Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 12, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 135 )

                                        கற்பனை ! கவலை !! கனவு !!!
"ரகு .... ரகு கண்ணா .... பாட்டி மாடிக்குப் போனா. நீ போய் அவளை சாப்பிட அழைச்சிட்டு வா " என்று பாகீரதி சொல்ல, "பங்சன்னு வீடே "ஜே ஜே" னு  இருக்கு. பாட்டி மட்டும் மாடியிலே தனியா என்ன பண்றா ?" என்று உரிமையோடு கடிந்து கொண்டான் ரகு.
"அதை உன் பாட்டி கிட்டேயே கேளுடா கண்ணா. எதிலேயும் ஒட்ட மாட்டேங்கிறா. எப்பவும் ஏதோவொரு கோட்டையைப் பிடிக்கிற மாதிரி யான ஒரு  சிந்தனை. அவ மனசிலே என்ன ஓடுதுங்கிறதை  மனம் விட்டு பேசினால்தானே எங்களுக்குப் புரியும்.எப்பவும் தனியா போய் உட்கார்ந்து  க்கிறா. விரும்பி எதையும் சாப்பிடறதில்லே. அவ கேட்கிறதை செய்ய  நான் ரெடி. நான் அவளோட பொண்ணுதானே. எங்கிட்டே என்ன பார்மாலிட்டி வேண்டிக் கிடக்குது . இதை உன் பாட்டிகிட்டே கேளு. உன்கிட்டேயாவது மனம் விட்டுப் பேசறாளானு பாரு. உங்க தாத்தா இருந்தவரை கிராமத்து வீட்டில் தனியா இருந்தா. ரெண்டு வருஷம் முன்னாடி அவர் போய் சேர்ந்துட்டார். அப்பா  இறந்ததும் இவ தனியா இருக்க வேண்டாம்னு என்னோட வந்து இருக்க சொன்னேன். வரவே மாட்டேனுட்டு உங்க மாமா வீட்டுக்குப் போனா. பொண்ணோட வீட்டில் இருந்தால் கௌரவ கொறைச்சலாம். இதைக் கண்டுபிடிச்சு சொன்ன புண்ணியவாளன் யாருன்னு தெரியலே.இப்போக் கூட உங்க அப்பாவோட அறுபதாவது பிறந்த நாள் ஆயுசு ஹோமம்னுதான் இங்கே வந்திருக்கிறா. என்னைப் பார்க்க வரலே  " என்றாள் பாகீரதி குறும்பு சிரிப்புடன்.
"சீத்தாம்மா" என்று குரல் கொடுத்தபடியே மாடி அறையில் பாட்டியைத் தேடிப் பார்த்த ரகு, " சீத்தாம்மா எங்கேதான் இருக்கிறே ?" என்று கேட்டபடி மொட்டை மாடிக்கு வந்தான்.
ஈசிசேரில் சாய்ந்தபடி  வானத்து நிலவைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சீத்தா.
"என்ன சீத்தாம்மா ! ஆட்டம் பாட்டம்னு வீடே கல கலன்னு இருக்கு. அதை எஞ்சாய் பண்ணாமே இங்கே என்ன பண்றே? சித்திரா பௌர்ணமி. அப்பாவோட அறுபதாவது பிறந்த நாள் இன்னிக்கு.  இதை உங்க எல்லா ரோடும் சேர்ந்து எஞ்சாய் பண்ணனும்னு இந்த நாளைக் கணக்குப்பண்ணி நான் நாடு விட்டு நாடு பறந்து வந்திருக்கிறேன். வீடே கல்யாணக் களை கட்டி இருக்கு. எல்லாரோட சந்தோசத்தை நீ ஷேர் பண்ணிக்காமே இங்கே என்ன பண்றே? சொல்லு சீத்தாம்மா " என்றான் ரகு அவள் தோளில் முகம் சாய்த்தபடி.
