Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, February 09, 2013

Scanning of inner-heart ( Scan Report No.61 )

                                                                   நிதர்சனம் ? !

" என்ன ஸார். உங்களுக்குள்ளேயே சிரிச்சுக்கிறீங்க. என்னென்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேனே " என்று கேட்டான் தூயமணி.
" அப்பா, நீ ரோட்டைப் பார்த்து வண்டி ஒட்டுப்பா "
" பார்த்துதான் சார் ஓட்டறேன், எதை நினைச்சு சிரிச்சீங்க ? "
" அதோ பாரு, அந்த மரத்திலே " இந்தியா ஒளிர்கிறது ! " என்று ஒரு விளம்பரப் பலகை வச்சிருக்கு. அந்த மரத்தடியிலே ரெண்டு பேர் படுத்துத் தூங்குறாங்க பாரு " என்றான் கணேஷ்.
" அதிலே சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு ? "
" விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு . மணி பதினொன்றாகப் போகிறது. எதைப் பற்றியும் கவலைப் படாமல், விடிஞ்ச பிறகும் தூங்குகிற சோம்பேறிகள் இருக்கிறவரை இந்தியா எப்போ ஒளிரும்? எப்படி ஒளிரும் ? "
"தூங்கும்போது மட்டுமாவது, அடுத்தவனைக் கெடுக்கணும்கிற   நினைப்பு  ஏதும்  இல்லாமே,   மனுஷன் மனுஷனா இருக்கிறானே , அதை நினைச்சு சந்தோசப் படுங்க சார் " என்று தூயமணி சொல்லும்போதே " கிரீச் " என்ற அலறலுடன் லாரி  நின்று விட்டது.
" என்னப்பா ? "
" ட்ராபிக் ஜாம் ஸார் "
" ச்சே " என்று அலுத்துக் கொண்டான் கணேஷ் 
" மக்கள் தொகை பெருகிப் போச்சு . அதுக்கு ஈக்வலா வண்டிகளும் பெருகிப் போச்சு. ஆனால் பாதைகள் அப்படியேதானே இருக்கு. ஒரு ரோட்டில் நாலு வண்டி போகும்னு தெரிஞ்சா போதும் உடனே ரோட்டோரம் பத்து பேர் கடை போட்டுடறாங்க, இளநீ, டீக்கடை அது இதுன்னு." என்று சொல்லிக் கொண்டே தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வண்டிகளுக்கு ஹார்ன் கொடுத்தான் தூயமணி 
" யப்பா, உன்கிட்டே இருக்கிற ஹார்ன்  எல்லா வண்டியிலும் இருக்கு. போக வழிதான் இல்லே " என்று எரிந்து விழுந்தான் ஒரு டூ வீலெர் 
" காத்து நுழைய இடமில்லாத இடத்தில் கூட டூ வீலரும் ஆட்டோவும்  நுளைஞ்சிடுவானுக. அவனுகளே மூடிகிட்டு நிக்கும்போது உனக்கென்ன அவசரம் " என்று கிண்டலாக கேட்டான் அருகில்  நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி டிரைவர்.
" ஒருத்தனை ஒன்னு கேட்டுட்டா போதும், அத்தனை பேரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்திடுவானுக. சண்டாளனுக. சண்டை போடுற விசயத்தில் மட்டுமாவது ஒத்துமையா இருக்கிறானுகளே " என்று கணேஷின் காதருகில் கிசுகிசுத்த தூயமணி, லாரிக்காரனை சமாதானம் செய்யும் தொனியில் " சார், என்ன பிரச்சினை ? " என்றான் 
" என்ன , வழக்கம்போல சாலை மறியலா இருக்கும் " என்று அலுத்துக் கொண்டான் அவன்  
" என்ன, சாலை மறியலா ? எதுக்காம் ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டான் தூயமணி  
" ஏம்ப்பா, நீ இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன்தானே. வானத்திலிருந்து திடீர்னு குதிச்சிடலையே, பொழுது விடிஞ்சு பொழுது போனா சாலை மறியல் எந்த இடத்திலும் நடக்கலேன்னு கேள்விப் பட்டாதான் அது அதிசயம்.எது எதுக்கு தான் மறியல் போராட்டம் என்கிற விவஸ்தையே இல்லாமல் போயிட்டுது. புறம்போக்கு நிலத்திலே, கவர்மெண்டோட எந்தவொரு அப்ரூவலும் இல்லாமே  வீட்டைக் கட்டி குடிவந்திட்டு , சாக்கடைத் தண்ணி  போகலேன்னு  சாலை மறியல் பண்ணினா அந்தக் கொடுமையை எங்கே போய்  சொல்றது " என்று பதில் வந்தது 
