Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 23, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 12

                                     
அச்சுப்பிச்சுஅப்புமணி !
"டேய் ... ராமு ... சோமு .... என்னடா நீங்க ... என்னை இப்படி நடுவழியில் இறக்கி விட்டுட்டுப் போறீங்களேடா..நான் வேணும்னா என் வாயாலேயே பலூன் ஊதற மாதிரி ஊதி உங்க சைக்கிளுக்கு காத்து ஏத்தறேன்டா .. என்னையும் கூட்டிட்டுப் போங்கடா " என்ற அப்புமணியின் கெஞ்சல் அவர்கள் காதில்விழவேஇல்லை. திரும்பியே  பார்க்காமல் சைக்கிளை தள்ளியபடி நடந்து சென்றார்கள்.
சாப்பாடு, தண்ணீர் பாட்டில், நொறுக்குத் தீனி இருந்த பையை தலையில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தான் அப்புமணி.திடீரென்று அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. "டேய் ... என்னை விட்டுட்டா போறீங்க. இதோ பாருங்க குறுக்குப் பாதையில் ஓடி வந்து உங்களுக்கு முன்னாலே நான் ஆத்தங்கரைக்கு வந்துடுவேன் .. குறுக்குப் பாதையில் திருட்டுப் பயம், பேய் நடமாட்டம் இருக்கும்னு எல்லாரும் சொல்றாங்க. என்ன ஆனாலும் சரி ... உங்களை நான் ஜெயிச்சே காட்டுவேன் " என்று மனதுக்குள் சொல்லியபடி ஆள் நடமாட்டம் என்பதே இல்லாத குறுக்குப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அப்புமணி . 
மரக்கிளைகளில் பறவைகளின் சலசலப்பு , தேங்கிக் கிடந்த நீரில் தவளைகளின் துள்ளிக் குதிப்பு, மண்டிக் கிடந்த புதர்களின் நடுவில் யாரோ ஓடுவது போல ஒரு அசைவு .. இவற்றையெல்லாம் பார்த்தபடியே வேகமாக நடக்க ஆரம்பித்தான் அப்புமணி. ஒரு மரத்தடியில் ஒருவன் படுத்துக் கிடப்பது அவன் கண்களில் பட்டது. அவனருகில் சென்ற அப்புமணி, "அண்ணா ... நீங்க ஏன் இங்கே படுத்துக் கிடக்கீங்க ? இங்கே பேய் வருமாம்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தரையில் விழுந்து கிடந்தவன், "தண்ணீர் .... தண்ணீர் " என்று சைகை செய்தான். 
கொஞ்சமும் யோசிக்காமல் பாட்டிலைத் திறந்து அவன் வாயில் தண்ணீரை மெதுவாக ஊற்றினான் அப்புமணி. நன்றியுணர்ச்சி அவன் கண்களில் வெளிப்பட்டது. மெதுவாக எழும்பி உட்கார்ந்த அவன், தனது இரண்டு கைகளையும் கூப்பி, " நன்றி தம்பி " என்றான்.
"அதெல்லாம் யாருக்கு வேணும் ? நீங்க இங்கே படுத்திருக்கீங்களே . உங்களுக்கு பயமா இல்லையா ?" என்று கேட்டான் அப்புமணி 
"படுத்திருக்கலே ... மயங்கிக் கிடந்தேன் ...தெய்வம் மாதிரி வந்து தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுத்திருக்கே ... யாருப்பா நீ ?" என்று கேட்டான் அவன்.
"நான் ....அச்சுப்பிச்சு "
"அப்படின்னா ?"
"அப்படித்தான் எல்லாரும் என்னை இங்கே கூப்பிடுவாங்க. வாங்க அண்ணா... எங்க வீட்டுக்குப் போலாம் " என்று கூப்பிட்டான் அப்புமணி.
நான் தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்தவன்ங்கிறதும், போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிட்டு சோறு தண்ணி இல்லாமே இந்த இடத்தில்  மூணு நாளா மறைஞ்சு கிடக்கிறேன்ங்கிறதும்  இந்தப் பையனுக்குத் தெரிஞ்சால் என்னை அவன் வீட்டுக்குக் கூப்பிடுவானா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தான் அவன் .
"என்னண்ணா ... என்ன யோசிக்கிறீங்க ?" என்று அப்புமணி கேட்க, அவன் முகத்தை அன்போடு பார்த்த அவன், "என்னை 'அண்ணன்'னு சொல்லியா கூப்பிட்டே?" என்று கேட்டான்.
"ஆமாம் .. என்னைவிட பெரியவங்களை, 'அண்ணா' ... 'மாமா'னு மரியாதையா கூப்பிடணும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க"
"உங்க அம்மா ரொம்ப நல்லவங்க!"
"போங்க அண்ணா .. நீங்க எங்க அம்மாவைப் பார்க்கவே இல்லை. அதுக்குள் அவங்க நல்லவங்கனு எப்படி கண்டு பிடிச்சீங்க.?"
"வழியில் விழுந்து கிடந்த ஒருத்தனை எழுப்பி உட்கார வச்சு, தண்ணி குடுத்து உதவுற ஒரு பிள்ளையைப் பெத்த அம்மா கண்டிப்பா நல்லவங் களாத்தான் இருப்பாங்க. நீ ரொம்ப நல்லவன் தம்பி"
"நீங்க மட்டுந்தான்  இப்படி  சொல்றீங்க .. எல்லாரும் என்னை அச்சுப்பிச்சு அச்சுப்பிச்சுனுதான் கூப்பிடுவாங்க. அண்ணே.. இட்லி இருக்கு சாப்பிட லாமா?" என்று அப்புமணி கேட்க, "இட்லியா?" என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் அவன் .
"நான், ராமு சோமு மூணு பேரும் ஆத்துக்கு குளிக்க கிளம்பினோம் . குளிச்சதும் சாப்பிட எங்க அம்மா இட்லி ஸ்நாக்ஸ் எல்லாம் குடுத்து அனுப்பினாங்க  .. ஆனா அவங்க என்னை பாதி வழியிலேயே விட்டுட்டுப் போயிட்டாங்க . வாங்க அண்ணா ... நாம சாப்பிடலாம் " என்றான் அப்புமணி .
"உங்க அம்மா உனக்கு ஆசையா செஞ்சு குடுத்ததை என்கிட்டே குடுத்திட்டா அதுக்காக உங்க அம்மா கோபப்பட மாட்டாங்களா?"
"மாட்டாங்க. மத்தவங்க சாப்பிடறதைப்   பார்த்தால் எங்க அம்மா ரொம்ப சந்தோசப் படுவாங்க " என்று சொல்லிய அப்புமணி இட்லி பாக்கெட்டை எடுத்து அவனிடம் கொடுக்க வெகு ஆவலாக சாப்பிடத் தொடங்கினான் அவன் .
"இந்தாங்க அண்ணா .. தண்ணி குடிச்சுக்கோங்க . வேகமா சாப்பிட்டா சாப்பாடு தொண்டையில் சிக்கி நாம செத்துப் போயிடுவோம் " என்று அப்புமணி சொல்ல, "அப்படியொன்னு நடந்தால் அதுக்காக அழவோ வருத்தப்படவோ  எனக்கு யாருமே இல்லை " என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
"அண்ணா ... உங்க வீடு எங்கே இருக்குது ? உங்க அம்மா எங்கே இருக்காங்க ?"
"உனக்கு இந்த வயசில் இருக்கிறது போல என்னோட சின்ன  வயசில் எனக்குன்னு ஒரு வீடு .. ஒரு அம்மா ... இருந்திருந்தால் நான் ஏன் இப்படி ஒரு கேடு கெட்ட வாழ்க்கை வாழப் போறேன்.. என்னோட அம்மா முகத்தை நான் பார்த்ததே இல்லை"
"சரி ... இனிமே எங்க அம்மாவை உங்க அம்மாவா வச்சுக்கோங்க " என்று அப்புமணி சொல்ல, அவனை அப்படியே கட்டிப் பிடித்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அவன். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.
"எங்க அம்மாதான் என்னைப் பார்த்துப் பார்த்து எப்பவும் அழுவாங்க . நீங்க ஏன் அழறீங்க  ?"
"உங்க அம்மா ஏன் அழணும் ?"
"எல்லாரும் என்னை அச்சுப்பிச்சுனு கிண்டல் செய்றாங்க. அதைப் பார்த்து எங்க அம்மா அழறாங்க. என்னைத் திட்டறாங்க .எனக்கு சமர்த்தே போதாதாம்"
 "நீயும் மத்த குழந்தைங்க மாதிரி சமர்த்தா நடந்துக்கிறது தானே ?"
"அதுக்குத்தான் ராமு சோமு கூட பிரெண்டா இருந்தேன். அவங்க என்னை பாதியிலேயே கழட்டி விட்டுட்டுப் போயிட்டாங்க "
"அவங்களா விரும்பிதான் உன்னைக் கூட்டிட்டு   வந்தாங்க. அவங்க கோபப் படற  அளவுக்கு நீ என்ன செஞ்சே ?"
"சைக்கிளில் இருந்த காத்தை வெளியில் விட்டேன் "

