திண்ணைப் பேச்சு !!
"என்ன சுந்தரேசா, வழக்கமா நான் வர்றச்சே டீவீ முன்னாடி தவம் கிடப்பே. இன்னிக்கு என்ன தெருத்திண்ணையிலே அஞ்ஞாத வாசம்! என்ன விஷயம் ?".
"வா கோவிந்து .. நேபாளத்தில் நடந்ததை டீவீயில் பார்த்த பிறகு டீவீ பக்கம் போகவே பயமா இருக்குது .. இதெல்லாம் பார்க்கிறச்சே மனசு பதறித் துடிக்குது. லோகத்தில் பகவான் இருக்கிறாரா இல்லையானு சந்தேகம் வந்துடுது "
"ஆமாண்டா .. எத்தனை எத்தனை பச்சைக் குழந்தைங்க நடந்தது என்னனு தெரியாமே கதறித் துடிச்சு உயிரை விட்டிருக்குங்கிறதை கற்பனைப் பண்ணிக்கூட பார்க்க முடியலே. கண்ணிமைக்கும் நேரத்துக்குள்ளே எத்தனை பேர் நடுத்தெருவுக்கு வந்துட்டாங்க. நினைக்கும்போதே குலை நடுங்குது. அவங்களுக்கு நாம ஏதாது செய்யணும்."
"செய்யலாம் கோவிந்து .. அது நிஜமாகவே பாதிக்கப் பட்டவங்களுக்குப் போய்ச்சேரணுமே. நாட்டிலே நடக்கிற ஊழலை ஒருத்தனுக்கொருத்தன் பட்டியல் போட்டுக் காட்டறான் .. இப்படியெல்லாம் கூட ஊழல் பண்ண முடியுமான்னு கொஞ்சபேர் உக்கார்ந்து யோசனை பண்ணிண்டு இருக்கோம்"
"ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ சுந்தரேசா..மனுஷன் சில விஷயங் களில் அறிவு கெட்டத் தனமா நடந்துக்கணும்" என்றார் கோவிந்து
"என்ன சொல்றே ?" என்று வியப்புடன் கேட்டார் சுந்தரேசன்
"ஆமாண்டா .. எந்தவொரு விஷயத்தையும் சிந்திச்சுப் பார்த்து முடிவு எடுக்கணும்னு சொல்வாங்க .. ஆனால் தானம் தர்மம் பண்ற விஷயத்தில் மட்டும் சிந்திச்சே பார்க்கக் கூடாது. குடுக்கிற மனசு உனக்கு இருக்கா ? குடுக்கிற வசதி உனக்கு இருக்கா ? உடனே குடுத்திடு .. ஒரு நிமிஷம் தாமதமானால் கூட " நாம ஏன் குடுக்கணும் ? நம்மள நம்பியா மத்தவங்க இருக்காங்க ? அரசாங்கம்னு ஒண்ணு எதுக்கு இருக்கு ? அது இந்தமாதிரி சமயத்தில் தன்னோட பொறுப்பைக் காட்டட்டும்னு யோசிக்க ஆரம்பிச் சிடுவோம். யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்னா, நாம நீட்டின கையைக்கூட சுருக்கிடுவோம் "
"நீ சொல்றது சரிதான் .. மகாபாரதத்தில் ஒரு சம்பவம் நடந்ததா ஒருத்தர் சொன்னது நினைவு வருது. கர்ணன் கிட்டே யாரோ யாசகம் கேட்கப் போயிருந்தப்போ கர்ணன் தலைக்கு எண்ணை வைக்க, வலது கையில் எண்ணையை ஊத்திண்டு இருந்தானாம். யாசகம் கேட்க வந்தவரைப் பார்த்ததும் இடது கையால் ஒரு பொருளை எடுத்து அவராண்டே குடுத்தானாம் . அப்போ யாரோ இடது கையால் தானம் செய்யலாமானு கேட்க, "நொடிப் பொழுதுக்குள் மாறுகிற குரங்குக் குணம் கொண்ட மனசு, வலது கைக்குத் தானப் பொருளை மாத்தறதுக்குள் மாத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டா குடுக்கிறதை நிறுத்திடுவோம்.அதனாலே குடுக்கணும் என்கிற நினைப்பு தோன்றப்போ குடுத்திடணும்னு சொன்னானாம் "
"அதை நீ பக்கத்தில் இருந்து பார்த்தே?" என்று கோவிந்து கேலியாகக் கேட்க "என்னோட சின்ன வயசில் யாரோ ஒருத்தர் உபன்யாசம் பண்றப்போ இதைக் கேட்டதா எனக்கு ஞாபகம் .. ஒருவேளை நான் சொல்றதில் தப்பு கூட இருக்கலாம்..சொல்லணும்னு தோணுச்சு. அவ்ளோதான்" என்றார் சுந்தரேசன் .
