Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, October 12, 2015

சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்துங்க !

ஹாய் பிரெண்ட்ஸ், வியூயர்ஸ் 
இப்போ நான் உங்க கிட்டே பேசப் போறது என்னுடைய தனிப்பட்ட எண்ண ஓட்டங்கள் பற்றியது. இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். எங்க வீட்டுப் பையன் சொல்றது போல சப்பை மேட்டராக தோணலாம். இது எந்த விதத்திலும் உங்களுக்கு கொஞ்சம்கூட சம்பந்த மில்லாத ஒன்றாகக்கூட இருக்கலாம். இதைப் படிக்கிறது படிக்காததும் உங்களோட தனிப்பட்ட உரிமை. என்னுடைய எண்ண ஓட்டங்களைப் பகிர்ந்துக்கணுங்கிற ஆசை வந்துச்சு. பதிவு செய்றேன். அவ்வளவுதான்.
பஸ்ஸில் வெளியூர்களுக்குப் பயணிக்கும் போது ஏதோ ஒரு கிராமத்தின் ஒரு பஸ் ஸ்டாப்பில், பஸ் சில நொடி நேரம் மட்டுமே  நிற்கும். அங்கு கண்டிப்பாக ஒரு டீக்கடை இருக்கும். அதில் ஏதோ ஒரு சினிமாப் பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும். பாட்டின் அனுபல்லவி அல்லது சரணம் ஒலித்துக் கொண்டிருக்கும். அது நமக்கு ரொம்பவும் தெரிந்த பாட்டாக இருக்கும். ஆனால் தொடக்க வரிகள் என்ன என்பது சட்னு நினைவுக்கு வராது. அல்லது இரண்டு para க்களுக்கும் நடுவில் வரும் tune மட்டும் நம் காதில் விழும். அந்த டியுனை ரசித்தபடி அது என்ன பாட்டு என்று நாம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பஸ் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடும். நாம் கேட்டது எந்தப் பாட்டு என்பது தெரிந்து கொள்ளாவிட்டால் தலையே வெடித்து விடும் என்பது போன்ற பீலிங்க் .அது எந்தப்  பாட்டு என்பதை ஆராய்ச்சி செய்வதிலேயே நமது பயணத்தின் மொத்த நேரமும் கழியும்.
சில சமயம் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் ஏதோ ஒரு சினிமாப் பாட்டின் ஏதோ ஒரு சில வரிகள் நம் நினைவில் வந்து நம்மை டிஸ்டர்ப் பண்ணும். அது ஒரு இன்ப அவஸ்தை . அதை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் போது அதே வரிகள் டீவீயில் ஒலி / ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கும். அல்லது காற்றில் மிதந்து வந்து நம் காதைத் தொடும். இரண்டு நாட்கள் முன்பு அதாவது 10.10.2015 அன்று காலையில் படுக்கையை விட்டு எழும்போதே "ஒருசாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை " என்ற வரியில் அடுத்த வார்த்தை என்ன வரும் ? "ஊரார் நினைப்பது சுலபம்"னு வருமா இல்லாட்டா "துரும்பாய் நினைப்பது உலகம்"னு வருமானு ஒரு குழப்பம். வேறு எந்த வேலையும் செய்ய விடாமல் இது என்னைக் குழப்பிக் கொண்டிருந்தது.எங்கள் வீட்டு டீவீயில், பாடல்கள் அதுவும் பழைய சினிமாப் பாடல்கள் ஓடிக் கொண்டிருக்கும் நேரந்தான் அதிகம். டீவீ முன்பாக உட்கார்ந்து கேட்கும் பழக்கம் கிடையாது. அதுபாட்டுக்கு அது வேலையை செய்யும். நான் என்னோட வேலையை பாட்டைக் கேட்டபடி செஞ்சிட்டு இருப்பேன். வீட்டுக்குள் புதிதாக காலடி எடுத்து வைப்பவர்கள் "என்னங்க டீவீ பாட்டுக்கு ஓடிட்டு இருக்குது. யாரையும் காணும் " என்பார்கள். "ஓடினால் பிடிச்சு நிறுத்துங்க. என்னைப் பொறுத்தவரை அது ஒரு ரேடியோ.  அதுதான் என் உலகம்" என்பேன். ஒரு சில பாடல்கள் காதில் விழும்போது என்னதான் தலையே போகிற வேலையாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஓடி வந்து டீவீ முன்பாக உட்காருவேன். "அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் ", "உலகம் பிறந்தது எனக்காக ", "பூவே பூச்சூட வா ", "அழகே வா அருகே வா ", "காற்று வாங்கப் போனேன் ", "தரைமேல் பிறக்க வைத்தான்" இந்தப் பாடல்கள் ஒளிபரப்பாகும்போது வீட்டிலோ அல்லது வெளியிலோ யார் என்ன கத்தினாலும் அது என் காதில் விழாது. நான் பாட்டில் லயித்திருப்பேன். (இந்த வரிசையில் இன்னும் சில பாடல்கள் உண்டு ). இப்போ பழையபடி மேட்டருக்கு வருவோம். காலையில் இருந்தே அந்த பாடல் வரி என்னை குழப்பியதுன்னு சொன்னேன்தானே. இவ்வளவுக்கும் எத்தனையோ ஆண்டு காலமாக