Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 16, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 11

                                     
அச்சுப்பிச்சுஅப்புமணி !
தாத்தாவின் வீட்டை விட்டு வெளியில் வந்ததுமே, "அம்மா எதுக்கு நீ எப்போப் பார்த்தாலும் என் கையைப் பிடிச்சு தரதரனு இழுத்துட்டு வர்றே ? எனக்குத்தான் நடக்கத்தெரியுமே....கையை விடும்மா..வலிக்குதும்மா" என்றான்  அப்புமணி.
"யாருடா உன்னை பெரிய மனுஷன் மாதிரி தாத்தாவை வாழ்த்த சொன்னது. உன்னை தாத்தா காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கத் தானே சொன்னேன்." என்று கோபமாகக் கேட்டாள் அம்மா .
"அம்மா ... நீதானே ராமு சோமுவைப் போல நடந்துக்கணும்னு சொன்னே "
"ஆமாம் "
"அன்னிக்கு அவங்களோட  மாமா வீட்டில் ஒரு குழந்தைக்குப் பிறந்தநாள் நடந்தப்போ அவங்க அப்படித்தான் குழந்தையை வாழ்த்தினாங்க . நானும் அதைப் போலத்தான் தாத்தாவை வாழ்த்தினேன் "
"முட்டாள் .... முட்டாள் ... அன்னிக்கு நடந்தது குழந்தையோட முதல் வயசு பிறந்தநாள். அதனாலே அப்படி வாழ்த்தினாங்க ... இன்னிக்கு தாத்தாவுக்கு தொன்னித்து ஒன்பது வயசு முடிஞ்சு நூறாவது வயசு ஆரம்பம் ஆகுது. அவர்கிட்டே போய் நூறு வயசு வரை நல்லா இருக்கணும்னு சொல்ல லாமா?. இப்படியொரு முட்டாளா இருக்கிறியே. நீ எப்பத்தான் திருந்துவே ?" என்று கோபமாகக் கேட்டாள் அம்மா.
அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ராமு சோமு இருவரும், "என்ன .. அச்சுப்பிச்சு .. ஸ்கூலுக்கு வரலியா ?" என்று கேட்டார்கள்.
"அவன் இனிமே ஸ்கூலுக்கு வரமாட்டான். ஸ்கூலுக்குப் போனா , படிச்சா புத்திசாலித்தனம் வரும்னு நினைச்சு எல்லாரும் படிக்கப் போறாங்க. ஆனால் வடிகட்டின முட்டாள் எந்த ஸ்கூலுக்குப் போனாலும் எத்தனை ஸ்கூலுக்குப் போனாலும் முட்டாளாத்தான் இருப்பான்னு இவன் செய்கையில் காட்டிட்டான். அவன் படிக்க வேண்டாம். நாலு மாடு வாங்கிக் குடுக்கப் போறேன். அவன் அதை மேய்க்கட்டும்" என்றாள் அம்மா.
"ராமு சோமு ... நீங்களே பாருங்கடா ... எங்க அம்மா ரொம்ப மோசம். எனக்கு இருக்கிறது ரெண்டே ரெண்டு கை. நாலு மாட்டை என்கிட்டே குடுத்தா என்னோட ரெண்டு கையாலே ரெண்டு மாட்டைத்தான் பிடிக்க முடியும். மீதியுள்ள ரெண்டு மாட்டை நான் எப்படிப் பிடிக்க முடியும்? அப்புறம் மாடு ஓடிப் போயிட்டா அதுக்கும் என்னைத் தான் திட்டுவாங்க" என்று அப்பாவித் தனமாக சொன்னான் அப்புமணி.
இதைக் கேட்டதும் அம்மாவுக்கு சிரிப்பு வந்து விட்டது. அதைப் பார்த்த அப்புமணி, "டேய் ... ராமு ... சோமு ... சிரிக்கும்போது எங்க அம்மா எவ்வளவு அழகா தெரியிறாங்கனு  பாருங்கடா .. ஆனா எங்க அம்மா இந்தமாதிரி எப்பவோ ஒருக்கதான் சிரிப்பாங்க " என்றான் .
"சரி ... சரி ... நீ அவங்களோடு சேர்ந்து ஸ்கூலுக்குக் கிளம்பு " என்று சொன்ன அம்மா, அங்கிருந்து கோவிலுக்குக் கிளம்பிப் போனாள் .
இரண்டு நாட்களுக்குப் பின் ...
"அப்புமணி .. ராமு சோமுவோட சேர்ந்து ஆத்துக்குக் குளிக்கப் போறதா சொன்னியே ..  இன்னிக்கு லீவு நாள்ங்கிறதாலே அவங்க ரெண்டு பேரும் ஆத்திலே இறங்கி நல்லா ஆட்டம் போட்டுட்டு மெதுவாத்தான் வீட்டுக்கு வருவாங்க. நீ பசி தாங்க மாட்டே . நிறைய இட்லி சட்னியும் பாட்டிலில் தண்ணியும் தர்றேன். மூணு பேரும் நல்லா வயிறு நிறைய சாப்பிட்டுட்டு மெதுவா வாங்க.. முறுக்கு சீடை ஒரு கவரில் போட்டு வைக்கிறேன். மறக்காமே அதை சாப்பிடணும்"என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்க ராமுவும் சோமுவும் அங்கு வந்தார்கள் . 
வீட்டை விட்டு வெளியில் வந்ததும் "வாடகை சைக்கிள் எடுத்துக்கலாமா ?" என்று கேட்டான் சோமு. 
"அச்சுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதே" என்று சொன்ன ராமு, " சோமு நீ சொல்ற மாதிரியே நாம  வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போகலாம்டா . எல்லாருக்கும் தனித்தனி சைக்கிள் எடுக்க வேண்டாம். ஒரே சைக்கிளில் நாம மூணு பேரும் போவோம் "என்றான்.
வாடகைக்கு சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொண்டு மூவரும் ஆற்றுக்குப் போக தொடங்கினார்கள்.
சிறிது நேரத்தில் சைக்கிளை நிறுத்தினான் சோமு.
"ஏன்டா நின்னுட்டே ?" என்று அப்புமணி கேட்க "எதிர்காத்தோட வேகம் அதிகமா இருக்குது. சைக்கிளை மிதிக்க முடியலே " என்றான் சோமு. பின் சீட்டிலிருந்து குதித்துக் கீழே இறங்கிய அப்புமணி, நொடிப் பொழுதில் சைக்கிள் டுயூப்பிலிருந்து காற்றை வெளியேற்றினான் 
"டேய் .. என்னடா செய்றே ?" என்று இருவரும் பதட்டமாக கேட்க, "வெளியே நிறைய காத்து அடிக்கிறப்போ உள்ளே காத்து இருந்தா ஓட்டறது கஷ்டந்தானே. அதான் உள்ளே இருக்கிற காத்தை வெளியில் விட்டேன்" என்று சொன்னான் அப்புமணி 
"போடா முட்டாள் ... உன்னோட கூட்டு சேர்ந்ததே தப்பு.. இந்தா உன்னோட சாப்பாட்டு மூட்டை. நீ வீடு போய் சேரு ... நாங்க ஆத்துக்குப் போய்க்கிறோம்" என்று சொல்லி அப்புமணியை அங்கேயே விட்டு விட்டு சைக்கிளைத் தள்ளியபடியே ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் ராமுவும் சோமுவும். 
------------------------------------------------  தொடரும் -----------------------------------------------

No comments:

Post a Comment