Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 28, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 04

                                                   
அச்சுப்பிச்சு அப்புமணி !
கோவிலில் ஸ்வாமி தரிசனத்தை முடித்து விட்டு அப்புமணியும் அம்மாவும் வீடு திரும்பினார்கள். சாப்பிட்டு முடித்தபின் கட்டிலில் ஏறிப் படுத்த அப்புமணி, "அம்மா, நீ இங்கே வாயேன் " என்றான்.
"இதோ அடுப்படி வேலையை அஞ்சே அஞ்சு நிமிஷத்தில் முடிச்சிட்டு வந்துடறேன் " என்று சொன்ன அம்மா, சிறிது நேரத்தில் வாசல் கதவை மூடித்  தாள் போட்டு விட்டு எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு அப்புமணி அருகில் வந்து, "இப்போ சொல்லுடா செல்லம். ஏன் கூப்பிட்டே ?" என்று கேட்டாள். 
"அம்மா, நீ இனிமே அழவே கூடாது. நீ அழுதால் எனக்கு இங்கே என்னவோ செய்யுது " என்று நெஞ்சில் கை வைத்துக் காட்டினான். அதைக் கண்டு நெகிழ்ந்து போன அம்மா, "எல்லாப் பிள்ளைகளையும் போல நீ சமர்த்தா இருந்தால், நான் ஏண்டா அழுகிறேன் ?" என்றாள்.
"சமர்த்தாகணும்னா என்னம்மா செய்யணும் ?"
"மத்தவங்க மாதிரி நீயும் இருக்கப் பழகிக்கணும் "
"நான் யாரைப் பார்த்துப் பழகிக்கணும் ?"
"உன் வயசுப் பிள்ளைங்க, உன்னோட கூடப் படிக்கிற பிள்ளைங்க எப்படிப் பேசறாங்க ... எப்படி நடந்துக்கறாங்கனு கவனிச்சுப் பார் .. நீயும் அந்த மாதிரி பேசப் பழக முயற்சி பண்ணு. உன்னோட படிக்கிற பிள்ளைகளில் யாரை எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் ? "
"ராமு , சோமுனு  ரெண்டு பேர் இருக்கிறாங்களே.. ரெட்டைப் பிள்ளைங்க அவங்களைத்தான்  எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும். அவங்க ரொம்ப புத்திசாலிங்கனு எங்க டீச்சரே சொல்லுவாங்க. "
"நீ அவங்களோடு சேர்ந்து பழகு ... அவங்களோட பழக்க வழக்கத்தை நீயும் கத்துக்கோ" என்று அம்மா சொல்ல , அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்ட அப்புமணி, "சரிம்மா" என்று சொல்லிவிட்டு தூங்க ஆரம்பித்து விட்டான். 
மறுநாள் ஸ்கூலில் :::: - " டேய் ... ராமு .. சோமு ... என்னை உங்க கூட சேர்த்துக்கோங்க.  என்னையும் உங்களைப் போல புத்திசாலி ஆக்குங்க   " என்று அப்புமணி கேட்க , "என்னடா இவன் ... இப்படிக் கேட்கிறான்" என்று வியப்புடன் சோமுவைக் கேட்டான் ராமு .
"நீ சும்மா இரு ... இப்போ பாரு வேடிக்கையை " என்ற சோமு,"அடே .. அச்சுப் பிச்சு .. அடுத்த வாரம் நம்ம ஊர்லே சந்தை கூடும். அங்கே புத்தியைக் கூரு  கட்டி விப்பாங்க. அதிலே ரெண்டு கூரு புத்தி வாங்கி உன் மண்டையிலே திணிச்சிடலாம்." என்றான் .
"டேய் .. வாங்கிறது வாங்குறோம். ரெண்டுன்னு இல்லாமே, நிறைய கூரு வாங்கி என் தலையில் வையுங்கடா .. நான் உடனே புத்திசாலி ஆகணும் " என்று அப்பாவித் தனமாக சொன்னான் அப்புமணி 
"டேய் .. சோமு ... வேண்டாம்டா.. நீ சொல்றதை அவன் நிஜம்னு நம்பறான் .. பாவம்டா ...அவனை கோமாளியாக்காதே " என்றான் ராமு.
"நீ சொல்றதும் சரிதான் .. நம்ம கூட படிக்கிற ஒருத்தனை நாமளே முட்டாள் ஆக்கக் கூடாது ... ஆனா இவன் ஆபத்தான ஆளாச்சேடா . சமய சந்தர்ப்பம் தெரியாமே நம்மளே இவன் வம்பில் மாட்டிடுவானே "