'உங்க தாத்தா மாதிரியே நீயும் என்னை வாய் நிறைய "சீத்தாம்மா சீத்தாம்மா " ன்னு கூப்பிடறே. " பாட்டி "ன்னு கூப்பிடறதில்லே" என்றாள் சீத்தா ரகுவின் கன்னத்தை வருடியபடி .
"அதிலே உனக்கொரு வருத்தமும் கிடையாதுதானே ?"
"வருத்தப்பட என்னடா குழந்தே இருக்குது ... நெஞ்சு நிறைஞ்ச சந்தோசம் தான் இருக்குது  " 
" சீத்தாம்மா உன்னோட வயசு என்ன ? " 
" என்னோட வயசா ? பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பது ஆரம்பமாகப் போகுது. உன் வயசு என்ன ? "
" எனக்கா ? அறுபத்திரெண்டு முடியப் போகுது "
" படவா! வயசை  தலை மாத்தி சொல்றியா ? இப்போ வயசுக் கணக்கு என்னத்துக்கு?  என் வயசு தெரியாதா உனக்கு ?"
"உன் வாயாலே நீ சொல்லி அதை நான் தெரிஞ்சுக்க ஆசை. உனக்கு இப்போ வயசு எண்பத்து மூணு. அது எனக்கு நல்லாவே தெரியும். அதில் ஒரு மூணு வயசை தள்ளிடுவோம். ஏன்னா, அந்த மூணு வருஷம் எந்த விவரமும் தெரியாத குழந்தைப் பருவம்னு வச்சுக்குவோம். பாக்கி எண்பது. எண்பது வருஷமா நீ பார்த்துட்டு வர்ற நிலவுதானே அது. அதை என்னவோ இன்னிக்குதான் புதுசா பார்க்கிறாப்லே பார்த்துட்டு இருந்தே . நிலாவில் தாத்தா முகம் தெரிஞ்சுதா ?" என்று குறும்பு சிரிப்புடன் கேட்டான் ரகு .
" போடா .. அசடு ... எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத விஷயங்கள்னு சிலது இருக்குது !"
"என்னனு சொல்லு சீத்தாம்மா "
"நிலவு .. கடல் அலை .. கொட்டுற அருவி ... சின்னஞ் சிறு குழந்தையின் பொக்கைவாய் சிரிப்பு ... இதையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அப்பத்தான் புதுசா பார்க்கிறாப்லே ஒரு சந்தோசமும் உற்சாகமும் நம்ம கிட்டே தொத்திக்கும். அட.. நேத்துப் பார்த்த நிலவுதானேனு நினைச்சு அதை பார்க்காமே இருக்கிறவங்க யாரும் கிடையாதே.. இதெல்லாம் மனசுக்குள்ளே ... மனதார ரசிக்கிற அலாதி சுகம் "
"சீத்தாம்மா .. நீயொரு தமிழ் பண்டிட்டுங்கிறதை அப்பப்போ ப்ரூப் பண்ணிடறே  ..அந்த நிலா உன்கிட்டே என்ன சொல்லுச்சு ?"
"எத்தனையோ சொல்லுச்சு .. போன இதே சித்திரா பௌர்ணமி அன்னிக்கு நான் உங்க பெரிய மாமா  வீட்டில் இருந்ததை சொல்லிச்சு"
"போன   சித்திரா பௌர்ணமி அன்னிக்கு எங்க மாமா வீட்டில் இருந்தே . ஓகே . அப்பவும் இந்த நிலவைப் பார்த்துட்டு இருந்திருப்பே . அப்போ இந்த நிலா உன்கிட்டே என்ன சொல்லிச்சு ? எதை ஞாபகப் படுத்துச்சு?"
"அப்போ .. அன்னிக்கு ... நான் உங்க தாத்தாவைப் பத்தி நினைச்சுட்டு இருந்தேன். ஏன்னா .. அதுக்கு முந்தின வருஷ சித்திரா பௌர்ணமிக்கு நானும் அவரும் வண்டி கட்டிட்டு மதுரை  மீனாக்ஷி அம்மனைப் பார்க்கப் போனோம். அதை நினைச்சுட்டு இருந்தேன் ... கோவிலுக்குப் போகும் போது .. கும்பிடும்போது ... உங்க தாத்தாவுக்கு அதுதான் கடைசி சித்திரா பௌர்ணமினு நான் நினைச்சு கூடப் பார்க்கலே.. அதை நினைச்சு போன பௌர்ணமியில் சங்கடப்பட்டுட்டு இருந்தேன் " என்றாள் சீத்தா குரல் நெகிழ .
