Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 21, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 03

                                                       
அச்சுப்பிச்சு அப்புமணி !
சிறிதுநேரத்துக்குப்பின் கண்களைத் துடைத்து க் கொண்ட அம்மா, பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து அப்புமணியிடம் கொடுத்தாள் .    அவன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு, "அப்பு, நீ போய் குடைராட்டினத்தில் சுத்திட்டு வா. அம்மா   இங்கே இருக்கிறேன் " என்று சொல்ல, பணத்தைக் கையில் வாங்கிக் கொண்ட அப்புமணி  குடை ராட்டினத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா மீண்டும் அழ ஆரம்பித் தாள்.  அதைக் கண்ட பெரியவர், "நீ என்னோட பொண்ணு மாதிரி .. நீ அழுவதை என்னாலே பொறுத்துக்க முடியலே . எல்லாருமே கஷ்டத்துக்கு விடிவு தேடித்தான் கோவிலுக்கு வர்றாங்க. சந்தோசமா இருக்கும்போது சர்க்கஸ் சினிமா டிராமான்னு சுத்துவாங்க. கோவிலுக்கு உள்ளே கூடப் போகாமல் வெளியில் உக்காந்து அழும் அளவுக்கு உனக்கு அப்படி என்னம்மா மனக் கஷ்டம் ?" என்று கனிவான குரலில் பெரியவர் கேட்டார். 
"சாமி , எனக்கு என் பிள்ளையாலே மன நிம்மதியே இல்லே " என்று அம்மா  சொல்ல, " என்னம்மா சொல்றே ? இந்தப் பையனாலே உனக்கு மனக்கஷ்டமா ? இவனுக்கு என்ன குறை ? ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி மாதிரி அழகா இருக்கிறான் " என்றார் பெரியவர்.
"சரியா சொன்னீங்க .. கன்னுக்குட்டிக்கு இருக்கிற அளவுக்குத்தான் இவனுக்கு மூளை இருக்கிறது. கொஞ்ச நேரம் முன்னாடி இவன் கிட்டே 'உன் பேர் என்ன'னு  நீங்க கேட்டதுக்கு "அச்சுப்பிச்சு அப்புமணி"ன்னு சொன்னான். என்னவோ 'அச்சுப்பிச்சு'ங்கிறது இவன் படிச்சு வாங்கின பட்டம் மாதிரி பெருமையா சொன்னான். இவனோட படிக்கிற பிள்ளைங்க இவனைக் கிண்டல் பண்ணி "அச்சுப்பிச்சு"ன்னு பேர் வச்சிருக்கிறாங்க. அதைக் கூட தெரிஞ்சுக்காத அளவுக்கு அசடா இருக்கிறான்"
"ஏம்மா பிறவியிலேயே ஏதாது கோளாறா ?"
"இல்லே சாமி .. நான் செஞ்ச பாவம் .. இவன் ஆள் வளர்ந்திருக்கிற அளவு மூளை  வளரலே . எதை செய்யணும் ... எதை செய்யக்கூடாது .. எதைப் பேசணும் .. எதைப் பேசக் கூடாதுன்னு தெரியாமே எதையாது பேசி மத்தவங்க  கேலிக்கும் சாபத்துக்கும் ஆளாகி நிக்கிறான் சாமி ."
"படிக்கிறானா ?"
"ஆறாவது படிக்கிறான் ?"
"அறிவில்லாத ஒருத்தன் எப்படிம்மா ஆறாங்கிளாஸ் வரை படிச்சிருக்க முடியும்?"
"கிராமத்திலே நாங்க ரொம்ப வசதியான குடும்பம் .. எங்க குடும்பத்தைப் பத்தி என் பிள்ளையைப் பத்தி இங்கே எல்லாருக்குமே தெரியும் . இவன் படிச்சு முடிச்சு எந்த நாட்டையும் ஆளப் போறதில்லேங்கிறது தெரிஞ்சு இவன் திறமையைப் பத்திக் கவலைப் படாமே  ஒவ்வொரு வருஷமும் இவனை  ஒவ்வொரு வகுப்புலே தூக்கிப் போடறாங்க. இப்பல்லாம் சின்ன பிள்ளைங்களுக்கு பாஸ் பெயில் இதெல்லாம் கிடையாதே. அதனாலே இவன் ஆறாம் வகுப்பு வரை வந்து சேர்ந்துட்டான்" என்று சொன்ன அம்மா வீட்டிலிருந்து கோவிலுக்கு வரும் வழியில் நடந்த சம்பவத்தை பெரியவரிடம் சொன்னாள். 
