Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 10, 2014

Scanning of inner - heart ( Scan Report Number - 130 )

                                          காட்சிகள் படுத்தும் பாடு ...!!

ஹரி மும்பையிலிருந்து  மாற்றலாகி  சென்னைக்கு வந்ததிலிருந்தே பார்வதியின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் ஈஸ்வர மூர்த்தி. இவன் மும்பை வாசத்தை முடித்துக் கொண்டு வீட்டோடு வந்து செட்டில் ஆக வேண்டுமென்று இவள்  போன கோயில்கள் எத்தனை எத்தனை ... செய்த பூஜைகள் எத்தனை எத்தனை ... அதற்க்கெல்லாம் கைமேல் பலன் கிடைத்ததுபோல ஹரி சென்னைக்கு வந்து விட்டான் . காலையில் மகனை சந்தோசமாக ஆபீசுக்கு அனுப்பும் பார்வதி, இரவில் அவனது வண்டி சத்தத்தைக் கேட்டதுமே டீவீயை ஆப் செய்து விடுவதும் , கையில் சுலோக புத்தகத்தைத் தூக்கி கொண்டு பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி,வாயால் எதையோ முணுமுணுப்ப தும்  ஏன் என்று தெரியவில்லை .. சில சமயம் தலையைக் கைகளால் பிடித்தபடி சோபாவில் சாய்ந்து விடுகிறாள். இந்த நாடகம் ஏன் என்ற கேள்விதான் ஈஸ்வர மூர்த்தியைக் குழப்பிக் கொண்டிருந்தது.
இன்றைக்கு இந்த நாடகத்தைத் தொடங்கினால், அதற்குரிய காரணத்தை அவளிடமே கேட்டு விடுவது என்ற முடிவில் இருந்தார்.
டீவீ முன்பாக சீரியல் பார்க்க உட்கார்ந்து விட்டால் தன்னை சுற்றி நடப்பது என்ன என்பதே தெரியாமல் போய்விடும் பார்வதிக்கு. சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்திருக்கும் ஈஸ்வர மூர்த்திக்கும் தவணை முறையில் தான் சாப்பாடு வந்து தட்டில் விழும், அதுவும் விளம்பர இடைவேளை வரும்போதுதான்.சாப்பிடும் போது  விக்கலுக்கு   நடுவே அவர்  தண்ணீர் கேட்டு  சத்தம் போடும் போதுகூட , " அட , நாந்தான் மறந்துட்டேன். சாப்பிட உட்காரும்போது தண்ணியை எடுத்து வச்சுகிட்டு உட்காரணுங்கிறது ஒரு மனுஷனுக்கு தெரியாதா என்ன " என்று சலித்த படியே எழுந்து வருவாள் பார்வதி. அப்பேர்ப்பட்ட பார்வதி மகன் வந்த பிறகு சீரியலைக் கூட தியாகம் செய்துவிட்டு டீவீயை ஆப் பண்ணிடறானா அதுக்கு என்ன காரணம் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார் ஈஸ்வரமூர்த்தி.
மாற்று உடையில் தன்னை நுழைத்துக் கொண்டு பிளாஸ்க்கில் உள்ள காப்பியை டம்ப்ளரில் ஊற்றிக் கொண்டு டீவீ பார்க்க ஹரி சோபாவில் உட்காரும்போது "ஹரி ... காப்பியை குடிச்சுட்டு அப்படியே கோவில் வரை போய்  பிள்ளையாரை நூற்று எட்டு சுத்து சுத்திட்டு  வந்துடு.. நீ மாற்றலாகி வரணும்னு அம்மா வேண்டிண்டேன் " என்று பார்வதி சொல்ல ஹரியும் மறுபேச்சு பேசாமல் கிளம்பிப் போய்க் கொண்டிருந் தான் . கோவிலிலிருந்து சீக்கிரமாக அவன் வீடு திருமபிவிட்டால், " ஹரி நாடார் கடைக்குப் போய் இந்த சாமானை வாங்கிட்டு வந்துடு ", "மெடிக்கல் ஸ்டோருக்கு போய் இந்த மாத்திரையை வாங்கிக் கொண்டு வந்துடு" என்று அவனை வெளியில் அனுப்புவதில் குறியாக இருப்பதும் ஏனென்று புரியவில்லை அவருக்கு.
