Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, May 28, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 152)

Image result for image of patient and nurse

                                     மறந்து போன தர்ம / நியாயங்கள் !
கண்களைத் திறக்க முயற்சித்தான் சபாபதி. கண்களின் மீது கனமான ஏதோ ஒன்றை வைத்து அழுத்துவதுபோன்ற உணர்வே மேலோங்கி நின்றது.
எழும்பி உட்கார முயற்சி செய்தான். இவனது உடல் அசைவைக் கண்ட சிஸ்டர் ஓடிவந்து, "என்னப்பா .." என்று இதமான குரலில் கேட்டாள்.
"நான் எங்கிருக்கேன் ?"
"பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறேப்பா .."
"என்ன நடந்துச்சு ?"
"அதை நீதான்ப்பா சொல்லணும் "
"என்ன .. என்ன சொல்லணும் ?"
"நீ யாரு? எப்படி அடிபட்டே ?" என்று சிஸ்டர் கேட்டதும் அமைதியாக சிறிது நேரம் யோசித்த சபாபதி, "என்னோட செர்டிபிகேட் ... ரெக்கார்ட்ஸ் " என்று பதற்றத்துடன் கேட்டபடி எழும்பி உட்கார்ந்தான்.
"தம்பி... தம்பி..நீங்க இப்போ எழும்பவோ உட்காரவோ ட்ரை பண்ணாதீங்க.. இன்னும் ஒன்-ஹவரில் டாக்டர் வந்துடுவார்.. கொஞ்சம் பொறுமையா இருக்கணும் "
"நான் உயிரோடு இருக்கிறேனா ?"
இதைக்கேட்டதும் மெலிதாக சிரித்த சிஸ்டர் "ஏன் இப்படியொரு டவ்ட் ..உயிரில்லாத ஒருத்தர் பேச முடியுமா? கேள்வி கேட்க முடியுமா ?
"கேள்வி... கேள்வி... கேட்டதாலே வந்த சண்டைதான் அது "
"என்ன தம்பி சொல்றீங்க?"
"அம்மா.... ஸாரி ... சிஸ்டர்..."
"நீ என்னை அம்மானு கூப்பிடலாம். எனக்கு உன் வயசில் ரெண்டு பசங்க இருக்கிறாங்க. ரெட்டை.. சரியான வாலுங்க.."
"நான் எப்படி இங்கே வந்தேன் ?"
"நீங்களா வரலே .. யாரோ ஒரு புண்ணியவான் கொண்டுவந்து அட்மிட் பண்ணினார். உங்க துணிச்சலை பார்த்து அசந்து போனதா சொன்னவர் ஆஸ்பிடல் செலவுக்கு பணம் கொடுத்திருக்கிறார். பிறகு வந்து பார்க்கிறேனு    சொன்னார். "
"வேறே எதுவும் சொல்லலியா .. என்னோட செர்டிபிகேட் ..?
'இல்லேப்பா .. அவர் பிளைட் பிடிக்கிற அவசரத்தில் இருந்தார்.என்ன நடந்துச்சு .. சொல்லுப்பா "
"எனக்கு கடலூர் பக்கத்திலே ஒரு சின்ன கிராமம். விவசாய கூலி வேலை செஞ்சு பிழைக்கிற குடும்பம் நாங்க. கடனை வாங்கி படாதபாடுபட்டு எங்க அப்பா என்னை படிக்க வச்சிட்டார். மழையாலே போன வருஷம் விவசாயம் நாசமா போச்சு. மழை இல்லாமே இந்த வருஷம் எல்லாமே பாழாய் போச்சு.. அடுத்தவேளை சாப்பாடு கேள்விக்குறி என்கிற நிலைமைதான்.."
"கொஞ்சம் பால் கொண்டுவந்து தர சொல்றேன். குடிச்சிட்டு நீ பேசலாம். ரொம்ப டயர்டா தெரியறே தம்பி " என்ற சிஸ்டர் இன்டெர்க்காமில் சொல்லி பால் வரவழைத்தாள். அவன் குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தாள்.
"என்னோட கஷ்டத்தை எங்க காலேஜ் ப்ரொபஸர் ஒருத்தர்கிட்டே சொன்னேன்.  அவருக்குத் தெரிந்த ஒரு ஆபீசில் அங்குள்ள பியூன் ஏதோ ஆக்சிடெண்டில் இறந்துட்டதாலே இம்மீடியட் ஆக ஒரு ஆளை அந்த போஸ்ட்க்கு போடுறதா இருக்கிறாங்க.. நீ போனு சொல்லி என்னை ரெகமெண்ட் பண்ணினார். காலையில் 12 மணிக்குள் நீ அங்கே இருக்கணும். அது உன்னாலே முடியாட்டா அங்கே போறதை அவாய்ட் பண்ணிடுன்னு சொல்லி இருந்தார்."