"ச்சே .. அவன் அப்பாவிடா ... வேணும்னு எதுவும் செய்ய மாட்டான். நாம அவனுக்கு ஒரு சான்ஸ் குடுத்துப் பார்ப்போமே" என்று ராமு சொன்னதும் , அதற்கு ஒத்துக் கொண்ட சோமு, "அச்சுப்பிச்சு .. நாங்க உன்னை எங்க கூட சேர்த்துக்குறோம். ஆனால் நாங்க உன்னை ஏதாவது கேட்டால் தான் நீ வாயைத் திறந்து பதில் சொல்லணுமே தவிர, மத்தவங்க கூட நாங்க பேசிட்டு இருக்கிறப்போ முந்திரிக் கொட்டை  மாதிரி ஏதாது உளறி வச்சா ... மவனே ... நீ தொலைஞ்சே " என்றான் .
"சரி .. சரி ... ஸ்கூல் பெல் அடிக்கிற சத்தம் கேட்குது .. ஓடி வாங்கடா " என்று ராமு சொன்னதும் மூவரும் வெகு வேகமாக பள்ளியை நோக்கி ஓட்டமெடுத்தார்கள்.  அப்போது சோமுவின் பேனா அவன் பையிலிருந்து விழுந்ததை அப்புமணி கவனித்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.
சிறிது நேரத்துக்குப் பின் வகுப்பறையில் .... "அய்யய்யோ என் பேனாவைக் காணலே .. யார் எடுத்தது ?" என்று சோமு அலறினான். "நாங்க  யாரும் உன் பக்கத்திலேயே இது வரை வரலியே " என்று அவனது நண்பர்கள் சொன்னார்கள் .
"டேய் .. அச்சுப்ப்பிச்சு ... என் பேனாவை நீ பார்த்தியா ?" என்று சோமு கேட்க, "ஸ்கூல் பெல் அடிக்கிற சத்தம் கேட்டு நாம மூணு பேரும் ஓடி வந்தோம்தானே. அப்போ உன்னோட பேனா தெருவிலே விழுந்துடுச்சுது " என்று அப்புமணி சொல்ல, "விழுந்ததைப் பார்த்தே தானே.. எடுத்துட்டு வர்றதுதானே " என்று கோபமாகக் கேட்டான் சோமு.
"மத்தவங்க பொருளை எடுக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க "
"விழுந்ததைப் பார்த்ததும் எங்கிட்டே சொல்றதுதானே ?" 
"நீ தானே சொன்னே, 'நான் ஏதாது கேட்டால்தான் வாயைத் திறந்து பதில் சொல்லணும்னு" என்று அப்புமணி சொல்ல, "டேய் ... ராமு, இவனை நம்ம கூட கூட்டு சேர்த்துக்கிறதும் நம்ம கழுத்தை நாமே அறுத்துக்கிறதும் ஒண்ணுதான். இவன் நம்ம கூட்டணிக்கு வேண்டாம்டா " என்று சோமு சொன்னான் .
"அப்படியெல்லாம் சொல்லாதீங்கடா.. நான் புத்திசாலி ஆகணும்டா .. எங்க அம்மா சிரிக்கணும்டா" என்று அப்புமணி கெஞ்ச, " சரி .. போகட்டும்.. இந்த ஒரே ஒரு தடவை இவனை மன்னிச்சு விட்டுடலாம்டா " என்று ராமு சொன்னான் .
அந்த சமயத்தில் , டீச்சர் உள்ளே வர மாணவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள் .
"எல்லாரும் ஹோம் வொர்க் நோட்டை என் டேபிள் மேலே கொண்டு வந்து வையுங்க " என்று டீச்சர் சொல்ல, மற்ற மாணவர்களுடன் சேர்ந்து அப்புமணியும் அவனது நோட்டைக் கொண்டு போய்  வைத்தான் .
"அடடே .. அச்சுப்பிச்சு நீ ஹோம் வொர்க் கூட செஞ்சிருக்கிறியா ?" என்று டீச்சர் ஆச்சரியமாகக் கேட்க, "இல்லை" என்று பதில் சொன்னான் அப்பு மணி.  
"ஹோம் வொர்க் பண்ணாட்டா ஏன் நோட்டைக் கொண்டு வந்து இங்கே வைக்கிறே ?" 
"ஹோம் வொர்க் எழுதினவங்க மட்டுந்தான் நோட்டை வைக்கணும்னு நீங்க சொல்லலியே  " என்றான் அப்புமணி 
"பிள்ளைகளா ... இந்த ஏரியாவில் நல்ல இரும்புத் தூண் எங்கே இருக்குனு உங்க யாருக்காவது தெரியுமா ?" என்று டீச்சர் கேட்க, " ஏன் டீச்சர் இதைக் கேட்கிறீங்க ?" என்று கோரஸாகக் கேட்டார்கள் மாணவர்கள்.
"இந்த அச்சுப்பிச்சுக்கு டீச்சரா இருக்கிறதை நினைச்சு அந்த தூணில் நான் முட்டிக்கணும்" என்று டீச்சர் சொல்ல  வகுப்பறையிலிருந்த அத்தனை மாணவர்களும் சிரித்தார்கள். அது ஏன் என்பது தெரியாத அப்புமணி திருதிருவென விழிக்க மற்றவர்களின் சிரிப்பு இன்னும் அதிகமானது.
-------------------------------------------------------- தொடரும் ............. 

No comments:

Post a Comment