Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 18, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 07

                                               
 அச்சுப்பிச்சு அப்புமணி !
போலீஸ் ஆபீசரும் மற்ற காவலர் களும் சிரிப்பதைக் கண்ட அப்புமணி "ஐய்யா, நான் உங்களையெல்லாம் சிரிக்க வச்சிட்டேன் " என்றான்.
சிரிப்பதை நிறுத்திய அதிகாரி " இந்தாப்பா ... தத்துப்பித்து ...." என்று சொல்ல , "தத்துப் பித்து இல்லே... அச்சுப்பிச்சு " என்று திருத்தினான் அப்பு மணி .
"ஆங் .... அச்சுப்பிச்சு ... நாங்க வந்த வண்டி ரிப்பேர்... பக்கத்திலே மெக்கானிக் யாராவது இருக்காங்களா ?" என்று கேட்டார்.
"பக்கத்திலே இல்லே.  தூரத்திலே ஒரு மெக்கானிக் ஷாப் இருக்குது " என்றான் .
"அடடா .. அவ்வளவு தூரம் வண்டியை எப்படிக் கொண்டு போய்ச் சேர்க்கிறது... இந்த ரூட்டில் எந்தவொரு வண்டியையும் காணோமே "
"எப்படிப் போறதுன்னு சொல்லிட்டு சும்மா நின்னா எப்பிடி ? நீங்க எல்லாரும் சேர்ந்து இதைத் தூக்கிட்டுப் போங்க "
"தூக்கிட்டுப் போறதா ?"
"இந்தக் காரு இவ்வளவுதூரம் உங்களை எல்லாம் உக்கார வச்சு சுகமா தூக்கிட்டு வந்துச்சுதானே ? அதுக்குக் கால் வலி வந்து அது நின்னுட்டுது. இப்ப அதை நீங்க கொஞ்ச தூரம் தூக்கிட்டுப் போனா கொறஞ்சா போயிடுவீங்க. நான் ஒரு பக்கம் தூக்குறேன். நீங்களும் சேர்ந்து தூக்குங்கோ " என்று அப்புமணி சொல்ல, "டேய் .. உதை வாங்கப் போறே " என்று 501 மிரட்ட, "கழுதைதான் உதைக்கும் " என்றான் அப்புமணி.
"இந்தாப்பா ... 501...சும்மாயிரு..  கிராமத்துப் பையன். சூதுவாது இல்லாமே வெகுளித் தனமா பேசறான். அதை ரசிக்கிறதை விட்டுட்டு அவன்கிட்டே உன் வீரத்தைக் காட்டறே" என்று காவலரை அடக்கி விட்டு, "தம்பி இங்கே குடிக்க தண்ணி கிடைக்குமா  ?" என்று கேட்டார் அதிகாரி.
"எங்க தோட்டத்திலே பெரிய கிணறு இருக்குது. தண்ணி குடிக்கலாம். இறங்கிக் குளிக்கலாம் ."
"முதலில் எனக்குக் குடிக்கத் தண்ணி வேணும் "
"வாங்க. அதோ அதுதான் எங்க தோட்டம்." என்று காட்டினான் அப்புமணி.
"அடேயப்பா ... எவ்வளவு  பெரிய தோட்டம் " அன்று அதிகாரி சொல்ல, அவர்களைத் தோட்டத்துக்குள் அழைத்துப் போனான் அப்புமணி.
இவர்களைக் கண்டதும் சாமிக் கண்ணு ஓடி வந்தான் .
"வாங்க சின்ன மொதலாளி ... போலீசோட வாரீகளே .... என்ன விஷயம் ?" என்று பரபரப்புடன் கேட்டான்.
"ஒண்ணுமில்லேப்பா .. குடிக்கத் தண்ணி கேட்டேன். பையன் இங்கே கூட்டிட்டு வந்தான் " என்று அதிகாரி சொன்னதும் .. நிதானமடைந்த சாமிக்கண்ணு  "வாங்கையா ... இதோ கயித்துக் கட்டில் இருக்குது . நீங்க உக்காருங்க. ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷத்தில் நான் போய் இளநீ வெட்டி எடுத்துட்டு வர்றேன்.  வாங்க ... வந்து உக்காருங்க " என்று உபசரித்தான் .
"அதெல்லாம் வேண்டாம்ப்பா ... தண்ணி மட்டும் போதும்."
"இவ்வளவு தொலைவு வந்துட்டு வெறும் தண்ணி மட்டுமா குடிச்சிட்டுப் போவீங்க" என்று சாமிக் கண்ணு சொல்லும்போது ," சாமி தாத்தா .. அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க .. நீங்க போய் இளநீ .. பழம் .. இன்னும் என்னென்ன இருக்கோ அதையெல்லாம் சாப்பிட எடுத்துட்டு வாங்க " என்றான்.
அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்த சாமிக்கண்ணு வேறொரு வேலையாளைக் கூப்பிட்டு , இளநீர் .. பழங்கள் எல்லாம் கொண்டு வர சொன்னான் .
"உன் பேரு என்னப்பா ?" என்று அதிகாரி கேட்க , "சாமிக்கண்ணு " என்று பணிவாக பதில் சொன்னான்  சாமிக்கண்ணு 
"இந்தப் பையன் யாருப்பா ?"
"ஏஞ்சாமி ... எதாச்சும் தப்பாப் பேசிட்டாகளா ? இல்லே எதாச்சும் தப்புத் தண்டா பண்ணிட்டாகளா ?" என்று பதட்டமாக கேட்டான் சாமிக்கண்ணு . 
"அதெல்லாம் இல்லே. இவன் பேச்சே ஒரு தினுசா இருக்கே. அதான் கேட்டேன்."
"சாமி.. இவகளப் பத்தி என்ன நினைக்கீக ?"
"இவனை முட்டாள்னும் நினைக்க முடியலே ... புத்திசாலின்னும் நினைக்க முடியலே  "
"அதான் ... அதான் சாமி ... இவகளோட பெரிய கொறை .."
"ஏய் ... சாமித் தாத்தா ... என்னைப் பத்தி இவங்ககிட்டே வத்தி வைக்கிறியா?" என்று அப்புமணி கேட்க,"அதெல்லாம்  இல்லே முதலாளி  .. நம்ம தோட்டத்திலே கிணத்தங்கரைப் பக்கம் நிறைய வெள்ளரிக்காய் காய்ச்சிருக்கு .. உங்களுக்கு வெள்ளரிக்காய் ரொம்பப் பிடிக்கும்தானே  ?" என்று சாமிக்கண்ணு கேட்க ,"ஆஹா ,,, வெள்ளரிக்காயா  ? இப்பவே போய் மேஞ்சிட்டு வர்றேன் " என்றபடி அங்கிருந்து ஓடினான் அப்புமணி.
------------------------------------------------------ தொடரும் -----------

No comments:

Post a Comment