Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 11, 2013

Scanning of inner heart ( Scan Report No.57 )

     குத்து விளக்கும், சில விட்டில் பூச்சிகளும் !

" மன்னிக்கணும் ஸ்வாமி, ரிலாக்ஸ்டா உட்கார்ந்து பேப்பர் படிச்சிண்டுருக்கேள்.  காலங் கார்த்தாலே வந்து உங்களை டிஸ்டர்ப் பண்றேன்னா அதுக்கு ஒரே ஒரு  காரணம், உங்க பொண்ணு ஆபீஸ் கிளம்பறதுக்கு முன்னாடி வந்து உங்களைப்  பிடிக்கணும்கிறதுதான். குழந்தை  இன்னும் ஆபீசுக்குக் கிளம்பிலியோன்னோ "  என்று சொல்லிக்கொண்டே திண்ணையில் வந்து உட்கார்ந்த  தரகர்,   வீட்டின்
 உட்பக்கம் திரும்பி, " அம்மாடி. கொழந்தே . சூடா ரெண்டு காப்பி. அதென்னவோ  தெரியலே, நீ கலந்து குடுக்கிற காப்பிக்கு தனி மணமும் ருசியும் இருக்கறதுடி.  அப்படி  என்னத்தைத்தாண்டி கலக்கறே,  இந்த ருசியும் மணமும் வர்றதுக்கு ?   ஒரு சில ஆத்துலே பொண்ணைப் பெத்தவா, பொண்ணைக் கல்யாணம் பண்ணி   ஆத்தை விட்டு அனுப்பிட்டா அவ, கொண்டு வந்து குடுக்கிற மாசச்சம்பளம் கையை விட்டுப் போயிடுமேன்னு  கவலைப்படுவா ..  உங்க அப்பா எ ன்னடான்னா நீ தர்ற காப்பி   குடிக்கிற பாக்கியம் இல்லாமே போயிடுமே ன்னு வருத்தப் படறார் .  சும்மா   சொல்லக்கூடாதுடி கொழந்தே .. நன்னாவே கலக்குறே .  அதுக்குன்னு ஏதாவது   பார்முலா வச்சிருக்கிறியா. இருந்தா கொடேன்,  எங்காத்துக்காரிக்கு கொண்டு  போய் குடுக்கிறேன். கடன்காரி.. 
காபிங்கிற பேர்லே எதையோ கொண்டு வந்து   நீட்டறா. கடனேன்னு பகவான் மேலே பாரத்தைப் போட்டுட்டு குடிச்சுடறேன் .   கவர்மெண்ட் ஆபீசில் அடிக்கடி ஆட்குறைப்பு செய்யணும்னு அறிக்கை விடறா.   அதுக்கு சரியான காரணம் கிடைக்காமே திணறுறா போலிருக்கு .   எங்காத்துக்காரி  கலக்கிற காப்பியை ஒவ்வொரு கவர்மெண்ட் லேப்க்கும் அனுப்பி, " இது  என்னன்னு கண்டுபிடிச்சு ரிப்போர்ட் அனுப்பணும்னு  ஒரு ஆர்டர் ஸ்ட்ரிக்ட்டா   போட்டுட்டான்னு  வச்சுக்கோ, கையில் கொண்டு வந்து கொடுத்தது என்னன்னு   தெரியாமே, அவனவன் ரிசிக்னசன் லெட்டெர் கொடுத்துட்டுப் போயிடுவான் .   என்னடி கொழந்தே ,காபியைக்  
கொண்டு வந்து வச்சிட்டு சைலண்டா போறே.   ஜோக் சொன்னேனே, உனக்கு சிரிப்பு வரலியா ? அசடே, சிரிக்கிற மாதிரி ஒரு  பாவ்லா பண்னேண்டி ? " என்றார் 
காபியை அவர் கையிலெடுத்துக் குடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த
சிவராமன், " என்ன ஓய் , ஒரு கப் காபிக்கு இவ்வளவு பெரிய லெக்சர் எல்லாம்   தேவையா  ? " என்றார்
 " நீங்க என்ன புரியாத ஆளா இருக்கிறேள் ? எங்கேயுமே சில பாலிடிக்ஸ் யூஸ்   பண்ணினாதான் காரியமே நடக்கிறது .  சில இடத்துலே சோப்பு போடணும் .   சில மனுஷாளை மிரட்டணும் . சிலதுங்களை கீழே விழுந்து நமஸ்கரிக்கணும் . எதுக்குமே   மசியாமே , எனக்கு வெட்ட வேண்டியதை வெட்டினாத்தான் உன்னை   ஏறெடுத்தே பார்ப்பேன்னு அடம் பிடிக்கிற வாளும் இருக்கிறா . அததுக்கு ஒரு   டெக்னிக் இருக்கு . ஜாதகக் கட்டை கையில் தூக்கிண்டு அலையற என்னைப்   போல கல்யாண தரகருக்கு அத்தனை டெக்னிக்கும் தெரிஞ்சிருக்கணும் .   இது எல்லாத்தையும் ஜீரணம் பண்ணிண்டு நம்ம கிட்டே  " உனக்கும் பெப்பே,   உங்கப்பனுக்கும் பெப்பே"ன்னு சொல்றவாளும் இருக்கிறா, உம்மைப் போல !   உமக்கு ஜாதகத்தைக் காட்டிக் காட்டி நேக்கு அலுத்துப் போயிடுத்துன்னா .
