Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, August 14, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 02

                                           
  அச்சுப் பிச்சு அப்புமணி !
அன்று மத்தியானம் மூன்று மணி வரை அப்புமணி வீடு வந்து சேரவில்லை. என்ன  காரணம் என்பது தெரியாத அம்மா வீட்டு வாசலில் தவம் கிடந்தாள். அவனோடு சேர்ந்து ஸ்கூல் சென்ற மற்ற குழந்தைகளும் திரும்பி வராததால், ' வழியில் ஏதாவது பிரச்சினை வந்திருக்கலாம்.பிள்ளைங்க வந்து சேர்ந்துடுவாங்க' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். சிறிது நேரங் கழித்து தெருமுனையில் அப்புமணி வருவது தெரிந்து 'பிள்ளையாரப்பா, நல்லபடியா வந்து சேர்ந்துட்டான். உனக்கு நமஸ்காரம் ப்பா' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட அம்மா, வீட்டை விட்டு வெளியில் வந்து , அப்புமணி  தோளிலிருந்த புத்தகப் பையை வாங்கிக் கொண்டு , " ஏன் கண்ணு , இன்னிக்கு ஸ்கூல் அரை நாள் மட்டுந் தானே . பிறகு ஏன் இவ்வளவு லேட் ? " என்றாள். 
"கள்ளு குடிக்கக்கூடாதாம். டவுணில் சாலை மறியல் ...  அதை பார்த்துட்டு நின்னோமா ...அதான் லேட் " என்ற அப்புமணி வீட்டுக்குள் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். அவன் முன்பாக பால் டம்ப்ளரை நீட்டிய அம்மா " என்னடா குழந்தே யோசனை ? " என்றாள்.
"இருபத்தேழு கோடிக்கு எத்தனை சைபர் போடணும். அத்தனை சைபரையும் நோட்டு புத்தகத்தில் ஒரே லைனில் போட முடியுமான்னு யோசனை  பண்ணிட்டு இருக்கேன்" என்று பதில் சொன்னான் அப்புமணி . 
"இப்போ இதைப் பத்தி ஏன் கண்ணு யோசிக்கிறே ?"
"நாங்க போராட்டத்தை வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறப்போ, அங்கே நின்னுட்டுருந்த ஒரு தாத்தா, "அரசாங்கத்துக்கு வருமானம் வேணும்னா திரும்பவும் லாட்டரி சீட்டை நடத்தட்டும். முதல் குலுக்கலில்  முதல் பரிசு இருபத்தேழு கோடின்னு அறிவிப்பு வைக்கட்டும். அப்புறம் பாரு கவரு மெண்ட்டுக்கு பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்"னு சொல்லிட்டு இருந்தார். இருபத்தேழு கோடிக்கு எத்தனை சைபர்னு நான் குழம்பிட்டு இருக்கிறேன்" என்று பதில் சொன்னான் அப்புமணி.
"ஒரு கோடிக்கு எத்தனை சைபர். அதை சொல்லு " என்று அம்மா கேட்க , "அது தெரிஞ்சா இருபத்தேழு கோடிக்கு எத்தனை சைபர்னு நான் கண்டு பிடிச்சிட மாட்டேனா " என்று பரிதாபமாக சொன்னான் அப்புமணி.  
"ஏழு சைபர் "
"ஏழு சைபர் போட்டு பிறகு இருபத்தேழு சைபர் போடணுமா ?"
"உனக்கு எத்தனை சைபர் போடணும்னு தோணுதோ, அத்தனையையும் போடு. இப்போ யூனிபார்மை மாத்திட்டு முகம் அலம்பிட்டு கோவிலுக்குக் கிளம்பு " என்று அம்மா சொன்னாள் .
இருவரும் டவுணில் உள்ள கோவிலுக்கு திருவிழா பார்க்கக் கிளம்பி போனார்கள்.
"அப்புமணி , கடைவீதி முழுக்க ஒரே கூட்டமா இருக்குது . நீ  இப்படி ஒரு ஓரமா நின்னுக்கோ. நான் போய் பூஜை சாமான் வாங்கிட்டு வந்துடறேன் " என்று சொல்லிவிட்டு கடைக்குக் கிளம்பினாள் அம்மா.
தெருவோரமுள்ள தண்ணீர்க் குழாய் ஒன்று அப்புமணியின் கண்களில் பட்டது. அதிலிருந்து தண்ணீர் நூல் போல ஒழுகிக் கொண்டிருந்ததைக் கண்ட அப்புமணி ஓடி சென்று குழாயை மூடினான். சிறிது நேரத்தில் அங்கு வந்த அம்மா, " அப்பு, குழாயடியில் என்ன பண்றே ?  திருவிழான்னு கடைவீதியெல்லாம் ஒரே கூட்டம். உள்ளே நுழைஞ்சு பூஜை சாமானை வாங்கிட்டு வர்றதுக்குள் போதும் போதும்னு ஆயிட்டுது . பரவாயில்லை . சமர்த்தா நிக்கிறியே . இந்த சாக்லேட் என் செல்லத்துக்கு " என்ற அம்மா அவனிடம் அதைக் கொடுத்தாள் .