அதன் பிறகு எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டான் தூயமணி. மூன்று மணி நேரம் கழித்து பாதை சரியாகி வண்டி ஓட ஆரம்பித்தது 
" என்னப்பா, மணி இப்போதே ரெண்டரையை தாண்டிவிட்டது. நாம் எப்போ கன்னியாகுமரி போய் எப்போ ரிடர்ன் ஆறது ? பெரிசு வாட்டி எடுத்துடுமே " என்று கவலையுடன் சொன்னான் 
" கவலைப் படாதீங்க சார், நீங்க வேலைக்குப் புதுசு . இந்த ரூட்டுக்கும் புதுசு . அதான் ஒர்ரி பண்ணிகிறீங்க. இந்நேரம் எல்லா சானலும் இந்த மறியல் பத்தி நியூஸ் போட்டுகிட்டே இருப்பாங்க. அதைப் பார்த்தே நாம வழியில் மாட்டிகிட்டு நிற்கிறதை பெரிசு தெரிஞ்சுக்கும் "
திருச்சியை தாண்டி லாரி ஓடிக் கொண்டிருந்தது. " சார், காபி சாப்பிடலாமா ?" என்று கேட்டான் தூயமணி 
" எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா. நாம சொன்ன டைம்க்கு போனாலே போதும்"  என்று சொல்லிவிட்டு கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தான் 
சடன் பிரேக் போட்டு வண்டி நின்றதை உணர்ந்த கணேஷ் தூக்கம் கலைந்து "என்னப்பா இங்கேயும் சாலை மறியலா? " என்றான் எரிச்சலுடன்
 " இதோ பார்க்கிறேன் சார் " என்று சொல்லி லாரியை விட்டு கீழே இறங்கிய தூயமணி, வண்டி நின்று போனதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தான்
" என்னப்பா ? ஆச்சா ? " என்று கேட்டு நிலை கொள்ளாமல் தவித்த கணேஷ், லாரியை விட்டு தானும் இறங்கி வந்து  "இன்னிக்கு நாம கன்னியாகுமரியில் லோட் இறக்கிட்டு இன்னிக்கு இரவே திரும்பியாகணும்  தெரியும்தானே ? "
என்று கேட்டான் .
" எனக்குத் தெரியும் சார். இந்த வண்டிக்குத் தெரியலையே. இஞ்சின் பால்ட். நாம  எதுவும் செய்ய முடியாது. மெக்கானிக் வரணும். அதுக்கு நான் ஏதாவது வண்டியைப் பிடிச்சு டவுனுக்குப் போயாகணும். நீங்க இங்கேயே இருந்து  சரக்கைப் பார்த்துக்கோங்க . நான் போயிட்டு வந்துடறேன். நல்ல வேளை, வண்டி ரோட்டோரம் நின்னு போச்சு . நடு ரோட்டில் நின்றிருந்தால் போகிற வருகிறவனெல்லாம் வசை பாடிட்டுப் போயிருப்பாணுக  " என்று சொல்லி விட்டு கணேஷின் பதிலுக்கு காத்திராமல், வழியில் போகிற வண்டிகளிடம் விரல்களால் சிக்னல் கொடுத்து லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தான்.வழியில் போகிற டூ வீலரை நிறுத்தி அவன் பின்னால் தொற்றிக் கொண்ட தூயமணி  மெக்கானிக் ஒருவரை அழைத்துக் கொண்டு வரும்போது இரவு மணி  ஒன்பது..
" சார் வண்டியிலிருந்து லோடை இறக்கணும் " என்றான் மெக்கானிக் 
" என்னப்பா விளையாடுறியா ? வண்டிக்குள் இருப்பது நூறு மூட்டை அரிசி. இறக்கி ஏத்தறது சாதாரண விஷயம் இல்லே" என்று சொன்ன கணேஷ் " ஏம்ப்பா  தூயா, வண்டியை எடுக்கும்போதே செக் பண்ணி எடுக்க மாட்டியா ? " என்று கேட்டு எரிந்து விழுந்தான்.
" மழை எப்போ வரும், குழந்தை எப்போ பிறக்கும்கிறது எப்படி உறுதி இல்லாத விசயமோ அதே மாதிரி வண்டி எப்போ நிக்கும் , எங்கே நிக்கும்னு யாராலும் சொல்ல முடியாது சார் "
" பேச்சில் மட்டும் குறைச்சல் இல்லே. எது சொன்னாலும் வள வளன்னு பதில் சொல்ல மட்டுமாவது தெரியுதே " என்றான் கோபத்துடன் 
அவனது செய்கை தூயமணிக்கு எரிச்சலைத் தரவில்லை. அவனுடைய பதட்டம் புரிந்ததால் பேசாமலிருந்தான் 
