Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 30, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 13

                                 
அச்சுப்பிச்சுஅப்புமணி !
"அண்ணா ... உங்களுக்கு அம்மா இருக்கிறாங்களா ?"
"ஏன் தம்பி கேட்கிறே ?" என்று அவன் கேட்டதுமே "எங்க அம்மா மாதிரி உங்க அம்மாவும் எப்பவும் அழுதிட்டு இருப்பாங்களான்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்" என்றான் அப்புமணி.
இதைக் கேட்டதும் அவனது கண்கள் கலங்கின 
"என்ன அண்ணா நீங்க.! எங்க அம்மா மாதிரி சும்மா சும்மா அழறீங்க ? நான் என்ன கேட்டுட்டேன்னு இப்போ அழறீங்க ? நான் தப்பா ஏதாது கேட்டுட்டேனா ?"
"இல்லே தம்பி .... இத்தனை வருஷத்திலே நான் பார்த்த எத்தனையோ ஆயிரக் கணக்கான மனுஷங்களில் ஒருத்தர் கூட என்னை  "ஏம்பா .. நீ சாப்பிட்டியா ? உனக்கு அம்மா இருக்கிறாங்களா"னு கேட்டதில்லே. முன்பின் பார்த்திராத நீ என்னோட பசியைப் பத்தி பேசறே .. எங்க அம்மா பத்தி விசாரிக்கிறே.. இந்த மாதிரி அன்பா பேசற ஜீவனை என் வாழ்நாளில் பார்த்திருந்தால் இப்படி ரோட்டோரம் விழுந்து கிடக்கிற நிலைமைக்கு வந்திருக்க மாட்டேன். எனக்காக அழவும் சிரிக்கவும் எந்த உறவும் கிடையாது" என்று கண்கள் கலங்க சொன்னான் அவன்.
"அப்படின்னா எங்க வீட்டுக்கு வாங்க "
"கள்ளங்கபடமில்லாத வெள்ளை மனசு உனக்கு. உன் வீட்டுக்கு வர்ற தகுதி எனக்குக் கிடையாதுப்பா.  சரி தம்பி ... நீ நேரத்தோடு வீட்டுக்குப் போ . நானும் இங்கிருந்து கிளம்பறேன் "
"நீ எங்கே போறே ?"
"இப்படியே ரெண்டு நாள் சுத்துவேன். பிறகு எங்க கூட்டத்தோடு போய் சேருவேன் "
"கூட்டமா ?"
"அதெல்லாம் உனக்கு புரியாது தம்பி .. நீ கிளம்பு "
"அண்ணா ... இங்கே தீவிரவாதிங்க சுத்தறாங்கன்னு எங்க ஸ்கூலில் எல்லா பிள்ளைங்களும் பேசிகிட்டாங்க .. நீங்க அவங்க கையிலே மாட்டிக்காமே பத்திரமா போங்க "
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவன், "நீ அவங்களைப் பார்த்திருக் கிறியா  ? அவங்க எப்படி இருப்பாங்க ? " என்று கேட்டான். 
"யூனிபார்ம் போட்டுக்கிட்டு கருப்பு துணியாலே முகத்தை மூடிகிட்டு கையில் துப்பாக்கியோட இருப்பாங்க " என்று விவரித்தான் அப்புமணி.
அதைக் கேட்டு சிரித்த அவன், "தம்பி ... எனக்கு சாப்பாடு தண்ணீர் ஸ்நாக்ஸ் எல்லாம் குடுத்தே... நல்லா இருப்பா ... உன்னைப் பெத்த புண்ணியவதியும் நல்லா இருக்கணும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த அப்புமணி, அவனால் தன்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. மெதுவாக நடந்து வீடு வந்து சேர்ந்தான் . "என்னடா ... குளிக்கப் போறதா சொல்லிட்டுக் கிளம்பினே .. குளிக்காமே இப்படி வேர்த்து விறுவிறுத்து வந்து நிக்கிறே " என்று கேட்டாள் அம்மா .
"ராமு சோமு பாதி வழியிலேயே என்னை இறக்கி விட்டுட்டுப் போயிட்டாங்க" என்றான் அப்புமணி .
"ஏன் ?" என்று அம்மா கேட்க , நடந்ததை சொன்னான் அப்புமணி.
"இந்த ராமுவும் சோமுவும் என்னை புத்திசாலி ஆக்கிறதா சொன்னாங்க .. ஆனா .... "
"நீ அவங்களை முட்டாள் ஆக்காமே இருந்தால் சரிதான் .. சாப்பாட்டை அவங்களுக்கு குடுத்தியா  ?"
"இல்லேம்மா ... ஆனா வீட்டுக்கு வர்ற வழியில் ஒரு அண்ணா பசியோட இருந்தார் .. அவருக்குக் குடுத்தேன்."
"அப்பாடா ... அந்த அளவுக்காவது மூளை வேலை செஞ்சது சந்தோசம் தான்  " என்றாள் அம்மா 
"ராமு சோமு என்னை அவங்க கூட சேர்க்க மாட்டேங்கிறாங்க .. நான் எப்பதான் புத்திசாலி ஆறது ?"
"நான் உனக்கு நல்ல நல்ல கதைகளா தினமும் சொல்றேன்தானே .. நீ அதைக் கேட்டு அந்த மாதிரி நடக்கப் பழகிக்கோ"
"இன்னிக்கு என்ன கதை ?"
"அரிசந்திர மகராஜன் கதை சொல்லப் போறேன். உண்மை பேசறவனை எல்லாருக்கும் பிடிக்கும் .. ஒருத்தன் நல்லவனா இருந்தால் அவனையும் எல்லாருக்கும் பிடிக்கும். உயிரே போனாலும் உண்மைதான் பேசுவேன்னு சொல்லி பிடிவாதமா இருந்த அரிசந்திரன் கதையை உனக்கு சொல்றேன் . அவரைப் போலவே நீயும் எப்பவும் உண்மை பேசணும் " என்று அம்மா சொல்லும்போதே," இந்தக் கதை எனக்கு ஏற்கனவே தெரியும். பொய்யே பேச மாட்டேன்னு சொல்ற ஒரு ராஜாவை ஒரு முனிவர் வந்து பொய் பேச சொல்லுவாரே .. அந்தக் கதைதானே. அதை எங்க டீச்சர் எங்களுக்கு சொல்லி இருக்காங்க " என்றான் அப்புமணி 
"அந்தக் கதையிலிருந்து நீ என்ன தெரிஞ்சுகிட்டே ?" என்று அம்மா கேட்க, "உண்மைதான் பேசுவேன்னு யாரும் அடம் பிடிக்கக் கூடாது. அப்படி அடம் பிடிச்சா கஷ்டப்படவேண்டி இருக்கும். அதனால் பொய் பேசறது எப்பவும் நல்லது" என்று அப்புமணி சர்வ சாதாரணமாக சொல்ல அவனைக் கோபத்தோடு முறைத்துப் பார்த்தாள்  அம்மா.
------------------------------------- தொடரும் ----------------------
    

No comments:

Post a Comment