"ஏன் அப்படி செஞ்சே ?"
"அன்னிக்கு ராமு சோமுவோட  மாமா வீட்டு பங்க்ஷனில் சாப்பிடறப்போ  காத்தில் இலை பறக்குது . பேனை நிறுத்துன்னு சொன்னாங்க. பேன் ஆப் ஆனதும் இலை அப்பளம் எதுவும் பறக்கலே. இன்னிக்கு வெளியில் எதிர்க் காத்து அதிகம் இருக்கிறதாலே சைக்கிளை ஓட்ட முடியலேன்னு அவங்க சொன்னதும்  நான் சைக்கிளில் இருந்த காத்தை நிறுத்தினேன்" என்று அப்புமணி சொன்னதைக் கேட்டு அவன் சிரித்தான். 

"நான் பேசினால் நீங்க சிரிக்கிறீங்க ... எல்லாரும் சிரிக்கிறாங்க .. எங்க அம்மா மட்டும் நான் பேசறதப் பார்த்து ஏன் அழறாங்கனு  தெரியலே " என்று அப்புமணி சொன்னதைக் கேட்டு அவனது கண்களும் கலங்கியது. இந்தப் பையன் இப்படியொரு அப்பாவியாக இருக்கிறானே .மோசக் காரங்க சூழ்ச்சிக் காரங்க இருக்கிற இந்த உலகத்தில் இந்தப் பையனால் எப்படி  எதிர்நீச்சல் போட்டு வாழ முடியும் ?" என்று சிந்திக்க ஆரம்பித்தான். 
------------------------------------------  தொடரும் --------------------------------------

No comments:

Post a Comment