அடேயப்பா !!
கோவிலில் மூலவருக்கு தீபாராதனை முடிந்ததும் கோவில் பிரகாரத்தை வலம்வந்து, கோவில்வாசலில் வழங்கிக் கொண்டிருந்த பிரசாதத் தொன்னை ஒன்றைக் கையில் வாங்கிய ஏகாம்பரம், "அடேயப்பா... என்ன ஒரு மணம்.. வாசனையே அதன் ருசி எப்படிஇருக்கும்னு சொல்லிடும். கையில் வாங்கிற ப்பவே எனக்கு நாக்கில் எச்சில்ஊறுது!" என்று நண்பர் சூரிய நாராயணனிடம் சொன்னவர், "இருப்பா.. பூக்கடைவரை போயிட்டு வந்துடறேன் " என்றார்
"சாமிக்கு பூஜை முடிந்து, கையில் பிரசாதம் வாங்கின பிறகு சாமிக்கு பூ வாங்கி போடுவியா?" என்று கிண்டலாக கேட்ட நண்பருக்கு பதிலேதும் சொல்லாமல் வெளியில் விரைந்த ஏகாம்பரம், சில நொடியில் கையில் பாலித்தீன் கவருடன் வந்தார்.
"இந்தாப்பா.. உனக்கு ஒன்று ?" என்று சொல்லி, நண்பர் கேட்காமலேயே அவர் கையில் கவரைக் கொடுத்துவிட்டு, கையிலிருந்த மற்றொரு கவரில் பிரசாத தொன்னையை கவனமாக பேக் செய்தார்.
"என்ன இது புதுப்பழக்கம்? வழக்கமா நாம கையில் வாங்கின பிரசாதத்தை குளக்கரையில் உக்கார்ந்து சாப்பிட்டுட்டு தொன்னையை தூர எறிஞ்சிட்டு போவோம். இன்னிக்கு இவ்வளவு கவனமா பேக் பண்றே ?"
"ஆமாம்ப்பா.. இன்னிக்கு கொடுத்த பிரசாதம் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன். வாசனையே தூக்குதே. என்பையனுக்கு சர்க்கரைப் பொங்கல் ரொம்பப் பிடிக்கும். அவனுக்கு குடுக்கத்தான் பார்சல் பண்ணினேன். "
இதைக் கேட்டு சத்தமாக வாய்விட்டு சிரித்தார் சூரிய நாராயணன்.
"ஏம்ப்பா சிரிக்கிறே ?"
"இல்லே.. அப்பாக்களுக்கு பெண்குழந்தைங்க மேலேதான் பிரியம் அதிகம்னு சொல்லுவாங்க. பொண்ணுக்காக எதையும் செய்வாங்கனு சொல்வாங்க. நீயே சொன்னே, "கையில்வாங்கிறப்பவே எனக்கு நாக்கில் எச்சில்ஊறுது!"னு. ஆனா துளிக்கூடஎடுத்து வாயில்போடாமே, அதைஅப்படியே பையனுக்குனுசொல்லி எடுத்து வைக்கிறே.. அதை நினைச்சேன்.. சிரிச்சேன்... சரி .. இப்போ வீட்டுக்குப் போனதும் .. உன் பையனைப் பார்த்ததும் உன்னோட ரியாக்ஸன் என்னவா இருக்கும் ?"
"எதுக்கு கேக்கிறே ?"
"அட சொல்லேன்.. சும்மா தெரிஞ்சுக்கத்தான்.."
"நான் வீட்டுக்குள் போறப்ப, ஒண்ணு அவன் மொபைலை நோண்டிட்டு இருப்பான். இல்லே..கம்ப்யூட்டர் முன்னாடி கவிந்து கிடப்பான்.. முண்டம்.. முண்டம்..உருப்படாததண்டம்..இதிலேவீணாக்கிறநேரத்தை"வான்டட் காலம்" பார்த்து ஜாப்க்கு அப்ளை பண்றதில் வீணாக்குனு கத்துவேன்."
"அவன் சம்பாதிச்சு தந்தால்தான் குடும்பம் நடக்குமா ?"