"வீட்டில் தண்ணி நிறைஞ்சு வழியறப்போ குழாயை மூட சொன்னேன். அதை வேத வாக்கா எடுத்துகிட்டு , திறந்திருக்கிற குழாயை எல்லாம் மூட ஆரம்பிச்சிட்டான். இப்படியொரு பிள்ளையை வச்சுகிட்டு  எப்படி நான் அழாமே  இருக்கமுடியும் ?"
"பச்சப்புள்ளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க. சில விஷயங்களை பார்த்து நாம் ரசிக்கணும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கணும். சின்னப் புள்ளைங்களோட விளையாட்டுத் தனமான செய்கைகளைப் பார்த்து நாம மனசு உடைஞ்சு போயிடக் கூடாது . தைரியமா இரும்மா . குழந்தைகளே ஒரு புரியாத புதிர்தான். குழந்தைப் பருவத்தில் முட்டாளாக இருந்தவங்க, கெட்டு அலைஞ்சவங்களில்  எத்தனையோ பேர், பிற்காலத்தில் அறிவாளியா ஞானியா மாறி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது பண்ணி இருக்காங்க. ஆண்டவன் கருணை இருந்தால் அசடு கூட அறிவாளியா மஹா கவியா மாறுவான். ஆடுமாடு மேய்ச்சு கிட்டிருந்த ஒரு அறிவிலி பிற்காலத்தில் மஹா கவி காளி தாஸாக மாறலையா? மனசைத் தேத்திக்கோ. கடவுள் நல்லவங்களை சோதிப்பான் . ஆனால்  கைவிட மாட்டான். நீ சந்தோசப் படற அளவுக்கு அவன் பெரிய ஆளா வருவான் . நீ கடவுளை நம்பும்மா" என்று பெரியவர் சொல்ல, " அந்த நம்பிக்கையில் தான் சாமி நான் இங்கே வந்தேன் " என்று சொல்லும்போதே  அம்மா  அழ ஆரம்பித்து விட்டாள்.
"அம்மா, நான் ராட்டினம் சுத்தி முடிச்சிட்டேன் " என்று கத்தியபடி அங்கே வந்த அப்புமணி, அம்மா அழுவதைப் பார்த்ததும், " ஏய் தாத்தா, எங்க அம்மா  வீட்டிலிருந்து கிளம்பும்போது நல்லா சிரிச்சு பேசிட்டு   வந்தாங்க . நீ வந்து எதையோ பேசி எங்க அம்மாவை அழ வைக்கிறே ? எங்க அம்மா கிட்டே என்ன சொன்னே ?" என்று கோபமாகக் கேட்டான்.
"  ஆடுமாடு மேய்ச்சு கிட்டிருந்த ஒரு அறிவிலி பிற்காலத்தில் மஹா கவி காளி தாஸாக மாறின கதையை உங்க அம்மாவுக்கு சொன்னேன் " என்று பெரியவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே," அவ்வளவுதானே . அம்மா  இதோ பாரு ... நாளைக்கே நான் காளிதாஸ் ஆயிடுவேன் " என்றான் .
"எப்படிடா ?!" என்று அம்மா ஆச்சரியத்துடன் கேட்க , " என்னோட பேரை நான் 'அச்சுப்பிச்சு காளிதாஸ்'ன்னு மாத்திடுவேன் " என்று அப்புமணி சொன்னதைக் கேட்டு அம்மாவும் பெரியவரும் சிரித்தார்கள்.
"தாத்தா .. நான் எங்க அம்மாவை சிரிக்க வச்சிட்டேன் " என்று கைதட்டி சிரித்தான் அப்புமணி.
"நீ கவலைப் படற அளவுக்கு உன் புள்ளை முட்டாளோ பைத்தியமோ இல்லை. அவன் விளையாட்டுப் பாலகன். பொறுமையை கைவிடாதே . நீ கடவுளை நம்பு. நீ மனசு சந்தோசப் படற அளவு, நாலு பேர் மதிக்கிற அளவு  நல்ல நிலைக்கு வருவான். நீ சாமி தரிசனத்தை முடிச்சிட்டு நேரத்தோடு வீடு போய் சேரும்மா " என்று பெரியவர் சொல்ல, அவரை வணங்கிவிட்டு அம்மாவும் அப்புமணியும் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் . 

-------------------------------------------------------- தொடரும் 

No comments:

Post a Comment