Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, March 09, 2013

Scanning of inner-heart ( Scan Report No.63 )

                                                             தெளிவு

கொஞ்ச நாளாகவே சஞ்சலா, ராமின் மனதில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறாள் என்று சொன்னால் அது மிகையில்லை. எப்படி இந்தப் பெண்ணால் மட்டும் எல்லா விசயங்களையும் ரசிக்க முடிகிறது என்று வியந்து கொண்டிருந்தான். அவளோடு பேசிக்கொண்டிருப்பதில் நேரம் போவது கூட தெரியவில்லையே என்று வியந்திருக்கிறான் .
ஆபீஸ் ஜன்னல் வழியாக விழியை ஓட விட்டாலே போதும். தெருவில் போவோர் வருவோரை நன்றாகப் பார்க்க முடியும். ஜன்னலருகில் நின்று கொண்டு " ராம்,  கம் .. கம் .. அதோ அங்கே பாருங்க " என்று பரபரப்பாள் . ராம் அவளருகில் சென்று  " என்ன ? " என்பான்.
" அதோ பாருங்க, அந்த பிளாட் பார்மில் ஒரு குழந்தை, தாத்தா கையைப் பிடிசுகிட்டு நடக்கிறதை! ரெண்டு பேர் முகத்திலுமே என்னவொரு சந்தோசம்? ராம், உங்களுக்கு தாத்தா இருக்கிறாரா?  எங்க தாத்தா கிராமத்தில் இருக்கிறார். கிராமத்துக்குப் போனால் , இன்றைக்கும் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பேன். அதில் எனக்கும் சந்தோசம் . அவருக்கும் சந்தோசம். தெருவில் போவோர் வருவோரை எல்லாம் நிறுத்தி " என் பேத்தி, பட்டணத்தில் இருந்து வந்திருக்கிறா " என்று அவர்களிடம் சொல்வார். மகன் மீது வெறுப்புக் காட்டும் அப்பா அம்மா இருக்கிறாங்க. அப்பா அம்மாவைப் பிடிக்காது என்று சொல்கிற குழந்தைங்க  இருக்கிறாங்க. மனம் ஒத்துப் போகாத, வெறுப்பை சுமந்து வாழ்கிற கணவன் மனைவி இருக்கிறாங்க. இவங்க எல்லார் வெறுப்புக்கும் எதோ ஒரு வகையில் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். ஆனால், ' எங்க தாத்தா பாட்டியை எனக்குப் பிடிக்காது ' என்று சொல்கிற யாரையும் நான் இதுவரை  பார்த்ததே இல்லை " என்பாள் 
அதைக் கேட்ட பிறகு, தன்னுடைய தாத்தா பாட்டி இப்போது உயிரோடு இல்லையே என்று பலமுறை ராம் ஏங்கி இருக்கிறான் 
" ராம், இறைவன் படைப்பில் அற்புதுமான ஒரு விஷயம் குழந்தைகள்தான். அவர்கள் சிரித்தாலும் அழகு, அழுதாலும் அழகுதான். காலையில் புத்தம்புது மலர்களாய் அவர்கள் பள்ளிக்குப் போவது ஒரு அழகென்றால் , மாலையில் 
காய்ந்த மலர்கள் போல தளர் நடையோடு களைப்பாக வீடு திரும்புவதும் ஒரு அழகுதான்" என்று சஞ்சலா சொல்வதைக் கேட்டபிறகு, தெருவில் போகிற குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்திருக்கிறான் ராம் 
" ஆர்ப்பரிக்கிற கடல், அமைதியான நீரோடைகள், அதலபாதாளம், விண்ணை முட்டும் மலைமுகடுகள் , சுட்டெரிக்கும் வெயில், நடுங்க வைக்கும் குளிர் என்று இறைவனின் படைப்பு , இயற்கையின் அமைப்பு வித்தியாசமானதாக  இருக்கிறது. அதை ரசிக்கவும் முடிகிறது. ஆனால்  மனிதர்களில், செக்கச் செவேர்ன்னு ஒரு குரூப்பை ஒரு இடத்திலும் , எரிந்த கரிக் கட்டைகளாய் ஒரு குரூப்பை ஒரு இடத்திலும்  படைத்திருக்கிறாரே கடவுள், அது ஏன் ? ஒரு வகையில் அது கூட  அழகாய்த்தான் இருக்கிறது. அதை விடுங்க .ஆனால், உலகத்திலுள்ள அத்தனையும் செழிப்பையும் ஒரு இடத்தில் குவித்து வைத்துவிட்டு இன்னொரு இடத்தை தரித்திரத்தில் வாட வைத்திருப்பதைப் பார்த்தால் எனக்குக் கடவுள் மீது கோபம் வருகிறது " என்பாள் 
