உறவுகள் முடிந்த கதை !
வெட்கத்தோடு தலையசைப்பாள் என்று நினைத்து தன் ஆசையை ராகவன் வெளியிட, முதலில் மனதுக்குள்ளேயே சிரித்த நிவேதிதா, வாய் விட்டு சிரித்ததும் அல்லாமல். சிரிப்பை அடக்க முடியாமல் ரொம்பவும் தவித்துப் போனாள்." நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் ? " என்று தடுமாற்றத்துடன் கேட்டான் ராகவன்.
பதிலேதும் சொல்லாமல் நினைவலைகளை, மூன்று மாதங்கள் பின்னோக்கி ஓடவிட்டாள் நிவேதிதா
" அப்பா, நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லலே . ஒரு ஆறு மாசம், ஆறே ஆறு மாசம் கழிச்சு, நீங்க சொல்ற அதே அலையன்சுக்கு ." எஸ் ' சொல்றேன்ப்பா . இந்த கோர்ஸ் முடியட்டும் " என்று கெஞ்சினாள் நிவேதிதா
" நீ " எஸ் " சொல்லும்போது அந்த வரன் நமக்கு கிடைக்கும்கிறது உறுதியில்லே. நாம் வேண்டாம்னு சொன்னா போதும் , அடுத்த நிமிசமே பொண்ணைத் தர" நான் , நீ "ன்னு அவனவன் ரெடியா நிக்கிறான் எல்லா வகையிலும் நமக்கு ஏத்த இடம். அவங்க பெர்மிசன் கொடுத்தா அப்புறமா கோர்ஸ் கண்டினியு பண்ணு." என்று சுந்தரராமன் சொல்ல, " அதுதான் சரி " என்று அம்மா மீனாவும் வழி மொழிந்தாள்
எத்தனை வாக்கு வாதங்கள் எத்தனை போராட்டங்கள் , எத்தனை நாள் உண்ணா விரதம் .. எதுவுமே செல்லுபடியாகவில்லை
" என்னை பாரமா நினைச்சுதான் என்னை எங்கேயோ தள்ளிவிட அவசரப் படுகிறீர்களா ? "
" ஆமாம் , எல்லா தாய் தகப்பனுக்குமே வயதுக்கு வந்து விட்ட பெண்பிள்ளை பாரம்தான் " என்றாள் அம்மா மீனா
" மனசில் இருக்கிறதுதானே வார்த்தையில் வரும் . அப்படின்னா இவ்வளவு நாளும் என்னை ஒரு சுமையா நினைச்சுதான் வீட்டில் வச்சிருக்கீங்க . அப்படித்தானே ? "
" ஆமாம் "
" எப்போ உங்க வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வந்ததோ அதற்குப் பிறகும் உங்களுக்கு சுமையா இந்த வீட்டில் இருக்க எனக்குப் பிடிக்கலே .உங்க இஷ்டப் படியே அந்த வரனை பேசி முடியுங்க .. ஆனா ஒரே ஒரு கண்டிசன் .."
" என்ன ? "
" எப்போ என் கழுத்தில் தாலி ஏறுதோ அந்த நிமிசத்திலிருந்து எனக்கும் இந்த வீட்டுக்கும் உள்ள உறவை அறுத்தெறிந்து விடுவேன். ஒரு பார்மாலிட்டிக்கு கூட நீங்க என்னைப் பார்க்க வந்திடாதீங்க . நானும் வர மாட்டேன். அதையும் மீறி ஏதாவது சடங்கு சம்பிரதாயம்னு நீங்க வந்தால், வீட்டு நடைப்படி ஏற விட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு அநாதைஎனக்கு தாய் தகப்பன் கிடையாது . என்னை பார்க்க வந்தால் , அதன் பிறகு என் .பிணத்தைத்தான் பார்க்க முடியும் " என்று நிவேதிதா சொல்ல , எதோ இந்த அளவுக்காவது மகள் சம்மதித்தாளே என்ற நினைப்பில் மீனாவும் சுந்தரராமனும் நிவேதிதா சொன்னதற்க்கெல்லாம் தலையாட்டினார்கள், போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில் .
ஆனால் நிவேதிதா தன் முடிவில் உறுதியாக இருந்தாள்
நடந்த விவரம் எதுவும் அறியாத புது மாப்பிள்ளை ராகவன் கல்யாணமான முதல் நாள், முதல் சந்திப்பில் தனது மனைவியிடம் " எனக்கு என் பாரேன்ட்ஸ் தான் உலகம், அவங்க மனம் நோகாமே நீ நடந்துக்கணும். உங்க அப்பா அம்மாவை எப்படி எல்லாம் வச்சு நீ பார்க்க நினைக்கிறியோ அதே மரியாதையை என் பாரேன்ட்ஸ்க்கும் நீ கொடுக்கணும் " என்றான்.
( மீண்டும் முதல் பாராவைப் படிக்கவும் )
No comments:
Post a Comment