வேடிக்கை உலகம் ! வினோத மனிதர்கள் !!
சிவதாணு விஷயத்தைச் சொன்னதுமே " இந்த விஷயம் மாமிக்குத் தெரியுமா? நீங்க கவர்ச்சி நடிகை ' ஸ்ரீஸ்ரீ 'யை பார்க்கணும்னு சொல்றது மாமிக்குத் தெரிஞ்சா உங்களை ஆத்துலே சேர்த்துக்கிறாளோ இல்லையோ , என்னை ' உண்டு,இல்லை 'ன்னு பண்ணிடுவா. அதனாலே நிதானமா யோசிச்சு நீங்க முடிவெடுங்க. அப்புறமா என்னோடு சேர்ந்து வர்றீங்களா இல்லையானு சொல்லுங்க " என்றான் பார்த்திபன்
சிவதாணு விஷயத்தைச் சொன்னதுமே " இந்த விஷயம் மாமிக்குத் தெரியுமா? நீங்க கவர்ச்சி நடிகை ' ஸ்ரீஸ்ரீ 'யை பார்க்கணும்னு சொல்றது மாமிக்குத் தெரிஞ்சா உங்களை ஆத்துலே சேர்த்துக்கிறாளோ இல்லையோ , என்னை ' உண்டு,இல்லை 'ன்னு பண்ணிடுவா. அதனாலே நிதானமா யோசிச்சு நீங்க முடிவெடுங்க. அப்புறமா என்னோடு சேர்ந்து வர்றீங்களா இல்லையானு சொல்லுங்க " என்றான் பார்த்திபன்
" அசடே , என்னைப் போகச்சொன்னதே மாமிதான்டா ! "
" என்ன ? நிஜமாவா ? " என்று அதிர்ந்து போய்க்கேட்டான் பார்த்திபன்
" ஆமாம்டா . அந்த ஸ்ரீஸ்ரீ வேறே யாருமில்லேடா . பத்துப் பன்னிரண்டு வருஷம் முன்னாடி கும்பகோணத்திலே, எங்காத்துக்கு எதிராத்தில் இருந்த பரமசிவத்தோட மூத்த பொண்ணுடா . அப்ப அவ பேரு சிவரஞ்சனி. ஏழு வயசு இருக்கும்,, நம்மாத்திலே வந்து விளையாடிண்டு இருப்பா. அவ ஆத்துலே அவளுக்குப் பிறகு நண்டுஞ் சிண்டுமாக நாலு குழந்தைகள். எல்லாமே பொண் குழந்தைங்க. அப்பா குடிகாரர். நிரந்தர வேலைன்னு எதுவும் கிடையாது. அம்மா நோயாளி. இப்போ ஆயுசோட இருக்கிறாளோ இல்லையோ தெரியலை. போன மாசம் என் சகலையோட ஒண்ணுவிட்ட சித்தி பொண்ணு கும்பகோணத்திலிருந்து வந்திருந்தா, அவதான் சொன்னா, இந்த ஸ்ரீஸ்ரீ யாருங்கிறதை. அதைக் கேட்டதிலிருந்தே மாமி என்னை அரிக்க ஆரம்பிச்சிட்டா. அந்தப் பொண்ணைப் பார்த்து புத்திமதி சொல்லுங்க . இளசுங்க மனசைக் கெடுக்கிறாப்லே இப்படி ஆடிப் பிழைக்கணுமா ? ஏதாவது வேலை செஞ்சு பிழைக்கப்படாதான்னு கேளுங்கோ. அவளை நம்மாத்துக்கு ஒரு நடை வரச்சொல்லுங்கன்னு ஒரே பிடுங்கல். உடனே எனக்கு உன்னோட ஞாபகம் தான் வந்துச்சு. நீதான் பத்திரிக்கைக்காரனாச்சே. உன்னைப் பிடிச்சு அவளைப் பார்க்கலாம்ன்னு ஒரு எண்ணம். நீ எப்போ ப்ரீயோ, அப்போ என்னை அவளாண்டை அழைச்சிண்டு போ " என்றார் சிவதாணு.
" நான் ப்ரீயா இருந்து பிரயோஜனம் இல்லே . அவ ப்ரீயா இருக்கணும் . எதுக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுப் பார்க்கிறேன். பேட்டி எடுக்கிற சாக்கில் உங்களை அழைச்சிண்டு போறேன் . பேசறதும் புத்திமதி சொல்றதும் உங்க சாமர்த்தியம்"
" அது போதும்டா எனக்கு "
ஒரு மாதம் கழித்து சிவதாணுவை ஸ்ரீஸ்ரீயின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான் பார்த்திபன், " அவளைப் பார்த்ததுமே ' எங்காத்துக்கு எதிராத்துலே இருந்த குழந்தைதானே நீ ' ன்னு ஆரம்பிச்சிடாதீங்க. நான் பேட்டி எடுக்கிறேன். நீங்க கம்முனு பக்கத்திலே இருங்க. உங்களை அவ அடையாளம் தெரிஞ்சுக்கிறாளா அவ ரியாக்ஸன் என்னனு கவனிப்போம்" என்ற நிபந்தனையுடன்.