அதன் பிறகு " மனிதர்களில் பலர்,  இருக்கிற பணத்தை எப்படி செலவு செய்யலாம் என்று  கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, அடுத்த வேளை உணவு  என்பதே பகல் கனவுதான் என்ற நிலையில் பலர் இருக்கிறார்களே என்று நினைத்து வேதனைப் பட்டிருக்கிறான் ராம் ."  இருக்கிறவன் கொடுக்கணும், இல்லாதவன் எடுக்கணும் ; அதைத் தடுப்பவரை மறுப்பவரை சட்டம் போட்டுத் திருத்தணும்  " என்ற திரைப் படப் பாடல் வரிகளை நினைத்துப் பார்ப்பான். சிறு வயது முதலே பலமுறைக் கேட்ட பாடல்தான் அது என்றாலும் , சஞ்சலாவின் நட்புக்குப் பிறகு, அந்தப் பாட்டைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான் ராம். அந்த வரிகளுக்குப் புதுப் புது அர்த்தம் கண்டு பிடித்தான்.
" ராம், உனக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறீங்கன்னு  கேட்க ஆரம்பிச்சாச்சு. இந்த பேச்சை நான்  ஆரம்பிக்கிறப்ப  'பார்க்கலாம்மா "ன்னு பதில் சொல்றே. அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்குப் புரியலே. உன் மனசிலே நீ யாரையாவது நினைச்சிட்டு இருந்தால் , அதை வெளிப்படையா சொல்லு. பேசி முடிவெடுக்கலாம்" என்று அம்மா சொல்லும்போதெல்லாம், சஞ்சலாவைப் பற்றி சொல்லலாமா என்று ராம் நினைத்திருக்கிறான் .ஆனால் அவளுடைய மனசில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல். நினைப்பை அம்மாவிடம் எப்படி சொல்வது என்று தயக்கத்தில் நாளை ஓட்டியிருக்கிறான்
சஞ்சலாவிடம் கல்யாணப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்பது தெரியவில்லை
" உன்னோடு பேசிப் பழகுகிறவங்க எல்லாரும் உன் மேலே ஆசைப்பட்டுதான் பேசிப் பழகுறாங்கன்னு நீ நினைச்சா அது உன்னோட முட்டாள் தனம்.. அந்த இன்னொசன்ஸ் கூட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு " ன்னு முகத்திலடித்தது போல சொன்னாலும் சொல்வாள் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு  சொல்ல நினைத்த விசயத்தை சொல்லாமல் மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தான் ராம்.
வெளியில் ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு அவன் ஆபீஸ் திரும்பியபோது அனேகமாக எல்லோருமே கிளம்பிப் போயிருந்தார்கள் . இருந்தது  பியூனும் வாட்ச்மேனுமே. கொண்டு வந்த பைல் எல்லாவற்றையும் பீரோவில் வைத்துவிட்டு  ராம்  ஆபீசை விட்டுக் கிளம்புபோது, மழை தூரல் ஆரம்பித்திருந்தது .ரெயின் கோட் வேறு வண்டியில் இல்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது . கனமழைக்கு முன் வீடு போய்ச்சேர்ந்து  விடலாம் என்ற நினைப்பில் டூ வீலரில் பறந்து கொண்டிருந்த ராமை சாலை ஒரத்தில்   வளையல் கைகள் தடுத்து நிறுத்தின
" ஹாய் , சஞ்சு , இன்னுமா வீடு போய் சேரலே ? "
" நான் வீடு போய் சேர்ந்திருந்தா இந்த இடத்தில் என்னை நீங்க பார்த்திருக்க முடியுமா ? "
" ஸாரி, ஸாரி "
" ஓவரா பீல் பண்ணி உடம்பு இளைச்சிடாதீங்க. ரொம்ப நேரமா பஸ் இல்லே . என்னை வீட்டில் டிராப் பண்ண முடியுமா  ? "
