Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 02, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 09

                                                 
  அச்சுப்பிச்சு அப்புமணி !
சிறிது நேரத்துக்குப் பின் அங்கே வந்த மெக்கானிக், "ஸார், வண்டி ரெடி. நீங்க இனிமே தைரியமா இந்த வண்டியில் சென்னை வரை போகலாம் " என்றார்.
"தேங்க்ஸ்... இந்தா.... இந்தப் பணத்தை வச்சுக்கோ ... அப்போ... சாமிக் கண்ணு ஸார் ... நாங்க கிளம்பறோம்.  என்ன .. தத்துப் பித்து .. நாங்க எங்க ஊருக்குப் போறோம் " என்றார் அதிகாரி. 
"டாட்டா" என்று அப்புமணி கையசைத்து விடை கொடுக்க வண்டி அங்கு இருந்து கிளம்பி சென்றது. அப்புமணியும் வெள்ளரிக்காயுடன் வீடு வந்து சேர்ந்தான்.
அன்று மாலை ராமு சோமுவுடன் விளையாடக் கிளம்பி சென்றான் அப்பு மணி. அப்போது " டேய் ... சோமு ... நம்ம கிளாஸ் காளிமுத்து வீட்டுக்குப் போயிட்டு வரலாமா ?" என்று கேட்டான் ராமு .
"எதுக்கு? அவங்க எல்லாருந்தான் கல்யாணத்துக்குப் போயிருப்பாங்களே " என்று அப்புமணி கேட்க , "உனக்கு விஷயமே தெரியாதா ? காளிமுத்து வீட்டில் ஒரு வயசான குடுகுடு பாட்டி இருந்தாங்கதானே. அவங்களை இங்கே தெரிஞ்சவொரு சொந்தக்காரங்க வீட்டிலே விட்டுட்டு மொத்தக் குடும்பமும் கல்யாணத்துக்கு கிளம்பிப் போச்சு. முந்தாநேத்து கல்யாணம் முடிஞ்சு போச்சு. ஆனா அந்தப் பாட்டி நேத்து ராத்திரி செத்துப் போச்சு. அதனாலே காளிமுத்து அவங்க அம்மா அப்பா எல்லாரும் இன்னிக்கு காலையிலே வந்துட்டாங்களாம். நாம போய் காளிமுத்தைப் பார்த்துட்டு வரலாம். அவனுக்குப் பாட்டின்னா உசிரு " என்றான் சோமு.
காளிமுத்துவின் வீட்டிற்கு சென்ற மூவரும் காளிமுத்துவை தனியே அழைத்து பேசிக் கொண்டிருந்தனர். "டேய் .. அழாதேடா.. வயசானா எல்லாரும் ஒருநாள் சாகத்தானே வேண்டும்" என்று பெரிய மனிதத் தோரணையில் சொன்னான் ராமு.
அங்கு வந்திருந்த வேறு சிலர், "நல்லவேளை ... கல்யாணம் முடிஞ்ச பிறகு  கிழவி மண்டையைப் போட்டுச்சு. இல்லாட்டா கல்யாண ஏற்பாடு எல்லாமே கெட்டுப் போயிருக்கும்" என்று சொல்ல, "அதுமட்டுமா? நிச்சயம்  பண்ணின கல்யாணம்  ஒருமுறை தடைபட்டுப் போயிட்டால்  அதைத் திரும்ப நடத்தறது எவ்வளவு கஷ்டம்? எத்தனை மனக்கஷ்டம் ? எத்தனை பணம் நஷ்டம் ? இதுக்கெல்லாம் இடம் குடுக்காமே, கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதும் கிழவி போய் சேர்ந்துது " என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்ததையும்  அப்புமணி கவனித்தான் .
அப்போது அங்கு வந்த காளிமுத்துவின் அப்பா, "சின்னப் பிள்ளைகளுக்கு இங்கே என்ன வேலை ? போங்க ... போங்கடா " என்று சொல்ல, மூவரும் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்கள்.
