யார் பெரியவர் ?
" என்ன மனோ, உனக்கும் அண்ணனுக்கும் ஏதாவது தகறாரா? யார்கிட்டேயும் எதுவும் பேசாமே இருக்கிறானேடி. இன்னிக்கு உங்களுக்குள் என்ன பிரச்னை? " என்று கேட்டாள் பாட்டி.
"ஐயோ அம்மா, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லே. நீ தேவை இல்லாமல் எதையாவது கேட்டு புதுசா ஒரு பிரச்சனையை ஆரம்பிச்சிடாதே" என்று பதில் வந்தது மனோவிடமிருந்து.
" இல்லேடி, அவன் அஞ்சு நிமிஷங்கூட சும்மா உட்காருகிற ஆள் இல்லையே!" என்றாள் பாட்டி கவலையுடன்.
" ஒண்ணுமில்லேம்மா. இவனும் அப்புவும் சாமி கும்பிட கோயிலுக்கு போனாங்கதானே. இவன் பிள்ளையாரை சுத்தி வந்து சாமி கும்பிடறதைப் பார்த்துட்டு, "அனுமார்தான் சக்தி வாய்ந்த கடவுள். அவரைக் கும்பிட்டாத்தான் நினைச்சது நடக்கும். கேட்டது கிடைக்கும்"ன்னு அப்பு சொல்லியிருக்கிறான். அதனாலே இவன் மூட் அவுட்.. பிள்ளையாரை கும்பிட்டதாலே எக்சாமில் மார்க் குறைஞ்சு போயுடுமோன்னு நினைச்சு கவலை பட்டுட்டு இருக்கிறான். விடு பாட்டி. வீடு கொஞ்ச நேரமாவது அமைதியா இருக்கட்டுமே!" என்றாள் மனோ .
"அப்பு எதையோ சொன்னா இவன் ஏன்டி கவலைப்படணும்?'
"பாட்டி, இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் இவன் வழக்கமா கோபப்பட்டு சண்டைக்குத்தான் போவான். நேத்திக்கு உன்கிட்டே இனிமே கோபப்பட மாட்டேன்னு சொல்லியிருக்கிறானில்லையா. அதான் ஒரு சேஞ்சுக்கு கவலையில் இருக்கிறான். விடு பாட்டி" என்றாள் மனோ சர்வ சாதாரணமாக.
"உனக்கு ரொம்பவும் கொழுப்புடி. குழந்தை கவலையில் இருக்கிறான். அவனை சமாதானப் படுத்தறத விட்டுட்டு கிண்டலா பண்றே ?" என்றாள் பாட்டி கோபமாக.
" பாட்டி வேண்டாம். நீ இப்போ அவன் வாயை கிளிறினியானா, உனக்கு குடுத்த ப்ராமிசை மறந்துட்டு உன்னை கடிச்சு குதறிடுவான்" என்று எச்சரித்தாள் மனோ.
"பாவம்டி அவன். எந்த கடவுள் பெரியவர்ன்னு பெரியவங்களே சண்டை போடும்போது, குழந்தைகள் குழம்பாம இருப்பாங்களா? முன்னே ஒரு காலத்திலே" என்று பாட்டி சொல்லிக்கொண்டிருக்கும்போதே
"ஏய், பிரபு, பாட்டி கதை சொல்லப்போறா" என்று மனோ குரல் கொடுக்க,
"நீங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தது என் காதிலும் விழுந்தது. என்னை விட்டுட்டு பாட்டி உனக்கு மட்டும் கதை சொல்லிடுவாளா என்ன?" என்று கேட்ட படியே பாட்டி அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான் பிரபு.
"பாட்டி, வழக்கம்போல தூய தமிழில் " என்று மனோ சொல்ல,
பாட்டி கதையை ஆரம்பித்தாள். "கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற சர்ச்சை ஒரு புறமிருக்க, எந்த கடவுள் பெரியவர்? எந்த சமயம் உயர்ந்தது? சைவமா? வைணவமா? என்ற சண்டைகளும் அந்த காலத்தில் அதிகமாகவே இருந்ததாம். இந்து மதத்திலேயே கூட "ஹரிதான் பெரியவர்", "கிடையவே கிடையாது, சிவன்தான் பெரியவர்" என்ற சண்டை அடிக்கடி நடந்ததாம். இந்த வாத பிரதி வாதங்களுக்கு இடையே, "ஹரியும் சிவனும் ஒண்ணு; இதை அறியாதார் வாயில் மண்ணு!" என்று சொல்லி நடுநிலை வகுத்தவர்களும் இருக்கத்தான் செய்தார்களாம். ஜனங்களிடையே இருந்த இந்த வெறியை வேடிக்கை கதையாக சொல்லி சிரித்தவர்களும் உண்டு. உதாரணத்துக்கு ரெண்டு மட்டும் இப்போ சொல்றேன். ஒரு விஷ்ணு பக்தர். சிவனையோ சிவனடியாரையோ பார்ப்பது கூட இவருக்கு பிடிக்காது. அந்த அளவுக்கு வெறி. இவர் வேண்டுமென்றே தினமும், சிவன் கோயில் சுவற்றில் போய் சிறுநீர் கழித்துவிட்டு வருவார். உப்புக் கரை படிந்து சுவர் இடிந்து விழட்டுங்கிற நல்ல எண்ணந்தான் காரணம். ஒருநாள் இவர் சுவரோரமாக நின்று கொண்டிருக்கும் போது இவர் மேலே மண் துகள் விழுந்தது.நிமிர்ந்து மேலே பார்த்தார். காகம் ஒன்று கோயிலின் மதில் சுவரில் நின்று கொண்டு எதையோ கொத்தி தின்று கொண்டிருந்தது. அது கால் நகம் பட்டு சுவர் மேலிருந்து மண் விழுந்தது.அது புரியாத இவர், காகமும் தன்னோடு சேர்ந்து கொண்டு சுவரை இடிக்கிறதாக நினைச்சுக்கிட்டு " ஏ காகமே. நீ மேலே இருந்து இந்த கோயிலை இடி; நான் கீழே இருந்து இடிக்கிறேன். நாம் ரெண்டு பேரும் சேர்ந்து இந்த கோயிலை ஒரு வழி பண்ணிடலாம் " என்றாராம் என்று பாட்டி சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த இருவரும், "அடுத்தது என்ன பாட்டி? " என்றார்கள்.