"சரி "
"அதுக்காகத்தான் சென்னைக்கு கிளம்பினேன்."
"சரி"
"வர்ற வழியில் மதுக்கடை எதிர்ப்பு - சாலை மறியல் போராட்டம்னு பஸ் போக வழியில்லை. நான் வந்த பஸ்ஸுக்கு முன்னாடி அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லா வண்டியும் அங்கங்கே நின்னுட்டு இருந்துது. அங்கே இங்கே நகர வழியில்லே. நான் வந்த பஸ்ஸில் ஒரு லேடி வந்தாங்க.. ப்ரெக்னென்ட் லேடி. யூரின் பாஸ் பண்ண வழியில்லாமே தவிச்சு கிட்டு இருந்தாங்க. அவங்க கூட இருந்த ஒரு அம்மாகிட்டே அதை சொல்லவும் செஞ்சாங்க. அதுக்கு அந்த அம்மா வண்டிக்குள்ளேயும் வெளியேயும் அத்தனை ஆம்பிளைங்க இருக்காங்க. நீ எங்கேன்னு போவே. கொஞ்ச நேரம் அடக்கிக்கோ அப்படினு சொன்னாங்க."
"சரி "
"நாங்க குடி இருக்கிற இடத்தில் தனி டாய்லெட் கிடையாது. அதுக்குன்னு இருக்கிற இடத்தை தேடிப்போகணும். சில சமயம் கூட்டம் இருக்கும். லைனில் காத்திருக்கணும். எங்க அக்கா கர்ப்பமா எங்க வீட்டுக்கு வந்திருக்கிறப்ப டாய்லெட் போக வழியில்லாமே திணறிப்போயிடுவா. "பிள்ளைத் தாய்ச்சி பொண்ணுகளுக்கு அடிக்கடி ஒண்ணுக்குப் போகணும் போல இருக்கும். இப்படி என் பொண்ணு தவிக்கிறாளேனு எங்க அம்மா கிடந்து அல்லாடுவாங்க. பஸ்ஸில் அந்த லேடியைப் பார்த்ததும் எனக்கு அக்கா நினைவு வந்துச்சு.
வேறொரு லேடி வச்சிருந்த குழந்தை நான்-ஸ்டாப்பா அழுதுட்டு இருந்துச்சு. அதைப் பார்த்த சிலர் "குழந்தை பசிக்கு அழுது போல. சாப்பிடக் குடுத்து பசியாத்துமானு சொல்ல "பசிச்சுதான் அழுதுனு எனக்கும் தெரியும். இப்போ நடுத்தெருவுலே என்னால் என்ன செய்ய முடியும்னு சொன்னாங்க. உடனே ஒருத்தர் குழந்தையோட வெளியே கிளம்பறப்போ சாப்பாடு கையிலே வச்சுக்க வேணாமான்னு கேட்க அந்த லேடி "பஸ் ஏறினா அரைமணி நேரத்துலே வீடு போய்ச்சேர்ந்துடலாம்னு நெனைச்சிட்டு கிளம்பினேன். நடுவீதியிலே நாலுமணி நேரம் நாய் மாதிரி நிப்போம்னு நினைக்கலே"ன்னு கோபமும் வெறுப்புமா பதில் சொன்னாங்க..
பஸ்ஸில் இருந்த.. பஸ்ஸை விட்டு இறங்கி ரோட்டில் நின்னுட்டு இருந்த எல்லாருமே."பொழுது விடிஞ்சு பொழுது போனா இதே பிரச்னையாய் போச்சு. நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்துக்கு போக முடியலே. இவனுக பிரச்னைக்கு நாம எல்லாரும் நம்ம வேலையை விட்டுட்டு தெருவில் நிக்க வேண்டி இருக்குது. அவனவன் சொந்த பிரச்னைக்கெல்லாம் ரோட்டை மறிக்கிறது வாடிக்கையா போச்சு. இவனுகளுக்கு மட்டுமா பிரச்னை. அவனவன் மனசிலே ஆயிரம் கவலை. இன்னிக்கு, இப்போ  சரக்கை  கொண்டு போய் சேர்க்காட்டா ஆர்டரை கேன்ஸல் பண்ணிடுவாங்க. என் பொழைப்பிலே மண் விழுந்துடும். நான் யாரிட்டே போய் சொல்லி அழமுடியும் ? எடுத்ததுக்கெல்லாம் ரோட்டை மறிச்சா ஆர்மியைக் கொண்டாந்து அடிச்சு நொறுக்கணும்"னு  ஒருத்தர் சொன்னார். 
