நண்பன் !!
" பண்ணியிருந்தால் ? " என்று கேட்டாள் சுந்தரி
" கார் அனுப்பி இருப்பேன் "
" என்னங்க, உங்க ப்ரெண்ட் போன் பண்ணினார். உங்க மொபைல்க்கு போட்டுப் பார்த்தாராம் . நீங்க அட்டென்ட் பண்ணலியாம். அதான் லேன்ட் லைன்க்கு போட்டாராம் " என்று ராஜேந்திரன் வீட்டுக்குள் நுழையும்போதே சலிப்பான குரலில் சொன்னாள் சுந்தரி.
" ஆபீசில் முக்கியமான வேலை இருக்குனு சைலென்ட் மோடில் போட்டேன். நீ சொல்ற வரை போன் ஞாபகமே வரலே. ப்ரெண்ட்ன்னு மொட்டையா சொன்னா எப்படி ? அவனுக்கு ஒரு பேர் இருந்திருக்குமே. அதை சொல்லி இருப்பானே ? " என்றான் ராஜேந்திரன் கிண்டலாக
" ஓ சொன்னாரே. ரெண்டு வருஷம் முன்னாலே ஒருத்தனை நம்ம வீட்டில் கொண்டு வந்து வைத்து. ' என் தம்பி மாதிரி'ன்னு சொல்லி சொல்லி கொண்டாடினீங்களே அந்த தம்பிதான் " - சுந்தரியின் குரலில் தெரிந்த எரிச்சலை நன்கு புரிந்து கொண்டாலும், " என்னடி சொன்னான் ராஜேஷ் ? " என்றான் பரபரப்பான குரலில்.
" அவர் இந்தியா வந்துட்டாராம் "
" வாவ் ! எப்பவாம் ? "
" நேற்று நைட் "
" நேற்றே வந்தவன் வீட்டுக்கு வராமல் எங்கே போனான் ? "
" வெளிநாட்டில் போய் நாலு காசு சம்பாதிச்சுட்டு வந்திட்டாரே . அந்த பெருமையைக் காட்ட , தொரை ஹோட்டெலில் தங்கி இருக்காராம். ரூம் நம்பர் கொடுத்திருக்கார். நீங்க போய் பார்க்கணுமாம் "
" அவ்வளவுதானே ? போய்ப் பார்த்துட்டா போச்சு . எந்த ஹோட்டல் ? ரூம் நம்பர் என்ன சொன்னான் ? " என்றபடியே கால்களில் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தான் ராஜேந்திரன்
" இருங்க, நானும் வர்றேன் "
" நீ எதுக்கடி ? நான் போய் அவனை இங்கே அழைச்சிட்டு வர்றேன் "
" அப்படியொரு தப்பை நீங்க செய்யக் கூடாதுனுதான் நானும் உங்க கூட வர்றேன். வந்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டுட்டு வர்றேன் "
" இதோ பாரு, அவனைப் பார்க்க விரும்பினா நீ என் கூட வா . வம்பு வளர்க்க ஆசைப் பட்டா தயவு செய்து என்னோட வராதே " என்றான் ராஜேந்திரன் கடுப்பாக
அதைப் பற்றிக் கவலைப் படாதவளாக அவனோடு சேர்ந்து வெளியில் வந்தாள் சுந்தரி. இந்தப் பாவியை கிட்டத்தட்ட ஆறு மாசம் காலம் வீட்டில் வைத்து தாங்கி இருக்கிறோம். ' என் பால்ய சிநேகிதன் . ரொம்ப வசதியான குடும்பம் . இப்போ நொடித்துப்போய் கையில் கால் காசுகூட இல்லாத நிலையில் சென்னை வந்திருக்கிறான். அவன் வெளிநாடு போக நாம உதவி பண்ணினா கண்டிப்பா நல்ல நிலைக்கு வருவான். உன்கிட்டே இருக்கிற வளையலைக் கொடு, சங்கிலியைக் கொடு. அவனுக்கு உதவியே தீரணும் என்று ராஜேந்திரன் சொன்ன போதெல்லாம் மறு வார்த்தை பேசாமல் கழற்றிக் கொடுத்திருக்கிறாள். எனக்கு