கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ....!
"தாத்தா....."
"கோவிலுக்குப் போறச்சே வீண் பேச்சு பேசக்கூடாது. பகவான் நாமத்தைச் சொல்லிண்டே வரணும்னு சொன்னேனா இல்லியா ?"
"அய்யோ .. நீ சொல்லு தாத்தா.. அந்த ஆள் ஏன் இன்னும் தூங்கறான் ?"
"நேத்து ராத்திரி முழுக்க ஏதாச்சும் வேலை பண்ணிண்டு இருந்திருப்பான். அதான் இப்போ தூங்கறான்..."
"வீட்டிலே தூங்காமே ஏன் ரோட்டிலே தூங்கறான்..."
"சாமி அவனுக்கு வீடு கொடுக்கலே அதான்.."
"ஓ .. அப்படியா? தாத்தா அதோ பாரேன்... அந்த மாமி கிழிச்சலைக் கட்டிண்டு இருக்கிறா... சட்டையும் கிழிசல்.. நம்ம ஆத்துலே நாம இந்தமாதிரி கட்டிக்கிறதில்லே.. இவா மட்டும் ஏன் இப்படி ?"
"அவாளுக்கு பகவான் குடுக்கலே...இனிமே தொணதொணன்னு பேசினா முதுகில் வச்சிடுவேன்.."
"தாத்தா .. ப்ளீஸ் தாத்தா.. இன்னும் ஒரே ஒரு கொஸ்டின்..நாம கையை வீசிண்டு நடக்கிறோம்.. அதோ அந்த அங்கிள் கையில் கழியைப் பிடிச்சிண்டு தவளை மாதிரி தத்தி தத்தி போறார்....."
நடப்பதை நிறுத்திவிட்டு பேரனை முறைத்துப் பார்த்தார் ராகவன்.
"ஸாரி தாத்தா.. அவருக்கு சாமீ குடுக்கலே.. அதானே? ஓகே!"
"அப்பாடா" என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் ராகவன்.
கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்தனர். தரிசனம் முடிந்து வெளியில் வரும் வரை ஏதாவது கேட்டு தொணதொணக்காமல் இருந்தானே என்று உள்ளுக்குள் மகிழ்ந்தார் ராகவன். அதே சமயம் ஹாலிடேய்ஸ் முடியப்போகுது. நாளைக்காலையில் மருமகள் வந்து இவனை மும்பைக்கு கூட்டிக்கொண்டு போய்விடுவாள். ஒருவாரம் கலகலப்பாக இருந்த வீடு இனி ஓய்ந்து கிடக்கும். குழந்தைக்கு ஐந்து வயது முடியப்போகுது. இப்பத்தான் முதல்முறையாக தாத்தா இருக்கும் ஊருக்கு வந்திருக்கிறான் என்று மனதுக்குள் கவலையும் வருத்தமும் ஒரு சேர நடந்து கொண்டிருந்தார்.
கோவில் வாசலில் நின்றிருந்த பிச்சைக்காரக் கும்பல் "அய்யா .. சாமீ.. தர்மம் " என்று கேட்டு இவர்கள் பின்னாலே வந்தது.
கையில் இருந்த சில்லறையை இரண்டு பேருக்கு தூக்கிப் போட்ட ராகவன், மற்றவர்களை, "போங்கப்பா.. எதுவும் இல்லை " என்று விரட்டினார்.
ஒரே ஒரு பெண் மட்டும் கைக்குழந்தையுடன் இவர்கள் பின்னாலே ஓடி வந்தாள்.
"சாமீ.. பச்சப்புள்ளே.. பசி உயிர் போகுது சாமீ "
பைக்குள் கைவிட்டு, கையில் கிடைத்த சில்லறையை அவளிடம் கொடுத்தார்.
"தாத்தா... பசின்னா என்ன ? அது வந்தா நாம செத்துடுவோமா?"
பதிலேதும் சொல்லாது மௌனமாக நடந்தார் ராகவன்.
"பசின்னா என்ன தாத்தா ? அவங்க ஏன் நம்மகிட்டே கேக்கிறாங்க ?"
"எனக்கு ஏதாது சாப்பிடக்குடுன்னு சொல்லி வயிறு கேட்கும்.. அவங்களை பாடாய் படுத்தும். அவங்க கையில் வயித்துக்கு குடுக்க எதுவும் இல்லை. அதான் மத்தவங்க கிட்டே கேக்கிறாங்க "
"வயிறு பேசுமா தாத்தா! எனக்கு தெரியாதே... தாத்தா அங்கே ஒருத்தருக்கு வீடு இல்லே. ஒரு மாமிக்கு நல்ல ட்ரெஸ் இல்லே. அதெல்லாம் அவங்களுக்கு கடவுள் கொடுக்கலேன்னு சொல்றே. இங்கே காசு கேட்டு நம்ம பின்னாடி ஓடி வர்றவங்களுக்கு வயிறை மட்டும் கடவுள் ஏன் கொடுத்தார். அவங்க கிட்டே பணம் இல்லேனு தெரிஞ்சும் கடவுள் இவங்களுக்கு ஏன் கொடுத்தார். ஒருத்தருக்கு காலை குடுக்கலே. இன்னொருத்தருக்கு கண்ணைக் குடுக்கலே. காலு, கண்ணுனு மத்ததை கொடுக்காத மாதிரி வயிறையும் கொடுக்காமே இருந்திருக்கலாந் தானே !" என்று சர்வ சாதாரணமாக கேட்டான் பேரன்.
இதை சற்றும் எதிர்பாராத ராகவன் அதிர்ந்து போனார்.
"நீ எங்கிட்டே கேட்டுட்டே.. நான் யாரைக் கேட்கிறது ?" என்று மட்டுமே பதில் சொல்ல அவரால் முடிந்தது.
Very interesting :)
ReplyDelete