"ஏண்டா.. உனக்குத் தெரியாதா ? பொண்ணா இருந்தா ஒரு இடத்தில் கட்டிக் கொடுத்திட்டா அதன்பிறகு நம்ம பாரம் இறங்கிடும். இவன் பிள்ளையாச்சே. இவனுக்கு கல்யாணம் ஆனதும் அவனோட குடும்ப பாரத்தை அவன் சுமக்க அவனை நாம ரெடி பண்ணணுமே.. அதான் 'இப்படிப்பண்ணு.. அப்படிப்பண்ணு' னு ஓடஓட விரட்டிட்டே இருக்கிறேன்."
"புரியுது..ஒரு தொன்னை அளவு பிரசாதத்தைக்கூட தின்ன மனசு வராமே அதை அப்படியே பிள்ளை கிட்டே குடுக்கிறதும் ஒருவித பாசந்தானே .. பிறகு ஏன் அப்பாக்களுக்கு மகன்க மேலே இருக்கிற பாசத்தை யாரும் நினைச்சே பார்க்கிறதிலே..அப்பாக்களுக்கு பொண்ணுங்க மேலே மட்டுந்தான் பாசம்கிற மாதிரி எல்லாரும் பேசறாங்க."
"................."
"என்ன.. எதுவும் சொல்லாமே பேசாமே இருக்கிறே ?"
"இதை நீ சொன்னதும் எங்கப்பா சொன்ன ஒரு சம்பவம் நினைவுக்கு வந்துது .. இப்படியும் ஒரு அப்பா இருப்பாரான்னு அடிக்கடி நினைப்பேன்.. எங்கப்பாவுக்கு தெரிஞ்ச ஒரு நண்பர்.. அவருக்கு ஒரு பிள்ளை.. நல்லா படிச்சிருந்தான். ஆனா வேலை கிடைக்காமே மனம் நொந்து போயிருந்திருக்கிறான்.. இப்போ ஐ.டி. கம்பெனி மூலைக்கு ஒண்ணு இருக்குது. அப்போ ... அந்த காலத்தில் வேலை கிடைக்கிறது குதிரைக் கொம்புதானே.. இப்பமாதிரி பிரைவேட் கம்பெனியும் ரொம்ப கிடையாது. கவர்ன்மெண்ட் சர்வன்ட் இறந்துபோனால் அவரோட குடும்பத்தில் ஒருத்தருக்கு வேலைனு அறிவிப்பு வந்திருந்த சமயம் அது. பையனுக்கு வேலை கிடைக்கணும்னு இவர் தற்கொலை பண்ணிட்டார். ஆனா இயற்கையான மரணமாக இருந்தால்மட்டுந்தான் இறந்தவரோட குடும்பத்தில் ஒருத்தருக்கு வேலைங்கிற விஷயம் அவருக்கு தெரியாது போலும். என் வேலையை என் பையனுக்கு கொடுங்கனு லெட்டர் வேறு எழுதி வச்சிட்டு செத்துட்டார். விஷயம் தெரிஞ்ச அவரோட ஆபீஸ் ஆளுங்க ஒரு சிலர் அந்த லெட்டரைக் கிழிச்சு போட்டுட்டு இவர் ஹார்ட் அட்டாக்கில் செத்துட்டார்னு நம்ப வச்சு, அவர் பார்த்த வேலையை அந்த பையனுக்கு வாங்கிக் கொடுத்ததா அடிக்கடி சொல்வார். ஆம்பிளைப் பிள்ளைங்க மேலேயும் ஒரு தகப்பனுக்கு பாசம் இருக்கத்தான் செய்யுது. ஆனாஅப்பாக்கள் எல்லாருமே பிள்ளைங்களு க்கு எதிரி.. பொண்ணுகளுக்கு நல்ல நண்பன்னு சொல்றாங்களே.. அது ஏன்னு இன்னிக்கு வரை எனக்குப் புரியலே "
"அது அப்பாக்கள் வாங்கி வந்த சாபமா இருக்கும். பிரசாதம் சூடு ஆறுமுன்னே அதை உன் பிள்ளைக்கு கொண்டு போய் குடு .. நான் என் பொண்ணுக்கு கொண்டு போய் கொடுக்கிறேன்.. நாளைக்கு ரொம்ப நேரம் குளக்கரையில் உக்கார்ந்து பேசலாம்..இப்போ கிளம்புவோம்" என்று சூரியநாராயணன் சொல்ல பதிலேதும் சொல்லாமல் நடக்கலானார் ஏகாம்பரம்.
No comments:
Post a Comment