"ரிலாக்ஸ் ...  சீத்தாம்மா .. ரிலாக்ஸ் ... உன்னோட சின்ன வயசில் நீ எப்படி இருந்தே ? என்னென்ன நினைச்சேனு சொல்லேன் "
"அது எதுக்கு இப்போ ? நான் என்னென்னவோ நினைச்சிருப்பேன் "
"சும்மா டைம் பாஸ் பண்ணத்தான் ... நான் இப்போ வெளிநாட்டில் போய் படிக்கிறதும் மனசு சம்பந்தப்பட்ட படிப்புதானே. அதுக்கு உன்னோட எக்ஸ்பீரியன்ஸ் ஹெல்ப் பண்ணும்...உன் அஞ்சு வயசில் உன்னோட  ஆக்டிவிடீஸ் என்ன  ?"
"அந்தக் காலத்தில் ... எனக்கு அஞ்சு வயசா இருக்கிறப்போ ...ஆங்க் .. அப்போ நாங்க ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தோம் .. பிசினெஸ்னு அப்பா ஊர் ஊரா போவார்.  மாசத்தில் ஒரு தடவை இல்லாட்டா ரெண்டு தடவை தான்  வீட்டுக்கு வருவார். அப்பா எப்போ வருவார்னு நான் அம்மாகிட்டே கேட்டுட்டு இருப்பேன் .. இப்போ அப்போன்னு அம்மா சொல்லுவா .  அதை நினைச்சு சந்தோசப்படுவேன். அப்பா வந்துட்டுப் போன பிறகு அவர் என்னோட விளையாடினதை வெளியே அழைச்சிட்டுப் போனதை நினைச்சுப் பார்த்துட்டு இருப்பேன்.." என்று சொல்லிவிட்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் சீத்தா.
"சரி ... இப்போ அஞ்சு வயசை மறந்துட்டு பதினைஞ்சுக்கு வா .. அப்போ உன்னோட பீலிங்க்ஸ் என்ன ?"
"அது ஸ்கூல் படிப்பு முடியிற டைம் .. இன்னும் ஒரு வருஷத்தில் இந்தப் படிப்பு முடிஞ்சுடும் .. அப்புறம் இந்த ஸ்கூல் ... இங்கே உள்ள தோழிகள் எல்லாரையும் பிரிஞ்சிடுவோமே  அப்படிங்கிற கவலைதான் எனக்கு இருந்துச்சு .. யாரைப் பார்த்தாலும் "இவளை நாம இன்னும் ஒரு வருஷத்தில் மிஸ் பண்ணிடுவோம்"னு   மனசுக்குள் கௌலி ஜோசியம் சொல்லிட்டே இருக்கும்.. ஆயிரம் சொல்லு ... சந்தோசமான பருவம் படிக்கிற பருவம்தான் "
" போ .. சீத்தாம்மா ... அப்போ கூட நீ சந்தோசமா இல்லையே ... இப்போ இருபத்தஞ்சுக்கு வா  .. அப்போ எதை நினைச்சு கவலைப் பட்டே ?"