வெளியில் ஹரியின் வண்டி ஹார்ன் சத்தம் கேட்டது . மனைவியின் பரபரப்பை நோட்டமிட்டபடியே, எழுந்து சென்று கதவைத் திறந்தவர், " ஹரி  உங்க அம்மா தலைவலின்னு படுத்துட்டா ..நீ கைகால் அலம்பி காப்பியை குடிச்சுட்டு வழக்கம்போல் கோவிலுக்குப் போயிட்டு வந்துடு " என்றார்.
"அம்மா இந்த மாதிரி அடிக்கடி தலைவலின்னு படுக்கிறாங்களே. நீங்க அதற்க்கு எந்த ட்ரீட்மெண்டும் இதுவரை எடுக்கலியா ? அம்மாவை ரெடி பண்ணுங்க .. நான் அவங்களை டாக்டர்கிட்டே அழைச்சிட்டுப் போறேன் " என்றான் ஹரி .
"உங்க அம்மாவுக்கு டாக்டர் தேவையில்லை. என் கை வைத்தியத்தில் ஒரு நொடியில் சரி பண்ணிடுவேன். அதுக்கும் சரிப் படலைன்னா நீ கூட்டிட்டுப் போ "
அதன் பிறகு பதிலேதும் பேசாமல் காப்பியைக் குடித்து விட்டு கோவிலைப் பார்த்துக் கிளம்பினான் ஹரி.
ஹரி அங்கிருந்து கிளம்பின அடுத்த நொடியே எழும்பி வந்து டீவீயை ஆன் பண்ணினாள் பார்வதி.
"முதல்ல டீவீயை ஆப் பண்ணு " என்று இரைந்தார் ஈஸ்வர மூர்த்தி.
கல்யாணமாகி இத்தனை வருடங்களில் இப்படியொரு கோபக் குரலைக் கேட்டுப் பழக்கமில்லாத பார்வதி  டீவீயை ஆப் பண்ணினாள்.
"உனக்கு என்னடி ஆச்சு ?"
"ஏன் இப்படிக் கேட்கறீங்க ?"
"நீ பண்றது எதுவும் சரியில்லே. அவன் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் போதும். அவன் பார்வை டீவீ பக்கம் போகாதபடி பார்த்துக்கிறதிலேயே குறியா இருக்கிறே... பொழுதுக்கும் ஆபீசில் உழைச்சிட்டு வர்றான்.. கொஞ்ச நேரம் அவன் டீவீ பார்க்கிறதில் உனக்கென்ன குடி முழுகிப் போச்சு. நான் ஆபீஸ் முடிஞ்சு அலுப்பா வீட்டுக்கு வரும்போது நீ பார்க்கிற  சீரியலில் வரும் கத்தலும் அழுகை ஒப்பாரியும் எனக்கு தலை வலியா  இருந்தால் கூட, ' சரி வீட்டில் இருக்கிறவங்க பொழுது போக்காக எதையோ பார்த்துட்டுப் போகட்டும் .  பொழுது போகலேன்னு சொல்லி அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து வம்பை விலைக்கு வாங்கிக்கிட்டு வராமலிருந்தால் சரிதான்னு நினைச்சு என்னை நானே கட்டுப் படுத்திக்குவேன். என்னிக்காவது ஒருநாள் , ' தலை வலிக்குது .. அந்த டீவீ வாயை மூடு "ன்னு சொல்வேன் ,  அதை  நீ செய்ய மாட்டேங்கிறது எனக்கு நல்லாவே தெரிஞ்சும் கூட. இப்போ எல்லாமே தலை கீழா இருக்குது .. என்னடி விஷயம் ?" என்று கோபத்துடன் கேட்டார் ஈஸ்வர மூர்த்தி .
"ஹரி படிக்கிற காலத்தில் எப்பவும் புக்கும் கையுமா இருப்பான். அப்போ நான் டீவீயில் சீரியல் பார்த்துட்டு இருப்பேன். எனக்கும் உன்கூட உட்கார்ந்து சீரியல் பார்க்க ஆசையா இருக்குது .. அப்படி என்னதான் இருக்குதுங்கிறதை தெரிஞ்சுக்கணும் "ன்னு சொல்வான். சில சீன்சை பாத்துட்டு "இப்படிக் கூட எங்காவது நடக்குமா "னு நான் கேட்டால் " இங்கே அங்கே நடக்கிறதைக் காட்டறாங்க.. என்ன ... கொஞ்சம் மிகைப் படுத்திக் காட்டுவாங்க . அவ்வளவுதான் .. மத்தபடி அப்படியொரு சம்பவம் நடந்தே இருக்காதுன்னு யாரால் சொல்ல முடியும்?