 இதுவே மத்தவா வீடா இருந்திருந்தா, " ஏங்காணும் .. நீங்க நிஜமாவே உங்க  பொண்ணுக்கு வரன் தேடறேளா . இல்லே உம்ம பொண்ணு ஆத்துலே   நமக்கு  எந்த ஏற்பாடும் பண்ணலியேன்னு நினைச்சிடக் கூடாதுங்கிறதுக்காக   சும்மா ஒரு " ஷோ " காட்டறேளான்னு கேட்டிருப்பேன். உம்ம விசயத்தில்   அப்படியும் நினைக்க வழியில்லே " என்று அலுத்துக் கொண்டார் தரகர்.  
 " என்னை என்ன பண்ணச் சொல்றீர். வெளியூர் வரன் வேண்டாம்னு என்
 பொண்ணு சொல்றா. வீட்டோடு வந்து இருக்கிற வரன் வேண்டாம்னு நாங்க  ரெண்டு பேரும் பிரியப் படறோம்.  ஏதாவது டிப்பெரன்ஸ் ஆப் ஒப்பினியனில்  வாய் வார்த்தை முத்திட்டா,அப்புறம் யாருக்கும் மரியாதையும் இருக்காது .  மன நிம்மதியும் இருக்காது. என்னிக்கும் என்   பக்கத்திலேயே இருக்கணும். அதே சமயம்  யாரோட கௌரவமும் பாதிக்காமலும் இருக்கணும். ஒரே பொண்ணு .  அவ  பிறந்ததிலிருந்து தாய் முகத்தையே பார்க்காத பொண்ணு. காக்கா குருவிங்க  தன்னோட குஞ்சை சிறகுக்குள் வைத்து பொத்திப் பொத்திப் பாதுகாக்குமே  அதே மாதிரிதான் நான் இவளை வளர்த்தேன். பறவைகளோட  குஞ்சுகளாவது
இறகு முத்திப் பறவையாயிட்டா அதது பாட்டைப் பார்த்துகிட்டு பறந்து
போயிடும்.   நான்  வளர்த்தது பூவாச்சே. அதனாலே அதுக்குத் தகுந்த இடமாப்  பார்த்துக் குடுக்கணும்ன்னு நினைக்கிறேன் " என்றார் சிவராமன்.
  " போச்சுடா . அப்ப இன்னிக்கி நான் வந்தது வேஸ்ட்தான்.  இன்னிக்கி நான்  கொண்டு வந்த ரெண்டு வரனில் ஒண்ணு பெங்களூர். பையன் IRSO ல்  கம்ப்யூட்டர் இஞ்சினியர். அடுத்துது சேலம் . அவாளும் உம்மைப் போல ஒரே  ஒரு பையனைப் பெத்து வச்சிண்டு அலை மோதிண்டு இருக்கிறா. பையன்  இப்போ இருக்கிறது  கன்னியாகுமரியிலே. இன்னும் ரெண்டு மாசத்திலே  ட்ரான்ஸ்பர் வாங்கிண்டு சேலம் வந்திடுவான். எதை பிக்ஸ் பண்ணலாம் .  ரெண்டுமே உம்ம அந்தஸ்துக்கு ஏற்ற இடம் " என்ற படியே ஜாதகத்தை  நீட்டினார் தரகர்.
 சிவராமன் அதை கைகளில் வாங்காமல், " லோக்கலி ல் எதுவும் வரன் இல்லையா ? "  என்று கேட்டார் விரக்தி தோய்ந்த குரலில்.
 " உம்மோட பெரிய வம்பாப் போச்சு. அவனவன் பொண்ணை அமெரிக்கா
 ஆப்பிரிக்கான்னு அனுப்பறான். சந்தர்ப்பம் கிடைச்சா மத்த கிரகங்களில்
 இருக்கிற மனுஷாளுக்கும் பொண்ணைக் குடுக்க ரெடியா இருக்கிறா . அந்த அளவுக்கு  பொண் குழந்தைங்களை கரையேற்றி விடறதில் பெத்தவா ஆர்வமா  இருக்கிறா   நீர்  என்னடான்னா சென்னையில்தான் வரன் வேணும் . அதுவும் உம்ம ஆத்துப்  பக்கமா வேணும்னு அடம் பிடிக்கிறீர் . அந்தமாதிரி வரன் சென்னையில்  இல்லாமே இல்லை   என்ன .. உம்ம அந்தஸ்துக்கு தகுந்தாப்லே இல்லே .  இதோ இந்த வரன் அடுத்த தெருவிலேயே இருக்கிறான். இன்னிக்குக்  காலையில்தான் இந்தப் பையனோட அம்மா இந்த வரனோட ஜாதகத்தைக்  குடுத்தா . ஏணி வச்சா கூட உம்ம அந்தஸ்துக்கும் அவா குடும்பத்துக்கும்  எட்டாது . அப்பா கிடையாது. இவனுக்குப் பின்னாலே நாலு பொண்ணுக.  பையன் ஒரு பிரைவேட் கம்பனிலே வொர்க் பண்றான் .  அப்படியொண்ணும் வெளியே 
சொல்லிக்கிறாப்லே வருமானம் கிடையாது.  அம்மாக்காரி நாலு வீடுகளில்  சமையல் வேலை பண்றா. ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்கு ரெடியா  நிற்கிறா.. மற்ற ரெண்டு பொண்ணும் ஸ்கூல்க்குப் போறா. கல்யாண வயசில்  ரெண்டு பொண்ணுங்களை வச்சிண்டு பையனுக்கு வரன் தேடச் சொல்றேளே  பையனுக்கு இப்ப என்ன அவசரம்னு கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா  தெரியுமா ? வேலை பார்க்கிற பொண்ணாப் பார்த்து முதலில் பையனுக்கு  கல்யாணம் பண்ணி வச்சிட்டா, அவ கொண்டு வர்ற வருமானத்தில் ரெண்டு  பொண்ணுங்களையும் கரை சேர்க்கலாமேங்கிறா .அந்த ஆத்துலே யாராவது  பொண்ணு கேட்டா , காய்கறி வாங்கிறப்ப கறிவேப்பிலை கொத்து மல்லி  கொசுறா   தருவாளே, அந்த மாதிரி இன்னொரு பொண்ணையும் தர தயாரா  இருக்கிறா .  பாவம் .... பொண்ணு கேட்பார்தான் இல்லை " என்றார் தரகர் .
