Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 14, 2012

Scanning of inner-heart ( Scan Report No. 53 )

                                                        பிள்ளை மனம் !!

ஸ்கூல் வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது கூட தெரியாமல் கௌரி டி வீ  சீரியலில் ஆழ்ந்திருந்தாள். புத்தகப் பையை பொதி மூட்டைபோல முதுகில்   சுமந்து கொண்டு சரவணன்  வேன் கதவருகில் வந்து நின்றான்.
" ஆயா , பார்த்துக் கிட்டே நிற்கிறியே . அந்த கதவை திறந்து விடு . மெதுவா  குழந்தையை கீழே இறக்கி விடு " என்று இரைந்தான் வேன் டிரைவர் 
" அட , தினமும் அதுவாகவே திறந்து இறங்கிப் போகுதுக தானே. இன்னிக்கி என்ன புதுசா கூவுறே ? " என்று கேட்டாள் ஆயா, இருந்த இடத்தை விட்டு அசையாமலே.
" பச்சைப் புள்ளே, இன்னிக்கு பூரா வெயிலில் முட்டி போட்டு நின்னுது. அதான் நடக்க சிரமப்படுது. பார்த்து கீழே இறக்கு " என்றான் கோபமாக.
" அந்தக் கதை எனக்கு தெரியாதே சாமி " என்றபடி சரவணனின் முதுகு சுமையை தன் கையில் எடுத்துக் கொண்டு, முதலில் தான் இறங்கிக்கொண்டு, மறுகையால் சரவணன் கீழே இறங்க உதவி செய்த ஆயா, புத்தக மூட்டையை வீட்டு வாசலில் வைத்து விட்டு, " பார்த்து , மெல்லப் போப்பா " என்று சொல்லி விட்டு  மறுபடி வேனில் ஏறிக்கொள்ள, வேன் அங்கிருந்து நகர்ந்தது 
தாழிடாமல் சார்த்தப் பட்டிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த சரவணன் " அம்மா " என்றான் 
" வேன் வந்துட்டுதா ?  கொஞ்சம் இரு.க்ளைமாக்ஸ் . வில்லன்   என்ன ஆகிறானு பார்த்துட்டு வந்திடறேன் " என்றாள் கௌரி, குழந்தையை திரும்பி பாராமலே. 
சோபாவில் உட்கார்ந்து கால் முட்டியை இரண்டு கைகளாலும் தேய்த்து விட்டுக் கொண்டான் சரவணன். இன்றைக்கு எப்படியும் ஹோம் வொர்க் முடித்து விட வேண்டும் .நேற்றைய பாடத்தையும் முடிக்க வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். 
" அம்மா "
" இருடா . ஒரு க்ளைமாக்ஸ் சீன் முடியறதுக்குள்ளே  ரெண்டு விளம்பர இடைவேளை .ச்சே .. இரு கண்ணு.. கொஞ்சம் பொறு .விஜய் டீ வி யில் என்னன்னு பார்த்துடறேன் ..  அதிலும்    விளம்பரமா ?..  ராஜ் ? "
" அம்மா ..  எனக்கு ஹோம் வொர்க் பண்ணனும் "
" பண்ணுடா .. யார் வேண்டாம்னது ? "
" எனக்கு கிராமர் பண்ணத் தெரியலே .. சொல்லிக் கொடு "
" நான் சொல்லித் தர்றதுக்கா ஸ்கூல்க்கு மொய்ப் பணம் குடுக்கிறோம் ? "
" நேத்திக்கு ஹோம் வொர்க் பண்ணலேன்னு நான் இன்னிக்கு பூரா வெயிலில் முட்டி போட்டேன் . என்னை டுயூசனுக்கு அனுப்புன்னு சொன்னா, அதுக்கும்  மாட்டேங்கிறே. "
" ஆமாண்டா . த்தர்ட் ஸ்டாண்டர்ட்க்கு  டுயூசன் வைப்பாங்களா யாராவது ? ஸ்கூலில் கேட்டு தெரிஞ்சுக்கோ ..  இரு.. இரு..  படம் ஆரம்பித்து விட்டது " என்று சொல்லி விட்டு மறுபடியும்  டீ வி யில் ஆழ்ந்தாள் கௌரி 
இனி என்ன சொன்னாலும் அம்மா காதில் விழாது . விளம்பர இடைவேளை வந்தால்தான், திரும்பியே பார்ப்பாள்  அல்லது மற்ற சானல்களுக்கு தாவிக் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.மேஜை மீது அடுக்கி வைக்கப் பட்டிருந்த போஸ்ட் கார்டில் அவன் கவனம் சென்றது . ஒவ்வொரு சானலுக்கும் முகவரி எழுதப்பட்ட கார்டுகள் சானல் வாரியாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. சானலின் எந்தெந்த நிகழ்ச்சிகளில்"இந்நிகழ்ச்சி பற்றிய  உங்கள்  பொன்னான விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன " என்று சொல்வார்களோ அவர்களுக்கெல்லாம், பார்த்த நிகழ்ச்சி மறந்து போகும் முன்னே எழுதி அனுப்புவதற்கான முன்னேற்பாடுதான் அது.
அத்தனை கார்டுகளையும் கையில் அள்ளிய சரவணன் " இனி விளம்பரங்கள் .. விளம்பரங்கள் மட்டுமே உங்கள் சானலில் ஒளி பரப்ப வேண்டும் " என்று எழுதிக் கொண்டிருந்தான்.
படம் முடிந்து விளம்பர இடைவேளை வந்தது. " சரவணா, காபி கலக்கவா ? " என்று கேட்டு குழந்தையின் பக்கம் திரும்பிய கௌரி, அவன் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு  " நீயே ஹோம் வொர்க் பண்ண ஆரம்பிச்சி ட்டியா ?  வெரி  குட் . பண்ணு ..  மெகா டீ வி யில் என்னன்னு பார்த்துடறேன் " என்று சொல்லி விட்டு மற்ற சானல்களுக்குத் தாவ, குழந்தை எல்லா கார்டுகளிலும் தனது ஏக்கத்தைப் பதிவு செய்து  கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment