Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, June 30, 2016

இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?




நுங்கம்பாக்கம் ரயில் நிலைய சம்பவம் பற்றி கருத்து தெரிவிப்பவர்கள் பலரும், "கண் முன் நடக்கும் சம்பவம் எதையும் யாரும் தட்டி கேட்பதில்லை" என்று ஆதங்கப்படுகிறார்கள்  .
என்னுடைய அனுபவங்கள் இரண்டை - இந்த மாதத்தில் நடந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மாத (ஜூன்) முதல் வாரத்தில் ஒருநாள். தாம்பரம் மார்க்கெட்டில்   ஆட்டோவிலிருந்து இறங்கிய நான், தாம்பரம் ஸ்டேஷன் போவதற்காக சுரங்க நடை பாதையில் போய்க்கொண்டிருந்தேன். எனக்கு எதிர்த் திசையில் ஒரு குடிமகன் வந்தார். நான், எனக்கு மிக அருகில் என்னை அடுத்து நல்ல வாட்டசாட்டமான இளம் பெண் ஒருவர். எங்களுக்குப் பின்பாக கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்.
எதிரே வந்த குடிமகன், எனக்கு வலப்புறம் போவது போல் வந்தவர் என் அருகில் வரும்போது எனக்கு இடப்பக்கமாக வந்து அந்த பெண்ணின் மார்பில் தனது தோள்பட்டையால் ஒரு இடி இடித்து விட்டுப் போனார். அதைக் கண்ட நான் , "நாயே, செருப்பால் அடிப்பேன் " என்று கத்துகிறேன், அவன் போகும் திசையை திரும்பிப் பார்த்தபடி. எனது குரல் அந்த இடம் முழுவதும் எதிரொலிக்கிறது. நேரமோ காலை 9 மணிதான்.
எனக்குப் பின்னால் அத்தனை பேர் வருகிறார்களே, யாராவது ஒரே ஒருத்தர்கூட  "என்னம்மா... என்ன விஷயம் ?" என்று கேட்கவில்லை. அதுகூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. யாருக்காக நான் குரல் கொடுக்கிறேனோ, அந்தப்பெண், யாருக்காகவோ நான் குரல் கொடுக்கிறேன்  என்பது போல எதையும் சட்டை செய்யாமல் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதை பார்த்த நான் , "இது உனக்குத் தேவைதானா ?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
இரண்டாவது சம்பவம்.: போனவாரம்... தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பஸ்ஸில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்.(வண்டி எண் - 55. மாலை நேரத்தில் அந்த பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.) பஸ்ஸை ஓரம் கட்டிவிட்டு கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த டைமில் அவரது ஸீட்டில் யாராவது உட்காருவதும், அவர் தனது இடத்துக்கு வந்ததும், உட்கார்ந்திருப்பவர் எழும்பிவிடுவதும் தினசரி நடக்கும் ஒன்று தான். 
அன்றும் அதுதான் நடந்தது. கண்டக்டர் வந்த பின்னும் எழும்ப மறுத்த ஒரு இளவயது ஆசாமி,"பொம்பளை இடத்தில் ஆம்பிளை உக்கார்ந்தா எழுப்பி விடறே. ஆம்பிளை சீட்டில் உட்கார்ந்திருக்கிற பொம்பளைகளை எழும்ப சொல்லு. அப்பதான் நான் உனக்கு இடம் விடுவேன் " என்று தகராறு செய்தார். கண்டக்டர் சத்தம் வெளியில் கேட்கவே இல்லை. இந்த ஆசாமி கத்திக்கொண்டும், உன்னை என்ன செய்றேன் பார் " என்று குரல் கொடுப்பதுமாக இருந்தார்.
எனக்கே பொறுக்க முடியாமல்,'இத்தனை ஜென்ட்ஸ் இருக்காங்க. அவன் முதுகில் ரெண்டு வச்சு கீழே இறக்கி விடுவதுதானே ?" என்றேன். அதற்கு ஒரு பொறுப்புள்ள ஆண்மகன் சொன்ன பதில் : "அவன் கேள்வி கேட்பதில் என்ன தப்பு இருக்குது ? பொம்பளை ஸீட்டில் ஆம்பிளை உட்கார்ந்தா கொடி பிடிக்கிறீங்கதானே? ஆம்பிளை ஸீட்டில் உட்கார்ந்திருக்கிற பொம்பளை, ஆம்பிளை வந்ததும் எழும்பி இடம் குடுக்கணும்.அந்த ஆள் சரியாகத்தான் கேள்வி கேக்கிறான் !" என்கிறார்.
நான் வாயை மூடிக் கொண்டேன். "கடவுளே... இந்த உலகம் .. இந்த மக்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் ?" என்று ஆண்டவனைக் கேள்வி கேட்டேன். நமக்குத் தெரிந்த ஒரே ஒரு இளிச்சவாயன் அவர் மட்டுந்தானே ! அவரை நாம கேள்வி கேட்டால் அவர் கோபிக்கவும் மாட்டார் பதிலும் சொல்லமாட்டார்.  அந்த வகையில் அவர் நமது உணர்ச்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய வடிகால். 
இந்த உலகம் எங்கே, எதை நோக்கிப் பயணிக்கிறது ? விவரம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.
இன்னொரு விஷயம்.. நான் கவனித்த வரையில் ஜூன்மாத  தொடக்கத்தி லிருந்தே குடிமகன்களின் அட்டகாசம் பகலில், பலர் இருக்கும் இடத்திலேயே தொடர்கிறது. இதன் பின்னணி என்ன? 

No comments:

Post a Comment