அடுக்களையில் சமையல் வேலையை கவனித்துக் கொண்டே, வாசல்
திண்ணையில் உட்கார்ந்து தரகர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்த
வாசுகி , வாசலுக்கு வந்து, " அப்பா, ஒரு நிமிஷம் இங்கே வாங்களேன் " என்று  குரல் கொடுத்தாள்.
 " என்னடி குழந்தே, அடுத்த காபி ரெடியா ? அப்பாவை மட்டும் தனியா அழைச்சுக்  குடுக்காதேடி . அப்பப்ப என் கண்ணிலும் காட்டு, மாட்டுக்குத் தண்ணி காட்டற  மாதிரி " என்றார் தரகர்
 உள்ளே வந்த சிவராமனிடம் " அப்பா எனக்கு இந்த வரனைப் பேசி முடிவு
 பண்ணுங்கோ " என்றாள் வாசுகி
அதிர்ந்து போன சிவராமன் " நம்ம அந்தஸ்துக்கு தகுந்த இடமில்லேன்னு
 தரகரே சொல்றாரே "
  " எனக்குப் பிடிச்சிருக்குப்பா "
  " நாம இன்னும் வரனை நேரில் பார்க்கலையே "
  " பரவாயில்லேப்பா "
  " என்னடா வாசு , குழந்தை மாதிரி பேசறே ?"
  " இல்லேப்பா .. நான் ஒரு முடிவோடதான் பேசறேன் ."]
"அப்ப தரகர்கிட்டே நீயே டீடைல்ஸ் கேட்டுக்கோ.கல்யாண விஷயத்தில்    உன்னோட முடிவுதான், எனக்கு முக்கியம் "
தரகரை உள்ளே அழைத்து விஷயத்தை சொன்னபோது ஸ்தம்பித்துப் போய்  நின்று விட்டார் தரகர்.
 " என்னடி குழந்தே சொல்றே ? நீ வாங்கிற சம்பளத்தில் கால் பங்கு கூட
  இருக்காது அவனோட வருமானம் . உங்காத்து பாத் ரூம் சைஸ் கூட இல்லே   அவா வீடு .   அந்த ஆத்துக்கு நீ எப்படிடி ? நீ சொல்றதை என்னாலேயே   டைஜஸ்ட் பண்ண முடியலே .உங்க அப்பா எப்படி சம்மதிப்பார் ? " என்றபடி   சிவராமனை ஏறிட்டுப் பார்த்தார் தரகர்
 " நீங்க இப்போ போயிட்டு அப்புறமா வாங்கோ. அவளுக்கும் ஆபீசுக்கு நேரம்  ஆயிட்டுது . ராத்திரி ரெண்டு பேருமா பேசி முடிவு பண்ணிட்டு, நாளைக்குக்  காலையில் எங்களோட முடிவை சொல்றோம் " என்றார் சிவராமன் .
"மாமா , நாளைக்கும் என்னோட பதில் இதுதான் " என்றாள் வாசுகி உறுதியான   குரலில் .
 அன்று இரவு வாசுகியிடம் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார் சிவராமன்.  " வாசு  ஏண்டா இப்படி ஒரு முடிவுக்கு வந்தே ? தரகருக்கே அந்த வரன் பற்றி நல்ல  அபிப்ராயம் இல்லே. தரகர் சொன்ன பெங்களூர் இல்லாட்டா சேலம் வரன்  இந்த ரெண்டில் ஒண்ணை செலக்ட் பண்ணு . அந்த ஊருக்கே நானும் குடி  வந்திடறேன். என்ன காரணத்துக்காக இந்த வரனை பேசி முடிக்க சொல்றே ?   புரியும்படி சொல்லுடா  "
  " அப்பா, இந்த முடிவுக்கு நான் வர ரெண்டு காரணம் உண்டு. நான் பிறந்ததும்    அம்மா இறந்துட்டாங்க. எத்தனையோ பேர் உங்களை  வற்புறுத்தியும் நீங்க    வேறே கல்யாணம் பண்ணிக்கலே. என்னை வளர்த்து ஆளாக்கிறதுதான் உங்க    லட்சியம்னு இருந்துட்டீங்க. என்னை கண்ணுக்குள்  வச்சு பொத்திப் பொத்தி    வளர்த்ததா  பாட்டி எனக்கு பல தடவை சொல்லி இருக்கிறா . அந்த கண்கள்    முன்னாலேதான் நான் வாழ்நாள் பூரா இருக்கணும். கடைசி வரை கல்யாணம்    பண்ணிக்காமே உங்ககூட இந்த வீட்டிலேயே இருந்திடறேன்னு நான்    சொன்னா , அதுக்கு நீங்க சம்மதிக்க மாட்டீங்க. உங்களைப் பிரிஞ்சு ரொம்ப
தூரம் போறதில் எனக்கு இஷ்டமில்லே. வீட்டோட மாப்பிள்ளையா ஒருவரை    கொண்டு வர்றதில் ரெண்டு பேருக்குமே இஷ்டமில்லே. அடுத்த தெருவில்    ஒரு  வரன் இருக்குன்னு தெரியறப்போ அதை நாம் ஏன் மிஸ் பண்ணனும்.    உங்களை  நானும் என்னை நீங்களும் தினமும் பார்த்துக்கலாம் "
" ரொம்பவும் கஷ்டத்தில் இருக்கிற குடும்பமா இருக்குதேம்மா. அதுவும்
 இல்லாமே அந்தப் பையனுக்கு படிப்பு, வருமானம் எல்லாம் உன்னை விட
 கொறைச்சல்ம்மா. அந்த இடத்தை நாமே செலக்ட் பண்றதுக்கு பெருமையா     சொல்லிகிறதுக்கு எதுவுமே இல்லியேடா."