"போனவங்க ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த உறவுகளை தேடியலைகிற உயிரோடு இருக்கிறவங்க,தொலைந்த உறவுக்காக கவலைப்படுவாங்க ளா, இல்லே அடுத்தவேளைப் பாட்டை நினைச்சு வருத்தப்படுவாங்களா ? எதைன்னு செய்ய முடியும் ?"
"கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத விஷயங்களைக் கூட மனுஷன் சாதிச்சுக் காட்டிட்டான் . அடுத்த நொடி என்ன நடக்கும்கிறதை மட்டும் அவனாலே கணிக்க முடியலே. அந்த விஷயத்தில்தான் கடவுள் மனுஷ னோடு கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கிறார்.அதை மட்டும் கண்டுபிடிச்சு அதை எப்படி ஹேண்டில் பண்றதுங்கிறதையும் மனுஷன் கண்டு பிடிச்சி ட்டா , அப்புறம் சாமின்னு ஒண்ணு தேவையே இல்லை."
"எந்த ஆபத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனா பின்விளைவுகளை சரி பண்ண முடியுமே "
"என்ன சொல்றே ?"
"இப்போ உலகத்தில் நல்ல வசதியான பணக்கார நிலையில் எத்தனை நாடுகளில் எத்தனை பேர் இருக்கிறாங்க. அவங்க ஒவ்வொருத்தரும் பாதிக்கப் பட்ட ஒவ்வொரு குடும்பத்தையும் தற்சமயத்துக்கு கை குடுத்து தூக்கி விட்டால் இவங்க எழும்பி நிப்பாங்கதானே ?"
"நிப்பாங்க தான் !" என்று வழிமொழிந்தார் சுந்தரேசன்
"உதவ தயாரா நிறைய பேர் இருப்பாங்க. அந்த உதவியை செய்யக் கூட ஆயிரத்தெட்டு கெடுபிடின்னு ஒவ்வொரு சட்டத்தின் பேரையும் சொல்லி கிளாஸ் எடுக்கிறப்போ உதவ நினைக்கிறவன்கூட நமக்கென்னனு ஒதுங்கிப் போயிடறான் "
"என்ன சொல்றே ?"
"முன்னே ஒருக்க குஜராத்தில் பூகம்பம் வந்தப்போ என்னோட வேலை செஞ்சிட்டு இருந்த ஒருத்தர் அந்த பூகம்பத்தில் அனாதையாகிட்ட ஒரு குழந்தையை எடுத்து வளர்க்க ஆசைப் பட்டார். அதுக்கு சரியான கைடன்ஸ் குடுக்க கூட ஆள் இல்லே. அங்கே போ .. அவரைப் பார் . இவரைப் போய்க் கேளு.. அப்படி இப்படின்னு அலைய விட்டானுக. அப்புறம் என்ன .. எனக்கு தத்துப் பிள்ளையே வேண்டாம்னு இவர் சொல்லிட்டார். சரி நான் கிளம்பறேன். போனோம் வந்தோம்னு இருக்க மாட்டீங்களே . போனா போன இடம் வந்தால் வந்த இடம்னு உங்களுக்குப் பழகிப் போச்சுன்னு வீட்டில் அவ கத்துவா. நம்ம கோபாலன் வீட்டுப் பக்கம் எழுபது லட்சத்தில் ஒரு வீடு விலைக்கு வருதுன்னு கேள்விப் பட்டேன்.விசாரிக்கக் கிளம்பினேன். வீட்டு வாசலில் உன்னை பார்த்ததும் நின்னுட்டேன் . அப்ப நான் வரட்டுமா ?" என்றார் கோவிந்து.
"நம்ம பங்குக்கு நாம ஏதாது செய்யலாமா ?"
"போடா ... நம்ம பாட்டைப் பார்க்கவே நமக்கு நேரமில்லே. ஊர்ப் பஞ்சாயத்து நமக்கு எதுக்கு ?" என்றபடி அங்கிருந்து நகர்ந்தார் கோவிந்து.
No comments:
Post a Comment