"போடா குழந்தே.... அந்த வயசில் கவலைக்கா பஞ்சம் ? பிறந்த வளர்ந்த வீட்டை மறந்து பெத்தவங்களை மறந்து  முன்பின் தெரியாத யாரோ ஒரு  மூணாம் மனுஷன் கையால் தாலி கட்டிட்டு நமக்கு நாமே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துட்டு  நமக்குன்னு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமே மத்தவங்களுக்காகவே வாழ வேண்டிய கட்டாயம். கல்யாணத்துக்கு முன்னாலே  இங்க்லீஷ் படிச்சு பெரிய ஆளா வந்து பட்டணத்தில் வேலை பார்க்க ஆசைப் பட்டேன். தமிழ் பண்டிட் ஆகி ஒரு கிராமத்து ஸ்கூலில் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அதுவும் கூடாதுன்னு எங்க மாமியார் வீட்டில் சொல்லிட்டதாலே  அந்த வேலை யை விட்டுட்டு வீட்டில் அடைஞ்சு கிடந்தேன். தோழிகளோட வாழ்ந்த நாட்களை நினைச்சு மனசு அலை பாயும்.. அப்புறம் என்ன .. வீடு .. குழந்தைங்க... அவங்க படிப்பு.. அவங்க கல்யாணம்னு காலம் ஓடிப் போச்சு. அவங்களப் பத்தின எதிர்காலக் கனவுகளைத் தவிர வேறு எதுவுமே மனசில் இல்லை .. இப்படியே என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு .."
என்றாள் சீத்தா கண்ணில் கண்ணீர் வடிய.
"என்ன சீத்தாம்மா ... குழந்தை மாதிரி ...நான் உன்னை ஒண்ணு கேட்கிறேன். உன்னோட அஞ்சாவது வயசிலிருந்து இப்போ வரை நீ கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் நினைச்சுதான் நாட்களைக் கடத்தி இருக்கிறே ..  நிகழ்காலம்ன்னு ஒண்ணு இருக்கு ... அது இப்போ நம்ம கையில் இருக்குங்கிறதை நீ ஏன் நினைச்சே பார்க்கலே ?"
"என்னடா குழந்தை சொல்றே ?"
"குழந்தையா இருந்தப்போ பார்த்த பௌர்ணமி .. பழகின மனுஷங்கனு நீ நிறைய விசயங்களை மனசில் வச்சுகிட்டு வருத்தப் பட்டுட்டு இருக்கிறே. நிகழ்காலம்னு ஒண்ணு இருக்குது..அதில் நம்மோட சேர்ந்து பகிர்ந்துக்க நிறைய  விசயங்களை கையில் வச்சுகிட்டு நம்ம வருகைக்காக சிலர் காத்திருக்காங்க ... அதை நீ நினைச்சே பார்க்கலையே ஏன் ? உன்னோட எண்பத்து மூணு வருஷ வாழ்க்கையை, நீ  கடந்த கால கசப்பிலும் எதிர்கால  கனவுகளில் மட்டுந்தானே கழிச்சிருக்கே. நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்துட்டியா அல்லது அந்த நினைப்பே உனக்கு வரலியா ? அடுத்த பௌர்ணமி அன்னிக்கு , " போன வருஷ பௌர்ணமியில் என் பொண்ணு வீட்டில் இருந்தேன் .. அங்கே என் பேரக் குழந்தைங்க உறவுக் காரங்க வந்திருந்தாங்க"னு நிலவைப் பார்த்து சொல்லிட்டு இருப்பியா ? கடந்த காலம் நம்மைக் கடந்து எப்பவோ போயிட்டுது. எதிர் காலம் என்கிறது ஒரு கற்பனை ..நாளைய தினம்கிறது எதிர்காலம்தானேனு   நீ கேட்கலாம் .அந்த தினம் வரும்போது அது நமக்கு நிகழ்காலமா இருக்கும். இந்த சந்தோசத்தை... இந்த நிமிஷம் கிடைக்கிற சந்தோசத்தை அனுபவிக் கிறதை விட்டுட்டு ஏன் கையில் இல்லாத ஒண்ணுக்காக கனவு காண்கிறே? கீழே வா .. எல்லாரும் உனக்காக வெயிட்டிங் !" என்று சொல்லி அவள் இடுப்பில் கை கொடுத்து அவளை ஈசிச்சேரில் இருந்து எழுப்பி விட்டான் ரகு. அது சீத்தாவுக்கு சந்தோசமாகவே இருந்தது .

No comments:

Post a Comment