" ஆம்பிளைங்கிற தகுதி இருக்கே, அது ஒன்னு போதும்ப்பா. இன்னொரு
  முக்கிய  காரணமும் இருக்கு. நான் சின்னவளா இருக்கிறப்போ சன்
டிவியிலே  விசுவின் அரட்டை அரங்கம் பார்த்தப்போ முடிவான எண்ணம்   இது. அதிலே பேசறப்போ ஒருத்தர், " கவர்மெண்ட் ஆபீசிலும் சரி , தனியார்   நிறுவனங்களிலும் சரி, வேலை வாய்ப்பில் பெண்களுக்குத் தான் எப்பவும்   முன்னுரிமை கொடுக்கிறாங்க.  அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நல்ல   நிலைக்கு  வரும் பெண்கள், வேலை வாய்ப்பு கிடைக்காத ஒரு இளைஞனைக்   கல்யாணம் பண்ணிக்க முன் வருவாங்களா? ஆண்களை மட்டும் குறை  சொல்றாங்க, தன்னை விட மேலான நிலையில் இருக்கும் பெண்ணைத்தான்   கல்யாணம் பண்ணிக்க எந்த ஆணும் முன் வருவான்னு. எந்தப் பெண்ணாவது தன்னைவிட எல்லா வகையிலும் தகுதி குறைந்த ஒருத்தனை கல்யாணம்  செய்து கொள்ள முன் வருவாளானு கேட்டார். அப்போ இருந்து எனக்குள்  ஒரு ஆசை இருந்துச்சு . ரொம்பவும் கஷ்டப் படற ஒரு குடும்பத்துக்கு மருமகளாப் போய் அந்த வீட்டு நிலையை உயர்த்திக் காட்டணும்னு.  அந்தக்  குடும்பம் சந்தோசப் படறதைப் பார்த்து நான் சந்தோசப் படணும். அந்த ஆசையை நிறைவேற்ற ஒரு சந்தர்ப்பம் நம்ம வீடு தேடி வந்திருக்குப்பா "    என்றாள் வாசுகி.
 " நீ சொல்றதைக் கேட்க நல்லாத்தான் இருக்கு. இது நடைமுறைக்கு ஒத்து வருமாடா ? எதையும் யோசிச்சு முடிவு பண்ணு. நீ ஒரு முடிவு பண்ணினா அதுக்கு குறுக்கே நான் நிற்க மாட்டேன் " என்றார் சிவராமன்.
அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தேறியது.
அலுவலகத்தில் சக ஊழியர்களிடமும் தோழிகளிடமும், தனக்குத் திருமணம்  என்று சொன்னதைக் காட்டிலும் " எனக்கு ஒரு குடும்பம் கிடைக்கப் போகுது  அங்கே எனக்கொரு அம்மா, நாலு தங்கைங்க இருக்கிறாங்க " என்று  சொன்னதுதான் அதிகம் .
 " சரியான அசடா இருக்கிறியே. நாங்கள்லாம் இருக்கிற மாமியார் நாத்தனார்  கொழுந்தனாரை எங்கே கொண்டு போய் தலை முழுகலாம்னு தெரியாமே  தவிக்கிறோம். நீ என்னடான்னா அம்மா கிடைக்கப் போறா, ஆட்டுக்குட்டி கிடைக்கப் போகுதுன்னு சொல்றே. லூஸு , வேலியிலே போற ஓணானைப்  பிடிச்சு மடியிலே கட்டிக்கிட்டு, அப்புறம் குத்துது குடையுதுன்னு அவஸ்தைப்  படாதே " என்றார்கள்
 கல்யாணத்துக்கு சில நாட்கள் முன்பாக, ஒரு நாள் .... " அப்பா, ஏம்ப்பா
 'உம்'ன்னு  இருக்கிறீங்க ? " என்று கேட்டாள்  வாசுகி
 " ஒண்ணுமில்லேடா "
 " உங்களை விட்டுட்டு அடுத்த தெருவில்தான் இருக்கப் போகிறேன். அதற்கே  வருத்தப் படறீங்களேப்பா " என்றாள் வாசுகி வருத்தத்துடன்
அவளை சமாதானப் படுத்துவதற்காக " இல்லேடா, நீ ஆபீஸ் விட்டு வந்ததும்  எனக்குக் காபி கலந்து கொடுத்துட்டு நீயும் குடிப்பே. அதை நினைச்சேன். சும்மா சொல்லக்கூடாதுடா, தரகர் சொல்ற மாதிரி உனக்கு கைமணம் இருக்கத்தான்  செய்யுது.  இனிமே தினமும் ராத்திரி ஏழு மணி ஆனா போதும், உனக்குப் புரை  ஏறும். ஏன்னா அது நீ எனக்கு காபி தர்ற டைம் ஆச்சே " என்றார் சிவராமன்.