" நோ ப்ராப்லம் . உட்காருங்க "
சஞ்சுவின் வீடு வந்து சேர்வதற்குள் பலத்த மழை ஆரம்பித்துவிட்டது                                            
" வாங்க ராம் . உள்ளே வந்து ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் . அதற்குள் மழை நின்னுடும் "
மறுத்துப் பேசாமல் வண்டியை ஓரங்கட்டி விட்டு அவளைப் பின் தொடர்ந்து அப்பார்ட் மென்ட் ல் நுழைந்தான்
சஞ்சலாவைக் கண்டதுமே அப்பார்ட்மெண்டில் உள்ள ஒரு குழந்தை மழையையும் பொருட் படுத்தாமல் ஓடி வந்து " ஆன்ட்டி" என்று சொல்லி அவள் கால்களைக் கட்டிக் கொண்டது
அந்தக் குழந்தையை வாரியணைத்து முத்தமிட்டு ஏதாவது வர்ணிப்பாள் என்று ராம் எதிர்பார்த்தான்
" அட, ச்சீ , சாக்லட் சாப்பிட்ட கையோட புடவையை பிடிச்சு இழுத்து நாஸ்டி பண்றியே " என்று எரிந்து விழுந்தாள் சஞ்சலா
" என்ன சஞ்சு, சின்ன குழந்தை எவ்வளவு ஆசையா ஓடி வருது " என்றபடியே குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி  முத்தமிட்டான் ராம்
" குழந்தைகளா   இதுங்க? குட்டிச்சாத்தானுங்க. வீட்டுக்குள் வந்து சோபாவில் ஏறி ஆட்டம் போடும் . எச்சில் கையோட நம்மை தொடும் . என்னதான் விரட்டி அடிச்சாலும் அடிபட்ட பந்து மாதிரி நம்ம கிட்டேயே வரும். இந்த ஒரு நியூசென்சுக்காகத் தான் இங்கிருந்து வீட்டை மாற்றணும்னு நினைக்கிறேன். எதுவும் சரியா அமைய மாட்டேங்குது " என்றபடியே வீட்டு வாசலுக்கு வந்த சஞ்சலா  " என்ன இது . வீடு பூட்டி இருக்கு ? " என்று தனக்குள் சொல்ல ,
" சாவி இந்தா, மம்மி தந்தா. பாட்டி உம்மாச்சி கும்பிட போச்சு ' என்று மழலையில் சொல்லி சாக்லட் கரை படிந்த கையை திறந்து காட்டியது சஞ்சலா அடித்து விரட்டிய  குழந்தை. அதன் கையிலிருந்து சாவியைப் பறித்த சஞ்சலா, கதவைத் திறந்து " உள்ளே வாங்க ராம் " என்றாள்
" ஸாரி சஞ்சு, இந்த குழந்தை கோயில்னு சொன்னதும்தான் எனக்கு அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சு. சீக்கிரம் வந்துடு, கோயிலுக்குப் போகணும்னு சொன்னாங்க நான் கிளம்பறேன் "
" மழை நிற்கட்டுமே "
" பரவாயில்லே .  நான் வர்றேன் " என்ற ராம் அவளின் அழைப்பை ஏற்காமல் அங்கிருந்து வெளியேறினான்
வானம் இருண்டு கிடந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் , நான் தேக்கி வச்சிருக்கிற தண்ணீரையெல்லாம் கொட்டித் தீர்த்து விடப் போகிறேன் என்பதுபோல பயமுறுத்தியது. ஆனால் ராமின் மனம் தெளிவாக இருந்தது . அதில் எந்த சஞ்சலமும் இல்லை. அசையாத மலையையும் அலையடிக்கிற கடலையும் ரசிக்கிற இவளுக்கு , ஒரு குழந்தையின் அன்பைப் புரிந்து கொள்கிற பக்குவம் இல்லாமல் போய்விட்டதே  என்று நினைத்து வேதனைப் பட்டான் .எனக்குத் தேவை ரசனையுணர்ச்சி உள்ள மனைவியல்ல. அன்பான அனுசரணையுள்ள ஒரு பெண்தான். அவள் படித்திருக்கவேண்டும் என்பதுகூட அவசியம் இல்லை  , என்னையும் என் அம்மாவையும்  புரிந்து நடந்துகொண்டால் போதும்  என்று தனக்குள் சொல்லிக் என்று கொண்டான்.
" பேச்சாளர்கள் நல்ல செயலாளர்களாக இருப்பது இல்லை "  எப்போதோ எதோ ஒரு புத்தகத்தில் படித்த  வரிகள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இப்போது ராமின் நினைவுக்கு வந்தது .

No comments:

Post a Comment