Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, February 28, 2016

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 27



  அச்சுப்பிச்சு அப்புமணி ! மீட்டிங் முடிந்து வந்த உதவி ஆணையாளர், "என்னப்பா, பையனை நல்லா கவனிச்சீங்களா?" என்று காவலர்களைக் கேட்க, 'கவனிக்கத்தான்  நினைச் சோம். ஜஸ்ட் மிஸ்ஸிங்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் அதிகாரி முன்பாக மிகவும் பணிவாக, "ஆமாம் ஸார்" என்றார்கள்.
அப்புமணியை தனியறைக்கு அழைத்துச் சென்ற அதிகாரி, "என்ன தத்துப்பித்து . நீ யார் வீட்டுக்கு வந்திருக்கிறே ? தனியாவா பீச்சுக்கு வந்தே ?" என்று கேட்டார்.
"ஐயோ .. ஐயோ .. உங்களுக்கு என் பேரை சொல்லவே தெரியலே. நான் தத்துப்பித்து இல்லே. நான் அச்சுப்பிச்சு ...ஆமா ... பெரிய போலீஸ் ஐநூத்தி ஒண்ணை நான் பார்க்கவே இல்லையே " என்றான் அப்புமணி 
"அவர் வருவார்... நீ யார் வீட்டுக்கு வந்திருக்கிறே ?" என்று அவர் கேட்டதும் அப்புமணி யோசிக்க ஆரம்பித்தான்.
அதைக் கவனித்த அதிகாரி, "ஆமாம் .... உங்க தோட்டத்தில் இப்போ நிறைய வெள்ளரிக்காய் காய்ச்சிருக்கும் தானே ? உங்க வீட்டுக்கு வந்தா எனக்குத் தருவியா ? " என்று கேட்டு அவனது யோசனயை திசை திருப்பப் பார்த்தார்.
"ஓ ... தருவேனே .. யார் எது கேட்டாலும் , அது நம்ம கையில் இருந்தால் அதை முழுசா குடுக்க முடியாட்டாலும் கொஞ்சமாவது குடுக்கணும்னு எங்கம்மா சொல்வாங்க. எங்க தோட்டத்தில்தான் நிறைய வெள்ளரிக்கா இருக்கே. நீங்க எவ்வளவு வேணும்னாலும் பறிச்சிட்டுப் போகலாம் "
"சரி ... நீ சென்னைக்கு எப்போ வந்தே? யார் வீட்டுக்கு வந்தே ? பீச்சில் தனியா விளையாடிட்டு இருந்ததா சொல்றாங்க .. உன்னோட வந்தது யார் ?  உன்னை விட்டுட்டு அவங்க எங்கே போனாங்க ?"
"நான் உலகத்தை சுத்திப் பார்க்க வந்தேன் "
"என்னடா இது ! உலகத்தை சுத்திப் பார்க்க தனியா வந்தியா ?"
"ஆமாம்.. கதையில் வர்ற உருப்படாத ராஜகுமாரன் தனி ஆளாகப் போய்த் தானே உலகத்தை சுத்திப் பார்த்துட்டு வருவான். அதுமாதிரிதான் நானும் தனியா வந்தேன்" என்று அப்பாவித் தனமாக அப்புமணி சொல்ல, அதைக் கேட்டு சிரித்தார் அதிகாரி .
"உலகத்தை சுத்திப் பார்க்கிற ஆளைப் பாரு. உனக்கு முதல்லே இந்த சென்னையை விட்டு வெளியே போகத் தெரியுமா ? நீ உலகத்தைப் பத்தி தெரிஞ்சுகிட்ட வரை போதும். ஊர் போய்ச்சேருற வழியைப் பாரு. உங்க அம்மா தேடுவாங்க தானே ?"
"நான் அம்மாவுக்கு டாட்டா சொல்லிட்டுதானே வந்தேன் "
"நீ எப்போ வந்தே? யாரோட தங்கி இருக்கிறே?" என்று அதிகாரி கேட்டதும் அமைதியானான் அப்புமணி.
 "சாப்பிட்டியா ?. என்ன வேணும் சொல்லு "
"பீச்சில்சுண்டல் சாப்பிட்டேன்.அப்புறம் அந்த ரெண்டு போலீஸ் அங்கிளும்  எனக்கு ஜூஸ் வாங்கித் தந்தாங்க."
"சரி சொல்லு. ஊரை விட்டு வந்த பிறகு இங்கே யாரோட இருக்கிறே ?"
"யாரோடயும் இல்லே. ரயில் வந்து நிக்கும்தானே. அங்கே பெஞ்சிலே நிறைய பேர் தூங்குவாங்கதானே . நான் அங்கேதான் இருந்தேன்."
