Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 26, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 136 )

                                 வெறும் பேச்சு வெள்ளை வேட்டி !
"ஏய், என்னடி யோசனை ? காலேஜுக்குக் கிளம்பலே ? இன்னிக்கு காலேஜ் உண்டுதானே ?"
"உண்டு .. உண்டு.." என்ற விரக்தியான பதில் வந்தது மதுமிதாவிடமிருந்து .
"அடியே ... என்னடி ஆச்சு உனக்கு ! காலையில் ஆறுமணிக்கே நீயும் டென்சனாகி வீட்டிலுள்ள அத்தனை பேருக்கும் பீபீ ஏத்துவே .. இன்னிக்கு படுக்கையை விட்டு எழும்பாமே எதோ யோசனையில் இருக்கிறே ? என்னடி ஆச்சு ? உடம்புக்கு முடியலியா ? இல்லே வேறே ஏதாவது ப்ராப்ளமா ?"
"ஐயோ .. சும்மா தொனதொனக்காமே கொஞ்ச நேரம் பேசாமல் இருங்க மம்மீ " என்று எரிந்து விழுந்தாள் மதுமிதா 
"அப்படியெல்லாம் இருக்க முடியாதுடி என் செல்லம் .. காலேஜுக்கு போறப்ப வாரப்போ பசங்க ஏதாவது கிண்டல் பண்ணினாங்களா ? என்னதான்டி உன்னோட பிரச்சினை ?"
"நாட்டுலே ... உலகத்திலே .. நடக்கிற எதுவுமே சரியில்லே .. ஒவ்வொரு நாளும் டீவீ நியூஸ் பார்க்கிறப்ப, பேப்பர் நியூஸ் படிக்கிறப்ப பீபீ எகிறுது ..இந்த பூமியில் இந்த ஜனங்க மத்தியில்தான் நாம வாழ வேண்டியிருக்குது . இதையெல்லாம் நினைக்கிறப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மம்மீ ... இதுக்கெல்லாம் முடிவே கிடையாதா ?"
 "ஏன் இல்லை ..அடுத்தவங்க பிரச்சினையில் தலையிடாமே, தான் உண்டு தன்னோட வேலை உண்டுன்னு  ஒவ்வொருத்தரும் அவங்கவங்க  வேலையை மட்டும் பார்த்தால் போதும் . உலகம் முழுக்க நடக்கிற கலகத்துக்கு மதம் ஒரு முக்கிய பிரச்சினையா இருக்குது. உலகத்தில் எத்தனையோ மதம் இருக்குது .. எந்த மதமாவது அடுத்தவனை துன்பப் படுத்து .. அவனை அழிச்சு வாழ்னா சொல்லுது . இல்லையே ... எல்லாரும் ஒற்றுமையா அமைதியா வாழணும்னுதான் சொல்லுது ..யார் யாருக்கு எந்த சாமியை பிடிக்குதோ அதைக் கும்பிட்டு தொலையட்டும்னு விட்டுடணும் .. உனக்கு கல்லைப் பிடிக்குதா ? ஓகே .. அதைக் கும்பிடு .. உனக்கு மண்ணைப் பிடிக்குதா ? ஓகே .. அதைக் கட்டி அழு .. உனக்கு மட்டையைப் பிடிக்குதா ? ஓகே .. விடாமே பிடிச்சுக்கோனு  விட்டுடணும்.. அதை விட்டுட்டு "இதுதான் சரி ", " அதுதான் சரி "னு ரெண்டாவது ஆள் மூக்கை நுழைக்கும்போதுதானே பிரச்சினை வருது .. உனக்கு எது பிடிக்குது அதைக் கட்டி அழு .. ஆனால் அது அடுத்தவனுக்கு தொந்தரவு இல்லாமே பார்த்துக்கோனு  சொல்ல இங்கே யாருமே இல்லை .. மக்கள் பிரச்சனை பத்தி யாருக்கு அக்கறை இருக்கு  ? யார் யாருக்கு எதில் ஆதாயம் கிடைக்குதோ அதை கையில் எடுத்துக்கிட்டுதானே  மக்களை முட்டாளாக்கிக்கிட்டு இருக்காங்க .."
"மம்மீ .. எனக்கொரு டௌட் .. தமிழ்நாட்டை இந்தியாவின் "அமைதிப் பூங்கா"னு சொல்வாங்கன்னு தாத்தா அடிக்கடி சொல்வார் .. ஆனால் இங்கே தப்பு தண்டா அதிகம் ஆயிடுச்சே  ..போதாக் குறைக்கு காட்டு மிருகங்கள் நாட்டுக்குள்  வர ஆரம்பிச்சிடுச்சு ... எனக்கு என்ன டௌட்னா இந்தப் பூங்காவோட அமைதியைக் கெடுக்கணும்னு யாரோ திட்டம் போட்டு வேலை செய்றாங்களோ என்கிறதுதான் "