" இவர் இப்படின்னா இன்னொருவர் என்ன மாதிரி ஆள் தெரியுமா? இவர் சிவ பக்தர். தினமும் கூடை நிறைய சுண்டலுடன் தெரு முனையில் நின்று கொண்டு போகிறவங்க வருகிறவங்ககிட்டே எல்லாம் அவங்க பெயர் என்னவென்று கேட்பார். சிவன் சம்பந்தப்பட்ட பேராக சொன்னால், அவர்களுக்கு கை நிறைய அள்ளி சுண்டல் கொடுப்பார். விஷ்ணு சம்பந்தப்பட்ட பேராக சொன்னால் ஒன்று அல்லது ரெண்டு சுண்டல்தான் கொடுப்பார். அன்றும் அதேபோல தெருவில் நின்றுகொண்டு பெயர்களை கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த நபர் தன்னுடைய பெயர் "சிவராமலிங்கம்" என்று சொல்ல, சுண்டல் பார்ட்டிக்கு ரொம்ப சந்தோசம். "நீதான் நல்ல பேர் வச்சிருக்கிறே. உன் பேரில் சிவனும் லிங்கமும் சேர்ந்து ராமனை நடுவில் வைத்து நசுக்குகிறார்கள், நன்றாக வேண்டும் அந்த ராமனுக்கு. நல்லா நசுங்கட்டும்னு சொல்லி கூடையோட சுண்டலை அந்த ஆளிடம் கொடுத்து அனுப்பினாராம் அந்த வள்ளல். இப்படிப்பட்ட பைத்தியக்கார தனங்களெல்லாம் எந்த காலத்திலுமே இருக்கத்தான் செய்கிறது" என்று பாட்டி சொல்லி முடித்ததும் கலகலவென்ற சிரிப்பொலி எழுந்தது அங்கே.
" இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ . எப்பவுமே தேவை இல்லாத விசயங்களை மனசிலிருந்து தூக்கி எறிஞ்சிடணும். ஒருமுறை ஒரு இளந்துறவி தன்னோட சீடர்களை அழைச்சிட்டு வெளியூர் போனார். வழியில் ஒரு ஆறு. ஆற்றைக் கடந்துதான் அந்த ஊருக்கு போகணும். அந்த ஆற்றங்கரையில் ஒரு அழகான இளம்பெண் நின்று கொண்டிருந்தாள், அவளோட காலில் ரத்தக்காயம் இருந்துச்சு. அதனால் காலில் கட்டு போட்டிருந்தா.அந்த துறவியை பார்த்ததும் தன்னுடைய கால் காயத்தை காட்டி, " ஐயா, நான் அந்த கரைக்கு போக வேண்டும். என்னால் நீரில் நடந்து செல்ல முடியாது. தண்ணீர் பட்டால் காயம் சீழ் கோர்த்துவிடும். அதனாலே என்னை தூக்கி கொண்டு போய் அந்த கரையில் விடமுடியுமா?ன்னு கேட்க, துறவி கொஞ்சமும் தயங்காமல் அந்த பெண்ணை சிறு குழந்தையை தூக்குவதுபோல தூக்கி மறு கரையில் சேர்த்துவிட்டு, தன் வழியில் நடக்க ஆரம்பித்து விட்டார். அவரோட வந்த சீடர்களில் ஒருவனுக்கு மட்டும், " ஒரு இளம் துறவி, ஒரு பெண்ணைத் தொட்டு தூக்கியது சரியா? " என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. அதைப்பற்றியே எந்நேரமும் சிந்தித்துக்கொண்டே இருந்தான், இரவு முழுவதும் தூங்காமல் தவிச்சுகிட்டே இருந்தான். இவனுடைய செய்கைகளை துறவியும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். அந்த சீடனிடம் "உனக்கு என்ன பிரச்னை? ஏன் இப்படி அமைதியில்லாமே நிலை குலைந்து போயிருக்கிறே?ன்னு கேட்டார்.
அதற்கு அந்த சீடன், "என்னதான் தலை போகிற விசயமா இருந்தாலுங்கூட, ஒரு துறவி, ஒரு இளம் பெண்ணை தூக்கி சுமந்தது சரியாங்கிறதுதான் என்னோட பிரச்னை " என்றான்.
அதற்கு அந்த இளம்துறவி " " நான் அப்போதே அந்த பெண்ணை கரையில் இறக்கி விட்டு விட்டேனே. நீ இன்னுமா அவளை மனதில் சுமந்து கொண்டு இருக்கிறாய்?" என்று கேட்டாராம். சீடனுக்கு தன்னுடைய தவறு புரிந்தது. எப்பவுமே வேண்டாத விசயங்களை மனசை விட்டு உடனுக்குடன் தூக்கி எறிஞ்சிடணும்" என்றாள் பாட்டி
" இதோ பார். இப்பவே எறிஞ்சிட்டு வந்திடறேன்" என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு பிரபு வெளியில் ஓடினான்.
அவன் சந்தோசத்தைக்கண்டு பாட்டியும் மனோவும் சந்தோசமானார்கள்.
No comments:
Post a Comment