அப்போது அங்கு வேகமாக ஓடிவந்த ஒரு பெண், "அடடா .. தண்ணி அதுக்குள்ளே நின்னுட்டா  ?" என்று பரபரப்புடன் கேட்டாள். 
"தண்ணி சொட்டுதுன்னு நான் குழாயை இறுக்க மூடினேன் " என்றான்  அப்புமணி. 
"அடப் பாவி ... குழாயை ஏன் மூடினே? . ஒரு நாளைக்குக் கிடைக்கிறதே ரெண்டு குடம் தண்ணிதான். அதைப் பிடிக்கத்தான் நாலுதெரு கடந்து இங்கே ஓடி வர்றேன். இன்னிக்கு எல்லாம் ஜனமும் திருவிழா பார்க்கப் போயிட்டுது. கூட ரெண்டு கூடம் தண்ணி பிடிக்கலாம்னு நினைச்சு, இந்த குடத்தில் தண்ணி நிறையட்டும். அதுக்குள்ளே வீட்டுக்குப்போய் இன்னும் ரெண்டு குடத்தை எடுத்துட்டு வரலாம்னு போனேன். இந்தக் குடத்தை நிறைய விடாமே பண்ணிட்டியேடா பாவி. உன் கையில் பாம்பு கடிக்க " என்று சொல்லி கூச்சல் போட்டாள். 
"ஏம்மா குழந்தையைத் திட்டறே ?" என்று அம்மா கேட்டாள்.
"குழந்தையா இது ? குட்டி சாத்தான். இந்தக் குழாயில் தண்ணி நூல் மாதிரி வழியும். அதையும் இவன் நிறுத்திட்டான். இனிமே தண்ணி வராது. என் நினைப்பில் மண்ணைப் போட்டுட்டான்.. மண்டையில் மூளைன்னு ஒண்ணு இருந்திருந்தா இப்படியொரு வேலையை செஞ்சிருப்பானா பைத்தியம்..இப்படி ஒரு பைத்தியத்தை பிள்ளையா பெற நீ  என்னதான் புண்ணியம் செஞ்சியோ?" என்று திட்டியபடி காலிக் குடத்தை எடுத்துக் கொண்டு போனாள் அந்தப் பெண். 
"குழாயை ஏண்டா மூடினே ?"
"நீங்கதானே சொல்லியிருக்கீங்க, தண்ணி நிரம்பி வழியாமே இருக்க குழாயை மூடணும்னு "
"அப்படின்னா குடம் நிறைஞ்ச பிறகுதானே நீ மூடியிருக்கணும் "
"நீங்க கடையிலிருந்து வந்ததும் நாம இந்த இடத்தை விட்டுப் போயிடு வோம். நாம போயிட்டா யார் மூடுவாங்கனு நினைச்சு நான் முதல்லேயே மூடினேன்" என்று அப்புமணி விளக்கம் சொல்ல,"கடவுளே இப்படியொரு முட்டாள் பிள்ளையை எனக்குக் குடுத்து என்னை ஏன் சோதிக்கிறே  ?" என்று தனக்குள் நொந்து கொண்டாள் .
"என்னம்மா முணுமுணுக்கிறீங்க ?"
"உன்னைப் பிள்ளையா பெற என்ன புண்ணியம் செஞ்சேனோன்னு  சொல்லிக்கிறேன்."
"சொல்லு .. சொல்லு.. நல்லா சொல்லு "
கோவில் அருகில் வந்தார்கள். அம்மாவிற்கு ரொம்பவும் மனவருத்தம், தண்ணீர் பிடிக்க வந்த பெண் அப்புமணியை திட்டியதை நினைத்து . அங்குள்ள ஒரு மரத்தடியில் உட்கார்ந்தாள் அம்மா .
அப்போது அவர்கள் அருகில் ஒரு பெரியவர் வருகிறார்.  
"சன்னிதியில் கூட்டம் "ஜே ஜே"ன்னு அலை மோதுது. நீங்க அதைப் பார்க்கப் போகாமே பூஜை தட்டோட இங்கே உட்கார்ந்திருக்கீங்க .. அம்மா உங்களைப் பார்த்தா ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறாப்லே தோணுது. உடம்புக்கு முடியலியா ... இல்லாட்டா கொண்டு வந்த துட்டு எதையாவது தொலைச்சிட்டீங்களா ?" என்று கனிவுடன் கேட்டார் .
"அதெல்லாம் எதுவுமில்லே "
"பையன் யாரு ? உங்க பிள்ளையா ? பையனோட அப்பா வரலியா?"
"அவர் வரலே. எப்பவும் வெளியூர், வியாபாரம்னு சுத்தறவர் " என்று அம்மா சொன்னாள்.
"உன் பேரென்ன தம்பி?" என்று பெரியவர் கேட்க, "அச்சுப்பிச்சு அப்புமணி" என்று சிறிதும் தயங்காமல் அப்புமணி சொல்ல, தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள் அம்மா.
"ஏம்மா அழறே?" என்று ஆதரவான குரலில் பெரியவர் கேட்க அம்மாவின் அழுகை மேலும் அதிகரித்தது .         

                                                                                                   ------------------- தொடரும் 

No comments:

Post a Comment