" சரிப்பா, மூட்டையை இறக்க ஆட்கள் கிடைப்பாங்களா ?"
" கஷ்டம்தான் சார், நீங்க கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க. நானும் இவரும் சேர்ந்து இறக்கிடறோம் . அதுக்கு தனியா பணம் கொடுத்திடுங்க " என்றான் மெக்கானிக்
விலகி நின்று வேடிக்கை பார்த்த கணேஷ், அவர்கள் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு  தானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு லோடை இறக்க ஆரம்பித்தான். எல்லா லோடும் இறங்கியபிறகு மணியைப் பார்த்தான் கணேஷ் . மணி அதிகாலை 3.30. அவனை மூட்டைகளுக்கு காவல் வைத்துவிட்டு மெக்கானிக்குடன் சேர்ந்து  வழியில் வந்த லாரியின் உதவியுடன், நின்று போன வண்டியை " டோ " பண்ணி எடுத்து சென்றான் தூயமணி.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. யாரோ தன்னை தட்டி எழுப்புவது தெரிந்து கண் திறந்து பார்த்தான்  கணேஷ்.
" நல்லா இருக்கு சார், நீங்க காவல் காக்கிற லட்சணம் . ஒரு பத்து மூட்டையை யாராவது நகர்த்திக் கிட்டு போயிருந்தா கூட உங்களுக்கு தெரியாது போலிருக்கு " என்று சிரித்துக் கொண்டே கேட்டவன், " இந்தாங்க சார் பாட்டிலில் தண்ணி இருக்கு முகம் கழுவிக்கோங்க . இந்தாங்க டீ சூடா இருக்கு குடிங்க " என்றான் 
" இப்போ மணி என்னப்பா ? " என்று கேட்டபடி கைக்கடிகாரத்தைப் பார்த்த கணேஷ் " பத்து மணியா ? அவ்வளவு நேரமா நான் தூங்கி இருக்கிறேன்? நீ எப்போ வந்தே ? " என்றான் பதட்டத்துடன்.
" சார் நான் போயிட்டு ரெண்டு மணி நேரத்திலே வந்துட்டேன். இங்கே வந்து பார்த்த நீங்க நல்லா அசந்து தூங்குறீங்க "
" நான் அப்படி தூங்கிற ஆள் இல்லையே " என்று இடை மறித்து சொன்னான் கணேஷ்  
" நீங்களா தூங்கலே. வண்டிக்குள் இருந்து நீங்க இறக்கி வைத்த லோட் உங்களை தூங்க வச்சிடுச்சு " என்று சொல்லி சிரித்தான் தூயமணி 
" விளையாட உனக்கு நேரம் காலமே கிடையாதே "
" அட விளையாடலே சார் . ராத்திரி முழுக்க மூட்டை இறக்கி வச்சீங்க. அந்த களைப்பில் தூங்கினீங்க. அதான் நிஜம். நேற்றிலிருந்து நீங்க எதுவும் சாப்பிடலே, டென்சன் வேறே . அதான் உங்களை காலையிலே  எழுப்பலே. சூடா  இருக்கு டீ. குடிங்க, கிளம்பலாம் "
" பெரிசு கத்துமே, சரியான டைம்க்கு லோட் போகலேன்னு "
" கத்தும்தானே ? தலையை வாங்கிடாதே. அட, சூடு ஆறுமுன்னே டீயை குடிங்க. ஆளை வச்சு நான் திரும்பவும் லோடை வண்டிக்கு மாத்திட்டேன், வாங்க கிளம்பலாம் " என்றான் 
வண்டி தன் பயணத்தைத் தொடர்ந்தது. போகிற வழியில் ஒரு மரத்தடியில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த கணேஷ்  " இந்த மரத்தில் ' இந்தியா ஒளிரும் ' என்கிற விளம்பரப் பலகை இல்லையே " என்றான் 
" என்ன சார் கிண்டலா "
" இல்லேப்பா, விடிந்தபிறகும் தூங்குகிற எல்லாருமே சோம்பேறிகள் இல்லே. மற்றவங்களுக்காக அவர்கள் இரவு முழுக்க , மற்றவர்கள் தூங்கும்போது, இவர்கள் விழித்திருந்து வேலை பார்த்தவர்களாக இருக்கலாம். இந்த மாதிரி உழைப்பாளிகள் இருக்கும்போது இந்தியா ஒளிரும் என்பதில் சந்தேகமே இல்லை" என்றான் 
" ஒரே ஒரு ராத்திரி .. அது உங்களுக்கு ஒரு பெரிய உண்மையைப் புரிய வைத்து உங்களிடம் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கு " என்று சொல்லி சிரித்தான் தூயமணி  

No comments:

Post a Comment