Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 11, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 06

                                                   
      அச்சுப்பிச்சு அப்புமணி !
அன்று ஞாயிற்றுக் கிழமை . காலையிலேயே படுக்கையிலிருந்து எழும்பி விட்டான் அப்புமணி. 
"ஸ்கூல் போகிற நாளில் எட்டுமணி வரை இழுத்துப் போர்த்திட்டு தூங்கு. லீவு நாளில் சீக்கிரமே எழும்பிடு. இன்னிக்கு ஸார் எங்கே போறதா ப்ளான் போட்டிருக்கிறார் " என்று அம்மா கேட்க, " அம்மா. இன்னிக்கு நான் நம்ம தோட்டத்துக்குப் போகப் போறேன். அங்கே போய் விளையாடப் போறேன்  " என்றான்.
"அய்யய்யோ தனியா அவ்வளவு தூரம் போறதா ? வீட்டிலேயே விளையாடேன் கண்ணு "
"தோட்டத்துக்குப் போய் ரொம்ப நாளாச்சு. எனக்கு ஆசையா இருக்கும்மா " 
"பார்த்துப் பத்திரமா போயிட்டு வா. ஊர் உலக நிலவரம் ரொம்பவும் மோசமா இருக்குது . எங்கே பார்த்தாலும் வெட்டு குத்து, கடத்தல் கலவரம், குண்டு வெடிப்புன்னு... அப்பப்பா ... பேப்பர் படிக்கவே பயமா இருக்குது "
"அதான் பேப்பர் படிக்கக் கூடாதுங்கிறது. நான் படிக்கிறேனா பார்த்தியா ? ஏன் படிக்கணும். தேவையில்லாமே பயப்படணும் ?"
"அசடே... உங்கிட்டே வந்து என் பயத்தை சொல்றேனே . நான் ஒரு மண்டு . நீ பாடப் புத்தகத்தையே படிக்கிறதில்லே அப்புறம் எங்கே பேப்பர் படிக்கிறது ? சரி .. சரி .. சாப்பிட்டு விட்டு பத்திரமா போயிட்டு வா. மத்தியானம்  சாப்பிட கையில் ஏதாவது வச்சுக்கோ. உனக்கு என்ன பண்ணித் தரணும்னு சொல்லு "
"எதுவும் வேண்டாம். நான் அங்கே போய் இளநீர் குடிப்பேன். கொய்யாக்காய் சாப்பிடுவேன். அது போதும் "
"போகிற வழியில்தானே நம்ம வேலு வீடு இருக்குது. அவனை ஒரு நடை வந்து போக சொன்னேன்னு சொல்லு "
"அவனுக்குத் தான் ரெண்டு காலும் இருக்குதே. பிறகு ஏன் ஒரு நடை வர சொல்லணும்?"
"நீ சொல்லுடா ... அவனுக்குப் புரியும். டவுனுக்குப் போய் அவனை ரின் இல்லாட்டா 501 வாங்கிட்டு வர சொல்லணும் "
சிறிது நேரத்தில் தோட்டத்துக்குக் கிளம்பிப் போனான் அப்புமணி . போகிற வழியில் தோட்டத்துக்கு அருகில் ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. அருகில் ஒரு போலீஸ் அதிகாரியும் இரண்டு கான்ஸ்டபிளும் நின்று கொண்டிருந்தார்கள்.
"ஏன்யா 501. கிளம்பும்போதே உனக்குப் படிச்சு படிச்சு சொன்னேன். வண்டி கண்டிஷனை செக் பண்ணிக்கோன்னு. இப்போ நடுவழியில் வண்டியை நிறுத்திட்டு என் நேரத்தை வேஸ்ட் பண்றே"
"செக் பண்ணினேன் ஸார் . ரோடு பள்ளமும் மேடுமா ரொம்ப மோசமா இருக்குது. இது மாட்டு வண்டி போற பாதை ஸார் .. நம்ம வண்டியாலே தாக்குப் பிடிக்க முடியலே "