நான் கேட்கும் ஒரு பாடல் . இது ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்ணுது. அடுத்த வார்த்தை என்னவென்பது தெரிந்தால்தானே நமக்கு வேலையே ஓடும் என்ற குழப்பத்தில் இருந்த நான், சரி ... மெயில் பார்க்கலாம் என்ற நினைப்புடன் கம்ப்யூட்டர் முன்பாக உட்கார்ந்தேன். வழக்கமாக மெயில் பார்த்துவிட்டு மற்ற மேட்டருக்குப் போவேன். அன்று facebook login என்பதை  press பண்ணினேன். என்னோட குழப்பத்துக்கு விடை சொல்றமாதிரி  "தரைமேல் பிறக்க வைத்தான்" என்ற பாட்டின் முழுமையை  சலீம் துரானி என்பவர் பதிவு செய்திருந்தார். அவர் பதிவு செய்திருந்தது  09.10.2015 இரவு 8 மணிக்கு மேல். நான் பார்த்தது 10 ந் தேதி.
பாட்டின் முழுமையும் தெரிந்ததில் அளவற்ற சந்தோஷம் . அது எதனால் என்பது பற்றிய விவரம் , இதை தொடர்ந்து வருகிறது.
உங்க  கிட்டே ஒரு விஷயம் கேட்க ஆசைப் படுகிறேன். கடவுள் உங்க முன்னாலே வந்து நின்னுகிட்டு"இன்றைய special offer ஒன்றை உனக்குத் தர்றேன்.  நீ யார் உடம்பில் வேண்டுமானாலும் புகுந்து கொண்டு அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை  வாழ்ந்து பார்க்கலாம் " என்று சொன்னால் உங்களோட choice என்னவாக இருக்கும் ?
என்னோட choice "யாராவது ஒரு மீனவன் உடம்பில் புகுந்துகொண்டு அலையோடு போராடி வெளியில் வரணும் " என்பதுதான். 
மனிதன் எதையெல்லாமோ கண்டு பிடித்து விட்டான். பஞ்ச பூதங்களை அடக்க மட்டும் அவனால் முடியவில்லை. அது மட்டுந் தெரிந்துவிட்டால் அதன்பிறகு மனிதன்தான் தெய்வம். " பஞ்ச பூதம் " என்னும் சூட்சுமக் கயிறை தன்னுடைய கையில்  வைத்துக் கொண்டு மனிதனிடம் கடவுள் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். AIR, LAND, SKY, WATER, FIRE - என்ற இந்த ஐந்தும் தானே பஞ்ச பூதங்கள். இவற்றை வெல்ல முடியாது என்று புராணக் கதைகள் கூறுகின்றன. வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப் படாமல் தினந்தினம் நீரில் போராடும் வகையில்தானே மீனவர்கள் வாழ்க்கை இருக்கிறது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன் " நாவலைப் படித்திருக்கிறேன். அதில் வரும் பூங்குழலி என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எதைப் பற்றியும் கவலைப் படாமல் நினைத்த நேரத்தில் கடலில் படகை செலுத்தும் முரட்டுத் தனமான பெண் அவள். நானும் அவளைப் போலவே பௌர்ணமி நாளில் கடலில் படகில் சுற்றி வருவேன் ... கற்பனையில் ... கனவில் ... எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு விஷயம் கடல். கடற்கரையில் உட்கார்ந்துகொண்டு கடலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது கட்டுமரத்தைக் கடலில் மிதக்க வைத்து , அதில் தாவி ஏறும் இளைஞர்கள் நொடிப் பொழுதில் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து பிரமித்துப் போவேன். வீட்டில் தண்ணீர்க் குழாய் உடைஞ்சு போயிட்டா அதை ஒரு துணியால் அடைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்குது. ஆர்ப்பரித்து ஆட்டம் போடும் அலைகளை இவர்கள் என்னமாய் சமாளிக்கிறார்கள் என்பது பற்றி ஆச்சரியப் படுவேன்.  அடிக்கடி நான் யோசிக்கும் இன்னொரு விஷயம் : நாம பயணம் போகிற பாதையில் ஏதாவது ஒரு பிரச்னைனா, ஓடி ஒளிய  ஏதாவது ஒரு இடம் கிடைக்கும்.  ஒரு வழி இருக்கும். விபத்து என்றால் கூட அந்த வழியில் போறவங்க,  ஒண்ணு ஆஸ்பத்திரியில் அடிபட்டவங்களை சேர்த்துட்டுப் போவாங்க. இல்லாட்டா தகவலாவது சொல்லிட்டுப் போவாங்க . கடலில் எந்தவொரு விபத்து நடந்தாலும் அது வெளியில் தெரிய வருவதே  கஷ்டமான ஒன்றாச்சே.--- இப்படியெல்லாம் நினைச்சு வருத்தப் படுவேன். BRAVE என்ற வார்த்தைக்கு அர்த்தம் அல்லது உதாரணம் சொல் என்று என்னிடம்  யாராவது கேட்டால், அதற்க்கு "அலையோடு போராடுபவர்கள் " என்றுதான்  உதாரணம் சொல்வேன் .அவலம் நிறைந்த அந்த போராட்டத்தை 
" வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை" என்று 
வார்த்தையில் வெகு அழகாக வர்ணிக்கிறார் கவிஞர் வாலி.
