Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 25, 2015

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 08

                                               
அச்சுப்பிச்சுஅப்புமணி !
வெள்ளரிக்காய் பறிக்க அப்புமணி போனதும், "இப்போ கேளுங்க சாமி. சின்ன மொதலாளி பத்தி ஏதோ கேட்க வந்தீகளே?" என்று கேட்டான் சாமிக்கண்ணு .
"இந்தப் பையன் மனவளர்ச்சி இல்லாத பையனா ?" என்று கேட்டார் அதிகாரி.
"படிச்ச உங்களுக்கே அந்தப் பையனை சரியா எடை போட்டுப் பார்க்க முடியலைங்கிறப்போ, படிப்பறிவில்லாத நான்    என்னத்தய்யா  சொல்ல   முடியும் ?"
"கரெக்ட் .. பையனோட பேரண்ட்ஸ் ... ஐ மீன் ... பையனோட அப்பா அம்மா என்ன பண்றாங்க ?"
"அது பெரிய கொடுமை சாமி.  இந்தப் புள்ளையோட அப்பா ... பெரிய மொதலாளி நெல்லு வியாபார விஷயமா வெளியூர் போனாக .. அப்போ இந்தப் புள்ளை, மொதலாளி அம்மா வயித்திலே மூணு மாசக் குழந்தையா இருந்தாக.வருஷம் பத்தாகுது ... போனவக திரும்பி வரவே இல்லை .. அவகளப் பத்தி எந்த தகவலும் இல்லே "
"அவருக்கு வேறே எந்த பொண்ணோடாவது பழக்கம் இருந்து, கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே செட்டில் ஆயிட்டாரா ?"
"இல்லே சாமி. தங்கமான மனுஷன் ... குணத்திலே ராமச்சந்திர பிரபு ... எந்தப் பொம்பளையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டாக ..தேடாத இடம் கிடையாது. எங்காவது இருக்காகளா ... இல்லாட்டி இல்லையா என்கிறதே தெரியலே சாமி. நிச்சயம் ஒருநாள் வருவாகன்னு மொதலாளி அம்மா நம்புதாக."
"போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்தீங்களா ?"
"எல்லாம் செஞ்சோம். எல்லா தமிழ் பேப்பர்லயும் விளம்பரம் குடுத்தோம். எந்தத் துப்பும் கிடைக்கலே."
அங்கிருந்த சிறு அறையில், சுவரில் மாட்டியிருந்த ஒரு போட்டோவைக் கொண்டு வந்து  அதிகாரியிடம்  கொடுத்த சாமிக்கண்ணு, "இவகதான் மொதலாளியம்மா ... இந்தப் புள்ளையோட அம்மா" என்றான் 
போட்டோவை உற்றுப் பார்த்த அதிகாரி "இவங்களைப் பார்த்த வயதான வங்களா ... ஐ மீன் ... நடுத்தர வயசு தாண்டினவங்க மாதிரி தெரியுது " என்றார். 
"மொதலாளியம்மாவோட நாப்பத்தி ரெண்டாவது வயசுலே பிறந்தவக இந்தப் புள்ளை. கல்யாணமாகி இருபது  வருசத்துக்கு மேலேயும் குழந்தை பிறக்காமே, ஒவ்வொரு கோவிலா சுத்தி வந்து தவமா தவம் இருந்து இந்தப் புள்ளையைப் பெத்தாக.  ஆனா இன்னிக்கு வரை இந்தப் புள்ளை அப்பன் முகத்தைப் பார்த்ததில்லே "
"அப்பாவைப் பத்தி இந்தப் பையன் கேட்டதில்லையா ?"