ஷூட்டிங் இடைவேளையின் பொது ஓய்வாக வந்து அமர்ந்த ஸ்ரீஸ்ரீயைப் பேட்டி எடுக்க ஆரம்பித்தான் பார்த்திபன். அவள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தார் சிவதாணு. சிவரஞ்சனியாகப் பார்த்த குழந்தை முக சாயல் அவளிடம் கொஞ்சமும் இல்லை.
" நீங்க சினி இண்டஸ்ட்ரீ க்கு வர காரணமா இருந்தது எது ? " என்று கேட்டார் சிவதாணு பார்த்திபனின் முறைப்பைப் பொருட்படுத்தாமல்.
" யாரிவர் ? " என்று கேட்பதுபோல் பார்த்திபனைப் பார்த்தாள் ஸ்ரீஸ்ரீ
" எனது சீனியர் " என்று சொல்லி நிலைமையை சமாளித்தான் பார்த்திபன்.
" அப்படியா ? " என்ற ஸ்ரீஸ்ரீ " நான் சினி பீல்டுக்கு வந்து ஒரு வருஷந்தான் ஆகுது . இதுவரை எந்த பேட்டிக்கும் நான் ஒத்துக் கொண்டதில்லை. ' உங்க பேட்டி வேணும்னு கேட்டு நீங்க என்னை அப்ரோச் பண்ணின முறை எனக்கு உங்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. அதனால்தான் ஒத்துக் கொண்டேன் . சினிமாவில் கதை இருக்கிறதோ இல்லையோ அந்த பீல்டில் உள்ள ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது .. அது அவர்கள் சொந்தக் கதை.. நிறைய பேர் வாழ்க்கையில் அது சோகக் கதை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களுக்கு நிறையவே இருக்கும். நடிக்க வந்து இந்த ஒரு வருடத்துக்குள் எனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து விட்டேன். நான் கலை சேவை பண்ண நான் வரலே. காசு சேர்க்கவே வந்தேன். குடும்பத்தில் வறுமை. அதிகம் படிப்பு கிடையாது. வேறு எந்த கைத்தொழிலும் தெரியாது.வீடுகளில் வேலை பார்க்க முயற்சி பண்ணினேன். என்னோட வயதும், உடல் வாளிப்பும் வீட்டிலுள்ள பெண்களுக்கு என் மேல் நம்பிக்கை ஏற்படுத்தலே. எனது குடும்ப வறுமைக்காக, வயதான ஒரு மனிதருக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப் பட தயாராக இருந்தேன். அந்த வீட்டினர் என்னை ஏற்றுக் கொள்ள தயார் இல்லை. அம்மாவிற்கு உடலில் நோய். என் உடன்பிறப்புகளுக்கு பசி என்னும் நோய். எல்லாத்துக்குமே மருந்து பணம்தான். முயற்சி பண்ணினா அந்த மருந்து சினி பீல்டில் வெகு சுலபமாக் கிடைக்கும்கிறதை தெரிஞ்சு முயற்சி பண்ணினேன். அந்த " மருந்து " தேவைக்கு அதிகமாவே கிடைக்கிறது. எங்கள் வீட்டில் இப்போது " நோய் " இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் ஒரு காட்சிப் பொருள். அது எனக்கு நல்லாவே தெரியும். ஒரு வேளை , என் குடும்பத்துக்கு உணவு.. ஒருவேளை உணவு ..கிடைச்சிருந்தா நான் இந்த பீல்டுக்கு நான் வந்திருக்க மாட்டேன். பசின்னு கேட்டு கை நீட்டுகிறவனையும் வேலைன்னு கேட்டு காலில் விழக் கூட தயாரா இருக்கிறவனையும் விரட்டி அடிக்கிற இந்த உலகம், எவனாவது ஒருவன் அதன் முன் கத்தியையோ துப்பாக்கியையோ தூக்கிக் காட்டி விட்டால் கையில் இருப்பதைக் கொடுத்து விட்டு திரும்பிப் பாராமல் ஓடும். உடம்பை வருத்தி உழைக்க நான் தயாரா இருந்தபோது என்னைத் திரும்பிப் பார்க்காத இந்த உலகம், என் உடம்பைக் காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்டதால் என் காலடியில் விழுந்து கிடக்கிறது . வேடிக்கை உலகம் ... வினோதமான மனிதர்கள் ... " என்று ஸ்ரீஸ்ரீ சொல்லிக் கொண்டிருக்கும்போதே " மேடம் " என்று சொல்லிய படி ஒரு பையன் வர " எனக்கு வேலை இருக்கிறது " என்றபடி எழுந்து சென்றாள் ஸ்ரீஸ்ரீ.
" எதோ கேட்கணும்னு சொன்னீங்களே மாமா " என்றான் பார்த்திபன்.
" நான் கேட்காமலே, நான் கேட்க நினைத்த எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டா சிவரஞ்சனி " என்றார் சிவதாணு அமைதியாக
No comments:
Post a Comment