மறுநாள் காலையில் "அப்புமணி..நீ டிபன் சாப்பிட்டுட்டு விளையாட்டிட்டு  இரு .. நான் ஒரு இடத்துக்குப் போயிட்டு வந்துடறேன் " என்றாள் அம்மா  
"நீ எங்கே போறே ? நானும் வர்றேன் "
"நீ அங்கெல்லாம் வரக்கூடாது "
"ஏன் ?"
"அது துக்க வீடு. எல்லாரும் அழுவதைப் பார்த்தால் நீ பயப்படுவே "
"மாட்டேன்.நேத்திக்கு கூட நான் காளிமுத்து வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க பாட்டி செத்துட்டாங்க .. யாரும் அப்படியொன்னும் அழலே .. நான் உன்கூட வருவேன்"
"சரி.. வந்து தொலை"என்று சொல்லி அப்புமணியை அழைத்துக் கொண்டு  பக்கத்து டவுனுக்குக் கிளம்பினாள் அம்மா.
வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவர், " சாவு நடந்தது வெளிநாட்டில். பாடியை இங்கே கொண்டு வர ஏற்பாடு நடந்துட்டு இருக்குது. பாடி வந்ததும் உங்களுக்கு தகவல் சொல்றேன்" என்று போனில் யாருக்கோ தகவல் சொல்லிக் கொண்டிருந்தார். 
"இப்படியாகும்னு நினைக்கவே இல்லையே .. தாலிகயிற்றில் உள்ள ஈரம் கூட இன்னும் காயலையே .. அதற்குள் என் மகளோட வாழ்க்கை ஒரே ஒரு வாரத்தில் வீணாப் போயிட்டே. தாலி கட்டின கையோடு அவசர வேலை.. நான் உடனே போகணும். ஒரு வாரத்தில் திரும்பி வந்து என் பொண்ணைக் கூட்டிட்டுப் போறதா சொல்லிட்டு துபாய்க்கு கிளம்பிப் போனாரே  என் மருமகன்.  பாழாப் போற நெஞ்சு வலி என் மருமகனோட உசிரைக் கொண்டு போயிட்டே" என்று சொல்லி அழுது கொண்டிருந்த பெண்ணின் அருகில் சென்ற அம்மா ,"அத்தை .. நீங்க மனசை தேத்திகிட்டு தைரியமா இருக்கணும் . நீங்களே இப்படி இடிஞ்சு போனால், கமலாவுக்கு யார் ஆறுதல் சொல்வாங்க ?" என்றாள்.
இந்த சமயத்தில் காளிமுத்துவின் வீட்டில் கேட்ட சம்பாஷணைகள் அப்புமணியின் நினைவுக்கு வந்தது .
"நல்லவேளை .. கல்யாணம் முடிஞ்சதும் மாப்பிள்ளை செத்துப் போனார் . முன்னேயே செத்திருந்தால் கல்யாண ஏற்பாடு எல்லாமே வீணாப் போயிருக்குமே" என்று அப்புமணி சத்தமாக சொல்ல,திகைத்துப் போன அம்மா அப்புமணியின் வாயைப் பொத்தி,"ஏதும் பேசக்கூடாது " என்று சைகை காட்டினாள் 
"அடப் பாவி .. என் பொண்ணு வாழ்க்கை சீரழிஞ்சு போச்சேன்னு நான் கவலைப்பட்டுட்டு இருக்கேன்.போனபாவி, கல்யாணத்துக்கு முன்னேயே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதான்னு பரிதவிச்சுப் போய் நிக்கிறேன். நீ ஏன்டா இப்படி சொல்றே ? பாவி ... பாவி .. படுபாவி " என்று அந்தப் பெண் இரைய, ஒட்டு மொத்தக் கூட்டமும் அங்கே வந்து வேடிக்கை பார்த்தது.  
-------------------------------------------------------- தொடரும் -----------------------------------------


No comments:

Post a Comment