Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, March 16, 2013

Scanning of inner-heart ( Scan Report No.64 )

                         ஹீரோ எப்படி ஜீரோ ஆனார் ?

ரமேஷண்ணா என்றால் எனக்கு உயிர். எனக்கு மட்டுமல்ல, எங்கள் தெருவிலுள்ள எல்லாப் பிள்ளைகளுக்குமே ரமேஷண்ணா என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இந்த இருபத்து வயதில் என்னுடைய உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறேனேன்றால் அதற்க்குக் காரணம் ரமேஷண்ணாதான் .என்னடா ஏதோ வயதானவன் சொல்வதுபோல் சொல்றேன்னு நினைக்கிறீங்களா ? நான் அஞ்சாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கிறப்போ நீங்க என்னைப் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் நான் இப்போ சொல்வதை கண்ணை மூடிட்டு நம்பிடுவீங்க. நல்ல சிவப்பு நிறமா கட்டுக் குட்டுன்னு  கொழுக்கட்டை மாதிரி இருப்பேன். எங்க வீட்டிலுள்ளவங்களே என்னை " வாடா, கொழுக்கட்டை " " போடா கொழுக்கட்டை " ன்னுதான் சொல்வாங்க என்றால் ஸ்கூலில் என்னோட படிக்கிற பிள்ளைங்க, எங்க தெருவில் இருந்தவங்க எல்லாம் என்னை எப்படி கேலி பண்ணி இருப்பாங்கனு நீங்களே யோசனை பண்ணிப் பாருங்க. 
இந்த கேலிக்குப் பயந்து வெட்கப்பட்டுகிட்டு வீட்டை விட்டு எங்கேயும் போகாமே வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பேன். ரமேஷண்ணா பக்கத்து வீட்டில் குடியிருந்தார். அவருக்கும் எனக்கும் அஞ்சு  வயசுதான் வித்தியாசம். என்னைவிட நாலஞ்சு வயசு பெரிய பிள்ளைகளை எல்லாம்கூட நான் " வா , போ "ன்னு பேசுவேன். ஆனால் ரமேஷண்ணாவை அப்படி சொன்னதே கிடையாது. ஒரு சிலரைப் பார்த்ததுமே அவங்க மேலே நமக்கு ஒரு இனம் தெரியாத பாசம்,  பயம் , மரியாதை , வெறுப்பு வருமே. அந்த மாதிரிதான் எங்க எல்லாருக்குமே ரமேஷண்ணா மேலே ஒரு பிரியம் இருந்துச்சு .நான் என்ன காரணத்துக்காக நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறேங்கிறதை தெரிஞ்சுகிட்ட ரமேஷண்ணா உடம்பை கட்டுக் கோப்பா வைக்க என்னென்ன எக்ஸ்ர்சைஸ் எல்லாம் செய்யலாம் என்று சொல்லித் தந்தார். சைக்கிள் ஓட்டக் கத்துக் குடுத்தார். காலையிலேயே என்னை எழுப்பி ஆத்தங்கரைக்கு கூட்டிட்டுப் போய் நீச்சல் கத்துக் குடுத்தார் . ரமேஷண்ணா எப்பவும் ரோட்டை ரொம்ப அசால்ட்டா கிராஸ் பண்ணுவார் . அவரோட தைரியத்தைப் பார்த்து நான் அசந்து போயிருக்கிறேன் . ரமேஷண்ணா எங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ மாதிரி. எந்த சப்ஜெக்ட்டில் டௌட் கேட்டாலும் யோசிக்காமே " பட் " ன்னு பதில் சொல்லுவார் 