பால் இல்லா விட்டாலும் பரவாயில்லை. அவன் தெம்பா இருக்கணும். அவன்கிட்டே கொடுத்திடு என்று சொன்ன போது மறு பேச்சு பேசாமல் கொண்டு போய்க் கொடுத்திருக்கிறாள். அவன் வசதியான சூழ்நிலையில் வாழ்ந்தவன் என்கிற ஒரே காரணத்துக்காக தங்களது அடிப்படை சௌகரியங்களைக் கூட தியாகம் செய்திருக்கிறோம். இவனை வெளிநாட்டுக்கு அனுப்பும் விசயத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க எப்படில்லாம் குட்டிக் கரணம் அடித்திருக்கிறோம். வெளிநாடு போன புதிதில் மாதம் ஒரு போன் வந்ததோடு சரி. பிறகு அதுவும் நின்று போனது. இரண்டு வருடம் கழித்து இந்தியா வந்திருக்கிறவன், தன வீட்டுக்கு வராமல், தான் தங்கி இருக்கும் இடத்திற்கு தன கணவனை வரச்சொன்னதும் ரொம்பவும் நொந்து போனாள் சுந்தரி. கணவன் தன்னை அடித்து கொலையே செய்தாலும் சரி. அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் அவனை நறுக்கென்று நாலு வார்த்தை கேட்டு விடுவது என்ற முடிவில் இருந்தாள் சுந்தரி
இருவரும் ஹோட்டல் ரூமை அடைந்து கதவை தட்டியதும், கதவைத் திறந்த ராஜேஷ் இவர்கள் இருவரையும் கண்டதும் " வாவ், எப்போ வர்றீங்கன்னு போன் பண்ண சொன்னேனே ? " என்றான் கேசுவலாக." பண்ணியிருந்தால் ? " என்று கேட்டாள் சுந்தரி
" கார் அனுப்பி இருப்பேன் "
" ஓஹோ . அவ்வளவு அக்கறை உள்ளவங்க, எங்கிருந்து கிளம்பிப் போனீங்களோ அந்த இடத்துக்கே வந்திருக்கலாமே ? " என்று கேட்டாள் கணவனின் முறைப்பையும் கண்டு கொள்ளாதவளாக.
இண்டர்காம்மில் பேசி காபி டிபன் ரூம்க்கு கொண்டு வர சொன்ன ராஜேஷ் , " கையில் கால் காசு இல்லாமல் நான் வந்து நின்ற போதே , ஒரு காலத்தில் நான் வசதியான நிலையில் இருந்தவன் என்கிற ஒரே காரணத்திற்காக உங்க சௌகரியங்களை குறைச்சுகிட்டு நீங்க ரெண்டு பேரும் என்னை நல்லா கவனிச்சு கிட்டீங்க. இப்போ என்னோட ஸ்டேட்டஸ்க்கு தகுந்தபடி என்னை கவனிக்க நீங்க ரெண்டு பேரும் உங்களை கஷ்டப்படுத்துவீங்க. அப்படியொரு நிலை இனி வரக்கூடாதுன்னுதான் நான் இங்கே வந்து தங்கினேன்........ ராஜேந்திரா இதோ பாரு உனக்கொரு வாட்ச்சும் ப்ரேஸ்லெட்டும் .பிடிச்சிருக்கா ..குழந்தைக்கு டிரஸ் .. சுந்தரி அண்ணிக்கு செயின் வாங்கினேன். ராஜு , நீ சின்ன வயசில் கார் ஓட்ட உனக்கு ஆசைன்னு அடிக்கடி சொல்லுவியே. டிபன் காபி வந்ததும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பிப்போய் உனக்கு பிடிச்ச மாடல் கார் ஒண்ணை புக் பண்ணிட்டு வந்திடலாம் " என்று சொல்லிக் கொண்டே போக " என்னை மன்னிச்சிடுங்க " என்றாள் சுந்தரி தழுதழுத்த குரலில்
" ஏன் ? " என்று வியந்து போய்க்கேட்டான் ராஜேஷ்
No comments:
Post a Comment