"கேட்பாக .. அங்கே போயிருக்காக... இங்கே போயிருக்காக .. வெளிநாடு போயிருக்காகனு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்லுவாக எங்க மொதலாளி அம்மா. அந்த மாதிரி கதைகளைக் கேட்டுக்கேட்டு இந்தப் புள்ளைக்கு வெறுத்துப் போச்சு போலிருக்குது.  இப்போவெல்லாம் இந்தப் புள்ளை அப்பாவைப் பத்திக் கேட்கிறதே இல்லை. அந்த அம்மா தங்கமான மனுஷி . ஊர்லே நல்லது கெட்டது எது நடந்தாலும் முன்னே நின்னு உதவி பண்ணுவாக . அதனாலே ஊர்க்காரங்க எல்லாருக்கும் அவக மேலே ரொம்பவும் மருவாதி உண்டு. அதனாலே அவக யாரும் காணாமே போன பெரிய மொதலாளியைப்  பத்தி இந்தப் புள்ளைகிட்டே எதுவும் பேச மாட்டாங்க  "
"ஒருவேளை தன்னோட புருஷன் காணாமல் போன மன அதிர்ச்சி அந்த அம்மாவைப் பாதிச்சிருக்கலாம் . அந்தப் பாதிப்பால் கூட கருவில் இருந்த இந்தப் பையன் இப்படியொரு ரெண்டுங் கெட்டானாக உருவாகி இருக்கலாம் " என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அதிகாரி, "யோவ் .. 501 .. நீ என்ன, உட்கார்ந்து கதையா கேட்கிறே ? எங்காவது சைக்கிள் கிடைக்குமான்னு பாரு. போ .. போய் மெக்கானிக்கை கூட்டிட்டு வா " என்றார். 
"நீங்க சொல்றதுக்காகத்தான் காத்திட்டு இருந்தேன். இதோ இப்பவே போய் மெக்கானிக்கை கையோடு கூட்டிட்டு வர்றேன் " என்று கிளம்பிப் போனார் 501.
சிறிது நேரம் யோசனையில் இருந்த சாமிக்கண்ணு, " சில சமயம் இந்தப் புள்ளை பேசறதப் பார்த்தா நமக்கே ஆச்சரியமா இருக்கும். அவ்வளவு தெள்ளத் தெளிவா பேசுவாக.  இவகள பைத்தியம்னு சொன்னால், அதைக் கேட்கிறவங்க நம்மள முட்டாள்னு சொல்லுவாங்க ..அந்த அளவுக்கு விவரமா சின்ன மொதலாளி பேசுவாக " என்றான்.
கை கொள்ளாத அளவுக்கு வெள்ளரிக்காயை சுமந்து கொண்டு வந்த அப்புமணியிடம், "என்ன ... தத்துப் பித்து ... இவ்வளவு காய் எதுக்கு ?" என்று கேட்டார் அதிகாரி. 
"நீங்க சின்ன போலீஸ். உங்களுக்கு சின்ன தொப்பை. கொஞ்சம் சாப்பிட்டா போதும்.  501 பெரிய போலீஸ். 501 க்கு பெரிய தொப்பை ... அதான் நிறைய கொண்டு வந்தேன்.  என்ன இது .. ரின் மட்டும் இருக்குது . 501 எங்கே ?"என்று கேட்டான் அப்புமணி .
இதைக் கேட்டு சிரித்த அதிகாரி, "அவர் மெக்கானிக்கைக் கூட்டிட்டு வரப் போயிருக்கிறார். காயைக் கொடு ... நாம சாப்பிடலாம் ... தத்துப் பித்து .. நீ எங்க வீட்டுக்கு வர்றியா? அங்கே உன்னோட விளையாட ஒரு குட்டி தங்கச்சி இருக்கிறா " என்றார்.
"ஆங் .... ஆசை தோசை அப்பளம் வடை ...நான் எங்க அம்மாவை விட்டுட்டு எங்கேயும் வர மாட்டேன். நீ என்ன பிள்ளை பிடிக்கிறவனா ? போலீஸ் டிரெஸ்சில்  வந்திருக்கியா .. எங்க ஊர் தலையாரிகிட்டே உன்னைப் பத்தி சொல்லட்டுமா  " என்று அப்புமணி கேட்டான்.
"இப்போ இவகளப் பத்தி நீங்க என்ன நினைக்கீக ?" என்று சாமிக்கண்ணு கேட்க பதிலேதும் சொல்லாமல் சிரித்தார் அதிகாரி. அப்போது மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார் 501
---------------------------------- தொடரும் ---------------------- 

No comments:

Post a Comment