Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 21, 2012

Scanning of inner-heart ( Scan Report No.54 )

                                அம்மா போய் விட்டாள் !!

அம்மா போய் விட்டாள். ஆணுக்கு ஆணாய், பெண்ணுக்கு பெண்ணாய் நின்று என்னை வளர்த்து ஆளாக்கிய  அம்மா போய் விட்டாள். பறவைகள், தங்கள் குஞ்சுகளை, தன்  இறக்கைக்குள் வைத்துப் பாதுகாக்குமே, அதேபோல தனது கண் இமைகளுக்குள் என்னைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்த அம்மா போய் விட்டாள். அம்மா போய் இன்றோடு மூன்று நாட்கள் ஓடி விட்டது. அம்மா இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது . வீடு முழுக்க சூன்யம் சூழ்ந்து விட்டது போன்ற தொரு  பிரமை.
அம்மா, சொல் பொறுக்க மாட்டாள். அம்மாவிற்குக் கல்யாணமான புதிதில், அப்பா கோபமாகச் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக, சட்டப்படி விவாகரத்து வாங்காமலே, அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டாள் அம்மா. அப்போது நான் மூன்று மாதக் குழந்தையாய் அம்மாவின் கருவில் இருந்தேனாம். அப்பாவும் அவர் குடும்பத்தினரும் விட்ட எந்தவொரு சமாதானத் தூதையும் அம்மா ஏற்றுக் கொள்ளவே இல்லையாம். இதை அம்மாவே பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறாள். அம்மாவிடம் இருந்தது  " பிடிவாதமா தன்னம்பிக்கையா " என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். அம்மா ஒரு முரண்பட்ட குணசித்திரம்.ஆனால் தியாகத் தீயில் தன்னைத் தானே எரித்துக் கொண்டு எனக்காகவே அம்மா வாழ்ந்தாள்  என்றால், அது மிகையில்லை. அம்மா அதிகம் படித்ததில்லை. என்னை வளர்த்து ஆளாக்க வீடு வீடாகப் பத்துப் பாத்திரம் தேய்த்தும், பலநாட்கள்  சமையலறையில் நெருப்பில் வெந்தும், தையல் வேலை  செய்து பணம் சேர்த்துப் படிக்க வைத்ததும் , இப்போதும் நினைவில் நின்று பாடாய்ப் படுத்துகிறது.  நினைக்கும்போதே அழுகை வந்தது. ஆனால் நான் அழுவது அம்மாவுக்குப் பிடிக்காத ஒன்று.  " பொம்பளை அழலாம்டா. அதில்தான் பெண்ணோட மென்மை தெரியும் . ஆம்பிளை அழக்கூடாது. அழுதால் அதில் அவனோட கோழைத்தனம்தான் தெரியும் " என்பாள் அம்மா.

படிக்கிற  நாட்களிலும் சரி ; வேலையில் சேர்ந்த பிறகும் சரி ; நண்பர் களிடமும் மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் காட்ட வேண்டிய நியாயமான கோபத்தைக் கூட காட்ட வகையற்றவனாய்,  வீட்டுக்கு வந்ததும் எனது  ஒட்டு மொத்தக் கோபத்தையும் அம்மாவிடம் காட்டுவேன். பதிலேதும் சொல்லாமல் சிரிப்பாள். நான் நார்மல் நிலைக்கு வந்ததும் " ஸாரிம்மா, ... வெரி வெரி  ஸாரி. நடந்த விசயத்துக்கு  எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத  உன்னிடம் நான்  கோபத்தைக் காட்டிட்டேன். நான் கத்தும் போது கூட சிரிச்சுகிட்டே நிற்கிறியே. அது உன்னாலே எப்படி முடியுதும்மா ? " என்பேன். " என் பிள்ளை கிட்டே நான் கோபப் பட்டா அது  என் மேலேயே நான் கோபப் படுற மாதிரி " என்பாள் அம்மா சிரித்துக்  கொண்டே.  " உன்னால் மட்டும் எப்படிம்மா கஷ்ட நேரத்தில் கூட சிரிக்க முடியுது ? " என்று கேட்பேன். " அது காலம் கற்றுத்தந்த பாடமடா " என்று  சிரித்துக் கொண்டே சொல்வாள் 

அம்மா எதற்கும் ஆசைப் பட்டது கிடையாது. " அம்மா, உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லும்மா " என்று கேட்பேன் .
" நீ எப்பவும் சந்தோசமா,  குடியும் குடித்தனமுமா, குழந்தை குட்டிகளோடு
சந்தோசமா இருக்கணும். அதை நான் பார்க்கணும். உன் குழந்தைகளை நான் வளர்த்து ஆளாக்கணும். இதுதாண்டா என் ஆசை " என்பாள்.

கிட்டத்தட்ட ஒரு நாலு மாதங்களுக்கு முன்பு " கண்ணா. உனக்கொரு பெண் பார்த்திருக்கிறேன். நீயும் நேரிலே ஒரு தரம் பார்த்திட்டு உன் விருப்பத்தைச் சொன்னா பேசி முடிச்சிடலாம் " என்றாள்.

"எனக்கென்று தனியா எந்த விருப்பமும் கிடையாதும்மா.உனக்கு ஒகேன்னா எனக்கும் ஓகேதான்" என்றேன். அதன்பின் பம்பரமாய் சுழன்று கல்யாண வேலைகளைக் கவனித்த அம்மா, தனக்கொரு மருமகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டாள். புது மருமகள் வீட்டுக்கு வந்து இன்னும் முழுதாக முப்பது நாள் கூட முடியவில்லை . அதற்குள் அம்மா போய் விட்டாள்.