   " அப்பா இப்படிப் பண்ணினா என்ன ? "
   " என்ன ? இந்த வரனை வேண்டாம்னு சொல்லிடலாமா ? "
   " போங்கப்பா .  நான் என்ன சொல்ல வர்றேன்னா , இனிமே நீங்க தினமும் அந்த   வீட்டுக்குக் காபி குடிக்க வாங்களேன்.  தினமும் நீங்க கோவிலுக்குப் போகிற  பாதைதானே அது. வீட்டுக்கு வந்து காபி குடிச்சிட்டுப் போங்க "
  " இது வீட்டோடு ஒருத்தரை மாப்பிள்ளையா கொண்டு வர்றதை விட கேவலமா   இருக்குடா "
  " அப்பா, என்னை முழுசா சொல்ல விடுங்கப்பா "
  " சொல்லுடா "
  " ஹோட்டலில் போய் நல்ல காபி குடிக்கிறதுன்னா கொறஞ்சது ஒரு இருபது   ரூபா ஆகும்தானே ? ஒரு மாசத்துக்கு 600 ரூபாய் அதை என்கிட்டே    குடுத்துடுங்க "
  " ஏன்ம்மா ? "
 " அங்கே எனக்கு நாலு தங்கைங்க இருக்கிறாங்களே . அவங்களைக் கரை
   சேர்க்கும் பொறுப்பு எனக்கு இருக்கேப்பா. பெரியவ ரெண்டு பேரும்  + 2
   முடிச்சிட்டு வீட்டில் இருக்கிறதா தரகர் மாமா சொன்னார். அவங்க ரெண்டு   பேரையும்   கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்து விடணும் . இன்றைக்கு  கம்ப்யூட்டர்  தெரிஞ்சுகிட்டாதான் வேலை கிடைக்கும்கிற நிலைமை. அவங்க  ரெண்டு பேரும் கம்ப்யூட்டர் கோர்ஸ் போய்க்கிட்டே கரஸ்பாண்டஸ் கோர்ஸ்   சேர்ந்து டிகிரி முடிச்சா அவங்க பியுசர் நல்லா இருக்குமே. அடுத்த ரெண்டு   பேரும் இப்போதைக்கு ஸ்கூலுக்குப்  போறவங்கதான் . இருந்தாலும் அவங்க மேற்படிப்புக்கு   இப்பவே  சேர்க்க ஆரம்பிச்சா தான் பின்னாலே கஷ்டப் படாமல் இருக்கலாம்.   அதனால் காபிக்கு ஒரு ரேட் போட்டு அதை என் பேரில் R D  கட்டிடுங்கப்பா "  என்றாள் வாசுகி
 " ஏண்டா வாசு, சாப்பாட்டுக்கும் வந்திடறேன். அதுக்கும் ஒரு ரேட் போட்டுக்   குடுத்திடறேன். "
 " நீங்களாவது வந்து சாப்பிடுவதாவது ? அம்மா இறந்த பிறகு, அம்மா வழி
 சொந்தக்  காரங்க வீட்டுக்குப் போனாக் கூட, அங்கே கை நனைக்காமே தான்  வருவீங்க. இதை பாட்டி அடிக்கடி சொல்லுவா. நீங்களாவது சம்பந்தி வீட்டில்   சாப்பிடுவதாவது ! " என்றாள் வாசுகி நம்பிக்கை இழந்த குரலில்.
  " சரிடா, உன் ஆசைப் படியே தினமும் வந்து காபி குடிக்கிறேன். உன் பேரில்    மாதம் ஆயிரம் ரூபாய் R D கட்டிடறேன். போதுமா ? "
 " அப்பா கல்யாணத்தை எவ்வளவு சிம்பிளா வைக்க முடியுமோ அவ்வளவு   சிம்பிளா வச்சுக்கலாம் "
 " ஏண்டா ? "
 " கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு பண்ண நினைக்கிறீங்களோ அதை என்   பேரில் பிக்செட்டில் போட்டுடுங்க.  தங்கைகளைக் கல்யாணம் பண்ணிக்   குடுக்க அது கை கொடுக்கும். கல்யாணத்துக்குப் பிறகு அம்மாவை சமையல்   வேலைக்கெல்லாம் போக வேண்டாம்னு சொல்லிடுவேன் . இவ்வளவு காலம்   அவங்க நெருப்பில் வெந்தது போதும், வீட்டில் உட்கார்ந்து நிம்மதியா ரெஸ்ட்   எடுங்கன்னு சொல்லிடப் போறேன் "
  " பலே பலே ப்ளான் எல்லாம் பெரிசாத்தான் இருக்கு. எப்படியோ நீ அங்கே   சந்தோசமா இருந்தா சரிதானம்மா "
 வாசுகியின் ஆசைப் படியே கல்யாணம் வெகு சிம்பிள் ஆக நடந்தேறியது 
 புருஷன் வீட்டில் காலடி எடுத்து வைத்ததுமே, மாமியாரின் கைகளை தன்
 கைகளில் பிடித்துக் கொண்டு " அம்மா, நீங்க இனி வேலைக்கென்று எங்கேயும் வெளியே போக வேண்டாம்.. வீட்டில்தான் இருக்கணும் " என்றாள் வாசுகி  கெஞ்சலாக.
 " ஓகோ .. வீட்டில் இருந்து கொண்டு, வெளியில் போயிட்டு வர்ற உனக்கு நான்  வடிச்சுக் கொட்டணுமா ? இதோ பாருடி, நீ சொன்னாலும் சொல்லாட்டாலும்  நான் வீட்டில்தான் இருக்கப் போறேன் .. அதுக்காக, வேலைக்குப் போகிற உனக்கு காபி கலந்து கையில் குடுப்பேன்னு கனவு கினவு காணாதே .  வீட்டுவேலை  எல்லாத்தையும் முடிச்சிட்டு ஆபீஸ் போகிற வழியைப் பாரு " என்றாள் சீதையம்மா கடுகடுப்பாக
 " அதிலே எனக்கு எந்த பிரச்சினையும் இல்லேம்மா . எங்க வீட்டில் எல்லா  வேலையையும் முடிச்சிட்டுதான் நான் ஆபீஸ் கிளம்பிப் போவேன். அங்கே  ரெண்டு பேருக்காக செய்வேன். இங்கே ஏழு பேருக்காக செய்யப் போகிறேன்  அவ்வளவுதானே வித்தியாசம் . மத்தபடி எல்லாமே எனக்குப் பழக்கப் பட்ட  வேலைதான் " என்றாள் வாசுகி
 " வார்த்தைக்கு வார்த்தை வாயாடிண்டு இருக்காமே, கேட்கிறப்போ மட்டும்  வாயைத் திற. போதும் " என்றாள் சீதை.
 இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை வாசுகி
 எடுத்ததற்க்கெல்லாம்  குறைகண்டு பிடித்துக் கொண்டிருந்தாள் சீதை. வீட்டில் இருந்த நான்கு பெண்களையும், வாசுகிதான் தங்கையாக நினைத்துக் கொண்டாடிக் கொண்டிருந்தாளே தவிர அவர்கள் எல்லோருமே நாத்தனார் ஸ்தானத்தை விட்டு கொஞ்சமும் இறங்காமல் இருந்தார்கள், கடைக் குட்டி உட்பட . கணவன் ஸ்ரீராம்  பாராமுகமாக நடந்து கொண்டான் . முதலில் அதை சங்கோசம்  என்று நினைத்தாள் வாசுகி. பிறகுதான் தெரிந்தது , அது அவனுக்குள்இருக்கிற தாழ்வு மனப்பான்மை என்பது . அதைப் போக்க வாசுகி மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாயின. சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் சிடுசிடுத்தான். ஏதாவது கேட்டால் " நீதான் மெத்தப் படிச்சவளாச்சே, உனக்கு தெரியாதா ? நீ என்னை ஆழம் பார்க்கிறீயா ? "  என்று இரைய, வீ ட்டிலிருந்தவர்கள்  நமட்டுச்சிரிப்பு சிரித்தார்கள்
 ஆனால் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப் படாமல், அதே சமயம்  தன்னுடைய கடமையில் எந்த குறையும் வராதபடி நடந்து கொண்டாள் வாசுகி.
  அன்று ..  ஆபீசுக்குள் நுழையும்போதே தலையை வலிப்பது போல் உணர்ந்தாள்  வாசுகி . நேரம் ஏற ஏற வலி அதிகமாகவே, லீவு எழுதி வைத்து விட்டு வீட்டுக்கு  வந்தாள். வீ ட்டுக்குள்  பேச்சுக் குரலும் அதில் தன பெயர் அடிபடுவதும் தெரிந்து  சற்று நிதானித்தாள்.
" ஆத்துக்கு வாசுகி வந்துட்டான்னு கேள்விப் பட்டேன் . என்னோட மூத்த
 பொண்ணுக்கு ரெண்டாவது பிரசவம்னு மைசூர் போயிட்டேன் . அதான்  
 அவளுக்கு ஒத்தாசையா  ஆறு  மாசம் அங்கேயே தங்கிட்டேன். நேத்து தான்   வந்தேன் . வந்தபிறகுதான் தெரிஞ்சுது உன் பிள்ளைக்கு கல்யாணம் ஆன  விசயமும்  உனக்கு அதில் கொஞ்சம்கூட விருப்பம் கிடையாதுங்கிறதும். ஏண்டி சீதே   பொண்ணு நல்லாயில்லையா ? "
 " அதெல்லாம் ஒரு குறைச்சலும் இல்லே . ரதியாட்டமா இருக்கிறா. மாசம்   அம்பதாயிரம் சம்பளமாம் . வசதியான வீட்டுப் பொண்ணு, விரும்பியே இந்த   வீட்டுக்கு மருமகளா வந்திருக்கிறான்னா அதுக்கு என்ன காரணம்னு  தெரியலே. என்னதான் திட்டித் தீர்த்தாலும் தணிஞ்சு போயிடறா. இந்த வீட்டுக்கு வர ஆசைப் பட என்ன காரணம்னு கேட்டா டிவி யில் எவனோ என்னவோ  சொன்னானாம். அதை செய்ஞ்சு பார்த்தேன்னு சொல்றா. எதுவும் நம்பறாப்லே    இல்லே. என்ன வில்லங்கம்னு தெரியலே . எங்காவது கெட்டுக் குட்டிச்சுவரான
பொண்ணை என் பிள்ளை தலையில் கட்டிட்டாங்களோ என்னவோ. டீவி யில்   சொல்லித்தர்ற சமையல் குறிப்பைக் கேட்டுட்டு சமையல் பண்ணினாலே சரிப்பட்டு வராது . டீவி யில் எவனோ சொன்னதைக்ட்டு குடும்பம்  நடத்திப்   பார்க்க வந்தேன்னு ஒருத்தி சொன்னா  அதை நம்ப முடியலே. அவ அப்பன்காரன் ஒருத்தன் , இவ ஆத்துக்குள்ளே வரும்  போதே அவனும் காபி குடிக்க  நுழைஞ்சிடறான். நம்மாத்துக் குழந்தைங்க  அவனுக்கு " திருக்கழுகுன்றம்   கழுகு " ன்னு  பேர் வச்சிருக்கிறா. என்ன திட்டத்தோட அவ இந்த வீட்டுக்குள் வந்திருக்கிறானு தெரியலே .ஸ்ரீராம்  கிட்டே கேட்டா " நான் மட்டும் விரும்பியா அவளோட குடும்பம் நடத்தறேன் ? கொஞ்சம் பொறுமையாயிரு. தங்கைங்க நல்ல நிலைக்கு வரட்டும் . அதுக்குப்  பிறகு  இதுக்கெல்லாம் ஒரு வழி பண்ணலாம்கிறான். சமுத்திரத்தில் எப்போ அலை ஓயறது ? எப்போ ஸ்நானம் பண்றது ? ஒண்ணும் புரியலே " என்றாள்   சீதை.
