Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, August 07, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(06)

Image result for cartoon of a man and a lady in a village
கையில் எடுத்த சப்பாத்தித்துண்டை வாயில் வைக்காமல் கண்கலங்க உட்கார்ந்திருந்த பிரபுவைப் பார்க்கும்போது வள்ளிக்கும் இனந்தெரியாத வேதனை உண்டானது.
"என்னய்யா .. நீங்க.. சரியான தொட்டாசிணுங்கியா இருப்பீக போலிருக்கு. நேத்துதான் வீட்டை விட்டு, அம்மாவை விட்டுட்டு கிளம்பி வந்திருக்கீக. அதுக்கே பால்குடி மறக்காத புள்ளை மாதிரி அழுறீக.  வயித்துப் பொழைப்பு க்காக ஒவ்வொருத்தக கண்காணாத தொலைவுலே, நினைச்சவுடனே வர முடியாத தூராதொலைலே இருக்காக. இங்கிட்டு.. தும்மினா கேக்கிற தொலைவுலே இருக்குது சென்னை. ஒரு தும்மல் போடறதுக்குள்ளே போயிட்டு வந்துறலாம். இதுக்கே கலங்கினா எப்படி ?"
"ஸாரி " 
"அய்யா..ராணுவத்திலே சேர்ந்து, வீட்டைப்பிரிஞ்சு எங்கெங்கோ பனிமலைலே ராவும் பகலும் காவல் இருக்காக. அவங்கள நினைச்சுப் பார்த்து உங்களை நீங்க தேத்திக்கணும். இப்போ நினைச்சவுடனே பேசறதுக்கு போனை கையிலேயே வச்சுக்கலாம். சில போனில் ஆட்களையே நேரிலே பார்க்கிறாப்லே பார்க்க முடியுமாமே. இதெல்லாம் இல்லாத காலத்தில கடல் தாண்டி, மலை தாண்டி பிழைக்கப் போனவங்கள நினைச்சு நம்மள ஆறுதல் படுத்திக்கணும். சாப்பிடுங்க தம்பி. நான் போய் டீ  போட்டு எடுத்தாரேன்."
வள்ளியின் வார்த்தைகள் மனதுக்கு ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது.
பார்க்கிறதுக்கு படிப்பறிவில்லாத பட்டிக்காட்டுப் பொண்ணு மாதிரி இருக்கிறா. என்னென்ன பேச்செல்லாம் பேசறா..
சிறிது நேரத்தில் வள்ளி கொண்டு வந்து வைத்த டீயை ரசித்துக் குடித்த பிரபு, "நான் ஊரை சுத்திப் பார்த்துட்டு வரேன்" என்றான்.
இதைக் கேட்டு சிரித்த அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
எதுவும் புரியாதவனாக "என்ன?" என்று கேட்டான் பிரபு.
"ஒண்ணுமில்லே ... நீங்க நகர்வலம் போயிட்டு வாங்க !"
"நான் திரும்பி வர லேட் ஆயிட்டா வொரி பண்ணிக்க வேண்டாம் "
இதைக்கேட்டு,வந்தசிரிப்பை அடக்கிக்கொண்டு தலையைமட்டும் ஆட்டினாள் வள்ளி.
அங்கிருந்து கிளம்பிய பிரபு, அடுத்த அரைமணி நேரத்திலேயே சுவற்றில் அடித்த பந்து மாதிரி திரும்பி வந்தான். 
"வாங்கய்யா .. ஊரில் நாலு பள்ளிக்கூடம்.. ரெண்டு காலேஜு.. ஒரு ஆஸ்பத்திரி .. ஒரு போலீஸ் ஸ்டேஷன்... பத்து சாராயக்கடை எல்லாம் இருந்ததை கணக்கெடுத்தீகளா ?" என்று கேட்டாள் குறும்பாக சிரித்தபடி.
"நக்கல் ?"
"இல்லே.. நையாண்டி.."
"கிராமிய சூழ்நிலையை வச்சு கதை எழுதறதுக்கு  "களம்" பார்க்க அண்ணன் என்னை இங்கே அனுப்பினார். எனக்கென்னவோ நான் கிராமியக்கதை எழுது வேனு தோணல ..பேய்க்கதை..இல்லாட்டா திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திகில் கதை... மர்மக்கதைதான்  எழுதுவேன்னு தோணுது "
"தம்பி.. இந்த வீட்டுக்கு..."
