Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, September 04, 2015

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 05

                                                 
அச்சுப்பிச்சு அப்புமணி !
மற்றவர்கள் என்ன கேலி பண்ணினாலும் சரி; அதை அப்படியே அம்மாவிடம் சொல்வது அப்புமணியின் வழக்கம். இரும்புத் தூணில் முட்டிக்கொள்கிறேன் என்று டீச்சர் சொல்ல அதைக் கேட்டு வகுப்பில் இருந்த பிள்ளைகள் கைதட்டி சிரித்ததை அம்மாவிடம் சொன்னான் அப்புமணி. அதைக் கேட்டு மௌனமாக அழுதாள் அம்மா.
"ஏம்மா அழறீங்க ?" என்று பதறிப் போய்க் கேட்டான் அப்புமணி. 
"நான் அழுதால் உனக்கென்னடா? உன்னைப் பார்த்துதான் நாலுபேர் கை தட்டி சிரிக்கிறாங்களே ! அது போதாதா?" என்று கேட்டாள் அம்மா.
"இனிமே பதிலுக்கு நானும் அவங்களைப் பார்த்து சிரிக்கிறேன்" என்று ரொம்ப  சந்தோசமாக அப்புமணி சொல்ல, அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டாள் அம்மா. அதைப் பார்த்ததும் அப்புமணியின் முகம் வாடிப் போனது.
அவன் முகவாட்டத்தைப் போக்க நினைத்த அம்மா "ஏண்டா அப்புமணி, ராமுவோட மாமா குழந்தைக்கு பிறந்த நாள். அவங்களோடு சேர்ந்து அவங்க மாமா வீட்டுக்கு நீயும் போகப் போறதா சொன்னியே. கிளம்பாமே என்னென்னவோ கதை பேசிட்டு நிக்கிறே  ?" என்று கேட்டாள் .
"இதோ கிளம்பிட்டேன் " என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் அப்புமணி.
"அங்கே போய் அசடு மாதிரி எதையாது உளறிக்கிட்டு இருக்காமே ரொம்ப சமர்த்தா இருக்கணும் . ராமு சோமு எப்படிப் பேசறாங்க, பழகுறாங்கன்னு பாரு. அந்த வீட்டில் அவங்களா ஏதாவது குடுத்தால் அதை சாப்பிடு .  நீயாக எதையும் கேட்டு வாங்கக் கூடாது " என்று அம்மா சொல்ல "சரி" என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அப்புமணி.
ராமுவின் மாமா வீடு ....
"டேய் குட்டிப் பையா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. நூறு வருஷம் நல்லா வாழணும் " என்று ராமு சொல்ல , "அடடே ... இந்த ராமுவிற்கு இருக்கிற சமர்த்தைப் பாருங்களேன் ... பெரிய மனுஷன் போல ஆசீர்வாதம் பண்றான்" என்று அருகில் நின்றிருந்தவர்களிடம் ராமுவின் மாமா சொல்ல மற்றவர்கள் அதைக் கேட்டு சந்தோசப் பட்டார்கள்.
"ஆஹா அப்புமணி வந்திருக்கிறான் ... உங்க அம்மா வரலியா தம்பி ?" என்று ராமுவின் மாமா கேட்க, "ராமு  சோமு   என்னை மட்டுந்தான் கூப்பிட்டாங்க. எங்க அம்மாவை வர சொல்லலே " என்றான் அப்புமணி.
"அடடே ... அப்படியா ? குழந்தையோட அடுத்து பிறந்தநாளுக்கு உங்க அம்மாவை மறக்காமே கூட்டிட்டு வரணும். நான் இப்பவே சொல்லி வச்சிட்டேன்" என்ற மாமா, "எல்லாரையும் சாப்பிட அழைச்சிட்டுப் போ ராமு. என்னென்ன கேட்கிறாங்களோ அதை எல்லாம் குடு " என்றார்.
"எதையும் கேட்டு வாங்கி சாப்பிட கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க  " என்றான் அப்புமணி 