இதைக் கேட்டபோது காலுக்கடியில் பூமி நகர்வது போல இருந்தது வாசுகிக்கு.
  வந்த சுவடு தெரியாமல் வெளியேறி மீண்டும் ஆபீஸ் வந்தாள்
  " என்னடி, தலை வலின்னு சொல்லிட்டுப் போனே ? " என்று தோழி கேட்க,
  " இப்போ  திருகு வலியோடு வந்து சேர்ந்திருக்கிறேன் " என்று சொல்லி, தன்    காதில் விழுந்த வார்த்தைகளை தோழியிடம் சொன்னாள் வாசுகி
  " அதானே பார்த்தேன் . நீதான் அவங்களை உன்னோட குடும்பமா நினைச்சு   குப்பை கொட்டிகிட்டு  இருக்கிறியே தவிர, அவங்க உன்னை அந்தக் குடும்பத்தில்   ஒருத்தியா நினைக்காட்டாலும் பரவாயில்லை . உன்னை ஒரு மனுஷியாக் கூட நினைக்கலே போலிருக்கு. இதோ பாரு கொட்டறது தேளோட சுபாவம்  அது கொட்டிக் கிட்டே இருக்கிறவரை தான் மத்தவங்க அதைக் கண்டு ஒதுங்கி   நிற்பாங்க . அது கொட்டறதை நிறுத்திட்டா, பிள்ளைப் பூச்சின்னு நினைச்சு   கையில் தூக்கி விளையாடி பிச்சு எறிஞ்சிடுவாங்க. ஒவ்வொரு விலங்கு  பறவைக்கும் ஒரு விஷ தன்மை இருக்குன்னா அது ஆண்டவன் அதற்குக்  கொடுத்த பாதுகாப்புக் கவசம். ஒரு வீட்டுக்கு மருமகளாப் போன நீ, மருமகளா  லட்சணமா நடந்திருந்தா உனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை  கிடைச்சிருக்கும். மகளா நடந்துக்க முயற்சி பண்ணினே . நீ உன் நிலையை  விட்டு இறங்கி வந்தே . அவங்க உன் மேலே ஏறி நின்னுட்டாங்க. இனியாவது  புத்தி யோடு பிழைக்கப் பாரு " என்றாள் தோழி.
ஆனால் அதற்காகவெல்லாம் தனது கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை வாசுகி.
 அன்று ... காலையில் சீக்கிரமாகவே எழுந்து சமைத்து பால் பாயாசம் செய்து கொண்டிருந்தாள்  வாசுகி. அப்பாவிற்கு அன்று பிறந்த நாள் என்பதால், நேற்றே " அப்பா, நாளைக் காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுங்க. என் கையால் உங்களுக்குப் பிடிச்ச பால் பாயாசம் பண்ணித் தர்றேன். ரெண்டு பேருமா வடபழனி முருகன் கோவிலுக்குப் போய் சாமி தரிசனம் பண்ணலாம். நான் அங்கிருந்தே ஆபீஸ் போயிடறேன் "  என்று சொல்லியிருந்தாள் வாசுகி.
காலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த விட்டு வந்த கடைக் குட்டியிடம்" யாரது ? "  என்று கேட்டாள் சீதை
" வேறே யார் ? எல்லாம் அந்த திருக்கழுகுன்றம் கழுகுதான் . வழக்கமா ராத்திரி  ஏழு மணிக்கு வரும் . இன்னிக்கு காலையில் ஏழு மணிக்கே வந்துட்டது " என்று  சொன்னது கடைக் குட்டி
 இது காதில் விழுந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் ஹாலில் வந்து நின்றார் சிவராமன். அவர் வந்ததை லட்சியம் பண்ணாதவனாக தினசரியில் மூழ்கி இருந்தான் ஸ்ரீராம்
" வாங்கப்பா ஹாப்பி பர்த்டே . இந்தாங்க பால் பாயாசம் " என்று சொல்லியபடி பால் பாயாச டம்ப்ளரை அவரிடம் நீட்டினாள் வாசுகி
" வாங்க சம்பந்தி . எங்க வீட்டில் இன்னிக்கு பால் பாயாசம்னு இன்னிக்கு உங்க  வீட்டில் பல்லி சொல்லுச்சா ? இல்லே முந்திரிப் பருப்பு வறுத்துக் கொட்டற  வாசனை அங்கே வரை வந்துச்சா ? கழுகுக்கு மூக்கிலே வியர்க்கிற மாதிரி  கரெக்டா மோப்பம் பிடிச்சிட்டு வந்துட்டேளே " என்றாள் சீதை.
 அதைக் கேட்டதும் எண்சாண்  உடம்பும்   கூனிக் குறுக கையில் வாங்கிய
 டம்ப்ளரைக் கீழே வைத்தார் சிவராமன்
" அம்மா, யாரைப் பார்த்து என்ன வார்த்தை கேட்கிறீங்க ? " என்று கேட்டாள்  வாசுகி
 அதுவரை அங்கு நடந்த சம்பவம் தனக்கு சம்பந்தம் இல்லாத ஒன்று என்பது போல்  உட்கார்ந்திருந்த ஸ்ரீராம், " நாயே, அம்மாவை எதிர்த்துக் கேள்வி கேட்கிற  அளவுக்கு உனக்கு துணிச்சல் வந்துட்டதா ? எங்கேயும் விலை போகாத ஒரு நாயை வீட்டுக்குள் சேர்த்ததற்கு எங்க அம்மாவுக்கு கிடைக்கிற மரியாதையா  இது ? " என்று இரைந்தான்.