உடனே இன்னொருத்தர்,"போலீஸ்காரன் இவங்களை விரட்டறதே தப்புனு சிலர் கொடி பிடிச்சு அதில் அரசியல் பண்ணுதாங்க. ஆர்மி வந்தா அவ்வளவுதான்னு சொன்னார். இதுக்கு என்னதான் வழினு கேட்க ஆளாளுக்கு அவங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு அந்த லேடியை குழந்தையைப் பார்க்க பாவமா இருந்துச்சு. 
"பாவப்பட்டு நீ என்ன பண்ணினே ?"
"நேரே மறியல் நடக்கிற இடத்துக்குப் போய் அவங்க கிட்டே "என்னவோ நேத்துதான் கடை திறந்த மாதிரி இன்னிக்கு போராட்டம் பண்றீங்க. இது காந்தி காலத்தில் இருந்தே இருக்குதே. அவர் எவ்வளவு போராடி மதுவிலக்கு கொண்டாந்தார். அதை நீக்கி கடைகளை ஏலத்துக்கு விட்டப்போ நீங்க எல்லாரும் எங்கே போயிருந்தீங்க. கடை திறக்ககூடாதுனு ரோட்டை மறிக்கிறதை விட்டு எந்த வீட்டு ஆம்பிளை குடிக்க போறானோ அவனை அந்தந்த ஏரியாவில் இருக்கிறவங்க மறியுங்க அடிச்சு திருத்துங்க... வேற்று கிரகவாசியோ வெளிநாட்டுக்காரனோ இங்கே குடிக்க வரலே. உங்க வீட்டு ஆம்பிளைங்க தானே குடிக்க வர்றாங்க. அவனுக குடிக்க முடியாதபடி, குடிக்க வெளியில் கிளம்பிப் போக முடியாதபடி அவனுக கையைக் காலை முறிச்சு வீட்டோட முடக்கிப் போடுங்க..இதை... இதைத்தான் சொன்னேன் மேடம்.
"தம்பி இங்கே வாங்க"னு ஒரு அம்மா கூப்பிட்டுச்சு. பக்கத்திலே போனேன். என் கையிலுள்ள பையை பறிச்சாங்க. என் மேலே அடி விழுந்துது .. அவ்வளவுதான் எனக்கு தெரியும்.  ஏன் சிஸ்டர் நான் கேட்டது தப்பா ?" என்று கம்மிய குரலில் கேட்டான் சபாபதி.
"குடியினாலே எத்தனை குடும்பம் வீணாப்போச்சுனு லிஸ்ட் எடுத்தா அதிலே என் குடும்பமும் இருக்கும். என் புருஷனும் பயங்கரக் குடிகாரன்தான். குடிச்சு போட்டு கண்ணுமண்ணு தெரியாமே வண்டியிலே போயி எதிரே வந்த சைக்கிள்காரன் மேலே மோதி அவனை சாகடிச்சிட்டு இவரும் போய் சேர்ந்திட்டார். தப்பு என் புருஷன் மேலே. அவர் தண்டனை அடைஞ்சா அது சரி. எந்த தப்பும் இல்லாத எந்த விதத்திலும் இவரோட சம்பந்தமில்லாத யாரோ ஒருத்தர் இவராலே சாகணும்னா அந்த கொடுமையை என்னனு சொல்றது? எது சரி எது தப்புனு உணர்ந்து பார்க்க... பேச யாருமே தயாரில்லை. அவங்கவங்க செய்றது அவங்கவங்களுக்கு நியாயமா தெரியுது. மறியல் பண்றது சரினு சொல்றவங்களும் இருக்காங்க. இவனுக வீட்டு பிரச்னைக்கு நாங்க ஏன் ரோட்டில் நிக்கணும். அடிச்சு துரத்துனு சொல்றவங்களும் இருக்காங்க. அவங்க பண்ணினது அவங்க வரையில் நியாயம். நீயும் நியாயம் கேட்கப் போனே. ஆனா நடந்தது என்ன? அடிபட்டதும் பொருளை இழந்ததும்தான் மிச்சம். ஒரு பழைய சினிமா பாட்டு உண்டு.. "ஒன்றையே நினைத்திருப்பான்.. உண்மையைத்தான் உரைப்பான். ஊருக்குப் பகையாவான் ஞானத்தங்கமே"னு  உண்மையாகவே ஊருக்கு உழைக்கிறவங்க உண்மையை சொல்றவங்க இவங்க எல்லாருமே உதைபட்டுதான் சாவாங்க என்றநிலைமை வந்துடுச்சு . அதான் ஜனங்க எல்லாரும் ஊருடன் ஒத்து வாழ தங்களைப் பழக்கிக்கிட்டாங்க. உலகம் முழுதும் அக்கிரமம் பெருகி போச்சு. எத்தனை மகான்கள் வந்தாலும் இங்கே யாரையும் திருத்த முடியாது. "
"இதுக்கு என்னதான் முடிவு ?"