"ஓஹோஹோ ... அப்படியா ? ராமு சோமு, நீங்க ரெண்டுபேரும் அப்புமணியை நல்லா கவனிக்கணும் ... போங்க ... போய் சாப்பிடுங்க " என்று மாமா சொல்ல , சாப்பிடும் இடத்துக்கு எல்லோரும் சென்றார்கள்.
அப்புமணியின் இலையில் பெரிய லட்டு ஒன்றை வைத்தான் ராமு.
"இந்த லட்டு, நல்லா ... குண்டா.... பாப்பா கன்னம் மாதிரியே இருக்குது " என்று அப்புமணி சொல்ல, "டேய் பாருடா இவனை .. எல்லாரும் பாப்பாவோட கன்னம் லட்டு மாதிரி இருக்குன்னு சொல்வாங்க . இவன் என்னடான்னா லட்டு, பாப்பா கன்னம் மாதிரி இருக்குன்னு சொல்றான் " என்று குரல் கொடுத்தான் சாப்பிடும் இடத்தில் இருந்த வரதன்.
"அப்படியெல்லாம் சொல்றதாலேதான் அவன் அச்சுப்பிச்சு அப்புமணி "   என்று மற்ற நண்பர்கள் சொல்ல, அங்கு ஒரே சிரிப்பு மழைதான் .
"டேய் .. பேனை ஆப் பண்ணுடா .. இலை பறக்குது " என்று பரிமாறிக் கொண்டிருந்த சோமு கத்த , " காத்தை நிறுத்திட்டா பறக்காதா ?" என்று கேட்டான் அப்புமணி.
"ஆமாம்....இதோ பாரு .. உன் சந்தேகத்தை எல்லாம் ஸ்கூலில் வச்சுக் கேளு.  இப்போ நீ இலையில் புகுந்து விளையாடு " என்று ராமு சொல்ல, " புகுந்து விளையாட இது என்ன மைதானமா  ?" என்று அப்புமணி  கேட்க மீண்டும் ஒரே சிரிப்பு சத்தம் தான்.
சிறிது நேரத்துக்குப் பின் தலை தெறிக்க வீட்டுக்கு ஓடி வந்தான் அப்புமணி 
"அம்மா ... தண்ணி... ஐயோ ... சீக்கிரம் தண்ணி கொடேன் " என்று கத்தினான்  
"ஏண்டா இப்படி ஓடி வர்றே ?"
"ஐயோ முதலில் தண்ணியை குடுத்துட்டு பிறகு பேசும்மா "
ஓடிப் போய் டம்ப்ளரில் தண்ணீர் கொண்டு வந்த அம்மா "இந்தா குடி " என்றாள். 
மடமடவென்று தண்ணீரைக் காலி செய்த அப்புமணி "அப்பாடா " என்று பெருமூச்சு விட்டபடி அம்மாவைப் பார்த்தான் .
"ராமுவோட மாமா வீட்டுக்குத் தானே நீ போனே ! இப்போ எங்கிருந்து இப்படி ஓடி வர்றே ?"
"தண்ணி குடிக்கத்தான் ஓடி வந்தேன் "
"அய்யய்யோ ... நீ எதுவும் சாப்பிடாமே பட்டினியா இருக்கிறியா ?" என்று பதறிப் போய்க் கேட்டாள் அம்மா.
அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்ட அப்புமணி " சாப்பாடு இது வரை இருக்குது " என்று தன்னுடைய கழுத்தில் கை வைத்துக் காட்டினான் .
"தண்ணி குடிச்சா நிறைய சாப்பிட முடியாதுன்னு நினைச்சு நீ அங்கே தண்ணி குடிக்கலியா ?"
"இல்லேம்மா... என் இலையில் அவங்க தண்ணி வைக்கலே "
"பரிமாறுற அவசரத்தில் மறந்திருப்பாங்க .. நீ கேட்டு வாங்கறது தானே  ?" 
"அம்மா ... நான் கிளம்பறப்போ நீ என்ன சொன்னே ? எதையும் கேட்டு வாங்கி சாப்பிடக்  கூடாதுன்னு நீதானே சொன்னே ! அதான் தண்ணி குடிக்க வீட்டுக்கு ஒரே ஓட்டமா ஓடி வந்தேன். இப்போ தண்ணிய ஏன் கேட்டு வாங்கலேன்னு  கேட்கிறே ! நீ ரொம்ப போர்ம்மா"என்றான் அப்புமணி.
இதைக் கேட்டதும் தலையில் கைவைத்தபடி சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து விட்டாள் அம்மா .
--------------------------------------------------------------------------------- தொடரும் 

No comments:

Post a Comment