 அந்த வீட்டு விஷயத்தில் தலையிட விரும்பாதவராக அங்கிருந்து மெதுவாக வெளியேறினார் சிவராமன்
 " அப்பா கொஞ்சம் நில்லுங்கோ .. நானும் உங்ககூட வர்றேன் . வாழ்க்கையில்  எத்தனியோ  விசயங்களைத் தியாகம் பண்ணின உங்களுக்கு, கேவலம் , ஒரு  டம்ப்ளர் பால் பாயாச விசயத்தில் இப்படியொரு அவமரியாதையா ? போய் ஒரு  டெம்போ கொண்டு வாங்க, நம்ம வீட்டிலிருந்து நான் கொண்டு வந்த  சாமான்களையும் நான் இங்கு வந்த பிறகு வாங்கின பொருளையும்  நம்ம  வீட்டுக்கு   எடுத்துட்டுப்  போறதுக்கு " என்றாள் வாசுகி.
 " வாசு , கொஞ்சம் பொறுமையா இருடா "
 " இல்லேப்பா .. இனிமேலே பொறுமையா இருக்க எதுவும் இல்லே. புரட்சி
  பண்றதா நினைச்சு நான் இந்த வீட்டுக்கு வந்தேன். அதுக்கு இவங்க கொடுத்த  மரியாதை போதும். இனிமே இந்த வீட்டில் ஒரு நிமிஷம்கூட இருக்க மாட்டேன்.  இதோ பாருங்க மிஸ்டர், நான் எங்க வீட்டுக்குப் போறேன் . நான் வேணும்னு  நினைச்சா, நீங்க அங்கே வரணும். அதுவும்  நிரந்தரமாக.  உங்க சம்பளத்தில்தான் நம்ம  குடும்ப வாழ்க்கை நடக்கணும். என் சம்பளத்திலிருந்து  ஒரு செல்லாக் காசு  கூட தர மாட்டேன். சம்மதம்னா வாங்க .. நீங்க ஏன் இன்னும் நிக்கிறீங்க? போய்
வண்டி கொண்டு வாங்க " என்று வாசுகி சொல்ல, வாசலை நோக்கி நடந்தார்  சிவராமன்.
  " ஓய்  நில்லும் " என்ற குரல் அவரைத் தடுத்து நிறுத்தியது.
  " வயசான காலத்தில் புத்தி கித்தி கேட்டுப் போச்சா உமக்கு ? அவதான் ஏதோ    சிறுபிள்ளைத் தனமா சொல்றான்னா, அவளுக்குப் புத்தி சொல்றதை விட்டுட்டு   வண்டி கொண்டு வர ஓடறீர். நீரெல்லாம் ஒரு மனுசனா ? " என்று    ஆக்ரோசமாகக் கேட்டாள் சீதை
 " மன்னிச்சிடுங்கம்மா . என் பொண்ணோட செய்கையில் எப்பவும் ஒரு நியாயம்   இருக்கும் . அவ எடுக்கிற எந்த முடிவுக்கும் நான் தடை சொல்றது கிடையாது .   உங்க வீட்டுக்கு மருமகளா வர ஆசைப் பட்டா . அதுக்கு அவ சொன்ன காரணம்   நியாயமா இருந்தது. ஒரு மனுஷன்கிற முறையில் அதுக்கு தலை   வணங்கினேன்,  ஏன்னா அது ஒரு குடும்பத்திற்கு  விளக்காக இருந்து   ஒளிகாட்ட  அவள் எடுத்த  முடிவு அது . இன்னிக்கு , இப்ப, இவ எடுக்கிற  முடிவுக்கும் தடை சொல்லலே.   இது அவ தன்மானத்தை, சுய கௌரவத்தைக்  காப்பாத்திக்க எடுக்கிற முடிவு.  ஒரு  தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கொண்டு அதை மதிக்கிறேன். ஒரு  பொண்ணு  தனக்குன்னு சில கொள்கைகளை வச்சிகிட்டு தன்னை விட எல்லா வகையிலும் தாழ்வான நிலையில் இருக்கிற ஒரு வீட்டுக்கு மருமகளாப் போனா அதுக்கு நடத்தை கெட்டவள்னு பட்டம் குடுக்கிறது உங்க வீட்டு   பழக்கம் போலிருக்கு. ஒரு குத்து விளக்காக இருந்து ஒரு குடும்பத்துக்கு ஒளி  காட்ட என் மகள் ஆசைப் பட்டா. அந்த வெளிச்சத்தில் உங்க பாதையைப்  பார்த்து நடக்கிற சக்தி, பக்குவம் உங்களுக்கு இல்லே விட்டில் பூச்சி மாதிரி தீபத்தில் விழுந்து உங்களையும் எரிச்சுகிட்டு தீபத்தையும் அணைச்சீங்கன்னா  அது உங்க தப்பே தவிர தீபத்தோட தப்பு இல்லே. என்னைப் பார்த்து நீரெல்லாம்  ஒரு மனுசனான்னு கேட்டீங்க. முதலில் தான் ஒரு தகப்பன். எனக்கு என் பொண்ணோட கௌரவம் முக்கியம். அதனால்தான் அவளை இங்கிருந்து என்னோட  வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகப் போறேன்... வாசு , ரெடியா இருடா  இதோ அஞ்சு நிமிஷத்தில் வண்டியோட வர்றேன் " என்றபடி வெளியேறினார் சிவராமன் 


 
    
  

      


No comments:

Post a Comment