"முடிவு சொல்வேன்.. ஆனா நீ ஏத்துக்க மாட்டே "
"சொல்லுங்களேன்... தெரிஞ்சுக்கறேன்."
"இந்த உலகம் இந்தக்கணமே அழியணும்.. புல்பூண்டு எதுவும் இல்லாமே. உலகம் முழுக்க சுனாமி வரணும். எரிமலை எல்லாம் வெடித்து சிதறணும். கொஞ்சகாலம் கழிச்சு பழையபடி புதுசா உயிரினம் பிறந்து வரணும்.. ஒவ்வொரு கண்டுபிடிப்பா வரணும். அதுதான் முடிவு. எந்த அக்கிரமத்தையும் சரினு சொல்ல நாலுபேர் இருக்கிறவரை எந்த பிரச்னைக்கும் தீர்வு என்பதே வராது " என்றாள் உறுதியான குரலில்.
"மேடம்.. அந்த மனுஷர் என்னை இங்கே கொண்டாந்து அட்மிட் பண்ணி இருக்கவே வேண்டாம். உங்க டாக்டர் என்னைக் காப்பாற்றி இருக்க வேண்டாம். என்னை சாக விட்டிருக்கலாம்."
"ஏன் தம்பி அப்படி சொல்றே ?" என்று பதறிப்போய் கேட்டாள் சிஸ்டர்.
"கிடைக்க இருந்த வேலை போச்சு. எல்லா செர்டிபிகேட்டும் போச்சு. உயிரோட இருந்து நான் என்ன சாதிக்கப் போறேன்."
சிறிது நேரம் அமைதியாக இருந்த சிஸ்டர்,"இந்த ஆஸ்பிடலில் அட்டெண்டர் வேலை குடுத்தால் அதை செய்வியா.. டாக்டர் வந்ததும் நான் பேசறேன் "
"தெய்வமே... அட்டெண்டர் வேலை என்ன ! டாய்லெட் சுத்தம் பண்ற வேலை குடுத்தால்கூட பார்க்க நான் ரெடி."
"இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடு . அப்புறம் வேலை பாரு. இதுக்கிடையில் உன்னை அட்மிட் பண்ணின அந்த நல்ல மனுஷன் உன்னைப்பார்க்க வரலாம். வந்தால் அவர்கிட்டேயும் வேலைக்கு மனு போடலாம். ஓகேயா ?" என்று கண்களை சிமிட்டியபடி சிஸ்டர் கேட்க "டபுள் ஓகே " என்ற சபாபதி வாய்விட்டு சிரித்தான்.
"வேலை கிடைக்கிற சந்தோஷமா ?"
"இல்லே மேடம். மதுவிலக்கை எடுத்துட்டு ஏலம் விட்டு கள்ளுக்கடைகளை திறந்தப்போ  அந்தக் கடைக்குப் பக்கத்திலேயே காரசாரமா வடையும் சுண்டலும் ஊறுகாய் பொட்டலமும் வித்தது இந்த ஜனங்கள்தான். அதை நினைச்சேன் சிரிச்சேன் " என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்கலானான்.
பின்பு சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு, "பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணினவங்களை போலீஸ் துரத்துச்சு. நடுத்தெருவில் நின்னு மத்தவங்களை போக விடாமல் இடைஞ்சல் பண்ணினவங்களை அடிச்சு துரத்தினாங்க. எந்த வீட்டுக்குள்ளும் புகுந்து, வீட்டுக்குள் இருந்த  எந்தப் பொம்பளைங்களையும்  அடிக்கலே. அந்த நேரத்தில் அதைத் தவிர வேறே வழி கிடையாதுங்கிறப்ப அதையும் அரசியலாக்கி ஆதாயம் தேடற ஆத்மாக்களும் இருக்கத்தானே செய்றாங்க. எந்த  ஒரு விஷயத்தையம் தப்புனு சொல்லி கொடி பிடிக்கிறவங்க கிட்டேயே  அதுக்கான தீர்வையும் கேட்கணும் " என்றான் வெறுப்புடன். 

No comments:

Post a Comment