நான்கு நாட்களுக்கு முன்பு .. நான் வீடு வந்து சேரும்போது இரவு மணி ஒன்பது.  எனது வண்டி சத்தம் கேட்டதுமே ஓடி வந்து கதவைத் திறக்கும் சுதா , நான் பலமுறை ஹார்ன் கொடுத்த பின்னும் கதவைத் திறக்க வில்லை . அம்மாதான் வந்து கதவைத் திறந்தாள். " இன்னும் சுதா வரலேடா. வழக்கமா ஏழு மணிக்கு வந்துடுவா . இன்னும் காணலேடா  . எதுக்கும் நீ பஸ் ஸ்டாப் வரை போய் பார்த்துட்டு வந்துடு . காலம் கெட்டுக் கிடக்கு.  தனியா வருவா " என்றாள்.   வண்டியை பஸ் ஸ்டாப் க்கு திருப்பினேன்.  நான் போய் அரைமணி  நேரத்துக்கெல்லாம் சுதா வந்து விட்டாள் . முகத்தில் வழக்கமான சிரிப்பு இல்லை, அவள் அழுதிருக்கிறாள் என்பதை கண்களும் முகமும் காட்டிக் கொடுத்தது . தெருவில் வைத்து எதையும் கேட்க வேண்டாம் . வீட்டில்  போய்ப் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து அவளை வண்டியில் அழைத்து வந்தேன்.   புடவையைக் கூட மாற்றிக் கொள்ளாமல்,  எங்கள் அறைக்குள் நுழைந்து அழ ஆரம்பித்து விட்டாள். அம்மா பலமுறை சாப்பிட அழைத்தும் பதிலேதும் சொல்லாமல் அறைக்குள் இருந்து விட்டாள். நான் மட்டும் சாப்பிட்டு விட்டு அவளுக்கும் டம்ப்ளரில் பாலை எடுத்துக் கொண்டு வந்தேன் .

" இன்னிக்கு ஆபீசில், மேடம் என்னைக் கண்டபடி திட்டிட்டாங்க. யாரோ செய்த  தப்புக்கு என்னைத் திட்டிட்டு, உண்மை தெரிஞ்சதும் " ஸாரி  " ன்னு ஒரு வார்த்தையை அலட்டிக்காமே சொல்லிட்டுப் போய்ட்டாங்க. நான்  பட்ட பாடு   எனக்குதான் தெரியும் " என்றாள் விம்மலுக்கிடையே.

" விடு சுதா . ஆபீஸ்னா அப்படித்தான் இருக்கும் " என்றேன்.  நான் என்ன சொல்லியும் சமாதானம் ஆகாமல் இரவு முழுக்க அழுது கொண்டிருந்தாள். எனக்கும் உறக்கம் வரவில்லை. படுக்கையில் சாய்வதும், எழுந்து மணியைப் பார்ப்பதுமாக இருந்தேன். கடிகாரம் 05.45 என்று மணி காட்டியது. சுதாவோ  அப்போதுதான் அழுத களைப்பில் கண்ணயர்ந்திருந்தாள்.

கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு , எங்கே சுதா விழித்து விடப் போகிறாளோ என்ற பதற்றத்தில் ஓடி வந்து கதவைத் திறந்தேன்.
" மணி ஆறாகப் போகிறது . வாசல் தெளிக்காமே அப்படி என்ன தூக்கம் ? சுதா .சுதா .." என்று குரல் கொடுத்தாள் அம்மா
" இதற்காக கதவைத் தட்டி எழுப்ப வேண்டுமா ? ஏன்  நேரங் கழிச்சு வாசல் தெளிச்சா  நம்மளை யாராவது தெருவை விட்டு விலக்கி  வச்சிடுவாங்களா? இன்னிக்கு ஒரு நாள்  நீதான் வாசல் தெளிச்சா என்ன ? " என்றேன்.

இந்த ஒரு வார்த்தை .. ஒரே ஒரு வார்த்தைதான் அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.

" இதெல்லாம் நீ பேசலேடா. உன்னை ஆட்டி வைக்கிற பிசாசு பேசுது . இனி இந்த வீட்டில் எனக்கு மரியாதை கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. இப்பவே நான் இங்கிருந்து போயிடறேன். இதுதான் நம்ம கடைசி சந்திப்பு . என்னைத் தேடி  வராதே .. நீ வரமாட்டே ..  ஆனால் ஊர் உலகம் என்ன சொல்லுமோன்னு நினைச்சி என்னைத் தேடி வந்திடாதே. நீ வருவது தெரிஞ்சா அந்த நிமிசமே  நான் பொணமாயிடுவேன்" னு சொல்லிட்டு அம்மா வீட்டை விட்டுப் போய் விட்டாள். அம்மா ரோசக்காரி. சொன்னா, சொன்னபடி செஞ்சிடுவா. அதனாலே அம்மாவைத் தேடி நான் போகலே . அம்மாவின் ஒன்றுவிட்ட அக்கா ஒருத்தி காசியில் இருக்கிறாங்க. அம்மா அங்கேதான் போயிட்டான்னு எனக்கு நல்லா தெரியும் . இருந்தாலும் அம்மாவைத் தேடிப் போகலே. அம்மா ரொம்பவும் பிடிவாதகுணம் படைச்சவ..  அம்மா நீண்ட ஆயுசோடு இருக்கணும். அதனாலே நான்   அம்மாவைக் கூப்பிடப் போகலே ... ஆனா அம்மா இல்லாத வீடு மயானமாக சூன்யம் நிறைந்ததாக இருக்கிறது. அம்மா போய்ட்டா ... அம்மா ....அம்மா  

No comments:

Post a Comment