னு சொல்வான். கேம்பஸ் இண்டர்வியூவில் செலெக்ட் ஆகி படிப்பு முடிஞ்சதும் வேலையில்  சேர்ந்துட்டான். அவனுக்கு சென்னைக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சதும் "அம்மா .. நான் சென்னை வர்றேன் .. தினமும் நீ விதம் விதமா சமைச்சுப் போடறத ருசி பார்ப்பேன். உன் கூட உட்கார்ந்து டீவீ யில் வர்ற அத்தனை சீரியலையும் பார்ப்பேன்"னு  தான் போனில் பேசும்போதும் கூட எங்கிட்டே சொன்னான் "
" சரி .. உனக்கு கம்பெனி கிடைச்சா நல்ல விஷயம்தானே .. சோகக் காட்சி வரும்போது கட்டிப் பிடிச்சு அழ ரொம்ப சௌகரியமா இருக்குமே . ஒருத்தர் அழுதா இன்னொருத்தர் ஆறுதல் சொல்லலாமே "
"ஹரி எப்பவுமே "ஊரில் .. நாட்டில் நடக்கிறதைதானே டீவீயில் காட்டுறாங்க.அதைப் பார்த்து எச்சரிக்கையாகி நாம எந்தப் பள்ளத்திலும் விழாதபடி..எந்தவொரு  வம்பிலும் மாட்டிக்காதபடி  முன்னெச்சரிக்கை  நடவடிக்கையா என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் நாம செய்யணும்"ன்னு சொல்ற ஆளு ..எந்த சீரியலைப் பார்த்தாலும் அதில் வர்ற அம்மா பொல்லாதவளாவும், மகன்கிட்டேயிருந்து  மருமகளைப் பிரிச்சு வீட்டை விட்டுத் துரத்துவதில் குறியா இருக்கிற மாதிரியுமே கதை வருது.. அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் இருக்க பொண்ணுங்க ஆசைப்பட்டாங்க. இப்போ உள்ள குழந்தைங்க  கல்யாணம் முடிஞ்ச கையோடு புருஷனை அழைச்சுகிட்டு தனிக் குடித்தனம் போக ஆசைப் படறாங்க. அவங்க ஆசையை நியாயமாக்க, வீட்டில் நடக்கிற சின்ன சின்ன விஷயத்தைக் கூட பெரிசு படுத்தி, வீட்டிலிருந்து வெளியே போகத்தான் ஆசைப்படறாங்க. ஹரி இன்னைக்கு  நம்ம பிள்ளையா நம்ம பேச்சைக் கேட்டு நடக்கிறான் .. அவனுக்கு வந்து சேருற மகராசி எப்படி நடந்துக்குவானு நமக்குத் தெரியாது . நம்ம பிள்ளை வேறொருத்திக்கு புருஷன் ஆனபிறகும்  நம்ம சொல்றதை மட்டுமே கேட்டு நடப்பான்னு சொல்றதுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தனிக்குடித்தனம் போக ஆசைப்பட்டு, நம்ம வீட்டுக்கு  வந்தவ எதையாவது சொல்லி வைக்க, அதைக் கேட்டுட்டு சீரியலில் வர்ற அம்மா மாதிரி நம்ம அம்மாவும் தன்னோட பொண்டாட்டியைக் கொடுமைப் படுத்துறானு நினைச்சுகிட்டு அவன் நம்மள விட்டுப் பிரிஞ்சு போய்ட்டா அதை என்னாலே தாங்க முடியாது. அதனாலே தான் அவன் கண்ணு சீரியல் பக்கமே போயிடாதபடி பார்த்துக்கிறேன் " என்றாள் பார்வதி கவலை நிறைந்த குரலில்.
"உன் முட்டாள்தனத்தை நினைச்சு அழறதா சிரிக்கிறதான்னு தெரியலே .உன் பிள்ளை உன்னைப் போல முட்டாள் இல்லே .. அவனுக்கு  நல்லது எது கெட்டது எதுன்னு தெரியும் .. நீயும் உன் சீரியலும் .. அதைப் பார்த்துப் பார்த்து உன் புத்திதான் மழுங்கிப் போய்க்கிடக்குது " என்று எரிந்து விழுந்தார் ஈஸ்வர மூர்த்தி     



No comments:

Post a Comment