். பதிலே வராது. அவன் தஞ்சாவூரில் இருக்கிறானு தெரிஞ்சு அங்கே ஓடினான். இவன் வர்றது தெரிஞ்சு அவன் அங்கேருந்து தலைமறைவாயிட்டான். கடைசியில் ராமேஸ்வரத்தில் இருக்கிறது தெரிஞ்சு அங்கே போய் பணத்தை வசூல் பண்ணிட்டு வந்துட்டான். அதைத்தான் நான் கிண்டலா அடிக்கடி சொல்வேன்.’
’எப்படியோ பணத்தை வசூல் பண்ணிட்டார்தானே?’& நான்.
’அதை வசூல் பண்றதுக்காக இவன் லட்டர் போட்ட செலவு, ஊர் ஊராக போய் வந்து செலவு இதை எல்லாம் கணக்குப் பார்த்தால், அது அவன் தரவேண்டிய பணத்தைவிட பத்து மடங்கு அதிகம் இருக்கும். பத்து ரூபா பணத்தை வாங்க நூறு ரூபா செலவு பண்ணின அதிமேதாவி.. இவனுன்னு இல்லே.. கவர்ன்மென்ட் லட்சணமே இதுதான்’ என்று சொன்னார்.
எப்போதோ நடந்த சம்பவம் இன்று நினைவுக்கு வருதுன்னா அது எங்கள் வீட்டுக்கு வந்த டெலிபோன் பில்தான்.
எங்கள் வீட்டுக்கு டெலிபோன் போன் பில் வந்தது. கட்ட வேண்டிய தொகை 0.54 (வெறும் ஐம்பத்து நான்கு பைசா). அதை 21.08.2018 க்குள் கட்ட வேண்டும் என்ற குறிப்பும் இருந்தது.
போனமாதம்தான் 11,430 ரூபாய் (இன்டர்நெட்டுக்கும் சேர்த்து) பணம் கட்டி இருந்தோம்.
ஒருவேளை அவர்கள் பில்லில் விடுபட்ட தொகையாகக்கூட அது இருக்கலாம்.அதைக் கேட்பது தப்பும் இல்லை. ஆனால் அந்த 0.54 பைசாவுக்காக அவர்கள் செய்த தபால் செலவு மூன்று ரூபாய். இப்போ பழையபடி நீங்கள் முதல் இரண்டு வரிகளைத் திரும்பப் படியுங்க.. சிரியுங்க.. மறக்காமே சிந்தியுங்க.
இதே லட்டரை கவுண்டமணி எப்படி ரியாக்ட் பண்ணி இருப்பார்னு ஒரு கற்பனை:
’அய்யா.. பில் அனுப்பி இருக்கீங்க.. அதை கட்டாட்டா லைனை கட் பண்ணிடுவீங்களா அய்யா..
அய்யா. நான் ஏற்கனவே 11430 ரூவாய ஒரு வருசத்துக்கு சேர்த்து கட்டிட்டேனுங்க அய்யா. இந்த 54 பைசா கட்டாததுக்கு லைனை இந்தமாசமே கட் பண்ணுவீங்களா.. இல்லே வருசம் முடியறப்ப கட் பண்ணுவீங்களா.. 54 பைசாக்கு எத்தனை நிமிஷம் கட் பண்ணுவீங்கனு தெரிஞ்சா நல்லா இருக்குமுங்க அய்யா’
(ஆனா ஒரே ஒரு விஷயத்தை நாம் ஜென்மத்துக்கும் மறக்க முடியாது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் புயல் மழை சென்னையைப் புரட்டிப் போட்ட போது, ’நம்பர் ஒன் சர்வீஸ்’ என்று மார்தட்டி விளம்பரம் செய்த தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலையில் முடங்கிக் கொண்டன. பி.எஸ்.என்.எல் மட்டுமே அந்தப்புயலைத் தாக்குப் பிடித்து தனது சேவையைச் செய்தது.)

No comments:
Post a Comment