"வீடா இது? அரண்மனை! இதேமாதிரி ஒரு அரண்மனையை ஒரு சினிமால நான் பார்த்திருக்கிறேன். "வருஷம் பதினாறு"னு ஒரு படம். அதிலே ஒரு அரண்மனை வீடு வரும். இதுவும் அதேமாதிரி இருக்குது.. என்னங்க.. எனக்கொரு ஹெல்ப் பண்ணனும் "
"சொல்லுங்கய்யா "
"எனக்கொரு சாக்பீஸ் வேணும்."
"சிலேட்டு வேண்டாமா? கதையை சிலேட்டில் எழுதப் போறீகளா ?" 
"ரொம்பதான் வாருறீங்க.  இந்த அரண்மனையில் உள்ளே ஏதாவது ஒரு இடத்துக்கு போனா  திரும்பவும் பழைய இடத்துக்கு எப்படி வர்றது என்பதில் நான் குழம்பிடறேன். அதனாலே ஒரு ரூமிலிருந்து வேறொரு இடத்துக்கு போறச்சே சாக்பீஸால் ஒரு கோடு கிழிச்சுகிட்டே போனா, குழம்பாமே திரும்பி வந்திடுவேனே"
"அடடா..இப்ப மாமா இல்லாமே போயிட்டாகளே "
"இப்ப எதுக்கு அவர் ?"
"அவக இருந்தா உங்களுக்கு சுத்திப் போட சொல்லலாமே..அதான்.. "
"உங்களுக்கு சென்ஸ் ஆப் க்யூமர் ரொம்பவும் அதிகம்."
"அப்படின்னா ?"
"அப்படின்னா அடுப்பில் ஏதோ தீயுதுனு அர்த்தம் "
"அம்மாடி.. அடுப்பை அணைச்சிட்டு தானே வந்தேன் " என்றபடி ஓட முயன்ற வளிடம், "அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சும்மா தமாஷ் பண்ணினேன்" என்றான்.
"அப்பாடா !"
"உங்க வேலை எல்லாம் முடிஞ்சிட்டுதா ?"
"ஏன் கேக்கீக ?"
"உங்ககிட்ட நிறைய பேசணும். நிறைய சந்தேகம் கேக்கணும்."
"அதுக்கென்ன ! பேசுங்க... கேளுங்க.."
"உங்க மாமா வந்தா எதுவும் சொல்ல மாட்டாரே?"
"அவக கிட்டே ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் தம்பி.. அவகள பாம்புனு நினைச்சு தாண்டவும் முடியாது.. கயிறுனு நினைச்சு மிதிக்கவும் முடியாது. சண்டாளப் பாவி "
"என்ன சொல்றீங்க ?"
"ஒண்ணுமில்லே "
"இல்லே... கடைசியா பாவினு எதோ சொன்னமாதிரி இருந்துச்சு."
"அதைவிட்டுத் தள்ளுங்கய்யா..அந்த மனுஷன் தேவையில்லாமே ஏதாது பேசினாகன்னா  .. அது உங்களுக்குப் பிடிக்கலைன்னா.. "அக்சூ"னு ஒரு தும்மல் போடுங்க.. துண்டைக்காணும் துணியைக்காணும்னு  ஓட்டம் எடுத்துடுவாக."
"அவர் இல்லாத நேரத்தில் நாம பேசறத பார்த்தா தப்பா நினைப்பாரா ?"
"மாட்டாக.. அவகளுக்குள்ளே ஒரு பேய் இருக்குது. போக போக அதை நீங்க புரிஞ்சுக்குவீக. "
"பார்த்தீங்களா.. தொடங்கின சப்ஜெக்டை மறந்துட்டு எங்கெங்கோ ட்ராவல் பண்றோம். முதல்லே எனக்கு இந்த பேலஸ் பத்தி தெரியணும் "
"என்ன தெரியணும் ?"
"இந்த அரண்மனையில்.. வீட்டில்.. இந்த ஊரில் மின்சாரம் இல்லையே அது ஏன் ?"
"அய்யா .. உங்களுக்கு குமார் அய்யா குடும்பத்தை பத்தி தெரியுமா ?"