ரமேஷண்ணாவோட இருந்த நட்பெல்லாம் கொஞ்ச நாள்தான்.உடம்புக்கு முடியாமே இருந்த அப்பா திடீர்னு இறந்து போயிட்டார் . அப்பா இறந்து போனதும்  நானும் அம்மாவும் மாமாவோட மும்பையில் செட்டில் ஆயிட்டோம். மும்பையின் பரபரப்பு வாழ்க்கையில் என்னைப் பற்றி யோசிக்கவே எனக்கு நேரமில்லை என்றாலும் ரமேஷண்ணாவை நினைக்காத நாள் கிடையாது . எது செய்ஞ்சாலும் அவரை மனசில் நினைச்சே செய்வேன். மும்பையில் நாங்க செட்டில் ஆகி இந்த பதினாலு வருஷத்தில் எங்களுக்கும் எங்க சொந்த ஊருக்கும் தொடர்பு என்பதே இல்லாமல்தான் இருந்தது. ஒரு போன் .... ஒரு போஸ்ட் கார்ட் ... ஹூஹும் ... எதுவுமே கிடையாது. இன்றைக்கு நான் ஒரு என்ஜினியர் . சென்னையில் எனக்கு வேலைக்காக  போஸ்டிங் ஆர்டர்  கிடைச்சதும் என் சந்தோசத்துக்கு ஒரு அளவே இல்லை.  மாமா கூட கேட்டார், " என்ன மருமகனே, ஆர்டர் கைக்கு வந்ததும் உங்களுக்கு தலைகால் புரியலே" ன்னு. " வேலை கிடைச்சதினால் வந்த  சந்தோசம் இல்லே மாமா  . நான் சென்னை போனதுமே  எங்க ரமேஷண்ணாவைப் பார்க்கப் போவேன்"னு அவர்கிட்டே நான் சொல்லலே 
என் குணம் தெரிஞ்சே, அம்மா  , " டேய், முதல்லே வேலையில் சேரு. லீவுநாளில் அண்ணாவைப் பார்க்கப்போ "ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியிருந்தாள் ஆனால் நான் சென்னை வந்ததும் ஒரு ரூம் தேடி லக்கேஜை வீசிவிட்டு  ரமேஷண்ணாவைப் பார்க்கப் பறந்தேன்.
நாங்க இங்கிருந்து இடம் பெயர்ந்த இந்த பதினாலு வருஷ கால இடைவெளியில் எங்க ஊர் ரொம்பவும் மாறி இருந்தது .நாங்க இருந்த தெருவில் இப்போது இருக்கிற எல்லாருமே எனக்குப் புது முகங்களாகவே கண்ணில் பட்டார்கள். ரமேஷண்ணாவை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
" தம்பி , பத்து வருசமா பருவ மழை போய்ச்சு போயிட்டதாலே விவசாயத்தை நம்பி இங்கே குடி இருந்தவங்க எல்லாம் பொழைப்பு தேடி எங்கெங்கோ போயிட்டாங்க. பக்கத்து தெருவிலே ராமசாமி நாயக்கரைப் பார்த்தா, ஒருவேளை நீங்க தேடி வந்த ஆளைப் பத்தின தகவல் கிடைக்கும் " என்று தகவல் சொன்னார் தலையில் முண்டாசு கட்டிய பெரியவர் ஒருவர் 
நாயக்கரை எனக்கு நல்லா தெரியும். ஆனா அவருக்கு என்னை நினைவிருக்குமா? சரி எதுக்கும் போய்க் கேட்கலாம்ன்னு அவர் வீட்டுக்குப் போனேன் 
நான் நினைத்தது சரிதான். அவருக்கு என்னையோ என் அம்மா அப்பாவையோ கொஞ்சமும் நினைவில்லை . தயக்கத்துடன் " அடுத்த தெருவில் ரமேஷண்ணா..." என்று நான் வார்த்தைகளை இழுக்கும்போதே " அந்த சண்டாளனுக்கு நீ என்ன வேணும் ? " என்று கேட்டு இரைந்தார் நாயக்கர். அந்த கூச்சலைக் கேட்டு வெளியில் வந்த ஒருவர் " இங்கே வா " என்று என்னை கை ஜாடை காட்டி அழைத்தார்  
என்னைப் பற்றி பொறுமையாக விசாரித்த அவரிடம் " ரமேஷண்ணா  பத்திக்   கேட்டால், இவ்வளவு கோபப் படுவானேன் ? " என்றேன்.