அவலங்களை நறுக்குத் தெறித்தாற்போல ஒன்றிரண்டு வார்த்தைகளால் சொல்ல ஒரு சிலரால்தான் முடியும். 
தமிழில் உள்ள எத்தனையோ சுவைகளில் "அவல சுவை"யும் ஒன்று . ஒரு நாட்டுப் புறப் பாடலில் இது எவ்வளவு அழகாக படம் பிடித்துக் காட்டப் படுகிறது என்பதை பாருங்கள். 
இரண்டு குருவிகள் பேசிக் கொள்வதுபோல அமைந்த பாடல் இது. வெகு நேரமாகியும் வீடு திரும்பாத தனது தாயைப் பற்றி கொஞ்ச நேரத்துக்கு ஒரு தரம் ஒரு குருவி கேட்க , மற்றொரு குருவி பதில் சொல்வது போல பாடல் அமைந்துள்ளது. ஒரு குருவி கேட்கிறது :
 " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
" பறவனார் வலையிலே பட்டிருப்பாள் இந்நேரம் !"
 " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
"குறவனார் கூடையிலே குந்தியிருப்பா இந்நேரம் "
  " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
"எச்சிப்பய புள்ளைஎல்லாம் அன்னத்தைக் கீழே வச்சு 
 நம்ம ஆத்தாளை மேலே வச்சு பிச்சுப் பிச்சு தின்னும் இப்போ !"
இதுதான் பாடல். மொத்தமாக சொல்லும்போது  :
 " அக்கக்கா ... பொற்குருவி .. நம் ஆத்தாளை எங்கக்கா?"
 " பறவனார் வலையிலே பட்டிருப்பாள் இந்நேரம் !
    குறவனார் கூடையிலே குந்தியிருப்பா இந்நேரம் 
    எச்சிப்பய புள்ளைஎல்லாம் அன்னத்தைக் கீழே வச்சு 
   நம்ம ஆத்தாளை மேலே வச்சு பிச்சுப் பிச்சு தின்னும் இப்போ !" - என்று முடியும். ஒரு பீலிங்கை வார்த்தையில் என்னமா படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள் என்பது பற்றி ஆச்சரியப்படுவேன். (இதில் கூட ஏதோ ஒரு தெருவின் பெயரை சொல்லி, அங்கு விலை போயிருப்பாள் இந்நேரம்.... (யார் வீட்டுக்) குழம்பிலேயோ கொதிச்சிருப்பா இந்நேரம் " என்றெல்லாம் வார்த்தைகள் வரும். அது நினைவுக்கு வரவில்லை.)
மீனவர்கள் தாக்கப் படுவது பற்றி செய்தி படிக்கும்போதெல்லாம் மனம் மிகவும் அலைபாயும். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக வேண்டு மானாலும்  இருக்கட்டும் . நமக்கு எதிரியாகக் கூட இருக்கட்டும். உயிர் என்பதும் மரணபயம் என்பதும் எல்லோருக்கும் பொதுதானே. தினமும் அலைகடலில் போராடும் இவர்கள் வாழ்வோடு மற்றவர்கள் போராடுவது ஏன் ?
அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதில் ஒரு மீனவனாகப் பிறக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இந்த ஜென்மத்தில்...... நான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது யாராவது மீன் என்று சொன்னாலே போதும். கையில் எடுத்த கவளம் வாயில் போகாது.அந்த அளவு pure veg. 

No comments:

Post a Comment