Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, June 26, 2016

DEAR VIEWERS,


என்னங்க .... நான் அன்னிக்கு ஒரு மண்ணாங்கட்டி கதை உங்களுக்கு சொன்னேன் தானே! அது உங்களுக்குத் பிடிச்சிருந்துதா ? பிடிச்சிருக்கும் ... பிடிச்சிருக்கும் ... அதனாலே தானே இன்னிக்கு என்னனு பார்க்க இங்கே வந்துருக்கீங்க. இன்னிக்கும் ஒரு சங்கதி சொல்லப் போறேன்.
இந்த மனசு இருக்கு பாருங்க..... மனசு .... அது லேசுப்பட்டதில்லே. மனுஷங்களை குரங்கா ஆட்டி அலைக்களிக்கிறதெலாம் இது செய்ற வேலைதாங்க!நாமளுந்தான் அதை அடக்கி வைக்கணும்னு பார்க்கிறோம். ஊஹூம் ... எங்கே அடங்குது!. எது செஞ்சாலும் பத்தாது பத்தாதுன்னு சொல்லி நம்மள எங்கெங்கியோ கொண்டு போய் விட்டுடுது. இந்தக் குரங்கு பத்தின செய்தியைத்தான் இன்னிக்கி உங்க காதுல போடப் போறேன்.
ஒருத்தன் மலையிலே இருந்து கீழே இறங்கி வந்துட்டுருந்தான். அவன் தலையில விறகு சுமை. வலது தோள்லயும் இடது தோள்லயும் ஒண்ணுரெண்டு  பை தொங்குச்சு. மூட்டைமுடிச்சு மாதிரி.. அதுல என்ன இருந்திருக்கும்னு நினைக்கிறீங்க? விறகு வெட்ட மலையிலே ஏறுறப்ப கண்ணுல பட்ட காய் பழம், காக்கா குருவி,  லொட்டு லொசுக்கு எல்லாத் தையும் அதுக்குள்ள பொறக்கிப் போட்டிருந்தான்.
மலை அடிவாரத்தில் ஒரு தள்ளுவண்டியில் கொஞ்சம் சரக்கை வச்சுக் கிட்டு ஒருத்தன் நின்னுட்டு இருந்தான். இவனைப் பார்த்ததும் அவன் தன்னோட தள்ளு வண்டியிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து இவன் கையில குடுத்து, "சாப்பாடு இருக்குது .... சாப்பிடு "னு சொன்னான்.
இவன் அதைக் கைல வாங்கி பையில போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சான். கொஞ்ச தூரம் போனான். திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, " என் பொஞ்சாதிக்கு ஒண்ணு "னு கேட்கவும், அந்த ஆளும் பதில் எதுவும் சொல்லாமே, ஒரு பொட்டலத்த எடுத்து இவன் கைல குடுத்தான். 
இவன் அதைக் கைல வாங்கி பையில போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சான். கொஞ்ச தூரம் போனான். திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, "என் புள்ளைக்கு ஒண்ணு"னு கேட்கவும்,அந்த ஆளும் பதில் எதுவும் சொல்லாமே, ஒரு பொட்டலத்தை எடுத்து இவன் கைல குடுத்தான். 
இவன் அதைக் கைல வாங்கி பையில போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சான். கொஞ்ச தூரம் போனான். திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, "என் ஆத்தா அப்பனுக்கு ஒண்ணு"னு கேட்கவும், அந்த ஆளும் பதில் எதுவும் சொல்லாமே, ரெண்டு பொட்டலத்தை எடுத்து இவன் கைல குடுத்தான். 
அதை வாங்கி பைல போட்டுக்கிட்டு, "என்னத்துக்கு இப்பிடி போறவாற எல்லாத்துக்கும்  சாப்பாடு குடுக்கீக"னு கேட்டான்.
"எல்லாம் ஒரு வேண்டுதல்தான். கிரகநிலை சரியில்லை .... நாலு பேருக்கு நல்லது பண்ணினா எல்லாம் சரியாயிடும்னு  ஜோஸ்யர் சொன்னார். தானத்துல சிறந்தது அன்னதானம்தானே. அதான் இதைக் குடுக்கிறேன்" னு அவன் சொல்லவும் சரிதான்னு தலையை ஆட்டிட்டு இவன் நடக்க ஆரம்பிச்சான்.   
கொஞ்ச தூரம் போனவன் திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, "இன்னும் ஒண்ணு"னு கேட்கவும், அந்த ஆள், "போதும் போ" என்று பதில் சொன்னான். இதைக் கேட்டதும், கை நீட்டினவன் "நல்லதுங்க ...  நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்"னு சொன்னான். இதைக் கேட்டதும் தள்ளுவண்டிக்காரன் தள்ளாடிப் போயிட்டான்.  
"ஐயா... நீங்க கேட்டப்பல்லாம் நான் குடுத்தேன். அப்பல்லாம் எதுவும் சொல்லாமே அதை வாங்கிட்டுப்  போன நீங்க, ஒரு பொட்டலத்தை நான் தரமாட்டேனு சொல்றப்ப நன்றி சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியலே" னு சொன்னான்.
அதுக்கு நம்ம மூட்டை முடிச்சு,"எது கிடைச்சாலும்  அதை கண்டு திருப்தி அடையாத ஜென்மம்  மனுஷ ஜென்மம். எனக்கு இன்னொரு பொட்டலம் தேவையில்லைதான். ஆனாக்கூட, "நாம கேக்கிறப்ப எல்லாம் அந்த ஆளு குடுத்தானே. இன்னொன்னு கேட்டு வாங்கி இருக்கலாமே. கேக்காமே விட்டுட்டமோனு இந்த மனசு என்னை பாடாய் படுத்திகிட்டு இருக்கும். என்னை ஒருவேலையும் முழு மனசா செய்ய விடாது. கேட்டாலும் கிடைச்சிருக்காதுனு இப்ப உறுதியா தெரிஞ்சப்பறம் மனசிலே அந்த மாதிரி இடைஞ்சல் எதுவும் இல்லாமே மனசு பாட்டுக்கு நிம்மதியா இருக்கும். நானும் நிம்மதியா மத்த வேலையைக் கவனிப்பேன். அதுக்குதான் நன்றி சொன்னேன்"னு இவன் சொன்னான். 
அம்புட்டுதான்...கதை முடிஞ்சுது ! இதுல உங்களுக்கு என்ன புரிஞ்சுது ?

No comments:

Post a Comment