"அண்ணன் - அண்ணி- அவங்க குழந்தை மது.. அண்ணன் சினி ஃபீல்டில் கொடி கட்டி பறக்கிறார்.. உதவின்னு யாரும் கேட்கும் முன்னயே ஓடிஓடி உதவற நல்ல மனுஷன் .. இவ்வளவுதான் தெரியும்."  
"அய்யா .. இந்த வீடு வெள்ளைக்காரன் காலத்திலே கட்டின வீடு. அய்யா ஜமீன் பரம்பரை. அவகளோட முப்பாட்டனார் காலத்திலே இந்த வீட்டில் வெள்ளை க்கார துரைமாருங்க வந்து தங்கிட்டுப் போவாகளாம். அது என்ன எழவோ தெரியல.. துரைமாருகளுக்கு இருட்டில உக்காந்து திங்கிறதும் தூங்கிறதும் ஆடுறதும் பாடுறதும் பிடிக்குமாம்.  நம்ம அய்யாவோட பாட்டனுகளுக்கும் அது பிடிச்சுப் போகவே அதுதான் இன்னிக்கி வரைக்கும் தொடருது. நம்ம குமார் அய்யா ஒவ்வொரு படம் எடுத்து முடிச்சதும் பொண்டாட்டியோட இங்கிட்டு வந்து ஒருமாசம் இல்லாட்டா ரெண்டுமாசம் தங்கிட்டு போவாக. உலகத்தில் எந்த மூலைக்குப் போனாலும் இங்கிட்டு கிடைக்கிற நிம்மதி எங்கிட்டும் கிடைக்காதுனு சொல்லுவாக. போனவாட்டிதான் இங்கிட்டு வரலாமே எதோ.. குலுமணாலியாமே ... அங்கிட்டு போயிட்டாக."
"சரி.. அண்ணனுக்கு இது பிடிக்கும். ஓகே..அதுக்காக கிராமத்துக்குள்ளும் கரெண்ட் இருக்கக் கூடாதா?"
"அய்யா..இந்தகிராமத்தில ரெண்டே ரெண்டு தெரு இருக்கு.. முப்பது வீடுகதான் இருக்கும். அதில இருக்கிறவக எல்லாருமே இங்க இருக்கிற விவசாய நிலத்தில் வேலை செய்றவக.. எல்லாரும் காலைலே சூரியன் உதிக்கிறதுக்கு முன்னே எழுந்திரிச்சு வயக்காட்டுக்கு போனா, சூரியன் அடைஞ்சதும், இவக வீட்டுக்குள்ளே அடைஞ்சிடுவாக. அதாலே இவகளுக்கு கரெண்டு வேணுங்கி ற நினைப்பே இல்லை. அதுமட்டுமில்லாமே .. கோடீஸ்வர மனுஷன் .. அவகளே லைட் இல்லாமே இருக்கிறப்ப நமக்கு எதுக்கு அதுனு இருந்துட்டாங்க "
"ஓ காட் !.. அப்படின்னா  .. அவங்க வீட்டு குழந்தைங்க .. படிக்கிறதுக்கு ..."
"எந்தக் குழந்தைய்யா  இங்கிட்டு இருக்குது .. எல்லாம் வெளியூருல அய்யா புண்ணியத்தில படிச்சிட்டு இருக்குக. லீவுக்கு கூட வேண்டா வெறுப்பா வருங்க. ஓடிடுங்க .."
"அப்படின்னா இந்த கிராமமே அண்ணனுக்குத்தான் சொந்தமா ?
"ஆமாம்யா . இந்த வீட்டுக்கு தெக்காலே இருக்கிற விளைநிலம், வடக்கே அதோ அந்த மலையடிவாரத்தில் இருக்குத மரம்மட்டை தென்னத்தோப்பு, மாந்தோப்பு எல்லாமே அவக பரம்பரை சொத்து. சினிமாலே சேர்த்த காசு இல்லே !"
இதைக் கேட்டு மலைத்துப்போய் கேள்வி எதுவும் கேட்க தோன்றாமல் அசந்து போய் உட்கார்ந்திருந்தான் பிரபு.

                                                                                                     --- தொடரும்.............

No comments:

Post a Comment