Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 16, 2016

சிரியுங்க சிரியுங்க சிரிச்சுகிட்டே இருங்க சிரிப்பு உடம்புக்கு ரொம்பவும் நல்லது !

Image result for images of tea stall
மனிதர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்கும் ஆசை கடவுளுக்கு வந்தது . கடவுள் ஒருநாள், மனிதர்கள் வாழும் உலகத்திற்கு ஒரு ஸர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார். மன்னர்கள் இரவு நேரங்களில் மாறு வேடத்தில் செல்வார்களாம். கடவுள் பகலிலேயே மாறுவேடத்தில் வந்தார் . அவர் அவ்வளவு "மெனக்கெட" வேண்டிய அவசியமே இல்லை. அவருடைய உண்மையான வடிவத்தில் வந்திருந்தால்கூட, எதுவுமே பேசாமல் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் நின்றால் கூட  "நம்ம ஆளு", "கைகால் நல்லாத்தானே  இருக்கு! உழைச்சுப்பிழைக்க என்னகேடு? " என்று கேட்பான். (நீங்க எல்லோரும் என்கோவில் வாசலில்   பிழைப்புக்கு வழியில்லைனு  நிக்கிறீங்களே"னு கடவுள் திருப்பிக் கேட்க மாட்டார்.)
வந்தவர் அப்படியே பார்வையை ஓடவிட்டார். ஒரு டீக்கடை கண்ணில் பட்டது. அங்கே சிலர் கையில் ஒரு கையில் நியூஸ் பேப்பரை வைத்துக் கொண்டு மறுகையால் ஒரு கண்ணாடி கிளாஸில் உள்ள டீயை தேவா மிர்தம் மாதிரி உறிஞ்சிக் குடித்தபடி, டீக்கடையின் உள்ளே உள்ள டீவியில் கண்களைப் பதித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். கடவுள் தனது கண்களை தொலைக்காட்சியில் பதித்தார். அதில் பொது ஜனங்கள் தங்கள் கருத்தைப் பதிவுசெய்து கொண்டிருந்தார்கள். "நாங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம். குழாயைத் திறந்தால் பாலும் தேனும் பொங்கி வருது. குழந்தைங்க ரொம்ப சந்தோசமா இருக்கிறாங்க. எந்தவொரு பயமும் இல்லாமே நடு ராத்திரியில் வீட்டுக்கு வர்றாங்க. ரோட்டில் நடப்பது வானத்தில் பறக்கிறமாதிரி இருக்குது. அந்த அளவுக்கு தூய்மை... தெருக்களில் வழுவழுப்பு... பளபளப்பு! கையில் காசை எடுக்கும் போதே எங்களுக்கு தேவையானது எல்லாமே கிடைக்குது. நோய்னு சொன்னா அது என்னனு எங்களுக்குத் தெரியாது! பைனல் எக்ஸாம் எழுதும்போதே எங்கவீட்டு குழந்தைகளுக்கு வேலைக்கு ஆர்டர் வந்து டுது" என்று சொல்ல, "சபாஷ்டா கண்ணு! நீ உலகத்தை நல்லாத்தான் மெயின்ட்டைன் பண்றே !" என்று தனது முதுகில், தானே தட்டிக் கொண்டார் கடவுள். 
அப்போது விளம்பரஇடைவேளை வரவும் கடைக்காரர் அடுத்த சேனலுக்கு தாவினார். அதில் பலர் காலிக் குடங்களைக் கையில் வைத்துக்  கொண்டு, "எங்க வீட்டுக்குழந்தைகளுக்கு இதுதான் தண்ணீனு படத்தைக் காட்டி தெரிய வைக்க வேண்டியிருக்கு து. ஒரு மாசமா தண்ணி வரலே. வீட்டை சுத்தி கொசு. எங்கே பார்த்தாலும் வியாதி. பையிலே பணத்தை எடுத்துட்டு போய் கையிலே பொருளை வாங்க வேண்டிய நிலையில் விலைவாசி இருக்குது. நடக்கிற மாதிரியா ரோடு இருக்குது. தெருக்களில் உள்ள குழிக்குள் விழுந்து எழும்பாமே வந்தா அதுவே பெரிய விஷயம்.  தண்ணி இல்லே ... விவசாயம் நடக்கலே... வேலை வெட்டி எதுவும் கிடைக்கலே .. கடன் பட்டு குழந்தைகளைப் படிக்க வச்சோம். படிச்சு முடிச்ச பட்டத்தை கையில் வச்சுகிட்டு வேலை வெட்டி எதுவும் இல்லாமே நிக்குதுங்க. நாங்கள் வாழ்வதா சாவதா?" என்று சொல்லும்போதே விளம்பர இடை வேளை வந்தது. கடைக்காரர் அடுத்த சேனலுக்கு தாவினார். எடுத்த எடுப்பிலேயே "இவர்கள் இருவர்   சொல்லுவதுமே அப்பட்டமானபொய் !" என்று ஆக்ரோஷமாக சொன்னார் ஒருவர் .
தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை கடவுளுக்கு . அருகிலிருந்தவர்களைக் கவனித்தார்.யாரிடமும்எந்தவொரு ரியாக்சனும் இல்லே. டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். கடவுள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடி ஒரு மரநிழலுக்கு வந்தார். "அப்பாடா மனுஷன் இதை யாவது விட்டு வச்சிருக்கிறானே!" என்று நினைத்துக் கொண்டார்.
"பரவாயில்லே ... இந்த மனுஷப்பிறவிங்க கிரேட் தான். நாம ஞான திருஷ்டியில் உலகத்தைப்  பார்க்கிறதை, இந்தப் பரதேசிங்க பட்டனை அழுத்தியே பார்த்துடுதுங்க! நமக்கிருக்கிற டென்ஷனில் நாமதான் அதை கவனிக்காமே விட்டுட்டோம்போலிருக்குது!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். 
"ஒருத்தன் ஒண்ணு சொன்னான்..இன்னொருத்தன் வேறொண்ணு சொன்னான். மூணாவது ஒருத்தன் "இந்த ரெண்டும்  இல்லே...இரண்டுமே பொய்"னு சொல்றான். "இது" அல்லது "அது"னு  ஏதாது ஒண்ணுதானே இருக்க முடியும். இரண்டுமே இல்லாத ஒண்ணு எப்படி இருக்க முடியும்?' என்று கேட்டபடி தலையை சொரிந்தபடி யோசிக்க ஆரம்பித்தார். விடை கிடைக்கலே..சொரிந்த நிலை மாறி, "பிய்த்துக் கொள்ளும்" நிலைக்கு வந்தார். முடிவு தெரியாமே பிய்க்கிறார்... பிய்க்கிறார் ....பிய்த்துக் கொண்டே  ஓடறார்...ப்ளீஸ் ஹெல்ப் ஹிம் .... ஹெல்ப் .... ஹெல்ப்  .....! 

No comments:

Post a Comment