"உன் ட்ரைவிங்கை விடவா மோசம் ? எதுக்கெடுத்தாலும் 501 ரூபாய் பந்தயம் கட்டுவியே. இப்போ கட்டு உன் பந்தயத்தை. நீ கட்டுற பந்தயத்தை வச்சு உன் பேரே 501ன்னு ஆகிப் போச்சு. போற போக்கைப் பார்த்தால் உன் பேரே மறந்து போயிடும் போலிருக்கு. இங்கே தோட்டம் துறவு அதிகம். நாட்டில் தீவிரவாதிங்க நடமாட்டம் அதிகமாகுது. இந்த மாதிரி இடங்கள் அவங்களுக்குப் புகலிடமா மாறிடும். அதனாலே போலீஸ் கண்காணிப்பு அதிகமா இருக்கணும்னு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துச்சு. நானே நேரில் வந்து விசிட் கொடுத்தால்தான் இங்கே உள்ள மத்த அதிகாரிங்க அலெர்ட் ஆக இருப்பாங்கனு முக்கியமான மீட்டிங்கை ஒத்தி வச்சிட்டு இங்கே வந்தால், எங்களை நடு ரோட்டில் கொண்டு வந்து நிறுத்திட்டே. தீவிரவாத கலாசாரம் ஓயிற வரை நமக்கு நேரத்துக்கு சோறு தண்ணி கிடையாது. நம்ம கஷ்டம் யாருக்குத் தெரியுது. பேப்பர் டீவீ யில் நம்மள தான் கிழி கிழின்னு கிழிக்கிறாங்க.அந்தக் கொடுமை போதாதுன்னு இப்போ ஜீப் டயர் வேறே பஞ்சர். 501 .. நீ.." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக வரும் அப்புமணியை கவனிக்கிறார்.
"ஏய் ... தம்பி .. இங்கே வா " என்று அழைக்க, அவர் அருகில் வரும் அப்புமணி, "நான் தம்பி இல்லே. எனக்கு அண்ணன் கிடையாது. எங்க வீட்டில் நான் மட்டுந்தான். நான் அச்சுப்பிச்சு அப்புமணி  " என்கிறான்.
"என்னய்யா .. 501. அதென்ன அச்சுப்பிச்சு அப்புமணி? வேடிக்கையா இல்லே ?"
"ஓ .. எங்க அம்மா சொன்ன 501 இதுதானா ? அப்போ ரின் ? டவுனில் கிடைக்கும்னு அம்மா சொன்னாங்க. ஆனா 501 இங்கே இருக்கே." என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அப்புமணி,"நீங்கதான் ரின்னா?" என்று கேட்க, "டேய் .. அவர் பெரிய போலீஸ் அதிகாரி. மரியாதையா பேசு " என்று கான்ஸ்டபில் சொல்ல, "இவருக்கு இத்தினியூண்டு தொப்பை இருக்கு ? இவரா பெரிய அதிகாரி. பெரிய அதிகாரின்னா பெரிய தொப்பை இருக்கணும். நான் எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறேன்.  501 உங்க ஒருத்தருக்குத் தான் பெரிய தொப்பை இருக்குது. நீங்கதான் பெரிய அதிகாரி " என்றான்.
"என்னய்யா 501. பையன் சொன்னதைக் கேட்டியா? உடம்பை குறைக்க என்னிக்காவது முயற்சி பண்ணி இருக்கியா ? வஞ்சனையே இல்லாமே உடம்பை வளர்த்து வச்சிருக்கே. ஓடிப்போய் திருட்டுப் பசங்களைப் பிடிக்கிற மாதிரி உடம்பை ஸ்லிம்மாவா வச்சிருக்கீங்க ? அவனவன் விதி முடிஞ்சு அவனாவே உங்க கையில் வந்து மாட்டினால்தான் உண்டு.  சரி தம்பி .. உன் பேர் என்னவோ சொன்னியே ... ஏதோ தத்துப்பித்துன்னு " என்று சொல்லும்போதே, " என் பேரைக்கூட ஒழுங்கா சொல்லத் தெரியலே. நீங்க இவங்களைத் திட்டறீங்க ... கருமம் .. கருமம் .. " என்று அப்புமணி சொல்ல கான்ஸ்டபில் இருவரும் ரகசியமாக நமட்டு சிரிப்பு சிரிக்க, அதைப் பார்த்த அதிகாரி வாய் விட்டு மனம் விட்டு சிரித்தார்.
--------------------------------------------------- தொடரும் ........................

No comments:

Post a Comment