"ஏதோ ஒரு காரணத்தை சொல்லி ஒவ்வொரு கம்பெனியா இழுத்து மூடிட்டு இருக்கிறாங்க .. இல்லாட்டா வேலையில் இருக்கிறவங்களை ஏதோ ஒரு காரணம் சொல்லி வீட்டுக்கு அனுப்பிடறாங்க.. வயிறு பசிக்கிறப்போ  அவனவன் தனக்கு தெரிஞ்ச " தொழிலை " செய்றான் .. நீ சொன்னியே இப்போ , மிருகங்கள் எல்லாம் நாட்டுக்குள் வர ஆரம்பிச்சிடுச்சுன்னு  ... மனுஷனுக்கு இருக்கிற மாதிரி அதுங்களுக்கும் ஆறறிவு இருந்தால் அதுங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து " மனுஷங்க கொஞ்சம் கொஞ்சமா எங்க பகுதியை ஆக்ரமிக்கிறாங்க .. எங்க ஏரியா உள்ளே வர ஆரம்பிச்சுடாங்கனு கொடி பிடிச்சு கோஷம் போடும் "
"ஜோக் சொல்றதா நினைப்பா மம்மீ ?" என்று கடுப்புடன் கேட்டாள் மதுமிதா  
"உண்மை எப்பவுமே கேலிக்கூத்தாகத்தான் தெரியும் "
"என்னதான் முடிவு "
"இதோ பாரு ஒரு முடிவு எடுக்கும்போது அது எல்லாரையும் திருப்தி படுத்தும்னு சொல்ல முடியாது . ஒரு முடிவுனாலே பாதிக்கப் பட்டவங்க இருபது பேர் இருந்தால் லாபம் அடைஞ்சவங்க  அம்பது பேர் இருப்பாங்க..  அதை எல்லாம் சகிச்சுப் போக கத்துக்கணும் "
"நீங்க சொல்றது புரியலே ."
"ரொம்ப வருஷம் முன்னாடி "மிசா"னு ஒரு சட்டம் வந்தது. இந்திரா காந்தி கொண்டு வந்தாங்க. அதனாலே பாதிக்கப் பட்டவங்க நிறைய பேர்னு பத்திரிகைகள் சொல்லுச்சு. ஆனால் அந்த சட்டம் வந்ததால் தான் ஒரு பைசா கூட செலவு பண்ணாமே உங்க பெரியம்மாவால் கவெர்ன்மெண்ட் ஜாபில் உட்கார முடிஞ்சுது. வேலைக்காக உங்க பெரியம்மா எத்தனை ஆபீஸ் ஏறி இறங்கி இருக்காங்க தெரியுமா ? எங்கே போனாலும் கட்சிக்காரங்க சிபாரிசு  இல்லாட்டா வேலை கிடைக்காது . அப்படியில்லாட்டா எனக்கு மொய் எழுது .கையில் காசு வாயில் தோசை என்கிற நிலைமைதான் இருந்துச்சு. அந்த சட்டம் வந்ததால் ஒரு பைசா செலவில்லாமல்  கவெர்ன்மெண்ட் ஜாபில் உட்கார்ந்தவங்க எத்தனையோ ஆயிரம் பேர் .. வேலை கிடைச்சதும் உங்க பெரியம்மா இந்திரா காந்தி படத்தை வீட்டு பூஜை ரூமில் வச்சிருந்தாங்க. காமராஜருக்கு படிக்காத மேதைனு பேர். அவர் படிக்காட்டாலும் மத்தவங்க படிக்கனும்கிற ஆசையில் இலவச கல்வி, பள்ளிகளில் மதிய உணவு என்றெல்லாம் கொண்டு வந்தார். அப்படியொரு திட்டம் வராதிருந்தால் அந்தக் காலத்தில் நாங்க ஸ்கூல் வாசலைக் கூட மிதிச்சிருக்க முடியாது..இன்னிக்கு கல்வியே வியாபாரமா மாறிப் போச்சு . நேருஜி பிறந்தது ராஜ வம்சத்தில்.. இருந்தாலும் பெண்டாட்டி பிள்ளைகளை ஓரம் கட்டிட்டு மக்களுக்காக குரல் கொடுத்தார் . மக்கள் நலனுக்காக இவர் கஷ்டப் பட்டு  ஜெயில் வாசம் பண்ணினார்.. வசதியான குடும்பத்தில் பிறந்த காந்தியும் மக்களுக்காகத் தான் கஷ்டப் பட்டார்  ..."
"அப்படின்னா இப்போ அப்படிப் பட்டவங்க யாருமே இல்லைன்னு சொல்றியா  ?"
"எல்லாருமே மக்களுக்காகதான் பாடுபடறதா சொல்றாங்க .. அது எந்த மக்கள் என்கிறது மக்களுக்குத்தான் வெளிச்சம் " என்று வாசுகி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "ஏண்டீ .. உங்க ரெண்டு பேருக்கும் இன்னிக்கு லீவா  ? காலங்கார்த்தாலே பட்டிமன்றம் நடத்த ஆரம்பிச்சுட்டீங்க .. உங்களுக்கு லீவுன்னா  நாங்களும் கிளம்ப வேண்டாம்னு அர்த்தமா ? என்னோட டிபன் என்னாச்சு  ?" என்ற ராமாமிர்தத்தின் கோபக் குரல் தடை போட்டது.
"எங்களுக்கு லீவுன்னு உங்களுக்கு சொன்னது யாரு ? இதோ அவ காலேஜுக்கு  கிளம்பறா ... நானும் கிளம்பறேன் " என்று சொல்லியபடியே டிபன் தட்டை அவர் முன்பாகக் கொண்டு வந்து வைத்தாள் வாசுகி.
"பரவாயில்லேடி ...நீ காலேஜில் தமிழ் ப்ரொபசர் ... பட்டி மன்ற பேச்சாளர்ங்கிறதை   அப்பப்போ ப்ரூப் பண்றே " என்று ராமாமிர்தம் சொல்ல வெட்கத்தில் நெளிந்தாள் வாசுகி.  

No comments:

Post a Comment