"சரி. எங்க வீட்டுக்கு வர்றியா ? முதலில் உங்க அம்மாவுக்கு நீ என்னோட இருக்கிறதை சொல்லிடலாம். நான் உனக்கு சென்னையை சுத்திக் காட்டறேன். பார்த்துட்டு நீ ஊருக்குக் கிளம்பிப்போயிடணும். நான் உன்னை  பத்திரமா அனுப்பி வைப்பேன். சரியா ?" என்று கேட்ட அதிகாரி அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். 
"ஊஹூம் ... நான் வரலே. நான் போகலே "
"அப்படின்னா ?"
"உங்க வீட்டுக்கு வரலே. எங்க வீட்டுக்குப் போகலே"என்ற தீர்மானமான பதில் வந்தது அப்புமணியிடமிருந்து.
இதைக் கேட்டதும், கான்ஸ்டபிள் ஒருவரை உள்ளே அழைத்து ,"நான் இல்லாதப்ப இந்தப் பையன் வந்தால்,நான் இல்லன்னு சொல்லி அனுப்பா மல் என்ன ஏதுன்னு விசாரிச்சு அவன் கேட்கிறதை செஞ்சு குடுங்க. பையன் நல்ல வசதியான வீட்டுப் பையன். எதோ பைத்தியக்காரத்தனமா வீட்டை விட்டு வந்திருக்கிறான்" என்று சொல்லி விட்டு அப்புமணியிடம், "சரிப்பா தத்துப்பித்து .. நீ போகலாம் " என்றார். 
"ஐயோ .. ஐயோ .. என் பேரை எப்பத்தான் சரியா சொல்லப் போறீங்களோ தெரியலே "என்று தலையிலடித்துக் கொண்டு அப்புமணி சொல்ல, அதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது அதிகாரிக்கு.
அப்புமணி அங்கிருந்து கிளம்பிப் போனதும்,"பையனை ரொம்ப குளோசா வாட்ச் பண்ணுங்க. எந்த தகவல் கிடைச்சாலும் எனக்கு உடனே  இன்பார்ம் பண்ணனும். கிராமத்துப் பையன். கொஞ்சம் அசடு. கொஞ்சம் அப்பாவி. ஆனா ரொம்ப நல்ல பையன் "  என்றார்.  
தன்னுடைய ரூமுக்கு வந்த சேகர் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். போலீசுகிட்டே நான் சிக்காமே இருக்கறதுக்கு அந்தப் பையனை அப்படியே விட்டுட்டு வந்துட்டேனே. அவங்க கையில் சிக்கினா இவன் கதி அதோ கதிதானே. அவனை  எப்படி அங்கிருந்து கொண்டு வர்றது என்பது போன்ற சிந்தனைகள் அவனுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. அவனது கவலைக்கு காரணம் கேட்ட பிரவீனிடம் தன்னுடைய பயத்தை சொன்னான் சேகர். 
"அடிக்குப் பயந்து அந்த லூஸு உண்மையை சொல்லிடுமோ?" என்ற கேள்வி வந்தது பிரவீனிடமிருந்து.
"அவன் ஒரு ரெண்டுங் கெட்டான்.  எப்போ என்ன செய்வான்னு யாருக்கும் தெரியாது. பாவம்டா... ஒரு அப்பாவிப் பையனை விட்டுட்டு வந்துட்டோ மேனு வருத்தமா இருக்குது." என்று சேகர் சொல்ல , "ஒருவேளை அந்த லூஸை அனுப்பி போலீஸ் நம்மள வேவு பார்த்தால் என்ன செய்றது ?" என்று கோபமாகக் கேட்டான் பிரவீன்.
"அந்த பயம் இருக்கிறவங்க இங்கே இருக்க வேண்டாம் ... எங்காவது போயிடுங்க " என்று எரிந்து விழுந்தான் சேகர்.
"அவனால் ஏதாது பிரச்சினை வந்தால் அவன் கழுத்தை அப்படியே நெரிச்சு கொன்னுடுவேன்"
"அவனால் எந்த வம்பும் வராது. அவன் முதலில் வரட்டும்.அவனை நம்ம வேலைக்காரி தனம் கஸ்டடியிலே விட்டுடுவோம் " என்று சேகர் சொல்ல அதற்கு பிரவீன் ஒப்புக் கொண்டான்.
"சரி .. உன்னோட உடன்பிறவா சகோதரனை ஆயில் மசாசுக்குன்னு எங்கியோ கொண்டு போய்  விட்டியே. அவர் எப்ப வருவார்."
 " இன்னும் ரெண்டு நாளில் போய் கூட்டிட்டு வந்துடுவேன் "
"நல்ல பொழப்புடா சாமீ " என்று சொல்லி விட்டு பிரவீன் வெளியில் கிளம்ப அப்புமணியை பற்றிய கவலையில் ஆழ்ந்தான் சேகர்.
---------------------------------------------------   தொடரும் ------------------------------------------------ 

No comments:

Post a Comment