" தம்பி நீ சொன்னியே, " எங்க ரமேஷண்ணா எல்லாம் தெரிஞ்சவர்" ன்னு. அந்த மெத்தப் படிச்ச மேதாவிக்கு ரோட்டைப் பொறுமையா கடந்து போகத் தெரியாது. கூண்டைத் திறந்து விட்டா மிருகமெல்லாம் பாய்ஞ்சு ஓடுமே, அந்த மாதிரிதான் ஓடுவார். மெய்ன் ரோட்டில் நாயக்கரோட மகன், மருமக, குழந்தை குட்டிக எல்லாரும் வண்டியில்  வந்திட்டு இருக்கிறப்போ இந்த சண்டாளன் வழக்கம் போல குறுக்கே புகுந்து வந்திருக்கிறான் . கார் வந்த வேகத்தில் இவன் மேலே மோதி  பக்கத்துக்கு கடைங்க மேலே இடிச்சு ஒரு லாரி மேலே மோதிதான் நின்னுது. பத்துப் பேருக்கு படுகாயம் .  அந்தப் பய.. அதான் உன்னோட ரமேஷண்ணா  அந்த இடத்திலேயே மண்டையைப் போட்டுட்டான்  நாயக்கர் குடும்பம் வாரிசே இல்லாமல் அழிஞ்சு போச்சு. பித்துப் பிடிச்ச நிலையில் இருக்கிறவரு கிட்டே போய்  அந்த சண்டாளனைப் பத்தி பேசி இருக்கிறே. உன் நல்ல காலம், உன்னை உசிரோட விட்டுட்டார் . நீ உருப்படியா ஊர் போய்ச்சேரு " என்றார் 
" அவராலே ஒரு சோக சம்பவம் இந்த இடத்தில் நடந்திருக்கிறப்போ அவரைப் பத்தின விவரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்தானே ? பிறகு ஏன் யாரைக் கேட்டாலும் எதுவும் தெரியாதுன்னு எல்லாரும் சொன்னாங்க ? "
" தம்பி , நாயக்கர் ஐயா ஊரிலே பெரிய மனுஷன், இந்த விசயத்தில் அவர் நொந்து போயிருப்பது ஊரறிந்த விஷயம். அதை அவருக்கு யாரும் திரும்ப ஞாபகப் படுத்துக் கூடாதுங்கிறதுக்காக ரமேஷ் ங்கிற பேரையே எல்லாரும்  
இருட்டடிப்பு பண்ணிட்டாங்க . இந்த விவரம் போதுமா ? இல்லே , இன்னும் ஏதாவது தெரிஞ்சாகணுமா ? "
அவர் கோபத்தில் அப்படிக் கேட்கிறாரா அல்லது விரக்தியில் கேட்கிறாரா என்பது எனக்குப் புரியவில்லை . " வரேங்க " என்ற ஒற்றை சொல்லுடன் விடை பெற்றேன். மனசுக்குள் ஒரு நெருடல் . எல்லாருமே ரமேஷ் என்கிற பெயரையே இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றால் , அந்த " முண்டாசு " மட்டும் எதற்க்காக, அதுவும் குறிப்பாக நாயக்கர் பேரைச்சொல்லி அவரைப் போய்ப் பார்க்கச் சொன்னது ? ஒருவேளை நாயக்கரோட பகையாளியோ ?
படிப்பறிவில்லாத மனுசங்க கூட பார்த்துப் பார்த்து ரோட்டைக் கிராஸ் பண்ணும் போது , எல்லாம் தெரிஞ்ச ரமேஷண்ணா இந்த விசயத்தை எப்படி மறந்து போனார். எது வீரம், எது விவேகம்னு தெரியாத ஒரு முட்டாளைத் தான் நான் இன்னிக்கு வரை ஒரு ஹீரோன்னு  நினைச்சிட்டு இருந்தேனா ? என் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது. சென்னைக்கு நான் பஸ் ஏறும் போது, ரமேஷைப் பற்றிய எரிச்சல்தான் மனம் முழுக்க இருந்தது. 

No comments:

Post a Comment